வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

ரெக்கை


காற்றின் வெளியே
இடையறாது
ரெக்கை விரிக்கும்
இளவரசி நான்.

என்னைச் சுற்றிக் கொண்டிருந்தான்
ஒரு குட்டி இளவரசன்
அவனது ரெக்கை
என் பறத்தலின் வெளியை
அடைத்துக் கொண்டே இருக்கிறது.
வான் அண்டத்தின் எல்லை தொடவும்
பூமியின் தரை இறங்கவும்
அவன் ஒரு போதும்
அனுமதித்ததில்லை.

அவன் ரெக்கையின் நிழலில்
பின்தொடருமாறு
என் ரெக்கைகளில் பாதியை வெட்டி
முடமாக்கினான்.

எனக்கான உணவினை
நானே தேடிச்செல்ல
அனுமதித்ததில்லை.
அவன் விருப்பங்களின்
சுவையறியா ரசனையற்ற உணவுகள்
என் வயிற்றில்
என் ரெக்கைகளை
வெட்டுவதில்
தூக்கத்தை இழந்தான்.

வெட்டப்பட்ட ரெக்கைகள்
தொலை தூரம் பறந்து
அழகிய சுதந்திரமாய்
ஒரு சிறுமியின் மென் சருமத்தை
தாங்கிக் கொண்டிருப்பதை
வான் தொலைவிலிருந்து
காண்கிறேன்.

என் மஞ்சள் சிறகுகள்
அவள் சுதந்திரத்தை
பாதுகாத்துக் கொண்டே இருக்கிறது.
அவளின் வழியாக
நான் வெளியைக் கடந்து
நிலத்தைத் தொட்டுக் கொள்கிறேன்

என் ரெக்கைகள் ஒருபோதும் வான் நோக்கி
பறந்ததில்லை.
ஒரு குழந்தை போல
புன்னகையுடன்
அவளின் பாதுகாப்பு பெட்டகத்தில்...

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

பன்னீர் மரத்தெரு... (சிறுகதை)



கனவு ஒளிரும் தெருவாக அது இருந்தது. ஆயர்குலப் பெண்களைப்போல மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து திரிந்தனர் சிறுமிகள். உடல் பூத்த பூரிப்பும் இறுமாப்புமாய் பால்யமனம் மாறாமல் இருந்தனர் குமரிகள். கரிய இருள் தெருவில் அப்பிக்கிடக்கும் பின்ஜாமங்களில் கனவுகண்டு சிரிப்பவர்களாக இருந்தார்கள் குழந்தைகள். எப்போதும் பன்னீர்பூக்கள் உதிர்ந்து கிடக்கும் அந்த தெருவிற்கு கோவில் தெரு என்று பெயர் இருந்தாலும்

எல்லோரும் பன்னீர்மரத் தெரு என்றே அழைத்துவந்தார்கள். பூக்கள் மேல் விருப்பப்பட்ட சிறுமிகள் பன்னீர்மரத்தெரு என்று அழைக்கத்

தொடங்கிய நாளிலிருந்து பெரியவர்களும் அப்படியே அழைத்தனர். எப்போதிருந்து பன்னீர் மரம் அந்தத்தெருவில் இருக்கிறது

என்பதை குழந்தைகள் அறிந்திருக்கவில்லை. அவர்களுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து பன்னீர்ப்பூக்கள் நாளெல்லாம் தெருமுனையில்

உதிர்ந்து கிடக்கிறது. ஆண்பிள்ளைகளைவிட பெண்பிள்ளைகள்தான் அங்கே அதிகமாக இருந்தார்கள் அல்லது பெண்பிள்ளைகளின்

ஆதிக்கம்தான் அதிகமாக இருந்தது. ஆண்பிள்ளைகள் தங்கள் தெருத்தாண்டி வேறு தெருக்களில், ஊருக்கு ஒதுக்குபுறமாக, ஆற்றுப்படுகைகளில், வயல்வெளிகளில் விளையாட்டு எல்லைகளை விரித்து வைத்திருந்ததால், பன்னீர்மரத் தெரு பெண்களின் தெருவாக

உருமாறிப்போனது. பன்னீர்மரத்திற்கு நேர்எதிர் வீட்டில் அகிலா வீடு இருந்தது. பன்னீர்மரப் பூக்களில் பெரும்பாதி பூக்கள் அவள் வீட்டு வாசலில் விழுந்து கிடந்ததால் பூக்களைப் பொறுக்கும் சாக்கில் எல்லாக்குழந்தைகளும் அவளுக்கு சிநேகிதிகளாக மாறிப்போனார்கள்.

