வியாழன், 24 டிசம்பர், 2009

துயர்கொண்ட பாடல்


இன்னும் மீட்டப்படாமல்
புல்லாங்குழலில் பதுங்கிய இசையாய்
என்னுள் நிரம்பியிருக்கும் அன்பே
கடைசியாக
கடல் கொண்ட தனிமையை பரிசளித்தாய்
கன்னங்களில் வழிந்தோடும் நீரைத் துடைக்கும் பொருட்டு
நீ என்னை ஆட்சிசெய்தாய்
வாசனைகளால் நிரம்பி வழிந்த சொற்கள்
மயக்கமூட்டுகின்றன
இரவும் பகலும் தீய்ந்து பொசுங்குகின்றன
காலம் வெளி மறந்து மங்குகின்றன நினைவுகள்
தடித்த முத்தங்களால்
புண்ணாகிப்போன உதடுகள்
கேலி செய்கின்றன
மறைக்கப்பட்ட காதல் கடிதங்கள்
வாழ்வின் தீராத் துயரங்கள்
அன்பின் நிழலுருவம்
கண்ணிமைகளில் தொக்கி நிற்கிறது
தூரங்களை கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றன
நடக்க மறுக்கும் கால்கள்
அமைதியை விரும்புகிறது இதயம்
எல்லாவற்றிர்க்கும் மேலே
நானே எழுதிய
துயர்கொண்ட நீண்ட பாடல் வரிகள் அயர்ச்சியூட்டுகின்றன.

புதன், 23 டிசம்பர், 2009

அறையில் மரித்த பட்டாம்பூச்சி


நிலையின்றி விடாமல் பறந்துகொண்டிருந்த
வழிதவறிய பட்டாம்பூச்சி
என் அறைக்குள் வீழ்ந்து மரித்தது
சந்தனம், கறுப்பு, வெள்ளை,பழுப்பு வண்ணங்களில்
பளபளத்த அதன் இறக்கைகள்
சோர்ந்து துவண்டிருந்தன
பட்டாம்பூச்சி வாழ உவந்ததாக இல்லை
பெருநகரத்தின் நிலம்
எங்கிருந்து வந்தது அம்மாவின் அதிசயமான கேள்வி
பட்டாம்பூச்சி அழுத்தமாக உச்சரித்து
வீட்டுக்கு வந்தால் நல்லது என்பார்கள் என்றது
ஆனால் இறந்த பட்டாம்பூச்சி
அம்மாவின் கவலை
இறந்த பட்டாம்பூச்சியை என்ன செய்ய அம்மா
புதைத்துவிடு மகனே என்றேன்
இடம் தேடி அலைந்தான் மகன்
கான்கிரிட் கட்டிடங்களின் சிமெண்ட் தளங்கள்
அவனைச் சோர்வடையச் செய்தன
கடைசியாக என் புத்தகம் ஒன்றில் பத்திரப்படுத்தினான்
புத்தகத்தின் வரிகள் திருத்தி எழுதப்பட்டன
பட்டாம்பூச்சி பற்றி
மகன் எழுதிய சிறந்த கவிதை.

வெள்ளி, 18 டிசம்பர், 2009

பிரபஞ்சத்தை நிறைக்கும் உடல்


என் கருந்தசைகளை
தின்ன ஆசைப்பட்டபோது
உன் காதலைச் சொன்னாய்
மாமிச பட்சியின்
ஒளிர்ந்த கண்கள்
கிளர்ச்சியூட்டியது
இதயத்தில் அல்லாது
மூளையில் உன்னை அமர்த்திக்கொண்டேன்
குற்றவுணர்வில்லையே என்றபடி
லிங்கத்தை கூர்மையாக்கி
என் துயரினில் செருகினாய்
அதிர்ந்தது உடல்
கீற்றைப்போல் கூட
அன்பு ஒளிந்திருக்கவில்லை அதில்
துக்கத்தை முழுமையாக்கினாய்
என் உடலை காகங்களுக்கு
தின்னக் கொடுத்தேன்
மாமிச வாடை
பிரபஞ்சத்தை நிறைக்கிறது.


2

மென் சொற்களில் துவங்கியது
வன் சொற்களில் முடிகிறது .
விலங்குகளின் உருமல்களோடு
தவித்தலைந்து வன்மம் கொண்டிருக்கிறது
பாவிகளின் ஆன்மா .
வெளிகளில் மிதக்கும் என் புன்னகையில்
ஒளிந்திருக்கிறது
அவர்களுக்கான நேசம் .

திங்கள், 14 டிசம்பர், 2009

பெருமழைக் காலம்


நகரம் பெருமழையாய் காட்சியளித்தது
அவனுக்காக
மரமல்லிப்பூக்கள் உதிரும் சாலையில்
வெகுநேரம் காத்திருந்தாள்
அவள் கண்களில் துளிர்த்த கண்ணீர்
நகரை மூழ்கடித்தது
எப்படியும் பெருக்கெடுக்கும் வெள்ளத்தில்
தன்னை அடைவான் என்றிருந்தாள்
தன் சுவடுகளை அருவமற்று அழித்து
அவன் பாலையில் குடியேறியதாகச் சொன்னான்
மழைக்கோட்டணிந்த வழிப்போக்கன் ஒருவன்.

