சனி, 5 டிசம்பர், 2009

கனவுகளை வரையாதே அம்மா


பருத்தி பூ போட்ட சட்டையணிந்து
மண்குதிரை ஏறி பறக்கிறாய் மகளே
என் கனவில் என்றேன்
நான் பால்யம் அற்றவள் அம்மா
நிறங்களில் வழியும் உன் கனவுகள் பொய்யானவை
ஏன் அம்மா என் கனவுகளை
நீ கண்டுகொண்டிருக்கிறாய்
கருப்பு வெள்ளைகளால் ஆன அவைகள்
எனக்குச் சொந்தமானவை
கனவுகளில் என் ரெக்கைகளை
வரையாதே அம்மா
இயல்பிலேயே அவை என்னோடிருக்கின்றன
என் விளையாட்டினைப் பூட்டி
உன் அறைக்குள் சுருட்டிக்கொண்டிருக்கிறாய்
உன் தோழமைகள்
எனக்கு பிரிவினைச் சொல்லிக்கொடுக்கிறது
வந்துபோகும் அவைகளை
நான் வெறுக்கிறேன் அம்மா
உன் குழந்தமையும் பால்யமும்
என்னை பொறுமையிழக்கச் செய்கிறது
பொறுத்துக்கொண்டிருக்கிறேன்
உன் விழிகளில் ததும்பும் நீரை சகிக்காமல்
என் பால்யம் நிரம்புவதற்கு முன்பே
ருதுவாகும் நாளை குறித்துக்கொண்டிருக்கிறாய்
உன் குருட்டுத்தனத்தால்
போ அம்மா
கருப்பு வெள்ளையிலான
என் கனவுகளை நானே கண்டுகொள்கிறேன்.

8 கருத்துகள்:

ரன்ஜிட் சொன்னது…

பெளசியா.. உங்களை நன்றாகவே சபிக்கிறாள். மேலும் அவளின் சாபத்திற்க்கு ஆளாக மாட்டீர்கள் என உங்கள் எழுத்துக்கள் சொல்கின்றன.. மகிழ்ச்சி.

SarSel சொன்னது…

Sooooo nice !

கருப்பு வெள்ளையிலான
என் கனவுகளை நானே கண்டுகொள்கிறேன்.

Let her !

Unknown சொன்னது…

Excellent Poem Chandra...லேசான குற்றவுணர்வு என் மீதும் கவிகிறது, மகளின் கனவுகளை நானும் தான் நுழைந்து கொண்டிருக்கிறேனோ எனும் அச்சம் எழுகிறது. நமது சுயத்தை தேடுகையில் நாம் சின்னஞ்சிறிய இவர்களின் கனவுகளுக்குள் ஊடுருவது நியாயமற்ற செய்கை தான். ஒவ்வொரு வரியையும் ரசித்தேன், கவிதை உருவாகும் நேரத்தில் உன் பக்கத்தில் இருந்தேன் என்பது பெருமை தானே தோழி!

chandra சொன்னது…

ரன்ஜிட்,sarsel,தோழி உமாவுக்கு நான் மிகவும் குற்றவுணர்வில்தான் இந்தக் கவிதையை எழுதியிருக்கிறேன். கடந்த நான்கு மாதமாக ஒரு நாளில் ஏதாவது ஒரு வேளையில் எனக்கு உணவை ஊட்டிவிடுவது என் மகள்தான். என்னுடைய மன உளைச்சலில் நான் அவளுக்கு செய்ய வேண்டிய அன்பை எனக்கானதாக மாற்றிவிட்டேன். பனிரெண்டு வயதுடைய என் சிறுமி ஒரு தாதியைப்போல் நான் சாப்பிட வேண்டிய மாத்திரைகளை என் கையில் கொடுத்த பின்பே உறங்கச் செல்கிறாள். அவளும் மன உவந்து அதைச் செய்கிறாள். இருந்தாலும் என்னுள் பெருகும் குற்றவுணர்வு தாங்காமல் இந்தக் கவிதையை இன்று எழுதினேன். ஆனாலும் அவள் தான் இன்னும் குழந்தைதான் என்பதை தூங்கும் போது விரல்களைச் சூப்பி அதை என்னிடம் தெரியபடுத்துகிறாள்.அவள் விரலை வாயிலிருந்து எடுத்துவிடும்போது நான் அடையும் குற்ற உணர்விற்கு அளவே இல்லை.அவள் பாதங்களில் என் சிரசை வைத்து கேட்கும் மன்னிப்புதான் இந்தக் கவிதை

நிலாரசிகன் சொன்னது…

முடிவில் ஒரு கனத்த மெளனம் மனதை கெளவிக்கொள்கிறது. மிகச்சிறந்த கவிதை.வாழ்த்துகள்.

chandra சொன்னது…

நன்றி நிலாரசிகன்

அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…

கவிதையில் உங்களின் உணர்வுகள் அருமையாய் வெளிப்பட்டு இருக்கிறது, அதே உணர்வுகள் படிப்பவரையும்
தொற்றிக்கொண்டு குற்ற உணர்வு கொள்ளச்செய்கின்றன.

என் பால்யம் நிரம்புவதற்கு முன்பே
ருதுவாகும் நாளை குறித்துக்கொண்டிருக்கிறாய்
உன் குருட்டுத்தனத்தால் //

:((( வெட்கித்தலை குனிய செய்யும் வரிகள்

chandra சொன்னது…

உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அமிர்தவர்ஷினி அம்மா