ஒரு கறுப்பு முடி கூட இல்லாமல் தலை முழுவதும் வெள்ளையாக மாறிவிட்ட சின்னச்சாமி வாத்தியாரின் கடைசி பெண்தான் அகிலா.

கன்னங்கறுப்பாக இருந்த அவருக்கு வெள்ளை முடி கம்பீரத்தைக் கொடுத்தது. பள்ளிக்கூடத்தில் அவர் ஒருநாளும் பிள்ளைகளை விளையாட அனுமதிக்காதவராக இருந்தார். தெருப்பார்த்த வீடாக அவர்கள் வீடு அமைந்திருந்தது. வாத்தியார் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற அவர்

சாய்வுநாற்காலியில் உட்கார்ந்து தண்டனையை அனுபவிப்பவர்போல தெருவில் பிள்ளைகள் விளையாடுவதை ஓயாமல்

பார்த்துக்கொண்டிருக்கிறார். குழந்தைகளும் சிறுமிகளும் அவரைக்கண்டு பயப்படுபட்டார்கள். ஆனால் அகிலா அவர்களின் கண்களுக்கு ஒரு தேவதையாகத் தெரிந்தாள். இவ்வளவு அழகான பெயருடனும் அழகுடனும் அவள் இருப்பது அத்தெருவின் பாக்கியம் என்றே குழந்தைகள் கருதினார்கள். நீளமான கூந்தலும் சிவந்த நிறமும் உயரமாய் அளவான உடம்புடன் எல்லா லட்சணங்களும் பொருந்திய அவள் எல்லோருக்கும் பிடித்தவளாக இருந்தாள். அதையெல்லாம்விட அந்தத் தெருவில் கல்லூரிப் படிப்பை முடித்திருக்கும் ஒரே பெண் என்பதாலும் எல்லாரும்

அவளிடம் பேசப் பிரியப்பட்டார்கள். அகிலாவின் இரண்டு அக்காள்களுக்கு திருமணம் முடிந்திருந்தது ஒருவர் உள்ளுரிலும் ஒருவர் வெளியூரிலும்

வாழ்க்கைப்பட்டிருந்தார்கள். அண்ணன் இ.பி., யில் சீனியர் கிளர்க்காக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவர்தான் வீட்டுக்கு மூத்தவர்

என்றாலும் தங்கைகளுக்கு திருமணம் முடிந்த பின்பே தன் திருமணம் என்றிருந்தார். வயது நாற்பதை தாண்டியிருந்ததால் அதற்கு மேல் திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை. அகிலா பத்தாம் வகுப்பு படிக்கும் போதே அவளுடைய அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்து

போயிருந்தார். பின்னாளில் அவளுடைய அக்காக்கள் தாயைப்போலே அவளைக் கவனித்துக்கொண்டார்கள்.

வாத்தியார் கண்டிப்பானவர் என்பதால் அத்தெருவிலுள்ள யாரும் அவ்வீட்டிற்குச் செல்வதில்லை. அகிலா பெரியகுளத்தில் ஹாஸ்டலில் தங்கி கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வந்த நாளிலிருந்து அத்தெருப் பெண்கள் சின்னச்சாமி வாத்தியார் வீட்டு வாசற்படியில் நின்று அவளுடன் பேசத் தொடங்கினார்கள். கோடைகால விடுமுறையில் பன்னீர்மர நிழலில் உட்கார்ந்து தன் கல்லூரியில் உலவிய பேய்க் கதைகளை

சொல்ல ஆரம்பித்த பிறகு எதைப்பற்றியாவது அவள் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்று சிறுமிகள் அவளை நிர்பந்தப்படுத்தினார்கள். அதற்கு பின் வந்த நாள்களில் "எக்கா எக்கா கதை சொல்லுக்கா" என்று அவளிடம் அடம்பிடித்தனர் பிள்ளைகள். பன்னீர்மர நிழலில் உட்கார்ந்து அவர்களுக்காகத் தினுசு தினுசான புதுக்கதைகளை சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் சொல்லும் கதைகளின் ஆழங்களை அறியாமலேயே பிரமிப்பாகவும் ஆர்வமாகவும் சிரிப்புடனும் கேட்டுக்கொண்டிருந்தார்கள் சிறுமிகள். அவள் சொன்ன கதைகளில் வந்த மரம் நிறைந்த கடுங்கானகங்களும், கலர்கலரான பேசும் பறவைகளும், தேவதைகளும், துர்தேவதைகளும் அவர்களின் கனவுகளில் தினந்தோறும்

