வியாழன், 8 ஜூலை, 2010

அதிகாரத்தின் மூத்திரநாத்தம்


நகரம் திறந்தவெளிச் சிறை
ஒரு அகதியைப் போல் என் அறையில் சுருண்டு கிடக்கிறேன்
மஞ்சள் சூரியனும் வெள்ளை மழையும் எனக்கு ஒன்றே
இருட்டிய வானமும் ஒளிர்ந்த வெளிச்சமும் ஒன்றே
அறையின் வெப்பமும் குளிர்ந்த காற்றும் ஒன்றே
அன்பின் மகிழ்வும் துன்பத்தின் வாதையும் ஒன்றே
அமிழ்ந்த இசையாய் என் அறைக்குள் ஒடுங்கவே விரும்புகிறேன்
தமிழ் இலக்கியம் சினிமா பத்திரிக்கை
இசை தொலைக்காட்சி பஸ் நிறுத்தம்
மருத்துவமனை காவல்நிலையம்
தியேட்டர் பள்ளிக்கூடம் கேளிக்கை விடுதிகள் ரயில்நிலையம்
பன்னீர் மரத்தின் நிழலைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை
நகரமெங்கும் அதிகாரத்தின் மூத்திரநாத்தம்
மூச்சு திணறடிக்கும் ஓங்கிய குரல்கள்
துதியற்ற என் இருப்பை அவர்கள் விரும்பவில்லை
காற்றில் நீலம் பாரித்த விஷத்தை அனுப்பினார்கள்
அவர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அநீதி
காற்றைப்போல் ஊர்ந்து கதவிடுக்கின் வழியாக
என் பூட்டிய அறைக்குள் நுழைகிறது
துக்கங்களை மட்டுமே நேசித்து பழக்கப்படுத்தப்பட்ட
என் கறுத்து சிறுத்த இதயம் காரி உமிழ்ந்த எச்சில்
காற்றின் நீலத்தை அழித்தது
என் பரிகசிப்பில் மரித்துக்கிடக்கும்
உங்கள் ஆணவத்தின் சங்கிலியை
முழந்தாளிட்டு பொறுக்கிச் செல்லுங்கள்..

திங்கள், 5 ஜூலை, 2010

யூமா வாசுகியின் இருவேறு உலகம்-‘ரத்த உறவு’, ‘மஞ்சள் வெயில்’.



யூமா வாசுகி எனக்கு பிடித்த எழுத்தாளர். வழக்கமாக சினிமாவில் emotional காட்சி வந்தால் என்னால் அழுகையை நிறுத்த முடியாது.’முள்ளும் மலரும்’, ‘சேது’ படங்களின் கடைசி காட்சி, ‘அழகி’ படத்தில் நந்திதா தாஸ் மகனை மடியில போட்டு நடுரோட்டில் உட்கார்ந்து அழும்காட்சியைப் பார்த்து என்னை மறந்து தேம்பி அழுதிருக்கிறேன். ஆனால் கதைப் பிரதிகளை வாசிக்கும் போது அந்த மாதிரியான உணர்வுநிலைகளைத் தூண்டும் எழுத்துக்கள் வரும்போது கண்ணீர் தழும்பும், துக்கம் கொள்ளும்,குற்ற உணர்வில், ஆற்றாமையில் மனம் நிம்மதியின்றி உருகித் தவிக்கும். ஆனால் கதறி அழுவது நிகழ்ந்ததில்லை. கண்ணீர் சாரை சாரையாக வழிந்ததில்லை. எல்லாம் யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’ நாவலை படிக்கும் வரைதான். கதையில் வரும் முக்கிய பாத்திரங்களான வாசுகி அக்காவையும் அவள் தம்பியையும் ஒரு மாத காலமாக மறக்க முடியாமல் தவித்தேன். எனக்கு வாய்த்தது போல் அல்லாமல் நேர்மாறான ஒரு அப்பா. அவர் குடும்பத்தில் நிகழ்த்தும் வன்முறைகள். ஒவ்வொரு வன்முறை நிகழும்போதும் இதயத்தை பிடுங்கி எறிவது போல் வாதை. கண்ணீராக கொட்டினால் மட்டுமே அந்த வாதை விலகும். பிரதியை வாசித்து முடித்தும் வன்முறையின் வாதை உடலெங்கும் ஓடிக்கொண்டிருந்தது. என்ன செய்ய? ஒரு வேளை யூமா வாசுகியிடம் பேசினால் பாரம் குறையும் என்று நினைத்து அஜயன் பாலாவிடம் அவர் தொலைபேசி எண்ணை வாங்கினேன். ஆனால் பேசினால் இன்னும் சோகம் அதிகமாகிவிடுமோ.அந்த பிரதியிலிருந்து என்றும் விடுபட முடியாதோ என்ற பயம். இன்று வரை அவரிடம் பேசவில்லை. இந்த நாவல் படித்த பின் என்னுள் ஒரு தெளிவு வந்தது. எதன் பொருட்டும் யாரும் என் மீது செலுத்தும் வன்முறையை பொறுத்துக் கொள்ளக்கூடாது என்பது.சிறுவயதிலிருந்தே யார் என்னை அடிக்க கை ஓங்கினாலும் திருப்பி நானும் கை ஓங்கி விடுவேன்.அடித்தால் திருப்பி அடிப்பேன் என்னால் முடிந்தவரை. இதன்பின் அந்தத் தெளிவை உறுதிப்படுத்திக் கொண்டேன். ஏனேன்றால் நம்மீது நிகழ்த்தப்படும் வன்முறை வெறும் வாதையை மட்டும் ஏற்படுத்துவதில்லை. மனச்சிக்கலை, தாழ்வு மனப்பானமையை உள்ளுக்குள்ளே நொருங்கிப் போகும் தன்மையை இவை எல்லாவற்றிர்க்கும் மேலே நமக்குள் மிகப்பெரும் எதிர் வன்முறையையும் உருவாக்குகிறது. குறைந்த பட்சம் வன்முறையை உடனக்குடன் எதிர்க்கும்போது நமக்குள் வளரும் வன்முறையாவது குறையும். அதேபோல் இந்த நாவலைப் படித்தால் நம்மையும் அறியாமல் குழந்தைமேல் நாம் செலுத்தும் சிறுசிறு வன்முறைகளையும் தூக்கி எறிந்துவிடுவோம். முத்தங்களால் சாத்தியப்பட்ட வாழ்க்கையையே குழந்தைகளுக்கு தர விரும்புவோம். இந்நாவலில் வரும் வாசுகி தம்பியின் குறைந்த பட்ச ஆசை அப்பாவின் கைகளை பிடித்துக்கொண்டு தெருவில் நடப்பதுதான். அதுவும் ஒரு நாள் அதிசயமாக நிகழ்ந்தது எண்ணெய் தேய்த்து தலைசீவி வெளுத்த ஆடை அணிந்து தெருவில் அப்பாவோடு... தம்பியின் வாழ்வில் அப்பாவோடு மகனின் நெருக்கமான நினைவு என்றால் அதுதான் அதுவும் வீடு திரும்பும் போது மாறிவிட்டிருந்தது. வன்முறையின் தீவிர வசீகரம் அப்பாவை விட்டு விலகவில்லை. குடித்துவிட்டு கண் மண் தெரியாமல் மனைவியையும் குழந்தைகளையும் அடிக்கிறார்.குடிக்காத போதும் அப்படியே. யார் தங்கள் பிள்ளைகளை கொடுமைபடுத்தினாலும் கண்டுகொள்ளாமல் வெறுப்பையே உமிழ்ந்துவிட்டுச் செல்கிறார். எதன் பொருட்டு அவர் வெறுப்பை உமிழ்கிறார். மகளின் கண்ணீரும் மகனின் வேண்டுதலும் அவரின் கொடூர அதிகாரத்தில் சிறு அதிர்வைக்கூட ஏற்படுத்தவில்லை. உட்சகட்ட அதிகார போதையிலேயே இருக்கிறார் அப்பா. மிகைஉணர்வைத் தூண்டி வெறும் கண்ணிரை வரவழைப்பது மட்டும் இந்நாவலின் நோக்கமாக இல்லை. சிறுவயதில் ஏற்படும் இத்தகைய வாதை கொடுமையிலும் கொடுமை. உண்மை...மரணம் மட்டுமே அதனை விரட்டி அடிக்கச் செய்யும். ஒரு வன்முறையாளனின் மரணத்திற்காக காத்திருப்பதைத் தவிர பிரதியை வாசிக்கும் நம்மால் வேறு ஒன்றும் செய்ய முடியாதது மேலும் துக்கத்தை அதிகபடுத்துகிறது. இங்கே அன்பில் பெயரால் நிகழ்த்தி கொண்டிருக்கும் அதிகாரத் தோரணை,குடும்பத் தலைவனின் ஏதாச்சாதிகார போக்கு அதனால் ஏற்படும் சிதைவை உற்று நோக்குவதை அவசியமாக்கியிருக்கிறது இந்த பிரதி. குடும்பம் என்னும் நிறுவனத்தின் மீது பல கேள்விகளை எழுப்பி இருக்கும் இந்நாவல் அதனை ஒழுங்குபடுத்த வேண்டிய கட்டாயத்தையும் உருவாக்கி இருக்கிறது.

யூமா வாசுகியின் அடுத்த நாவல் மஞ்சள் வெயில். இந்த நாவலில் வரும் சில வரிகளை கவின்மலர் தன் முக நூலில் எடுத்துப் போட்டிருந்தார். அதுவே நான் யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’ நாவலைப் பற்றி இந்த சிறு பகிர்தலுக்கு காரணமாக இருந்தது. இந்த நாவலை படித்து முடித்த உடனே அதை பகிர்ந்து கொண்டிருந்தால் மிகை உணர்ச்சியில் நானும் இன்னொரு கண்ணீர் காவியத்தை பதிவாக வெளிப்படுத்தியிருப்பேன்.