வெள்ளி, 11 டிசம்பர், 2009

ப்ரியமானவர்களின் தேவதை...


பெருநீலக் கரையில்
தனித்து அலைந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு சொல்லும்
மண்கோர்த்த சிப்பிகளில் சேகரிப்படுகிறது
அதை திறக்கும் சிறுமி உலகின் தனிமையின் தேவதை ஆகிறாள்
சொற்களைப் பிரித்து பிரபஞ்சம் முழுக்க விசிறி எறிகிறாள்
அது உங்கள் ப்ரியமானவர்களையும் சென்றடையலாம்

வியாழன், 10 டிசம்பர், 2009

வெளியேறும் பட்டாம்பூச்சிகள்


நீலமலர்கள் ஆற்றங்கரையில் விரவிக்கிடந்த
ஒளிநிரம்பிய மழைநாளில்
மலர்வாசனையில்
மயங்கிக் கிடந்தன
கனவில் கண்ட பட்டாம்பூச்சிகள்
இறக்கை மூடாத அவைகளை
எனது வலது கையில்
வண்ணங்களாய் மலரச் செய்தேன்
ஆற்றின் ஒளிநிரம்பிய நீரைப்பிடித்து
என் கைகளில் ஊற்றி
ஒளிநீரைக் குடி என்றாய்
என் உடலில் பெருகியது ஒளிவெள்ளம்
கையிலிருந்த பட்டாம்பூச்சிகள்
திசையற்றுப் பறந்துபோயின
அன்றிரவு ஒளிநிரம்பியநீர்
சூடாக வெளியேறியது
கொல்லையில் அமர்ந்திருந்த
பலவண்ணப் பட்டாம்பூச்சிகள்
என்னை பார்த்துச் சிரித்தன
வெறுமை.

புதன், 9 டிசம்பர், 2009

மறப்பதற்க்கு...


சரி எல்லாவற்றையும் வெறுங்கள் பரவாயில்லை
துக்கமாய் இருங்கள்
நீங்களே உங்களை வன்கத்தியால்
இருதயத் தசையில் சொருகிக்கொள்ளுங்கள்
கவலை தரும் அவர்களை மறக்க முடியுமென்றால்

சொற்களின் நிரம்பாதவன்


சிரமமின்றி வெகு இயல்பாய் சேர்த்துச் செய்வான் வார்த்தைகளை
முதன் முதலாய் கடல் பார்த்த குதூகலத்துடன்
நெம்பி வழியும் அது
உப்புக்கரிக்கும்நீர் காயம் படிந்த தசைகளில் தெறிக்கும்
ஆனந்தம் அதில்
விரும்பிச் சேரும் மீன்கள்
சிக்கலின்றி பின்னலிடப்பட்ட வலையில்
உன்னைவிட
ஒருமாற்று குறைந்த அன்பே என்னுடையது என்று
சொற்கள் உண்மையை விளம்பும்
ஆகா! என்ன ஒப்புதல் வாக்குமூலம்
குற்றங்களே ஆனாலும்
மனம் ஆராதிக்கும்
இவனே சரியென்று...
இடப்பட்ட சொற்கள் எல்லாம்
ஒருநாள் மௌனங்களால் வெளியேற்றப்படும்
அலைகழியும் மனதுடன்
நிறைய சொற்களுடன்
அவனைப் பிராத்தித்தால்
சொற்களில் நிரம்பாதவன் நான் என்பான்
கவனம்.

செவ்வாய், 8 டிசம்பர், 2009

திரும்பி வராதவனின்.....


உன்னை நான் அடையாளம் காணாத
அந்த முதல் தருணத்தில்
கடும் தேனீர் சாப்பிட்டபடி
ஆக்ரோசமாக பேசிக்கொண்டிருந்த
என்னை யாரென்று கவனித்து கேட்டேன்
என்றாய் பின்னாளில்.
அங்கேயே பெரும்நகரம் நடுங்க
அன்பின் கருத்தை உன் வார்த்தையால் கொடுங்கத்தியாக்கி
கூட்டத்தில் செருகினாய்
என் வன்மம் தூண்டி
அன்று நான் புறக்கணிக்கும் எதிரியானாய்
மற்றொரு சந்திப்பில்
உன்னைக் கடந்து சென்ற போதும்
பாவங்களின் பாவி என்றே கருக்கொண்டேன்
பிரிதொருநாளில்
என் நண்பர்களுடன் நீ நிற்கையில்
எதிர்பாராமல் உன்னிடம் பேச வாய்த்தபோது
நீ சிறந்த கவிஞன் என்றேன்
சொல்லிவிட்டு என் வாகனத்தை திருப்பினால்
மரணம் மிக அருகில் நின்றது
உயிர் எழுப்பும் ஒசையைப்போல
பார்த்து போங்க உன் தாய்மையின் குரல்
அன்பின் பெருத்த விழிகளால் நான் திரும்பிப் பார்த்தேன்
இனி எல்லாம் நிகழும் என்பதை
உன் நண்பனும் என் தோழியும் அறிந்தே வைத்திருந்தார்கள்
நாம் இப்போது இல்லாமல் இருப்பதையும்.