ஆக்ரமித்திருந்தது. தன் வீட்டில் பூத்த கனகாம்பரம், டிசம்பர் பூக்களைக் கட்டியபடி அவள் கதைசொல்லிக்கொண்டிருப்பாள். சிறுமிகளுக்கும் அவளைப்போல பூக்கட்ட வேண்டும் என்று தோன்றும். ஆனால் அவர்களுக்கு அகிலாவைப்போல கைவிரல்களில் நூலைக்கோர்த்து

பூக்கட்டத் தெரியாது. அவர்கள் பன்னீர்ப்பூக்களை பொறுக்கி கால் பெருவிரலில் நூல்கோர்த்து பன்னீர்ப்பூக்களை சரமாக தொடுத்தபடி கதை

கேட்டுக்கொண்டிருப்பார்கள். பன்னீர்ப்பூக்களை தலையில் வைக்கக்கூடாது பேன் வரும் என்று அவள் சொல்லியிருந்ததால் அதை தலையில் வைக்காமல் பன்னீர் சரத்தை சாமிக்கு போட்டார்கள். அவ்வப்போது பன்னீர்ப்பூக்களின் காம்பை உறிஞ்சி அதன் இனிப்பின் சுவையை மட்டும் ருசித்தனர்.

சிறுமிகள் மட்டும் அல்லாமல் அகிலாவிடம் பேசிக்கொண்டிருக்கும் குமரிகளும் குழந்தையாகிப் போகும் வித்தை நாளெல்லாம்

நடந்துகொண்டிருந்தது. அவள் தன் பருவமறியாது குழந்தையாகப் பாவனை செய்துகொண்டிருந்தாள். திருமணம் வேண்டாமென்று சொல்லும் அண்ணனையும், வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கும் அப்பாவையும் தனியாக விட்டுப்போக அவளுக்கு மனதில்லை. அப்பாவும்

அண்ணனும் அவளுடைய திருமணப்பேச்சை எடுக்கும் போதெல்லாம் தனக்கு கவர்ன்மெண்ட் வேலை கிடைக்கட்டும், அதற்கு பின் மாப்பிள்ளை பார்த்துக்கொள்ளலாம் என்று தட்டிக் கழித்துக்கொண்டிருந்தாள். அரசு வேலைக்கான தேர்வுகளை அவள் அடிக்கடி

எழுதிக்கொண்டிருந்தாலும் வேலை ஏனோ அவளுக்கு கிடைத்தபாடில்லை. அதன் பொருட்டு அவள் ஒருபோதும் கவலைபட்டுக்கொண்டதும் இல்லை. கூட்டுறவுப் பண்ணையில் அவ்வப்போது லீவ் போஸ்ட்டில் கிளர்க் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். நீளமான வெயில் நாள்களில்தான் அவளுக்கு லீவ் போஸ்ட் வேலை கிடைத்தது. பூப்போட்ட கலர்க் குடையை பிடித்துக் கொண்டு தெருவில் இறங்கி அவள் நடந்து போகும் அழகைப் பார்க்கும் சிறுமிகள் அவள் ஏன்தான் கிளர்க் வேலை பார்க்கிறாளோ என்று வருத்தப்பட்டார்கள். குடைக்குப் பொருத்தமாக அகிலா, டீச்சர் வேலைதான் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் விருப்பப்பட்டார்கள்.

அகிலாவிடம் கதை கேட்டுக்கொண்டிருந்த ரமா, கீதா, சுமதி, லதா, செல்வராணி, தங்கம் எல்லோரும் வளர்ந்து கொண்டிருந்தார்கள். அவள் இல்லாத நேரங்களில் அவர்கள் மாறிவரும் தங்கள் பருவத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். ரமா தன்னைக் கண்ணன் காதலிப்பதாக சுமதியிடம் மிக மெதுவான குரலில் சொன்னாள். இதை பரம ரகசியமாக வைத்திருக்க வேண்டும். "வெளியே தெரிந்தால் கோயில் கிணத்தில் விழுந்து நான் செத்துபோவேன்" என்று அவள் பயமுறுத்தி வைத்திருந்ததால் அதுபற்றி மூச்சுவிடாமல் இருந்தாள் சுமதி. பன்னீர் மர நிழலில்