மஞ்சள் வெயில் நாவலை யூமா வாசுகி எழுதியிருப்பதை ஒரு சிறுபத்திரிக்கையில் பார்த்துவிட்டு புக்லேண்ட்ஸ் போய் அந்த நாவல் இருக்கிறதா என்று கேட்டேன். அந்த நாவல் வரவில்லை. என்னைப்போல் வேறு சிலரும் அந்த நாவலை கேட்டுவிட்டுப் போனதாகச் சொன்ன கடையில் இருந்த நண்பர் ‘எந்த பதிப்பகம்’ என்று கேட்டார், ‘அகல் பதிப்பகம்’ என்றதும் ‘வாங்கி வைக்கிறேன்’ என்றார். வேறு புத்தகங்களை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டேன். மறுபடியும் போய் கேட்டால் இன்னும் வரவில்லை என்றார்கள். அது உடனே கிடைக்காமல் போனதும் ஆர்வம் அதிகமானது. நண்பர்களிடம் அகல் பதிப்பகம் எங்கு இருக்கிறது என்று விசாரித்தேன். ராயப்பேட்டை டி.டி.கே சாலையில் இருந்த ஒரு இடத்தைச் சொல்லி அங்கே கிடைக்கும் என்றார்கள். நண்பர் ஒருவரோடு பரபரப்பான டி.டி.கே சாலையிலிருந்து பிரிந்துசென்ற தெருவின் தொடக்கத்தில், ஒரு மூலையில் ஒடுங்கியிருந்த அந்த அறைக்கு முன்னால் போய் நின்றேன். அறை மூடியிருந்தது. அப்படியே முகம் சோர்ந்துவிட்டது. கைக்கு எட்டாமல் விலகிச் செல்லும் குழந்தையை உச்சி முகரும் ஆசை அப்புத்தகத்தின் மீதும் எழுந்தது. எனக்கு மிகப்பெரும் ஆச்சர்யமாக இருந்தது நான் அதுவரை ஒரு புத்தகத்தைத் தேடி இப்படி அலைந்தது இல்லை. யூமா வாசுகியின் எழுத்தின் மீது உணர்வுப்பூர்வமாக இருந்த நெருக்கம்தான் என் ஆர்வத்தை குறைக்காமல் இருந்தது. அடுத்த நாள் நான் கிளம்பத் தயாரானேன் நண்பர் ‘அந்த பக்கமாக போகும் வேலை இருக்கிறது நானே வாங்கி வந்துவிடுகிறேன்’ என்றார். புத்தகம் கைக்கு கிடைக்கும் வரை அதன் நினைவாகவே இருந்தது. அடுத்த நாள் நண்பர் அந்த அறையில் புத்தகத்தை வாங்கும்போது யூமா வாசுகி அங்கிருந்ததாகச் சொன்னார். நீங்கள் அவரிடம் பேசுனீர்களா என்று நண்பரிடம் கேட்டேன். அவர் என்ன சொன்னார் என்றேன். யூமா வாசுகி சிரித்தார். நானும் சிரித்தேன் என்றார். நான் போயிருக்கலாம் என்று தோன்றியது எனக்கு.

மஞ்சள் வெயில் என்ற தலைப்பே எனக்குள் ஒரு அழகான படிமத்தை ஏற்படுத்தியிருந்தது. மார்கழியில் வெயிலும் குளிரும் பிணைந்து உண்மையாகவே மஞ்சள் வெயில் அடித்துக்கொண்டிருந்த பொழுதில்தான் புத்தகத்தை வாசிக்கத்தொடங்கினேன். இந்த வானிலை அழகு தற்செயலானது. நாவல் கடித வடிவமைப்பில் அமைக்கப்பட்டிருந்தது.

‘அன்பிற்குரிய ஜீவிதா...’
என்று நாவலின் எளிமையான தொடக்கமே உள்ளே இழுத்தது. தொடர்ந்து குளிருக்கு இதமான வார்த்தைகள்..
‘இந்த புதிய காலையில் மலர்கிற அனைத்துப் பூக்களையும் உங்களுக்கு அர்ப்பணித்து மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.ஆளற்ற கடலோரம் கிளிஞ்சல்கள் பொறுக்கியபடி தொலைதூரம் போகும் சிறுவனாக –நான் இப்போது...’

அன்பும் தனிமையும் காதலும் தொடர்ந்த வார்த்தைகள் அழகிய வாசிப்பு அனுபவத்தை தரப்போகிறது என்று நினைத்தது பொய்யில்லை. ஒரே மூச்சில் படித்து முடித்துவிடும் சுவாரஸ்யத்தை கொண்டிருந்தது. ஒரு ஆண் உள்ளுக்குள் ஒடுங்கும் வலி புரிந்தது. பிரிவும் ஆற்றாமையும் அழகிய கவிதை மொழியில் நாவல் முழுவதும் விரவி கிடக்கிறது.

‘நான் உங்களை பார்த்தேன் இந்த ஒரு வரிதான் என் ஜீவிதத்தின் மகா மந்திரம். மஞ்சள் ஒளி தோய்ந்த வராண்டாவில் நலன் சிந்தும் கொலுசுகளுடன் நடந்து போகும் உங்களைப் பார்த்தேன். கற்பனை இல்லை.கனவு கண்டு உறங்கவில்லை.சத்தியமாக அளப்பரிய உண்மையாக தத்ரூபமாக உங்களைப்பார்த்தேன்......’ ஏன் இந்த நாவலின் வரிகளை குறிப்பிட்டு பேச வேண்டியிருக்கிறது என்றால் மொழியின் சிறப்பே இந்நாவல்.

‘நீங்கள் எங்கே இருந்தாலும் நன்றாக இருப்பீர்கள். நான் உங்களை மறக்கமாட்டேன். எனக்கு நீங்கள் செய்தது நன்மையன்றி வேறில்லை.உங்களை எப்போதாவது மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.கிடைக்காமலும் போகலாம்.என்றைக்கும் அந்த மஞ்சள் வெயிலின் நண்பன் நான்.விடைபெறுகிறேன்’. நாவலை முடிக்கும் போது சலிப்பு இல்லை. தன் காதலை ஏற்காத காதலியை வாழ்த்தி இப்படி முடித்திருக்கிறார்.

மஞ்சள் வெயில் மறுக்கப்பட்ட காதலின் நினைவுப் படிமம்.

சனி, 19 ஜூன், 2010

விலக எத்தனிக்கும் அன்பும்.. கையறு நிலைக்கு முந்தைய கணங்களும்... சந்திராவின் "காட்டின் பெருங்கனவு" சிறுகதை தொகுப்பை முன்வைத்து- விஷ்ணுபுரம் சரவணன்



(மே 29 ந்தேதி பெரம்பலூரில் விடுதலை குயில்கள் கலை இலக்கிய அமைப்பு துவக்கவிழாவில் பேசியதின் எழுத்து வடிவம்..)

தொடக்கம் மையப்பகுதி பகுதி இறுதி அல்லது உச்சப்பகுதி என தமிழ்ச் சிறுகதைகள் வரையறுத்து வைக்கப்பட்டிருந்த இலக்கணங்களை எல்லாம் உதறிவிட்டு எழுத ஆரம்பித்து பல ஆண்டுகளாயிற்று. மையம் நோக்கி கதை சொல்லி நகர்வதே பிரதானம் என்பதெல்லாம் மறைந்து மையம் என்பது ஒன்றல்ல என்பதான படைப்புகள் வந்தவண்ணமிருக்கின்றன.மாயப்புனைவு எழுத்துக்களின் வழியே பயணித்த சிறுகதைகளில் பெரும்பாலும் இன்றைக்கான அரசியலை தெளிவாக முன்வைக்கமுடியாமல்போய்விடுகிற விபத்து நேர்ந்துவிடுவதால் அனேகர் யதார்த்த வகை சிறுகதையையே தேர்ந்தெடுத்துவிடுகின்றனர். ஆயினும் அது தன்குறிப்பு பதிவு போலவோ அல்லது ஒருவித தட்டைத் தன்மையோடும் இல்லாமல் செய்கின்ற முயற்சியில்தான் அது சிறந்த கதையாக மாறுகிறது.

இச்சூழலில்.. புதிதாக எழுத வருபவர் இரண்டுவிதமான கூறுகளை முக்கியமாக எதிர்க்கொள்கின்றனர். ஒன்று அவர்களுக்கு முந்தைய தலைமுறை எழுதியவற்றின் மிச்சத்தை அல்லது எழுத மறுத்ததை எழுதவேண்டியிருப்பதும். அடுத்து.. எழுத்தாளர்களையும் மீறி மாறிக்கொண்டேயிருக்கும் வடிவம் குறித்த பிரக்ஞையே அவை. இவை இரண்டிற்கும் தொடர்ந்த வாசிப்பும் உரையாடலும் முக்கியமானது.

முந்தைய தலைமுறை தவிர்த்த வாழ்வனுபவங்களை எழுதுவதில் தலித் இலக்கியமும் பெண்ணிய இலக்கியமும் தீவிரமாக முன்னெடுத்துச்செல்கின்றன. எதன் ஒன்றால் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அதனை கொண்டாட்டமாகவும், இயல்பினை ஒட்டியும் எழுதி வருவதை நாம் காணலாம். பெண்ணிய கவிதை தளத்தில் உடல்மொழி எவ்வித பிரதானமான இடத்தில் செயல்பட்டதோ அதேபோல் சிறுகதை மற்றும் நாவல்களில் பெண்ணிய மனவுலகம் சார்ந்த உலகம் முன்வைக்கப்பட்டது. இதுவரை காதல், காமம் போன்றவைகளின் வெளிப்பாடு என்பது பெண்ணிய பார்வையையும் ஆண்களே பெண் குரலாக பதிவு செய்தார்களோ அவை கடந்த பத்தாண்டுகளாக உடைந்து பெண்ணின் மனக்குரலை பெண்களே பதிந்து வருவதில் அவை வேறொரு நிறமாகவும், குரலாகவும் வெளிப்படுவதை நாம் காணமுடிகிறது. மிக இயல்பான அதே சமயம் இடக்கையால் புறந்தள்ளப்பட்ட மெல்லிய உணர்வுகள் பெண்களின் எழுத்து வருகைக்கு பிறகே அது நிகழ்ந்தது.

கவிதை எழுதுபவர்கள் பலர் உரைநடைகளும் எழுதும்போது கவிதைக்கான தன்மையோடு அவை மாற்றம் பெறுவதை தவிர்க்கவியலாது. கவிதையில் வெளிப்படும் படிமம் குறீட்டுத்தன்மை பூடகமான தொனி அனைத்தும் சிறுகதைகளிலும் வெளிப்படுவதுபோல, கவிதைகளில் வெளிப்படுத்தப்படும் மிக நுண்ணிய உணர்வுகளும் கதைகளில் வெளிப்படுத்தப்படுகிறது. அவை பல சிறுகதைகளுக்கு பலமாகவும் சிலவற்றில் உணர்வுக்குவியலாக தேங்கி பலவீனமாக மாறிவிடுகிறது.