திங்கள், 7 டிசம்பர், 2009

அப்பாவோடு மடிந்த கடவுள்


ஏசு முள்கீரிடம் சூட்டி
சோகமாகக் காட்சியளித்த
நகரத்தின் பெருங்கட்டடத்திற்கு
அப்பாவை முதலில் அழைத்துச் சென்றேன்

அன்றிரவு தூக்கத்தில்
தாதியை அழைத்து
பிதாமகனின் முள்கிரிடத்தை அகற்றி
மருந்திடச் சொன்னார்

அவர் கடவுளப்பா
தானே உயிர்த்தெழுவார்
என்றேன்

தலையசைத்து சமாதானம் அடைந்தார்
மறுநாள்
கடவுள் தன்னருகே
படுத்துறங்கியதாகச் சொன்னார்
எலும்பை உருக்கும்
வலி மட்டும் நீள்வதாகச் சொன்னவர்
கடவுளும் கொடூர வலியின்
உச்சத்தை அடைந்திருப்பார் என்றார்

அப்பா தூங்குங்கள்
இசையை முடுக்கினேன்
தலையை வருடினேன்
தூங்கிப்போனார்

உறக்கச் சடவில்
பாவம் கடவுள்
அவர் இறக்கும் தறுவாயில்
இசையை கேட்டிருப்பாரா
யாராவது அவர்மீது
முத்தங்களை பதித்தனராவென முனங்கினார்

அப்பா
அவர் கடவுளப்பா
தானே உயிர்த்தெழுவார்
என்றேன்

அவருக்கும் வலித்திருக்கும் இல்லையா
என்ற அப்பா
தன் சிரசின் வழியே வெளியேறி
மூடிய கதவை திறவாமல்
இவ்வுலகை மறுதலித்துச் செல்லும்போது
கடவுள் அவர் தோளில் அமர்ந்திருந்தார்.

(உயிர் எழுத்து இதழில் டிசம்பர் 2009 ல் வெளியான எனது கவிதை)

சனி, 5 டிசம்பர், 2009

கனவுகளை வரையாதே அம்மா


பருத்தி பூ போட்ட சட்டையணிந்து
மண்குதிரை ஏறி பறக்கிறாய் மகளே
என் கனவில் என்றேன்
நான் பால்யம் அற்றவள் அம்மா
நிறங்களில் வழியும் உன் கனவுகள் பொய்யானவை
ஏன் அம்மா என் கனவுகளை
நீ கண்டுகொண்டிருக்கிறாய்
கருப்பு வெள்ளைகளால் ஆன அவைகள்
எனக்குச் சொந்தமானவை
கனவுகளில் என் ரெக்கைகளை
வரையாதே அம்மா
இயல்பிலேயே அவை என்னோடிருக்கின்றன
என் விளையாட்டினைப் பூட்டி
உன் அறைக்குள் சுருட்டிக்கொண்டிருக்கிறாய்
உன் தோழமைகள்
எனக்கு பிரிவினைச் சொல்லிக்கொடுக்கிறது
வந்துபோகும் அவைகளை
நான் வெறுக்கிறேன் அம்மா
உன் குழந்தமையும் பால்யமும்
என்னை பொறுமையிழக்கச் செய்கிறது
பொறுத்துக்கொண்டிருக்கிறேன்
உன் விழிகளில் ததும்பும் நீரை சகிக்காமல்
என் பால்யம் நிரம்புவதற்கு முன்பே
ருதுவாகும் நாளை குறித்துக்கொண்டிருக்கிறாய்
உன் குருட்டுத்தனத்தால்
போ அம்மா
கருப்பு வெள்ளையிலான
என் கனவுகளை நானே கண்டுகொள்கிறேன்.

செவ்வாய், 1 டிசம்பர், 2009

விட்டுச் சென்றவனின் நிழல்


நினைவுகள்
அறையில் சுருங்கி
காய்ந்த டீக்கோப்பையின்
கருநிறத்தை மிஞ்சும்

இரவில்
ஆந்தையின் அலறலாய்
ஆதிச் சொற்கள்
கருகி சாம்பலாகும்

புத்தகங்களில்
பூச்சி மேய்ந்து
எச்சங்களை சிதறடிக்கும்

பலநாள்களாய் மாற்றப்படாத
படுக்கை விரிப்பிலிருந்து
கலவியின் தீய்ந்த வாசனை
குற்றவுணர்ச்சியைப் பெருக்கும்

சவலைப்பிள்ளைபோல்
மெல்ல ஊர்ந்து செல்லும் வெயிலாய்
குழந்தையின் குதூகலங்கள்
மௌனத்தில் உறையும்

தனிமையின் நிழல்படிந்த இந்நாள்களில்
அவன் எங்களை கைவிட்டுப் போயிருந்தான்
ஓநாயின் விழிகளை ஒத்த அவனது நிழலை
என் அறையைவிட்டு வெளியேறச் செய்தேன்
அமைதி.