உட்கார்ந்து உதிரிமல்லிகைப் பூவை ஊசியில் கோர்த்தபடி இருந்த அகிலாவிற்கு ரமா ஒவ்வொரு பூவாக எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது கண்ணன் நாலைந்து தடவைக்கு மேல் சைக்கிளில் அந்த தெருவைச் சுற்றியே வலம் வந்துகொண்டிருந்தான். தெருவில் போய்க்கொண்டிருந்த கழுதையின் மேல் ஏற்றி விடாமல் தடுக்க, ஒதுங்கி சைக்கிளை ஓட்டி வந்தவன் ரமாவைப் பார்த்துக்கொண்டே பேலன்ஸை விட்டுவிட்டான். சைக்கிள் நேராக அவர்களை நோக்கி வந்ததும் சுதாரித்துக் கொண்டு அதன் போக்கைத் திருப்பி விட்டான். 'ஏன் இந்த பையன் திரும்பத் திரும்ப நம்ம தெருவில சுத்திட்டு திரியுறான்" என்று கண்ணனை பார்த்து அகிலா கேட்டபோது சுமதிக்கு தொண்டை வரை வார்த்தை வந்துவிட்டது. ரமா கிணற்றில் மிதக்கும் காட்சி கண்ணுக்குத் தெரியவே பயந்தவளாக வார்த்தையை அடக்கி 'லூஸா இருப்பான்

போல' என்று அவனை வைய ஆரம்பித்தாள். ரமா அதைக் கண்டுகொள்ளாதவள் போல பூவை தொடர்ந்து அகிலாவின் கையில் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் லேசான கலக்கமும் கூச்சமும் இருந்து கொண்டிருந்தது.

பின்பனிக்காலத்தின் வெயில் தொடங்கிய காலையில் பேங்க் மேனேஜரின் குடும்பம் தஞ்சாவூரிலிருந்து மாற்றலாகி பன்னீர்மரத் தெருவுக்கு

குடிவந்தார்கள். மேனேஜரின் மகள் லாவண்யா வந்த முதல் நாளே தன் வயதுடைய தோழிகளைத் தேட ஆரம்பித்தாள். சுமதியையும் ரமாவையும்

ஒரே நாளில் தோழியாக்கிக் கொண்டாள். அவர்கள் லாவண்யாவை அகிலாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தனர். நாகரீகமான பழக்கம் கொண்ட அவளுக்கு அகிலாவின் பேச்சு மட்டுமே ஈடுகொடுப்பதாக இருந்தது. வேக வேகமாகப் பேசும் பழக்கம்கொண்ட லாவண்யா அத்தெருப்

பையன்கள் தன்னை ஒரு மாதிரியாக பார்ப்பதாக சுமதியிடமும் ரமாவிடமும் வந்த முதல்நாளே புகார் கூறினாள். மாடர்னாக ஆடை

அணிந்திருக்கும் அவளை அந்த ஆடைக்காகவே தாங்களே பலமுறை திரும்பிப் பார்க்கும்போது பையன்கள் பார்ப்பதில் வியப்பொன்றும் இல்லை என்று அவர்கள் நினைத்தார்கள். அந்த தெருவிலேயே இருக்கும் தங்களைக் கண்டுகொள்ளாத பையன்கள் லாவண்யாவை வைத்த கண்

வாங்காமல் பார்த்தது அவர்களுக்கு எரிச்சலாகதான் இருந்தது.

அத்தெருப் பெண்களும் சிறுமிகளும் அதுவரை கேள்விப்படாத அதிசயம் லாவண்யா வீட்டில் ஒளிந்திருந்தது. முதல்முறையாக அத்தெருவிற்கு டிவி பெட்டி லாவண்யா குடும்பத்தின் மூலமாக வந்தது. அத்தெருவில் ஒருத்தர் பாக்கியில்லாமல் எல்லோரும் சென்று அதனை ஒருமுறை

பார்த்துவந்தார்கள். வீட்டுக்குள்ளே படம் பார்ப்பது அத்தெரு மக்களுக்கு மிகப்பெரும் அதிசயமாக இருந்தது. பன்னீர்மரத்துக்கு அருகில் இருக்கும் பழனி டீக்கடையில் இருந்த ஆண்களெல்லாம் பேங்க் மேனேஜர் வீட்டு டிவி பெட்டியைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். அப்படியரு கேளிக்கை பொருளை வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளும் அளவிற்கு அவர்களுக்கு வசதி இல்லையென்றாலும் அதை அப்படிச் சொல்லாமல், "வாரத்துக்கு ஒரு நாளைக்கு படம் போடுவானுங்களாம். அந்த ஒரு நாளு கூத்துக்கு ஆயிரக்கணக்கில துட்டை போட்டு டீவி பொட்டியை