இந்த சூழலில் வெளிவந்திருக்கும் சந்திராவில் காட்டின் பெருங்கனவு எனும் கவிதைக்கான தலைப்பை போல வந்திருக்கும் சிறுகதை தொகுப்பு முக்கியமான தொகுப்புகளூள் ஒன்றே. இத்தொகுப்பிற்கு உப தலைப்பு இடச்சொன்னால் நான் வைப்பது விலக எத்தனிக்கும் அன்பும், கையறு நிலைக்கு முந்தையை கணங்களும் என்று வைப்பேன். ஆம். அந்தளவு ஒரு சிறுகதை தவிர்த்து மற்றவைகள் அனைத்திலும் விலகஎத்தனைக்கும் அன்பையும், விலகியப்பின் சூழப்போகிற வெறுமையும் கையறு நிலைக்கும் இடைப்பட்ட கணங்களை ஒருவித பரிதவிப்போடே எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது. கதையாக்கத்தில் எவ்வித சிக்கலுமற்று நேர்க்கோட்டு நடையில் எழுதியிருப்பது இன்னும் நெருக்கமாக்குகிறது.

சந்திரா இப்படி எழுதுவதற்கான மனநிலை அவர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல அவரது அப்பாவின் மரணம் முக்கியமான காரணமாக இருக்கக்கூடும். இழந்துபோன அப்பாவின் அன்பை மற்ற உறவுகளில் பொருத்திப் பார்த்தோ அல்லது ஏற்கனவே இழந்த அன்புக்கதையாடல்களை மீட்டுறுவாக்கம் செய்யவோ அவருடைய அப்பாவின் மரணம் முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்.

அவற்றில் முக்கியமான கதையாக பன்னீர் மரத்தெரு கதையைச் சொல்லலாம். குழந்தைகளுக்கான கதை சொல்லலில் பூரணத்துவம் ஆகிற பெண்ணிடமிருந்து குழந்தைகள் தொலைந்துபோகிற நாளிலிருந்து அவள் மனப்பிறழ்வாகிறாள். மனப்பிறழ்வற்ற நாட்களுக்கும் இப்போதைக்குமான இடைவெளிகள் அவளுக்கே தெரிவதுதான் சிக்கலான ஒன்றாக இருக்கிறது. இதே சிக்கலில்தான் ரத்தத்தில் மிதக்கும் படுக்கை அறை கதையில் வரும் பெண்ணும் சிக்கிக்கொள்கிறாள். விபத்து மற்றும் இன்னபிற விடங்களால் மனப்பிறழ்வாகிறவர்களுக்கும் புறக்கணிப்பட்ட அன்பினால் மனப்பிறழ்வாகிறவர்களுக்கான வித்தியாசத்தை மிக நேர்த்தியாக இந்த இரு கதைகளில் பதிவு செய்திருக்கிறார் சந்திரா.

பன்னீர்மரத்தெரு கதையில் வரும் அகிலாவிற்கு தன்னிலிருந்து பறிக்கப்பட்ட அல்லது எது வாழ்நாள் இறுதி வரை போதுமென நினைத்திருந்தமோ அது தொலைந்ததை ஏற்றுக்கொள்ளமுடியாமல் அவள் தனக்குள்ளே சுழன்று சுழன்று பேசிக்கொள்கிறாள். ஒருவேளை சிறார்கள் கேட்க மறுத்ததை கூட அவள் சொல்லிக்கொண்டேயிருந்திருக்கலா ம். அதற்கு இடையூறான எல்லாவற்றின் மீதும் அவள் வன்மம் கொள்கிறாள். அதன் வன்மத்தை மனிதர்கள் மீது பிரயோகிக்க அவள் எந்த சூழலிலும் தயாரில்லை. தன் காதுகளை அடைத்துக்கொள்வதும், டிவி பின்களை யாருமில்லாத நேரத்தில் பிடுங்குவதுமான அவள் மனநிலை இன்னும் யாருக்கோ கதை சொல்லுவதற்கான தயாரிப்போடே இருப்பதற்கான வெளிப்பாடே.

ஏறத்தாழ இதே மனநிலையோடேதான் ரத்தத்தில் மிதக்கும் படுக்கையறை கதையில் வரும் பறிக்கப்பட்ட அன்பிற்கெதிராகவும் வன்மத்தை பிரயோகிக்காத மனநிலையோடே இருப்பதுபோன்ற சித்திரிப்பு அவர்களின் இழந்த இயல்பு மனவோட்டம் குறித்த பிரக்ஞையோடு இருப்பதுதான்.

நதியில் மிதக்கும் கானல் மற்றும் காட்டின் பெருங்கனவு கதைகளில் இதோ.. இதோ .. கண்ணெதிரே துடிக்கவிட்டு பிரியும் அன்பினை பற்றிய தவிப்பாகவும் வெளிப்பட்டிருக்கிறது. இதிலும் இயல்பாக இருக்கிறாள் ஆனால் இயல்பாக அவள் சிந்திக்கவோ செய்யவோ முடியவில்லை. இந்த மனத்தள்ளாட்டத்தான் கதையில் முக்கிய இழையாக நகர்கிறது.

இந்த தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் இரண்டை ஒன்றாக்கினால் கூட அவை ஒன்றின் தொடர்ச்சிபோலவே காணப்படுவை பன்னீர்மரத்தெரு மற்றது ரத்தத்தில் மிதக்கும் படுக்கையறை .குழந்தைக்களுக்கான கதை சொல்லி அத்தெரு வீடுகளில் தொலைக்காட்சி ஆக்கிரமித்துவிட தனித்து போனவளின் மனச்சிதைவு திருமணத்தை மறுத்து அவள் ஏற்றுக்கொள்ளும் தனிமை தருகிற கூடுதல் சிதைவு.. இவளின் நீட்சியாக தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை செய்து அதன் மூலம் அவள் கணவன் சந்தேகித்து மனச்சிதைவுக்குள்ளாகிற பெண் இருவரும் ஏறத்தாழ ஒருவளே. இருவருக்கும் இயல்புக்கு இயல்பற்றவைக்கு இனம் காணமுடிவதே மனச்சிதைவை விடவான சிக்கலாகிவிடுகிறது. நான் சரியாகிவிடுவேனா என மருத்துவரிடம் கேட்குமளவும் , வீடுதிரும்பிய தன்னுடன் கணவன் வன்புணர்வு செய்வதை வழியற்று ஏற்றுக்கொள்ளும் அல்லது புரிந்துக்கொள்ளுமளவான தெளிவே அவளுக்கு பெருதுயராக மாறிவிடுகிறது.

சந்திராவின் கதைகளின் மிக இயலபாக நிகழ்வது கதை சொல்லப்படும் பகுதியின் நிலவியல் வரையறை. காட்டின் பெருங்கனவில் காட்டின் சூழலும் அங்கே வாழும் மனிதர்களின் வாழ்நிலையில் அதனின் இருப்பும் கதையோட்டத்தில் தனித்து தெரியாது சொல்லப்படுவதைப்போல, நகரமும் நகர்புறம் சார்ந்த மனிதர்களின் மனநிலையை வாழ்பகுதி எந்த அளவு பாதிப்பு நிகழ்த்தும் என்பதற்கு சூதுநகரம் கதை சிறந்த உதாரணமாக சொல்லலாம். கூடுதலாக கழிவறை காதல்பிரதி கதையும் இதில் அடங்கும்.

சந்திராவின் கதைகள் உள்ளோட்டமாக இன்னுமொன்றையும் காணமுடிகிறது. நகரமயமாதலின் அத்தனை கூறுகளும் எளிய வாழ்முறையை மேற்கொள்ளும் மனிதர்களின் எண்ணவோட்டத்தையும், எதிர்கால சூழல் மீதான மிகையற்ற நினைவில் இருப்பவர்களின் கருத்துக்களை புரட்டிப்போடுவதை நகரமயமாதலின் விளைவுகளாக கதைகள் வெளிப்படுகின்றன. பன்னிர்மரத்தெருவிற்கு தொலைக்காட்சி வருவதும், செல்போன் தகவல்கள் தொடக்கமாகி சிதையும் மனநிலை, கட்டணக் கழிவறையில் காசு வசூலிக்கும் வேலைக்கு செல்லும் பெண்ணின் இருப்புச்சூழல் என ஒரு வாழ்முறையிலிருந்து அடுத்த வாழ்முறைக்கு கட்டாயமாக மாற்றப்படுவதன் மீதான அவஸ்தையை நுணுக்கமாக பதிந்து செல்கின்றன கதைகள்.

இழந்த அன்புக்கு பிறகான கையறு நிலையை எல்லா கதைகளும் பேசுகையில் ஒரேயொரு கதை மாத்திரம் விருப்பட்ட ஒன்றினை வேறெந்த சூழல் குறித்து கவலையேதுமற்று வன்முறையாக அந்த அன்பை தனக்கானதாக்கி கொள்ளும் கதையாக மருதாணி. கணவரின் நண்பர் மீது தவிர்க்கவே முடியாமல் ஏற்பட்டுவிட்ட அன்பை , அந்த அன்பு தவிர மற்றவைகளை துச்சமாக எண்ணி , அதன் புற விளைவுகள் பற்றி அச்சமற்று அந்த விருப்பத்தை பூர்த்தி செய்து கொள்வது இடாலோ கால்வினா வின் மனைவியின் சாகசம் கதையை ஒத்தது. கால்வினா கதையிலும் இரவு முழுவது வெறொருவருடன் செல்வழித்துவிட்டு விடியலில் வீட்டிற்கு வரும் மனைவி, அந்த அடுக்குமாடி வாசல் திறக்கும்வரை எதிரேயிருக்கும் உணவு விடுதியில் நேரத்தை கழிக்கையில் சந்திக்கும் மனிதர்கள் மூலம் அவளின் மனநிலை வாசகருக்கு வெளிப்படுத்திவிடும் வித்தையாக இருக்கும். குறியீட்டு கதையாக வரும் தரை தேடிப்பறத்தல் கதையில் இன்னும் அக்கரையோடு எழுதியிருக்கும்பட்சத்தில் சிறந்த கதையாக வரவாய்ப்பிருக்கிறது.

சந்திராவின் கதை உலகம் மிக இயல்பாக ஆனால் கூர்மையாக கைகூடிய மொழிநடையுடன் பயணிக்கிறது. ஜெயமோகன் குறிப்பிடுவது போல..
"இன்றைய சிறுகதையின் முன் உள்ள சவாலே இதுதான் என்று படுகிறது. உண்மையின் பலவேறுபட்ட ஆழங்களைச் சொல்லும் கவித்துவம் கொண்ட வடிவையும் பலக்குரல்தன்மையையும் இன்றுள்ள தேவைக்கு ஏற்ப அடைவது எப்படி என்பது. அதற்கான முயற்சிகளாக எதிர்கால கதைகள் இருக்கலாம்."
அம்முயற்சிகளாக தொடங்கியிருக்கும் சந்திராவின் அடுத்தடுத்த கதைகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் எனும் நம்பிக்கையை தருகின்றன இத்தொகுப்பிலுள்ள கதைகள்.

