வெள்ளி, 27 நவம்பர், 2009

நீங்காத வனவிலங்கின் தனிமை


நீங்கள் செய்யும்
ஒவ்வொரு காரியத்திலும்
வளர்ப்பு பிராணியாக்கப்பட்ட
நான் உடனிருந்தேன்
வாலாட்ட மட்டுமே
பழக்கப்படுத்தப்பட்ட
என் குரல்வளை
நசுக்கப்பட்டிருந்தன
அது இயல்பென்றிருந்தேன்
உங்களுக்கு கோபம்
வரும்போதெல்லாம்
என்மேல்
சிறுநீர் கழித்தீர்கள்
போதையின் உச்சத்தில்
என் மேல் காரி உமிழ்ந்தீர்கள்
குருட்டு பிச்சைக்காரியைப்போல்
திசையற்று பார்த்து
துடைத்துக்கொண்டேன்
எல்லாம் அன்பின் மிகுதியால்
நிகழ்த்தப்படுகிறது
என்றே கட்டமைக்கப்பட்டிருந்தேன்
கடைசியாக
உங்களுக்கு நன்றி செலுத்திய
என் வாலை நறுக்க முற்பட்டபோது
எனக்கு கூர்பற்கள்
இருப்பதை மறந்துவிட்டிர்கள்

உயிர்வழி


என் ஆன்மாவின்
நிகறற்ற அன்பே
உன் காலடியில் வைப்பதற்கு
ரேகை படர்ந்த உள்ளங்கையின் வெம்மை
எப்பவும் துளிர்ப்புடனே இருக்கும்
என் உயிர்வழி கசியும் மூச்சு
உன் இதயத் தசைகளைப் பிளந்து செல்வதை
நீ எப்படித் தடுக்க முடியும்
உள்ளே அனுமதிப்பதைத் தவிர

வெள்ளி, 20 நவம்பர், 2009

பால்ய வனம்


ஒளிஇருள் வெள்ளமாய்
நீந்தின
என் பால்யத்தின்
சூட்டில்.
பிறந்த மேனியாய்
பாதாளம் சுருங்கும்
இடிச்சிரிப்பில்
வனாந்தரத்தின் தனிமையை நிறைத்தேன்
கணங்கள் நொடிந்தன
பூக்கள் வெடித்து
மகரந்தம் பரப்பியது
அருவியின் மோனநிலை
குலைந்து
பலதிசைகளிலும்
பீறிட்டுச் சிதறியது
சாம்பல் மேகத்திலிருந்து
புற்கள்
காட்டில் இறங்கி
அற்ப ஒலியில்
கூச்சலிட்டு மயங்கின
ரீங்காரத்தை
மறந்த வண்டுகள்
பூக்களைப் புணர்ந்தன
ஓடையின் பொன் மணலில்
துயில் கொண்டிருந்த
கூழாங்கற்கள் மேலெழும்பிக் குதித்தது
காட்டின் நிறம் மறைந்தது
நான் பால்யத்தின் வெளியில்
யோனி மறந்தவளாயிருந்தேன்

புதன், 18 நவம்பர், 2009

குறுங்கத்திகளைப் பரிசளித்தவன்




நீ செலுத்திய
அன்பின் ஆயிரம் குறுங்கத்திகளை
உன் கண்முன்னே
பிடுங்கவே உன்னை அழைத்தேன்
வன்முறையின் துர்நாற்றங்கள்
உனக்கு புதிதல்ல
சிரிக்கவே செய்வாய்
நமக்கான கடைசி உரையாடல் இதுவென்று தெரிந்தும்
நீ அமைதியாகவே இருப்பாய்
குருதியை துடைத்தபடி குறுங்கத்திகளை
மௌனமாகவே வாங்கிச் செல்வாய்
உன் குருட்டுப் புன்னகைக்குள்
ஒளிந்திருக்கும் தடம் தெரியாத வார்த்தைகளை
நான் அறிவேன்
அன்பே
உதிராத உன் அன்பினை
ஒருநாளும் முத்தங்களால் நிரப்ப முடியாது
நீ என்றும் சலிக்காதவன்
அன்பின் ஆகுருதியில் செலுத்த
விஷம் தோய்ந்த அம்புகளை தயாராகவே வைத்திருப்பாய்
அன்பின் ஓட்டைகளை அடைப்பது
எப்படி என்பதை
உன்னிடமிருந்தே பழகிகொண்டேணடா
சிதறிய ரத்தத் துளிகளை சேமித்துச் செல்
அவையற்று பின்தொடராது
உன் நிழலின் நாய்க்குட்டி

ஞாயிறு, 15 நவம்பர், 2009

வாழ்வின் ருசி


வெகுநேரமாய்
தனிமையின் சோகை பிடித்த
ரயில் நிலையத்தில்
விசிலுடன் காத்திருந்தான்
கெண்டைக்காலுக்குமேல்
சேலை உயர்ந்து
கறுத்த கொலுசின்
ஒலியில்
நடந்து வருவது
தாமரைதான்
வயிறு புரண்டு வலித்தது
தோளில் படுத்திருந்த
குழந்தை
அவள் சாயலிலே இருந்தது
பால்ய சாயல்
காணாமல் போயிருந்த அவனைக்
கடந்து போனாள் காற்றைப்போல.
கையில் இரண்டு பைகளைச் சுமந்திருந்தாலும்
ஓடிப்போய்
அவள் கையிலிருந்த பையைவாங்கி
தன் கைக்குள் திணித்துக்கொண்டவன்
அவள் பின்னாலிருந்து
புன்னகை வழிய
குழந்தையைக் கொஞ்சியபடி போனான்
நல்லவிதமாய்த்தான் இருக்கிறது
வாழ்க்கை

ஞாயிறு, 8 நவம்பர், 2009

என் ஆன்மாவின் செல்லக் குழந்தைகள்



என் உள்ளங்கையில் பரந்து விரிந்து
நாடி நரம்பெங்கும் கிளைபிரிந்து
குருதி வெள்ளமாக
பாய்கிறது
உன் அன்பின் நெடிய வாசனை
கொதி அமிலமாய்
அன்பை என் முகத்தில் பீய்ச்சியடிக்கிறாய்
நாறி சீழ்வடியும் நீரை
என் வலியோடு சேர்த்துக் குடிக்கிறாய்
உலகின் உன்மத்தம் இதுவென்று
நாட்டியமாடுகிறாய்
ஆனால்
ஈரம் கசியும் என் புண்களில்
உன்னால் ஒருநாளும்
கனிந்த முத்தத்தைக் கொடுக்க முடியாது
லட்சம் சிறகுகள் கொண்ட உடலை குறுக்கி
என் ஆன்மாவின் செல்லக் குழந்தைகளை
பொதிந்து வைத்திருக்கிறேன்
அதிகாரத்தின் அன்பை
அவை
ஏளனத்தோடு பார்த்துச் சிரிக்கும்
அவ்வளவே
அதன்முன் மண்டியிட்டு உன்னால்
தோற்றுப்போகவே முடியும்.