வாங்கனுமா? ஒரு ரூபாயை கொடுத்துபிட்டு தேட்டர்ல படம் பார்த்துட்டு போயிட வேண்டியதுதான" என்றார்கள். மற்றவர்களிடம்

வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள முடியாத ஒரு நப்பாசை எல்லோர் மனதிலும் தோன்றியது. பேங்க் மேனேஜரின் வீட்டிலிருக்கும் டிவி பெட்டியைப்போல் தங்கள் வீட்டிலும் வாங்கி வைக்க வேண்டும் என்பதுதான் அது. குழதைகளுக்கு டிவியில் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து படம் பார்ப்பது குதூகலமாக இருந்தது. வெள்ளிக்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும்

டிவி பார்ப்பதற்காக லாவண்யா வீட்டு வாசலிலேயே காத்துக்கிடந்தார்கள். அதற்கடுத்து வந்த நாள்களில் அவர்களுக்கு கதை

சொல்வதற்காக காத்திருந்து காத்திருந்து ஏமாந்து போனாள் அகிலா. அத்தெருக் குழந்தைகளும் சிறுமிகளும் கதை கேட்பதை

மறந்தவர்களானார்கள். ஒருவரும் அவள் பற்றிய சிந்தனையின்றி டிவி பார்ப்பதிலும் அதனைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதை மட்டுமே விரும்பிச் செய்தார்கள். அவள் சொல்லாமல் தேக்கி வைத்திருந்த கதைகள் பன்னீர் மரத்துக்கு கீழே கரைந்து கொண்டிருந்தது. லாவண்யா வீட்டுக்குள் டிவி பார்க்க வரும் கூட்டத்தால் வீடு அலங்கோலமாகிப் போவதாக வீட்டு உரிமையாளர் அவர்களிடம் மிகவும் கோபித்துக் கொண்டார்கள்.

இதனால் படம் போடும் நேரத்தில் வீட்டை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டார் லாவண்யா அம்மா. லதாவையும் சுமதியையும் மட்டும் உள்ளே விடலாம் என்று லாவண்யா அடம்பிடிப்பாள். வேறு வழியில்லாமல் அவள் அம்மாவும் திறந்துவிட வாசலுக்கு வெளியே பெருங்கூட்டமாக

நின்றிருக்கும் குழந்தைகள் குபுக்கென்று உள்ளே நுழைந்துவிடுவார்கள். இதில் பெண்களும் விதிவிலக்கல்ல. வீட்டு உரிமையாளர் திட்டுவதைப்

பொருட்படுத்தாமல் அவர்கள் குழந்தைகளோடு குழந்தைகளாகச் சேர்ந்து வீட்டுக்குள் நுழைந்து படம் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

சுமதியும் லதாவும் பள்ளிக்கூடம் போன நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் லாவண்யா வீடே கதி என்று கிடந்தார்கள். வீட்டை சுத்தப்படுத்துவது, பாத்திரம் தேய்ப்பது, கடைக்குப் போவது என்று எல்லா வேலைகளையும் லாவண்யா அம்மா அவர்களிடம் சாதுர்யமாக

வாங்கிக்கொண்டாள். லாவண்யாவிற்கு ஒரு அண்ணன் இருந்தான். வயதுக்கு வந்த பிள்ளை ஓயாமல் அடுத்த வீட்டிலேயே இருப்பது சுமதி வீட்டிற்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. "இனிமேல் பேங்க்காரங்க வீட்டுக்கு போனே தோலை உரிச்சுபுடுவோம்" என்று அவளைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள். சுமதி பள்ளிக்கூடம் போகும்போது மட்டும் அவர்களோடு சேர்ந்து போனாள். பொழுது போகாத மற்ற நேரங்களில் அகிலா

வீட்டிற்கு போனாள். அவள் வீட்டுக்கு போவதை யாருமே குறைசொல்லமாட்டார்கள். அவர்கள் அந்த நேரங்களில் பன்னீர்மரத்திற்கு அடியில் உட்கார்ந்து பேசவில்லை. "பன்னீர்மரத்துக்கு கீழே உட்காரலாமா" என்று அகிலா அழைத்தாலும் "போக்கா தெருவில போய் உட்காருவாங்களா? எல்லா ஆம்பளைகளும் ஒருமாதிரியா பார்த்துட்டு போவாங்க" என்று மறுத்துவிடுவாள் சுமதி. கட்டுக்கடங்காத கற்பனைக் கதைகளைத் தவிர அவளிடம் பேச ஒன்றுமில்லாத அகிலா சுமதி சொல்லும் காதல் கதைகளை வெறுப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் அதையெல்லாம் கேட்கச் சகிக்காதவள்போல் "கொஞ்ச வேலை இருக்கு உள்ளே போகட்டுமா" என்று அறைகளில்போய் ஒடுங்கிக்கொண்டாள்.