சனி, 10 ஏப்ரல், 2010

மௌனத்தின் சொல்



உன்னைச் சிறப்பாக அழைப்பதற்கு
சொற்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
அன்பைவிட பெரியசொல்
இதுவரை பூமியில் உச்சரிக்கப்படாத
ஆதிச்சொல்
உன்மத்தம் பிடித்தலையச் செய்யும் அழகியசொல்
தேடிக்கலைகிறேன்
எங்கும் இல்லை அந்த பொன் பொறித்த சொல்
கடைசியில் கண்டடைந்தேன்
மௌனத்தில் விரியும் என் புன்னகையே
உனக்கான தேவச்சொல் என்பதை

2
முடிவில்லா புன்னகை

அவன் உதடுகளில்
மௌனம் அழகானது
முத்தங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவை
புன்னகை முடிவில்லாக் கவிதை
உதிரும் சொற்கள் பேரண்டம் ஆளுபவை
ஆகா! அவனது உதடுகள்
பனித்துளி மிதக்கும் காடு
மழைகுடித்த காட்டுப்பூக்கள்
ஆம் அவன் உதடுகள் எழில்வாய்ந்தவை
நானே அவைகளின் பேரரசி

3
தொடர்பற்ற நதி

பரந்துகிடக்கும் வெளி
அடைக்கும் மௌனம்
சிதைந்த ஒலி
வெளிறிய வெளிச்சம்
நட்பறுந்த பொழுதுகள்
காதலின் மரணம்
குழந்தையின் வீறிடல்
அம்மாவின் கண்ணீர்
இவை தொடர்பற்று தொடர்புகொண்டிருக்கிறது
ஓடிக்கொண்டிருக்கும் நதியைப்போல

(ஏபரல் 2010 அம்ருதா இலக்கிய இதழில் வெளிவந்த எனது கவிதைகள்.)

புதன், 3 பிப்ரவரி, 2010

கவிஞர் விக்கிரமாதித்யனுடன் நேர்காணல் -மறுபதிவு



சந்திப்பு: சந்திரா
நன்றி:ஆறாம்திணை.
புகைப்படங்கள்- சந்தோஷ் நம்பிராஜன்

(பத்தாண்டுகளுக்கு முன் நான் ஆறாம்திணை என்ற இணைய இதழில் நிருபராக பணிபுரிந்துகொண்டிருந்தேன். அப்போது கவிஞர் விக்கிரமாதித்தனை நேர்காணல் செய்தேன். அது ஆறாம்திணை இதழில் வெளிவந்தது. கவிஞருக்கு விளக்கு விருது வழங்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த நேர்காணலை இங்கே மறுபதிவு செய்கிறேன்.)

கவிஞன் என்று சொல்வதை விட இவரை நாடோடிக் கவிஞன் என அடையாளப்படுத்துவது இவரது வாழ்வின் தன்மைக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். எழுதத் துவங்கிய காலம் தொட்டு இவரது வாழ்க்கை பயணமும் வறுமையும் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது.

நாடாறு மாதம், காடாறு மாதம் என்று வாழ்ந்தவன் பெயரைக் கொண்டதால் நம்பிராஜனின் வாழ்க்கையும் விக்கிரமாதித்தன் கதை போலவே ஆயிற்று. ஆனாலும் தென்காசி சைவப் பிள்ளைகளின் நசிந்த வாழ்க்கையும், மொழியும், தாமிரபரணிக் கரையின் செழுமையும் இவரது கவிதைகளில் நிறைந்திருக்கிறது.

தன்னுள் பொறியாய்க் கனன்று உதிக்கும் எதையும் கவிதையாய் எழுதி வரும் இவரது இயல்பு கவிதையில் கையாளப்படாத சில உணர்வுகள் கவிதையாய் வெளிவந்திருக்கிறது. இவரது பார்வைக் கோணங்கள் சற்று வித்தியாசமானது. பம்மாத்து இல்லாதது. அதனால்தான் இவரது கவிதைகள் அழுத்தமும் அர்த்தச் செறிவும் மிக்கதாகயிருக்கிறது.

'கவிமூலம்' தொகுப்பு இவரது வாழ்வின், இவரது கவிதையின் மூலத்தை ஓரளவிற்குச் சொல்லும் தொகுப்பு. இந்தத் தொகுப்பில் கூடத் தன்னையும், தன் கவிதைகளையும் முன்னிறுத்தாது, அந்த நிகழ்வுகளை ஒரு சக மனிதனின் பார்வையில் சொல்லியிருப்பார்.

நாடோடி நம்பியண்ணனாய் வாழ்ந்து கொண்டும், கவிஞர் விக்கிரமாதித்தனாய் எழுதிக் கொண்டும் வாழ்நாளைக் கழிக்கும் இவருடன் ஒரு நேர்காணல்.....

'பாரதி, பாரதிதாசனை மீறிய பிரமிள்' என்று சமீபத்தில் நீங்க எழுதியிருக்கீங்க. பிரமிள் இவர்களை விடவும் பெரிய கவிஞனா?

நிச்சயமாக, எந்த சந்தேகமுமில்லாமல் பாரதிதாசனை விட மிகப் பெரிய கவிஞன் பிரமிள். பாரதியை விடவும் பெரிய கவிஞன்தான். இப்ப அதைச் சொன்னால் அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசுகிறேன் என்று புரிந்து கொள்ளப்படும். அதனால் தான் அதைப்பற்றி நான் அதிகம் பேசுவதில்லை.

பிரமிள் பெரிய கவிஞன் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?

ஒரு விஷயம் சார்ந்து மதிப்பீட்டை முன்வைக்கும்பொழுது ஏற்றுக் கொள்ளப்படலாம் அல்லது ஏற்றுக் கொள்ளாமலும் போகலாம். இல்லையென்றால் காலம் தாண்டி ஏற்றுக் கொள்ளப்படலாம். பாரதியாரை மகாகவி என்றபோது எத்தனை பேர் அதை ஒத்துக் கொண்டார்கள். மிகப் பெரிய சர்ச்சை எல்லாம் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கே! ஒரு கவிஞன் சார்ந்த மதிப்பீட்டை முன்னுதாரணங்களுடன் வைக்கிறோம். உடனே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய அவசியமில்லை. பிரமிளைப் பரவலாக அறிந்த பின்புதான் மதிப்பீட்டிற்கான மதிப்பே கிடைக்கும்.

பிரமிளை ஏற்றுக் கொள்வதற்கான தமிழ்ச்சூழல் இன்று இருக்கிறதா? பிரமிள் கவிதை குறித்த விமர்சனப் பார்வை எந்த அளவிற்கு உள்ளது?

தமிழ்ச் சூழலில் பிரமிளை ஏற்றுக் கொள்வது இப்போதைக்கில்லாமல் இருக்கலாம். இன்னும் நூறு ஆண்டுகள் கழித்துக் கூட ஏற்றுக் கொள்ளப்படலாம் . ஆனால் அவனுடைய கவிதைகள் என்றும் வாழும். பிரமிள் கவிதைகளை சுப்பிரமணியம் என்பவர் முழுத் தொகுதியாய்க் கொண்டு வந்திருக்கிறார். அந்தத் தொகுதி ஆயிரம் பிரதிகளும் விற்றுத் தீர்ந்து விட்டது. பிரமிளை அறிவதற்கான முதல் முயற்சி அது. 'கணையாழி' யில் பிரமிளைப் பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதேபோல் ரா.சு. சுந்தரராசனின் கட்டுரை சுருக்கமாகயிருந்தாலும் பிரமிளைப் பற்றி மிகச் சரியாக மதிப்பீடு செய்திருக்கிறார். இன்னும் சிலர் விமர்சனம் செய்திருக்கிறார்கள். மிகச் சரியான புரிதல்கள், தீர்க்கமான முடிவு என்பது அவ்வளவு சீக்கிரம் கிடைத்துவிடாது.

நவீன இலக்கியவாதிகளுடைய படைப்புகள் எந்த அளவில் வரவேற்கப்படுகிறது?

இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கிறது. பல்கலைக்கழக அளவில் நவீன இலக்கியவாதிகளைக் கருத்தில் கொள்வதில்லை. பிரபல பத்திரிகைகள் இந்த கவிஞர்களுடைய கவிதைகளைப் பிரசுரிப்பதில்லை. இந்தக் கவிஞர்களின் கவிதைகள் நூலகங்களிலும் வைக்கப்படுவதில்லை. பிச்சமூர்த்தி படைப்புகளை சி.சு செல்லப்பா கொண்டு வந்தார். பிரமிள் கவிதைகளை அக்ரு. பரந்தாமன் புத்தகமாகப் போட்டார். இலக்கியவாதிகள் ஒன்று தாங்களே தொகுப்பு கொண்டு வர வேண்டும் அல்லது அவர்களின் நண்பர்கள் அதைச் செயல்படுத்த வேண்டும். இப்படிப்பட்ட நிலையில்தான் நவீனத் தமிழிலக்கியச் சூழல் இருக்கிறது. பத்திரிகைகளும், பதிப்பகங்களும் இவர்களைக் கண்டு கொள்வதில்லை.

நவீன கவிதைகள் எல்லாம் புரியாமல் எழுதப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?

நவீன கவிதைகள் புரியாமல் இருக்கின்றன என்பதெல்லாம் மிகவும் அபத்தமான கூற்று. நகுலனுடைய கவிதைகள் கூடப் புரியக்கூடியவைதான். பிரம்மராஜன் கவிதைகள் புரியவில்லை என்றாலும், திரும்பத் திரும்பப் படித்தால் புரிந்து கொள்ளக்கூடியவை தான் . முக்கியமாகக் கலாப்பிரியாவின் கவிதைகள் எல்லோருக்கும் புரியும். புரியக்கூடியக் கவிதைகளையும் எத்தனை பேர் மதிக்கிறார்கள், பொருட்படுத்துகிறார்கள் என்றால் முடிவு சரியானதாகயில்லை.

நவீன கவிஞர்கள் அக உலகத்தைப் பற்றித்தான் அதிகமாக எழுதுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?

அப்படிப் பார்த்தால் சங்க காலத்திலிருந்தே அக உலகம் பேசப்பட்டு வருகிறது. புற உலகத்தைப் பற்றிப் பேசுவதற்குத்தான் தினசரி பத்திரிகைகளும், ஜூனியர் விகடன், நக்கீரன் போன்ற பத்திரிகைகளும், ஏராளமாக இருக்கிறதே! அக உலகம்தான் எந்த வடிவத்திலும் வைக்கப்படவில்லை. அதனால் அக உலகத்தைப் பற்றிப் பேசுவது முக்கியம் என்று நினைக்கிறேன். எப்போதும் ஒரு கலைஞன் அல்லது கவிஞன் அக உலகத்திற்கு நெருக்கமாக இருக்கிறான். so called progress writersதான் புற உலகம், புற உலகம் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதுவும் இப்பொழுது மாறிக் கொண்டிருக்கிறது. அக உலகத்தைப் பற்றி பேசுவது தான் மிகச் சரியான தெரிவு எனச் சொல்லலாம்.