கதைசொல்லி பாவனையை மாற்றிக்கொள்ள முடியாத அகிலாவால் குழந்தை மனதிலிருந்து விடுபட முடியவில்லை. மிக மெனக்கெட்டு தன் உடலை ரசிக்க முயற்சித்தாள். அப்போதுதான் அவள் எப்போதும் ஆண்களை ஆசையோடு பார்த்திருக்கவில்லை என்பது தெரிந்தது. அவளாக திணித்துக்கொண்ட வேடம் அவளின் இயல்பாகிப்போனது. தனிமைப் பெரும் படலமாய் சுற்றிக்கொண்ட அவள் உடல் தளர்ந்துகொண்டிருந்தது. எந்த ஆணையும் தன்னுடன் சேர்த்து கற்பனை செய்ய முடியாதவளாக இருந்தாள். அப்படிச் செய்வது அவளுக்கு அருவருப்பூட்டுவதாக இருந்தது.

அக்காக்கள் தங்கள் கணவர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கலர் மங்கிய பழுப்புநிறச் சுவரில் தொங்கிக்கொண்டிருந்தது.

முன்பெல்லாம் அவற்றைத் துடைத்து சுத்தப்படுத்திக்கொண்டிருந்த அகிலா இப்போது அதன் மேல் நூலாம்படை படர்ந்திருப்பதைக் கண்டுகொள்ளாமல், அது முழுவதுமாக புகைப்படத்தை மறைக்கும் நாளை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த தெருவில் அவள் திருமணம் செய்து

கொள்ளாததைப்பற்றிப் பேசாதவர்களே இல்லை. அதனாலேயே யாரையும் பார்க்க விரும்பாமல் வெயில் ஊரும் வீட்டின் தாழ்வாரத்தில்

பகலெல்லாம் படுத்தே கிடந்தாள். தண்ணிவாட்டுத் தகரத்தின் ஓட்டை வழியே தாழ்வாரத்தில் பாய்ந்த வெயில் ஒரு உலக்கையைப்போல

நெளிந்து கிடந்தது. சிறுகச் சிறுக ஒளியின் நீளம் குறைந்து முழுவதுமாக இல்லாமல் போகும் வேளையில் அவள் குளிக்கப் போனாள். தன் உடல்

பார்க்காமல் குளியலறையின் சுவர்களைப் பார்த்து மட்டுமே குளித்தாள்.

உள்ளறையில் படுத்த படுக்கையாக கிடந்த அப்பாவின் நினைவு தப்பியது. அகிலா இருப்பது அறியாமலேயே போய்ச் சேர்ந்தார். அவளுடைய திருமணத்திற்கு அக்காக்கள் பார்த்த படித்த மாப்பிள்ளைகள் அவளின் கண்களில் தெரிந்த தனிமையைச் சகிக்கமுடியாதவர்களாய் பதில் ஏதும்

சொல்லாமல் கிளம்பிப்போனார்கள். அந்த நிகழ்வுகளில் பொருள்காட்சியின் பிம்பத்தைப் போலவே வந்து நின்றாள். சரிப்பட்டு வரும் படிக்காத வசதி குறைந்த மாப்பிள்ளையை தன் தங்கைக்கு மணம்முடித்து வைக்க விரும்பாத அக்காக்கள் தத்தம் குடும்ப பிரச்னையில் ஆழ்ந்துபோனார்கள். அதற்குபின் "இப்படி என் தங்கச்சி கல்யாணமாகாம சொடுஞ்சு போய்க்கிடக்காளே" என்று புலம்புவதோடு சரி மாப்பிள்ளை பார்ப்பதை மறந்தேவிட்டார்கள். அப்பாவின் மரணத்திற்குப் பிறகு கோடையில் கிடைத்த லீவ் போஸ்ட் வேலைக்கும் அகிலா போகவில்லை. பன்னீர்மரத்தை பார்க்கும்போதெல்லாம் தெருவில் இல்லாத குழந்தைகளையும் சிறுமிகளையும் தேடி மனம் அலைந்தது. ஒரு கதைசொல்லியின் வசீகரத்தை இழந்துவிட்டதாக நினைத்த அவள் அதற்குபின் எப்போதும் பன்னீர்மரத்தைப் பார்க்க முடியாத அளவிற்கு தெருக்கதவை மூடியே வைத்திருந்தாள்.

பெரும் வெறுப்பு மூண்ட வாழ்வைப்பார்த்துக் கலங்கிப்போன அண்ணன் தன் ஐம்பதாவது வயதில் ஒரு ஏழைப் பெண்ணை

மணந்துகொண்டார். முன்பு அண்ணனைத் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்திய தங்கைகள் அகிலாவின் திருமணம் முடியாமல் அவர் திருமணம் செய்துகொண்டதை நினைத்து மனசுக்குள் வேதனைப்பட்டார்கள். வேண்டாவெறுப்பாக திருமணத்தில் கலந்துகொண்டார்கள். அதே சமயத்தில் அண்ணனுக்கு ஒரு துணை வேண்டும் என்பதில் அவர்களுக்கு மாற்றுக்கருத்தில்லை. அண்ணனுக்கு திருமணம் செய்திருந்த

தாமரையின் வயதும் அகிலாவின் வயதும் ஒன்றாக இருந்தது. தாமரை ஒருவரைக் காதலித்து அவர் இறந்துபோனதால் அதுவரை அவள்

திருமணம் செய்யாமல் இருந்ததாக ஊரில் பேசிக்கொண்டார்கள்.

அகிலாவிற்கு அந்த வீட்டில் இருப்பது பெருங்கூச்சமாக இருந்தது. உள்ளறையைப் பூட்டிக்கொண்டு தாமரையைப் பார்க்காமல் இருந்தாள். முன்பு தாழ்வாரத்துவரை இருந்த அவள் சுதந்திரம் இப்போது அறை வரை என்றாகிப்போனது. அவள் அப்படி விலகி இருந்தது தாமரைக்கு அவள்மேல்

காரணமில்லாத வெறுப்பைத் தந்தது. அவள் இன்னும் தன் இளவயதுக் காதலனை மறக்க முடியாத துயரத்தில் இருந்தாள். அவளுக்கும்

கல்யாணம் என்பது ஒரு நிர்ப்பந்தம்தான். அகிலாவால் தாமரையின் துயரத்துடனும் சந்தோசத்துடனும் பங்கெடுக்க முடியவில்லை. தன்னுடைய தனிமை யாரோடும் சேர்ந்து மீட்டெடுக்க முடியாத வெளியில் சிக்கிக்கொண்டிருப்பதாக அகிலா நினைத்தாள்.

அந்தத் தெருவிற்கு இரண்டாவது டிவி வந்தது. புது மனைவியின் ஆசைப்படி வீட்டில் ஒரு டிவி வாங்கி வைத்தார் அண்ணன்.

குழந்தைகளிடமிருந்தும் சிறுமிகளிடமிருந்தும் தன் வாழ்வைப் பிரித்த டிவி பெட்டியின் குரலும் வெளிச்சம் அவளுடைய துக்கத்தை கீறி

காயப்படுத்திக்கொண்டிருந்தது. துணியைக் கிளித்து அதன் சத்தம் காதில் விழாதவாறு அடைத்துக்கொண்டு தானாகப் பேச ஆரம்பித்தாள் அகிலா.

தன் துயரங்களுக்கு மிகப்பெரும் வடிகாலாய் டிவி பெட்டியை நினைத்தாள் தாமரை. மொழி புரியாத படங்களையும் வைத்த கண் மாறாமல்

பார்த்துக்கொண்டிருந்தவள் படம் வராத வேளைகளிலும் டிவிப் பெட்டியை போட்டே வைத்திருந்தாள். கொர் கொரென்று டிவிப்

பெட்டியிலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டுக்கொண்டே வீட்டு வேலைகளைச் செய்தாள்.

சாப்பிட, குளிக்க என்று அகிலா அறையை விட்டு வெளியே வரும் வேளையில் டிவிப் பெட்டி பக்கம் கண்ணைத் திருப்புவதில்லை. இருந்தாலும் அதன் சத்தம் பேய்க்கூச்சலைப்போல அவளை தொந்தரவு செய்வதை பொறுக்கமாட்டாமல் டிவி பெட்டியின் ஸ்விட்சை அணைத்துவிடுவாள். டிவிப் பெட்டியின் ஸ்விட்சை அணைத்துவிட்டுப் போகும் அகிலாவைப் பன்னீர்மரத் தெருவின் புதிய குழந்தைகளுக்குப் பிடிக்கவில்லை. அவள் அந்த இடத்தை விட்டுப்போனதும் தாமரை டிவி ஸ்விட்சை போட்டுக் குழந்தைகளை மலரச் செய்தாள். குழந்தைகள் இப்போது தாமரை

அக்காவிடம் பிரியமாக இருந்தார்கள்.