எழுபதுகளில் முற்போக்குக் கவிஞர்களுடைய அடையாளம் மிஞ்சிய அளவிற்குக் கவிதைகளில் போதுமான அளவு கவித்துவமும், கவி ஆளுமையும் வெளிப்படவில்லையே? விமர்சகர்கள் இவற்றை அடையாளப்படுத்தியிருந்தால் இந்தத் தன்மை குறைக்கப்பட்டிருக்கலாமோ?

ஆரம்ப காலங்களில் பொதுவாக விமர்சகர்கள் நாவல், சிறுகதைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் கவிதைக்குக் கொடுக்கவில்லை. இலங்கை விமர்சகர்கள் கைலாசபதி, சிவத்தம்பி என்று எல்லோருமே அப்படித்தான் இருந்தார்கள்.

சி.சு. செல்லப்பா கூடக் கவிதை பற்றிப் பின்னாடிதான் பேசுகிறார். கனகசபாபதி கொஞ்ச காலம் பேசிக் கொண்டிருந்தார். அவரும் விட்டுட்டுப் போயிட்டார். தமிழவன் ஒரு காலகட்டம் வரை பேசிக் கொண்டிருந்தார். இப்ப அவரும் கவிதைகளைப் பற்றிப் பேசுவதே கிடையாது.

விமர்சகர்களுக்கு நாவல், சிறுகதை பற்றித் தெரிந்த அளவிற்குக் கவிதை பற்றிய அக்கறையில்லை. அல்லது நுட்பமான பார்வையில்லை என்று சொல்லலாம்.இப்ப கூட தமிழில் 'ஃபிக்ஸன் ரைட்டர்ஸ்' களாக இருக்கும் என்னோட நல்ல நண்பர்கள் நிறையப் பேருக்குக் கவிதை பற்றித் தெரியாது. பின் நவீனத்துவ எழுத்து, படிமங்கள் கொண்ட எழுத்து என்று தங்கள் எழுத்துக்களில் கட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் கவிதை பற்றிய போதுமான அறிவு அவ்வளவாக இருக்காது.

'வானம்பாடி' கவிதைப் போக்கிலிருந்து உங்கள் கவிதைப் போக்கினை எவ்வாறு வேறுபடுத்திக் கொண்டீர்கள்?

'வானம்பாடி' கவிதைகளில் எனக்கிருந்த வெறுப்பு (aversion) என்னவென்றால் அவர்கள் ஒரு போலியான சமூக, அரசியல் சித்தாந்தப் பார்வையோடு, மேடைப்பேச்சு பாணியிலான கவிதைகளை வண்டி வண்டியாய் எழுதிக் குவித்துக் கொண்டிருந்தார்கள். அவற்றுக்குள்ளிருந்த சமூக அக்கறை, சித்தாந்த அக்கறை எவ்வளவு நம்பிக்கைக்கு உரியதாகயிருந்தது என்ற கேள்வி எனக்குள் இருந்து கொண்டிருக்கிறது.

இந்த இருபது முப்பது ஆண்டுகளில் பார்த்தீர்களானால் அவர்கள் எப்படி வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்பது புரியும். ஒன்று தி.மு.க. சார்பானவர்களாகவோ, இந்திய கம்யூனிஸ்ட் வலது கொஞ்சம் இடது என்று மேடைப் பாங்கிலான கவிதையாளர்களாகவோ இருந்தார்களே தவிர, கவிதைகளில் கவிதை அம்சமிருக்காது. இந்த மாதிரியான கவிதை தோன்றவே முடியாது என்ற பிரிவைச் சேர்ந்தவன் நான்.

'வானம்பாடி' கவிதைகளினால் கவிதை உலகத்திற்கு எந்த வளர்ச்சியுமே கிடையாதா?

நிச்சயமாகக் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் கவிதை வளர்ச்சியில் ஒரு பத்தாண்டு காலம் பின் தங்கிவிட்டது என்பது என்னோட தனிப்பட்ட அபிப்ராயம்.

பாரதிதாசனையே அப்படித்தான் சொல்வேன். பாரதியார் தமிழ்க்கவிதையை இருநூறு ஆண்டுகள் முன்னெடுத்துப் போனார். அதே தமிழ்க் கவிதையை பாரதிதாசன் இருநூறு ஆண்டுகள் பின்னெடுத்துச் சென்றார்.

எந்த அடிப்படையில்?

ஒரு கருத்தைக் கவிதை என்று சொல்வது, அதையே நிறைய வரிகளில் சொல்வது. அதை அவரோடு மட்டும் நிறுத்திவிட்டுப் போகவில்லை. பாரதிதாசன் பரம்பரை என்று சொல்லி பத்து, பன்னிரெண்டு கவிஞர்களை ஏற்படுத்தி ஒரு பிரிவாகவே செய்து விட்டார்.

ஒரு மொழியில் வெவ்வேறுவிதமான கவிதைப் போக்கு வேண்டும். ஆனால் ஒரு ரோடு ரோலர் (Road Roller) வந்து எல்லாத்தையும் அழிச்சிட்டுத் தார் ரோடு போட்ட மாதிரி கவிதையைத் தட்டையாக ஆக்கி விட்டார்கள்.

பாரதியிலிருந்து வெவ்வேறு விதமான கவிதைப் போக்குகளுடன் கவிஞர்கள் கிளைத்தெழுந்தார்கள். கம்பதாசன் என்று ஒருவர் வந்தார். அவருடைய கவிதை பாணி வேறு மாதிரியாகயிருந்தது. நாமக்கல் கவிஞரோ, எஸ்.டி. சுந்தரமோ அவ்வளவு பெரிய கவிஞர்களாக இல்லையென்றாலும் அவர்களுக்கென்று தனி மேடையிருந்தது, தங்களுடைய போக்கில் எழுதலாம் என்று.

பாரதிதாசனுடைய பாணி வெகு சுலபமானது. அதில் அவர் தனித்தன்மையுடன் எழுதினார் என்பதிலெல்லாம் ஒன்றுமில்லை. அந்தக் காலகட்டத்தில் இன உணர்வு, மொழி உணர்வு பற்றிப் பேச வேண்டிய நெருக்கடியுமிருந்தது. அந்த வகையில் அவர் செய்தது சரி. அதில் எவ்வளவு கவிதை என்று பார்த்தோமேயானால் மிகக் கடுமையான மதிப்பீட்டை வைக்க வேண்டியதிருக்கும். அந்த மதிப்பீட்டை பாரதிதாசன் மீது வைக்க வேண்டாம் என்ற தாட்சண்யம் கருதி கூட விட்டு விடலாம். ஆனால் சமகாலக் கவிஞர்களிடம் அப்படி கருதத் தேவையில்லை. மறைந்து போன கவிஞரைப் பற்றி, தமிழ்க் கவிதைச் சூழலில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்து வைத்திருந்த, அதே சமயத்தில் சமூக நோக்கத்திற்காகச் செயல்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான விமர்சனத்தை வைக்க வேண்டாம் என்று நம்புகிறவன் நான். அப்படிச் சொல்ல நேர்ந்தாலும் கூடத் தனிப்பட்ட முறையில் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்வேன்.

யாருடைய கவிதைகளில் தமிழ்க்கவிதை மரபுச்சூழல் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

பிரமிள், நகுலன் ஓரளவுக்கு ஞானக்கூத்தன். ஞானக்கூத்தனை ஓரளவுக்கென்று சொல்வதற்குக் காரணம் அவர் யாப்பை விடவே மாட்டார். யாப்பு வடிவத்திலேயே கவிதையைக் கட்டுகிறார். அது நவீன கவிதை ஆகாது. ரொம்ப அப்சர்ட் (Absurd) கவிதைகளை எழுதும்போது கூட ஓசையை விட மாட்டார். இந்த நவீன காலத்திற்கு எவ்வளவு ஓசை வேணுமோ அதை inner rhythm என்று சொல்கிறோம்.

இன்னர் ரிதம் தமிழில் பிரமிள், நகுலனிடம் ரொம்ப exclusive-வாக இருக்கும். ஆனால் ஞானக்கூத்தன் ஒரு வகையான சந்தத்தில், யாப்பினால் வரக்கூடிய ஓசையில் பண்ணிக் கொண்டிருப்பதால் அவரை முழுக்க முழுக்க தமிழ் மரபு சார்ந்தவர் என்று சொல்ல முடியாது. பிற்கால மரபு சார்ந்தவர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

தமிழில் கம்பன், திருத்தக்க தேவரிலிருந்து தான் ஓசை, சந்தம் கூடி வருகிறது. சங்கப் பாடல்களிலெல்லாம் இன்னர் ரிதம்தான் இருக்கிறது. இந்த இன்னர் ரிதம்தான் நகுலன், பிரமிளிடமும் இருக்கிறது.திரும்பத் திரும்ப இவர்களைச் சொல்லிக் கொண்டிருக்கக் காரணம், இவர்கள் கவிதைக் கட்டமைப்பிலும், விஷயத் தெரிவுகளிலும் சங்க மரபு சார்ந்து வருகிறார்கள். பழைய கவிதையாகயிருக்கிறது; அதே சமயத்தில் இன்றைய வாழ்க்கையை, இன்றையப் பிரச்சினைகளை, இன்றைய மனோபாவங்களை எடுத்துச் சொல்வதால் முழுக்க முழுக்க நவீன கவிதையாகவும் இருக்கிறது.

அதனால்தான் நான் நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறேன். இங்கே நவீன கவிதையைத் தோற்றுவித்தவர்கள் யாரும் கவிஞர்கள் அல்ல. ஃபிக்சன் ரைட்டர்ஸ்'. பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா, வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன் உள்பட எல்லோருமே சிறுகதை எழுத்தாளர்கள். க.நா.சு. மாதிரி ஒரு சிலர்தான் நாவலாசிரியர்கள்.

பாரதிதாசன், பாரதிதாசன் பரம்பரையில் தமிழ்க்கவிதை நசிந்து பொங்கல் வாழ்த்து மாதிரி சம்பிரதாயமாக ஆகும்போது உலகக் கவிதைகளையெல்லாம் பார்த்து, நாமும் வேறு பாணியில் எழுதலாமே என்று தனித்தனியாக முயற்சி செய்தார்கள்.அதற்குப் பின் தான் 'எழுத்து' அமைப்பு வருகிறது. இங்க யாருமே கவிஞர்களாகயில்லை. ஒருவேளை கவிஞர் என்று சொன்னால் 'எழுத்து' அமைப்பில் நகுலன் ஒருவர்தான் கவிஞர்.

அதன் தொடர்ச்சியாகத் தமிழ் வாழ்வு சார்ந்த , முக்கியமான கவிஞர்களாகக் கலாப்ரியா, சுகுமாரன், தேவதேவனைச் சொல்லலாம். அவர்களுடைய இன்னர் ரிதம் எப்படியிருக்கு. ஓசை எப்படியிருக்கு என்பதையெல்லாம் இரண்டாம்பட்சமாகக் கூட வைத்துக் கொள்ளலலாம்.

சமீபத்தில் ஜெயமோகன், தேவதேவனை முன் வைத்து நவீன கவிதைகளை வகைப்படுத்தினார். அவருடைய புரிதல்கள் பற்றிய கருத்துக்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஜெயமோகனைப் பொறுத்தவரை தொடர்ந்து ஏதாவது அரசியல் செய்து கொண்டிருப்பார். சுந்தர ராமசாமி இதுபோல முன்னர் தொடந்து செய்து கொண்டிருந்தார். இப்ப வயதாகிவிட்டதால் செய்வதில்லை. ஜெயமோகன் செயல்படுவது என்பதும் அரசியல் செய்வதென்பதும் சேர்ந்தே வருது. இங்கேயிருக்கும் கவிதைப் போக்கினை அவர் ஒரு சார்ட் அவுட்டுக்குள் கொண்டு வருகிறார்.

ஜெயமோகன் வெறும் அரசியல் மட்டும் செய்தால் அப்படியே அவரைத் தவிர்த்து விட்டுப் போயிடலாம். அவருக்கு லட்சியவாதம், கனவு, தத்துவம் சார்ந்த சிந்தனை என்று ஒரு உயர்ந்த லட்சியங்களைக் கொண்ட மனோபாவம் அவரிடம் இருக்கு. இந்த மாதிரி மனநிலை உள்ளவர்கள் தமிழில் வெகு சீக்கிரம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள, தேவதேவனோடு சேர்த்துத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள். அதனால் தான் ஜெயமோகன் தேவதேவனை முன்வைத்துப் பேசுகிறார். கவிதையை முன் வைத்து பேசினாரென்றால் ஒரு கலாப்ரியாவையோ, விக்கிரமாதித்தனையோ, சுகுமாரனையோ பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. அவர்களையெல்லாம் பிடிக்காமல் தேவதேவனைப் பிடிக்கிறது என்பதற்குக் காரணம் என்னவென்றால், தன்னுடைய லட்சிய மயக்கங்கள், கனவுகள், தத்துவார்த்தப் போக்குகளை முன்னெடுத்துச் சென்று ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஜெயமோகனின் லட்சிய மனப்பான்மைக்கு தேவதேவன் மட்டும்தான் பொருத்தமாக இருப்பார். வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டோம்.

கலாப்ரியாவை எடுத்துக் கொண்டால் ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்த சிதிலங்களை முன்னெடுத்து நிறுத்தினார். சுகுமாரனை எடுத்துக் கொண்டால் தகப்பனுக்கும், மகனுக்குமான விரோதமான போக்கு, இந்தச் சமூகத்தில் தனித்து அலைய வேண்டிய வாழ்க்கை நெருக்கடிகளைப் பற்றி எழுதியிருக்கிறார்

ஜெயமோகன் ஒரு ஃபிலாசபிகல் ஃபிக்சன் ரைட்டர், அதனால் அவர் ஒரு ஃபிலாசபிகல் ஃபிக்சன் போயட்டை முன் வைக்கிறார் அவ்வளவுதான்.

இங்கு வாழ்வியல் சார்ந்து பேசுகின்ற கவிஞர்கள் மேற்கத்திய கவிதை போன்ற ஒரு அறிவியல் சார்ந்த தத்துவார்த்த விசாரணையில் ஈடுபடக்கூடியவர்களாகயில்லையே ஏன்?

தேவதச்சன் கொஞ்சம் தத்துவார்த்தக் கவிதைகளைத்தான் பேசிட்டிருக்கார். அவற்றை 'இன்டலக்சுவல்' என்று சொல்லாம். முழுக்க முழுக்கத் தத்துவம் சார்ந்து தமிழில் வரவில்லை தான். தத்துவம் படித்த மாணவர் என்பதால் தேவதச்சனின் கவிதைகள் அந்த அமைப்பிற்குள் வந்தது. ஆனந்துக்கும் அந்த ஈடுபாடிருந்தது. அதுக்கு முன்னாடி கே.ராஜகோபால் இருந்தார். அந்தக் காலகட்டத்தில் அது வாசகர்களைச் சரியாகச் சென்றடையவில்லை. சி.எம். மணியுடைய கவிதைகள் தத்துவம் படிந்த ஒரு தத்துவமாக வரும். அது மேலோட்டமான தத்துவமாக இருந்ததே தவிர ஆழமானதாகயில்லை.

தேவதேவனின் ஆரம்ப காலக் கவிதைகளில் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் பாதிப்பு நிறைய இருக்கும். அதை அவர் மறுக்கலாம், இல்லையென்று வாதிடலாம். ஆனால் ஜே. கிருஷ்ணமூர்த்தியைப் படித்து விட்டு தேவதேவனைப் படித்தால் அந்தப் பாதிப்பு மிக ஆழமாக இருப்பதை உணரலாம்.

தமிழ்க் கவிதைச் சூழலில் ஒரே மாதிரியான கவிதைப் போக்கு. அதாவது பசவய்யா என்று எடுத்துக் கொண்டால் அதனைத் தொடர்ந்து அதே பாணியிலான கவிதைகள். சில கவிதைகளில் பெயரை எடுத்துவிட்டால் ஒரே மாதிரியான கவிதையாகத்தான் இருக்கும் . இது எவ்வகையில் சாத்தியப்படுகிறது?

நான் சங்கப் பாடல்களை மனம் போனவாறு படித்திருக்கிறேன்; ஒட்டுமொத்தமாகப் படித்தேன் என்று சொல்ல முடியாது. என்னுடைய பார்வையில் கபிலர், பரணர், அவ்வை, சாத்தியார் இந்த மாதிரி சில பேரோட பாடல்கள் தனியாகத் தெரியும். கலித்தொகையையே எடுத்து கொண்டீர்களானால் பத்து பன்னிரெண்டு கவிதைகள்தான் தனியாகத் தெரியும். மற்றவையெல்லாம் அவற்றின் நகல் மாதிரியோ அல்லது ஒரு ஸ்கூல் மாதிரியோ தெரியும். இது எல்லாக் காலத்திலேயும், எல்லா மொழியிலேயும் இருக்கின்ற ஒன்று. அதில் தனித்தன்மையோடு இருப்பவன்தான் கவிஞன். அதுதான் ரொம்பக் காலத்துக்கு நிக்கவும் செய்யும்.

உங்களுடைய கவிதைக்கான புரிதல்கள் என்ன? அல்லது ஒரு கவிதையை எப்படி உணர்ந்து கொள்கிறீர்கள்?

சில கவிதைகளைப் பத்து ஆண்டு காலங்களுக்குப் பிறகு கூட புரிந்து கொள்ள முடியும். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால் சமயவேலின் 'காற்றின் பாடல் கலைகள்' தொகுதியைப் படிக்கும்போது எனக்கு ரொம்பவும் சாதாரணமாகப்பட்டது. பத்து வருசத்துக்கப்புறம் இப்ப பார்க்கிறப்போ 'அடடா ரொம்ப நல்லாருக்கு' ன்னு தோணுது. அப்போது அவரிடம் அதைப் பற்றி பேசியிருந்தால் இன்னும் நிறைய எழுதியிருப்பார். அல்லது சரியான திசையை நோக்கிப் போயிருந்திருப்பார். 'ஐயோ நாம அதைச் செய்யலையே' என்ற வருத்தம் கூட எனக்கிருக்கு. எளிய சொற்களைக் கொண்டிருப்பதாலேயே அது சாதாரண கவிதை என்று நினைத்து விடக்கூடாது. ஆரம்ப காலத்தில் எனக்கு பிரமிளையே உள்வாங்கிக் கொள்ள முடியாமலிருந்தது. இந்தக் கவிதையை இப்படிப் பார்க்கக்கூடாது என்று, நண்பர் என்ற முறையிலும் என்னை விட ஆங்கில அறிவு அதிகமுள்ளவர் என்ற முறையிலும் சமயவேல் மாதிரி நல்ல நண்பர்கள் எனக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.

அதேபோல் தற்போது என்.டி. ராஜ்குமார் என்ற இளைஞரோட கவிதைகளில் வாழ்வு புதுசாக இருக்கிறது. பேய் ஓட்டுவது, பேய் பிடிப்பது, மோகினிப் பிசாசு என்று புதிய விசயத்துடன், புதிய மொழிகளும் ஒரு மாயக் கவர்ச்சியுமாயிருக்கிறது. நாம திரும்பத் திரும்பப் படித்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லத் தூண்டுகிறது.

நல்ல கவிதையைக் கண்டுபிடிப்பதும், நல்ல கவிஞனைக் கண்டுபிடிப்பதும் திரும்பத் திரும்பப் படிப்பதனாலும் பயிற்சியின் மூலமும் தான் சாத்தியம் என்பது என்னோட தனிப்பட்ட அனுபவம். மேம்போக்காகப் படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்து விடக் கூடாது.ஒரு கவிஞரின் இரண்டாவது தொகுதி வந்திருக்கும் என்றால் முதல் தொகுதியைப் படித்து அது எந்த மாதிரி வந்திருக்கிறது என்று இரண்டிலும் ஒரு பார்வை இருக்க வேண்டும். முக்கியமாக நவீன கவிதைக்கு அந்தப் பார்வை அவசியம் தேவைப்படுகிறது.

சங்கப் பாடல்களைப் பற்றி நமக்கு எல்லாமே கற்றுத் தரப்பட்டிருக்கிறது. சின்ன வயதில் பள்ளிக்கூடங்களில், திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கூட அதைப் பற்றி பேசியிருக்கிறார்கள். நவீன கவிதையைப் புரிந்து கொள்வதற்கு ஒரு வழிகாட்டி வேண்டியிருக்கிறது. அது நானாகயிருக்கலாம். அல்லது இன்னொரு கவிஞனாக இருக்கலாம். அதற்கான தொடர்ந்த வாசிப்பும், அந்தக் கவிதைகளைப் பற்றி பேசுவதும் தொடர்ச்சியாக இருக்கும் போதுதான் நவீன கவிதை சரியாக முன் வைக்கப்படுகிறது.