தாமரை இல்லாத நேரங்களில் டிவி பின்னை பிடுங்கி விடுவது அல்லது டிவியில் இருக்கும் ஸ்விட்சை கழட்டி தனியாக வைத்து விடுவது இப்படி எதையாவது நோண்டி டிவிப் பெட்டியை ஓடவிடாமல் செய்வாள் அகிலா. வாய் திறந்து சண்டை போடாமல் இருவருமே செய்கைகள் மூலமே தங்கள் வெறுப்பைத் தெரியப்படுத்திக்கொண்டார்கள். அவர்களின் பெருத்த மௌனங்களைக் கரைக்க முடியாமல் தவித்தார் அண்ணன். சிரித்த அகிலாவின் முகம் அவருக்கு மறந்து போனது. கலர்க் குடை பிடித்துத் தெருவில் நடந்து போன அகிலாவின் சித்திரம் அடிக்கடி மனதில் தோன்றி கலங்கடித்தது. ஒரு வேளை தான் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் அவள் இந்த நிலைமைக்கு ஆளாகியிருக்கமாட்டாளோ என்று

நினைத்தார். அறைக்கதவை பூட்டிக்கொள்ளும் அவள் தெருவோரமாக இருக்கும் அறை ஜன்னலை நொடிக்கொரு தடவை சாத்துவதும் திறப்பதுமாய் இருந்தாள். தெருக்களில் குழந்தைகள் நடமாடுவது தெரிந்தால் வெடுக்கென்று ஜன்னலை சாத்திவிட்டு மூலையில் உட்கார்ந்து நகம் கடிப்பாள். அடுத்த நொடியில் அவளது கைவிரல்கள் இல்லாத பூவை கட்டிக்கொண்டிருக்கும் வாய் எதையோ பேசிக்கொண்டிருக்கும். அவள்

முகம் சாம்பல் பூத்துப்போய்த் தீர்க்க முடியாத வேதனையில் மூழ்கிக் கிடந்தது.

தாமரை பிரசவத்திற்காக தாய் வீட்டுக்குப் போனதும் அகிலாவிற்கு ஒரு வகையில் சந்தோசமாக இருந்தது. அண்ணன் வேலைக்குப்

போனபிறகு தெருக்கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே இருந்தாள். டிவிப் பெட்டியை ஒரு கறுப்பு துணியால் மூடி அவள் பார்க்க முடியாத இடத்தில் வைத்துவிட்டாள். டிவிப் பெட்டியை தொட்ட கைகளை திரும்பத் திரும்ப சோப்பு போட்டுக் கழுவிக்கொண்டாள். தாழ்வாரத்தில் இருந்த டிவி எங்கே என்று தங்கையிடம் கேட்காமல் வீட்டைச் சுற்றித்தேடி அதனை அண்ணன் கண்டுபிடித்தார். இருந்தாலும் தங்கையிடம் அதைப்பற்றி

பேசாமல் ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்தார். டிவியை ஒளித்து வைத்தாலும் அகிலாவிற்கு நிம்மதியில்லாமல்தான் இருந்தது. அது முன்

எழுப்பிய ஒலி வீடெல்லாம் நிறைந்திருப்பதைப் போலத் தோன்றியது. திரையில் தோன்றிய படம் வீட்டுச் சுவர்களிலெல்லாம் நிழலாகப் படர்ந்தது. வீட்டின் எந்த மூலையில் சென்று ஒளிந்து கொண்டாலும் அதன் சத்தமும் நிழலும் விடாமல் துரத்தியது. அதிலிருந்து விடுபடத் துடித்தாள். யாரும் சேகரிக்காத பன்னீர் பூக்கள் மண்ணில் உதிர்ந்துகொண்டிருக்கும் அதிகாலையில் வீட்டை விட்டுக் கிளம்பிபோன அகிலா பின் எப்போதும் வீடு திரும்பவில்லை. இன்னும் பன்னீர்மரம் பூக்களை உதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அங்கே உட்கார்ந்து கதை கேட்கத்தான் குழந்தைகளும் சிறுமிகளும் இல்லாமல் போனார்கள்.


- சந்திரா-

10-09-2008 ஆனந்த விகடனில் வெளியானது