'ரொமான்டிக் கவிஞர்' என்று உங்களைச் சொல்கிறார்களே? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

எஸ். ராமகிருஷ்ணன்தான் என்னை 'ரொமான்டிக் கவிஞர்' என்று சொன்னார். எழுதி எழுதி எனக்குள் ஒரு பகுதியைக் காலியாக்கிவிட்டேன. ஒரே மாதிரியாக எழுதுவது எனக்கே அலுப்பாயிருந்தது. ஒரு பால்ய கால சிநேகிதியைப் பற்றி எழுதிப் பார்க்கலாம் அல்லது குடும்ப வாழ்க்கையில் மனைவி சார்ந்த இனிமையான நிகழ்வுகளை எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றியது.

என்னுடைய இளைஞ நண்பர்கள் எல்லாருமே, 'ஏன் அண்ணாச்சி ஒரே மாதிரி எழுதுறீங்க. ஃபிக்சன்(fiction) எழுதிப் பாருங்க, கவிதை பற்றிய கட்டுரை எழுதுங்க. அல்லது கொஞ்ச நாளைக்கு எழுதாமலிருங்க' என்றார்கள். 'எழுதுகிறவைகளை எல்லாம் அப்படியே பத்திரிகைக்கு அனுப்பாதீங்க. கொஞ்சம் தெரிவு செய்து அனுப்புங்களேன்' என்றும் சொன்னார்கள். அதனால் ரொமான்டிக் எழுதிப் பார்த்தேன். எனது சொந்த வாழ்க்கையில் ரொமான்டிக் பக்கமே கிடையாது. என்னோட சிறு வயதில் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னாடியே உணவு தேட வேண்டியதாயிடுச்சு. கல்வி தேடுவது, வேலை தேடுவது என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்க்கையின் அடிப்படையான விசயங்களைத் தேடுவதிலேயே என்னோட காலம் போய் விட்டது. இப்ப ஒரு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னாடிதான் கொஞ்சம் ரொமான்டிக் கவிதை எழுதினேன்.

பிரேம் ரமேஷ், சமயவேல் மாதிரி நண்பர்கள் என்னை 'ஆன்டிக் பொயட்' என்று தான் சொல்வார்கள்.

எனக்கு சங்கப்பாடல்கள் மீது அளவு கடந்த காதலிருந்தது. அதைப்போல வாழ்க்கையில் இனிமையான விஷயங்களை எழுதலாம் என்று தோன்றியது.

'தனிப்பாட்டுத் திரள்' பார்த்தீர்களானால் ஒரு வறட்சியான எதிர்க்கவிதையாக இருக்கும்.கவிதை சார்ந்து ஆங்கில அறிவு எனக்குக் குறைவு என்பதால் இந்த இரண்டு விஷயங்களும் தமிழ் மரபு சார்ந்துதான் அமைந்திருக்கிறது.

உங்கள் 'கவிமூலத்தில்' காணப்படும் மனிதர்கள் எல்லாம் நல்லவர்களாகவே இருக்கிறார்களே எப்படி?அல்லது எல்லோரையும் நீங்கள் நல்லவர்களாகப் பார்க்கிறீர்களா?

ஒரு வகையில் பார்த்தால் மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள்தான். அப்படி நான் கான்ஷியசாகப் (consious) பார்க்கவில்லை. நான் சொல்லியிருக்கின்ற மனிதர்களுக்குள் ஒரு இனிமையான பகுதி இருந்திருக்கலாம் அல்லது எனக்கே மரபு சார்ந்த ஒரு நல்ல அணுகுமுறை இயல்பிலேயே அமைந்திருந்திருக்கும். உண்மையில் மனிதர்களை நல்லவர்களாகப் பார்க்க முயற்சி செய்கிறேன்.

ஈழத்துக் கவிதைகளிலிருக்கும் வெவ்வேறு தளங்கள் தமிழ்க் கவிதைகளில் இல்லை என்று சொல்கிறார்களே? அதைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்க?

தமிழ்க் கவிதையை விட ஈழத்துக் கவிதை சிறந்தது என்று எண்பதுகளிலிருந்து பிரச்சாரம் பண்ணிட்டு வர்றாங்க. 'இலக்கு' நடத்திய கருத்தரங்கில் நானே மேடையில் இதை மறுத்துப் பேசியிருக்கிறேன். ஈழத்திலிருக்கின்ற அரசியல், சமூக நிலைமைகள் வேறு. இங்கேயிருக்கின்ற அரசியல் சூழல் வேறு. அதைப் பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஜெயபாலன்கிட்ட இதைப் பற்றிப் பேசுவதற்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆதவன்கிட்ட நிறையப் பேசியிருக்கிறேன். எனக்கும் அவருக்கும் தமிழ்க்கவிதை பற்றி, நகுலன் கவிதை வரைக்கும் ஒத்த சிந்தனையிருக்கிறது. தமிழ்க் கவிதைக்கும், ஈழத்துக் கவிதைக்கும் நிறைய வேறுபாடிருக்கிறது. இரண்டையும் ஒப்பிட்டுப் பேசுவது என்பது எந்த வகையிலும் பொருத்தமற்றது. தமிழ் என்ற மொழியில் எழுதுவதாலேயே அவற்றைத் தமிழ்க்கவிதையாகக் கருத வேண்டுமென்றோ அங்கீகரிக்க வேண்டுமென்றோ கட்டாயமில்லை.

கவிதையைப் பொறுத்தவரையில் இலங்கை சார்ந்த கவிதைகளையெல்லாம் படித்து விடுவேன். ஈழத்துக் கவிஞர்களான ஜெயபாலன், சேரன் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ஈழத்துக் கவிதைகளையும் தமிழ்க் கவிதைகளையும் வேறு வேறாகத்தான் பார்க்கிறேன். இப்போதுதான் ஈழத்துக் கவிதைகள் ஒரு கட்டமைப்புக்குள் வந்திருக்கிறது. அவர்களுக்குக் கவிதைகள் மிக நீளமாக இருக்க வேண்டும். மனுஷ்ய புத்திரனிடம் எனக்கிருக்கின்ற சங்கடமே அதுதான். ஒரு விஷயத்தை எழுத ஆரம்பித்தார் என்றால் இரண்டு பக்கத்திற்கு இழுத்துக் கொண்டே போவார். இருபத்தைந்து வரிகளுக்கு மேலே ஒரு கவிதையை என்னால் படிக்க முடிவதில்லை. கவிதை என்பது ஒரு பொறி. அது மிக நீளமானதாகயிருக்க முடியாது. இப்ப பரவாயில்லை. சின்னதாக எழுதுகிறார்கள். ஆனாலும் சமயங்களில் மூன்று பக்கத்துக்குப் போய் விடுகிறது. இவையெல்லாம் தாண்டி அவர்களுக்கு ஒரு அரசியல், சமூக நோக்கம் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளலாம். அதற்காகத் தமிழ்நாட்டுக் கவிஞர்களை விட இலங்கைக் கவிஞர்கள் பெரிய ஆளுங்க என்று எந்தக் காலத்திலும் என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. இதைத் தாராளமாக நீங்கள் பதிவு பண்ணிக் கொள்ளலாம்.

பெண் கவிஞர்கள் அதிகமாக இல்லாததற்குக் காரணம்?

முதலில் கவிதை மேலே அக்கறை வேண்டும். நீண்ட கால உழைப்பு வேண்டும். ஒரு பத்து ஆண்டு உழைப்பு இருந்தால் ஒரு நல்ல நாவலாசிரியராகி விடலாம். ஆனால் கவிதை வந்து அப்படி பத்து ஆண்டுகளில் கைகூடி வந்து விடாது. அதில் ஆழ்ந்து போய் விட முடியும் என்று சொல்ல முடியாது. ஒரு வேளை தன் போக்கில் அப்படி வரலாம். அது ரொம்ப அபூர்வமானது. அப்படித் தன் போக்கில் அமைந்து விடுவதில் கூட அதை வளர்த்தெடுத்துப் போவதற்கும், செழுமைப்படுத்துவதற்கும் தொடர்ச்சியான உழைப்பு வேண்டும். தொடர்ந்த வாசிப்பும், தொடர்ந்து அதைப் பற்றி யோசிப்பதும், கவிதை பற்றிய சரியான பார்வையும் மிகவும் அவசியம்.

திங்கள், 1 பிப்ரவரி, 2010

விக்கிரமாதித்யன் என்ற ஆளுமை



கவிஞர் விக்கிரமாதித்யன் அவர்களுக்கு தமிழின் சிறந்த இலக்கிய விருதான விளக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கான பாராட்டு விழா 31.01.2010 அன்று நடந்தது. மிகப்பெரிய கூட்டம் இல்லை. ஆனால் அவரை விரும்பியவர்கள் அல்லது அந்த ஆளுமையை புரிந்துகொண்டவர்கள் அங்கே இருந்தார்கள். விக்கிரமாதித்யனைப் பற்றி சொல்லும்போது காடாறு மாதம் நாடாறுமாதம் வாழ்கிறவர் என்பார்கள். அவரை விரும்பியவர்களால் நாடோடி நம்பியண்ணன் என்று செல்லமாக அழைக்கப்படுபவர். அவருடைய வாழ்க்கை முழுதும் பயணத்தால் நிரம்பியிருக்கிறது. அது தத்துவார்த்தமும் விரக்தியும் வறுமையும் தேடலுமான பயணம். விக்கிரமாதித்யனை ஒரு கவிஞனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்கிறார்கள். ஆனால் அப்படி கவிஞனாக வாழ்வதில் உள்ள பொருளாதார சிக்கலும் மனச்சிக்கலும் மிகப் பெரிது. வலி நிறைந்தது. ஒரு கவிஞனாக வாழ்வதில் அவருக்கு மிகப்பெரிய ஆனந்தம் எதுவும் இருக்கப்போவதில்லை. ஆனால் அவரால் ஒரு கவிஞனாக மட்டுமே வாழமுடியும்.

அவருக்கான விளக்கு விருது பாராட்டு விழாவில் மிக அசௌகரியமாகவே உட்கார்ந்திருந்தார். ஆம் அவர் மேடையையும் பாராட்டையும் விரும்பவில்லை என்றே தெரிந்தது. அவர் தன்பின்னால் எந்த ஒளிவட்டத்தையும் வைத்துக்கொள்ளவில்லை. அதுவே அவரை மிகச் சிறப்பான இடத்தில் வைத்திருக்கிறது. அவரைப்பற்றி, கவிதையில் அவர் ஆளுமையைப்பற்றி, அவர் வாழ்க்கையைப்பற்றி விழாவில் கலந்துகொண்டவர்கள் பேசும் போது அதை மிக ஆர்வமாக எளிமையாக எதிர்கொண்டார். சிலசமயம் வெட்கத்தோடு ஒரு சிறுவனைப் போல் சிரித்துக்கொண்டார். என்னை அவரிடம் பலமுறை பலபேர்(இலக்கிய நண்பர்கள்) அறிமுகப்படுத்திக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் இவங்களை எனக்கு ‘நல்லாத் தெரியுமே’ என்பார். ஆம் அவரை ஆறாம்திணை இணைய இதழுக்காக நேர்காணல் செய்திருக்கிறேன். அப்பொழுது முதல் இலக்கிய கூட்டங்கள் புத்தகக் கண்காட்சிகளில் சந்திக்கும் போது நினைவு கூர்ந்துகொள்வார். நேர்காணலில் மட்டும் அவரிடம் நிறைய பேசினேன். அதன்பின்னான சந்திப்புகளில் நலம் விசாரிப்புகளோடு பேச்சு முடிந்துவிடும். ஆனால் எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞராக இருந்தார். அவரைப் பற்றிய செய்திகளை அங்கங்கே கேட்டுக்கொண்டே இருப்பேன்.

ஏனேன்று தெரியவில்லை. அவருடைய கவிதையை விட அவருடைய வாழ்க்கை மிகவும் அவதானிப்புகளுக்கு உள்ளாக்கப்படுகிறது. ஒரு கவிஞனின் நலிந்த வாழ்க்கை சுவாரஸ்யத்தை கொடுக்கிறதா? இது மிகப்பெரிய கேள்வியாக எனக்குள் இருக்கிறது. சமிபத்தில் அவருக்கு சினிமாவில் பாடல் எழுத வாய்ப்பு வந்தது. அவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார். பாடல் ஒலிப்பதிவு நடக்கும் நாளை அவரிடம் தெரியபடுத்த படக்குழுவினர் முற்பட்டபோது வழக்கப்போல் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. அவரிடம் செல்போனும் கிடையாது. அவர் பாடல் எழுதும் வாய்ப்பை விரும்பியோ விரும்பாமலோ தவறவிட்டார். அதைப்பற்றி விசனத்தோடு இருக்கிறாரா என்றும் தெரியவில்லை. ஆனால் எப்போதும்போல் சிரித்த முகத்தோட இருக்கிறார். இந்த விசயம் கேள்விப்படும் அனைவரும் ‘ஏன் இவர் இன்னும் பொழைக்கத் தெரியாம இருக்கிறார்’ என்பார்கள். அவை எல்லாவற்றிர்க்கும் அவருடைய பதில் ஒரு சிரிப்பாகத்தான் இருக்கும். நான் கடவுள் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அது பற்றியும் அவருக்கு பெரிதான அபிப்ராயம் இருப்பதுமாதிரி தெரியவில்லை. அதையும் தன் வாழ்வின் ஒரு சாதாரண நிகழ்வாகவே நினைக்கிறார்.

புதிதாக எழுத வருபவர்களை எந்த தலைமைப்பீடத்தையும் தலையில் வைத்துக்கொள்ளாமல் பாராட்டி வளர்த்துவிடுவார் என்பார்கள். ‘ஆரம்பகாலத்தில் விக்கிரமாத்தியன்தான் என் எழுத்தை பாராட்டி அதை பத்திரிக்கைகளில் வெளிவருவதற்காகவும் முயற்சி செய்தார்’ என்று அஜயன்பாலா விழாவில் பேசினார். விக்கிரமாதித்யனைப்பற்றி பல சுவாரஸ்யமான விசயங்களை பகிர்ந்து கொண்டார். ஒரு நாள் விக்கிரமாதித்யனுக்கு நடிகை விஜயசாந்தியை பார்க்க வேண்டும் போல் இருந்திருக்கிறது. அஜயன்பாலாவை அழைத்துக்கொண்டு விஜயசாந்தி வசிக்கும் தி.நகர் ப்குதியில் ராத்திரியெல்லாம் அலைந்துகொண்டிருந்திருக்கிறார். இது ஒரு சாதாரண ரசிகன் ஒரு நடிகையை பார்க்கும் ஆவலைப்போல் இல்லை. அவருக்கும் தெரிந்திருக்கும் ராத்திரியில் ஒரு நடிகையின் வீட்டை கண்டுபிடித்து அவரைச் சந்திப்பது சாத்தியமில்லை என்பது. இருந்தும் அந்த ராத்திரி முழுதும் அந்த நடிகையின் ஞாபகத்தில் இருக்க விரும்பி இருக்கிறார். அந்த கவிதை மனது சரியானதா இல்லையா என்பது விசயம் இல்லை. ஆனால் அவர் அப்படித்தான் இருந்திருக்கிறார். அதேபோல் ‘பருவராகம்’ என்றொரு இதழ். அது ஒரு பாலியல் விசயங்களை உள்ளடக்கிய இதழ். அந்த இதழில் விக்கிரமாதித்யனின் கவிதை ஒரு காலத்தில் வந்திருக்கிறது. அந்த இதழுக்கெல்லாம் எழுதி அவர் சம்பாதிதார் என்று அர்த்தம் இல்லை. அது எதிர்புரட்சியும் அல்ல. வாழ்க்கை மீது விருப்பு வெறுப்பு என்று பிரித்தறிய முடியாத ஏதோ ஒரு சுவை அதில் அடங்கியிருக்கிறது. காலம் இவரை தவறவிட்டுக்கொண்டிருக்கும் அல்லது சிலநேரம் காலத்தை இவர் தவறவிட்டுக்கொண்டிருப்பார். எதுவாக இருந்தாலும் காலம் இவரை ஒரு கவிஞனாக வைத்திருக்கிறது. இது சாபமா? வரமா? என்று தெரியவில்லை.

செவ்வாய், 26 ஜனவரி, 2010

நினைவில் நீ, நான் மற்றும் சாலை.


மழையில் உன் சாலை ஒரு பறவையைப்போல மிதந்து கொண்டிருக்கும் நேரத்தில் என் தூக்கத்தில் நீ சிரித்துக்கொண்டிருந்தாய். நிழல்படிந்த உன் சாலை மிக அழகானது நீயோ நானோ அல்லது ஒரு குழந்தையோ நடந்து செல்லும்போது. பூக்கள் உதிர்ந்து கிடக்கும் சாலையை அவமதிக்காதே பூக்களுக்கு நிகரான உன் சிரிப்பை உதிர்த்து சாலையை மேலும் அழகாக்கிச் செல். சாலையின் முடிவில் மழையில் நனைந்தபடி மறைந்து செல்லும் உருவத்தை நானாய் நீ கற்பனை செய்வதை நிறுத்தாதே என் நினைவில் உன் சாலை உயிர்பெறட்டும். நீ நடந்து செல்லும் சாலை பூக்கள் மலர்ந்த காடு...இன்னும் இன்னும் என் அன்பின் வார்த்தைகளில் உன் சாலை உயிருள்ள ஓவியம்.

வெள்ளி, 22 ஜனவரி, 2010

காதலை பிரியாதீர்கள்




மழையடிக்கும் பொழுதுகள்
காதலைச் சொல்லும் தூதகணங்கள்
அன்பர்களே
உங்கள் காதல் முறிவினை அப்பொழுதில் நிகழ்த்தாதீர்.
காதல் பொழிவில் தேகம் அழகுறும் வசந்தகாலத்தில்
எனவே சிறப்பானவர்களே
விடைசொல்லி நீண்ட மௌனத்தோடு பிரிவதற்கு
ஏதுவானது இல்லை அக்காலம்.
தனிமையின் துயர் நெக்குருக வாட்டும் பனிக்காலத்தில்
நண்பர்களே அதுவும் சிறப்பானதல்ல.
வெம்மை தகிக்கும் கோடை
உங்கள் அன்பானவர்களின்
தற்கொலையைத் தூண்டும்
நீங்காதீர் அவர்களை குறிப்பாக கோடையில்.
இலை உதிரும் நாட்களின் உலர்ந்த காற்றுகள்
திரெகத்தை வலிமை இழக்கச் செய்யும்
நோய்தாக்கும்.
பருவமற்ற சாதாரண தினங்கள்
பிரிந்த காதலை நினைத்து நினைத்து
பித்துக்கொள்ளச் செய்யும்.
எந்தப் பருவமும் உகந்தல்ல
காதலை விட்டுச் செல்வதற்கு
எனவே
எக்காலத்திலும் காதலியுங்கள் காதலைப் பிரியாமல்

வியாழன், 7 ஜனவரி, 2010

எனது இரண்டு நூல்கள் வெளியீடு





சிறுகதைகள் மற்றும் கவிதை நூல்களை உயிர் எழுத்து பதிப்பகம்
வெளியிட்டுள்ளது. கவிதைகள் தொகுப்பை கவிஞர் நா. முத்துக்குமார் வெளியிட
கவிஞர் சமயவேல் மற்றும் நடிகர் ஜெய் பெற்றுக்கொண்டனர். சிறுகதை தொகுப்பை
எழுத்தாளர் ஷோபா சக்தி வெளியிட இயக்குனர் சசிக்குமார் பெற்றுக்கொண்டார்.

சிறுகதைகள் தொகுப்பு- 'காட்டின் பெருங்கனவு'

'மனித உறவுகளை விரும்பி நாடும் ஜீவன்கள் எதிர்கொள்ளும் அவஸ்தைகளைப்
பேசுகின்றன சந்திராவின் கதைகள்.நேரான சொல்லல் முறையைக் கொண்டுள்ள இக்கதைகள் பால் சார்பற்றுக் கிளைத்தெழுகின்றன. பெண் மனம் தனித்து அவதானிக்கக்கூடிய நுட்பமான விஷயங்களைப் பதியும் சந்திராவின் கதையுலகில் இயற்கை பிரிக்க முடியாத கூறாக விளங்குகிறது. ஒரு மலைக்கிராமம் தொடங்கி சூது நிரம்பிய பெருநகரம்வரை புவியியல் அடையாளங்களாகக் கொண்ட சந்திராவின் கதையுலகப் பரப்பு வசீகரமானது'-எழுத்தாளர் நஞ்சுண்டன்.

கவிதைகள்-நீங்கிச் செல்லும் பேரன்பு

'தனித்த பறவையொன்றின் கீதமாய் காற்றில் கலந்து சன்னமாய் மனதிற்குள் ஒலிக்கச் செய்கின்றன சந்திராவின் கவிதைகள். மீளாத் துயரொன்றின் மீதேறிய கண்ணீரின் வார்த்தைகள் அவை. துரோகமும் மரணமும் அன்பு முறிதலுமாய் வாழ்க்கை துன்பங்களை பரிசளிக்கையில் அதற்கு பதிலாய் மொழியின் வாயிலாக வெறுமையின் வரைபடங்களை கவிதைகளாக வெளிப்படுத்துகிறார் சந்திரா'-கவிஞர் உமாஷக்தி.

http://www.andhimazhai.com/news/viewmore.php?id=10945