சனி, 19 ஜூன், 2010

விலக எத்தனிக்கும் அன்பும்.. கையறு நிலைக்கு முந்தைய கணங்களும்... சந்திராவின் "காட்டின் பெருங்கனவு" சிறுகதை தொகுப்பை முன்வைத்து- விஷ்ணுபுரம் சரவணன்



(மே 29 ந்தேதி பெரம்பலூரில் விடுதலை குயில்கள் கலை இலக்கிய அமைப்பு துவக்கவிழாவில் பேசியதின் எழுத்து வடிவம்..)

தொடக்கம் மையப்பகுதி பகுதி இறுதி அல்லது உச்சப்பகுதி என தமிழ்ச் சிறுகதைகள் வரையறுத்து வைக்கப்பட்டிருந்த இலக்கணங்களை எல்லாம் உதறிவிட்டு எழுத ஆரம்பித்து பல ஆண்டுகளாயிற்று. மையம் நோக்கி கதை சொல்லி நகர்வதே பிரதானம் என்பதெல்லாம் மறைந்து மையம் என்பது ஒன்றல்ல என்பதான படைப்புகள் வந்தவண்ணமிருக்கின்றன.மாயப்புனைவு எழுத்துக்களின் வழியே பயணித்த சிறுகதைகளில் பெரும்பாலும் இன்றைக்கான அரசியலை தெளிவாக முன்வைக்கமுடியாமல்போய்விடுகிற விபத்து நேர்ந்துவிடுவதால் அனேகர் யதார்த்த வகை சிறுகதையையே தேர்ந்தெடுத்துவிடுகின்றனர். ஆயினும் அது தன்குறிப்பு பதிவு போலவோ அல்லது ஒருவித தட்டைத் தன்மையோடும் இல்லாமல் செய்கின்ற முயற்சியில்தான் அது சிறந்த கதையாக மாறுகிறது.

இச்சூழலில்.. புதிதாக எழுத வருபவர் இரண்டுவிதமான கூறுகளை முக்கியமாக எதிர்க்கொள்கின்றனர். ஒன்று அவர்களுக்கு முந்தைய தலைமுறை எழுதியவற்றின் மிச்சத்தை அல்லது எழுத மறுத்ததை எழுதவேண்டியிருப்பதும். அடுத்து.. எழுத்தாளர்களையும் மீறி மாறிக்கொண்டேயிருக்கும் வடிவம் குறித்த பிரக்ஞையே அவை. இவை இரண்டிற்கும் தொடர்ந்த வாசிப்பும் உரையாடலும் முக்கியமானது.

முந்தைய தலைமுறை தவிர்த்த வாழ்வனுபவங்களை எழுதுவதில் தலித் இலக்கியமும் பெண்ணிய இலக்கியமும் தீவிரமாக முன்னெடுத்துச்செல்கின்றன. எதன் ஒன்றால் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அதனை கொண்டாட்டமாகவும், இயல்பினை ஒட்டியும் எழுதி வருவதை நாம் காணலாம். பெண்ணிய கவிதை தளத்தில் உடல்மொழி எவ்வித பிரதானமான இடத்தில் செயல்பட்டதோ அதேபோல் சிறுகதை மற்றும் நாவல்களில் பெண்ணிய மனவுலகம் சார்ந்த உலகம் முன்வைக்கப்பட்டது. இதுவரை காதல், காமம் போன்றவைகளின் வெளிப்பாடு என்பது பெண்ணிய பார்வையையும் ஆண்களே பெண் குரலாக பதிவு செய்தார்களோ அவை கடந்த பத்தாண்டுகளாக உடைந்து பெண்ணின் மனக்குரலை பெண்களே பதிந்து வருவதில் அவை வேறொரு நிறமாகவும், குரலாகவும் வெளிப்படுவதை நாம் காணமுடிகிறது. மிக இயல்பான அதே சமயம் இடக்கையால் புறந்தள்ளப்பட்ட மெல்லிய உணர்வுகள் பெண்களின் எழுத்து வருகைக்கு பிறகே அது நிகழ்ந்தது.

கவிதை எழுதுபவர்கள் பலர் உரைநடைகளும் எழுதும்போது கவிதைக்கான தன்மையோடு அவை மாற்றம் பெறுவதை தவிர்க்கவியலாது. கவிதையில் வெளிப்படும் படிமம் குறீட்டுத்தன்மை பூடகமான தொனி அனைத்தும் சிறுகதைகளிலும் வெளிப்படுவதுபோல, கவிதைகளில் வெளிப்படுத்தப்படும் மிக நுண்ணிய உணர்வுகளும் கதைகளில் வெளிப்படுத்தப்படுகிறது. அவை பல சிறுகதைகளுக்கு பலமாகவும் சிலவற்றில் உணர்வுக்குவியலாக தேங்கி பலவீனமாக மாறிவிடுகிறது.

இந்த சூழலில் வெளிவந்திருக்கும் சந்திராவில் காட்டின் பெருங்கனவு எனும் கவிதைக்கான தலைப்பை போல வந்திருக்கும் சிறுகதை தொகுப்பு முக்கியமான தொகுப்புகளூள் ஒன்றே. இத்தொகுப்பிற்கு உப தலைப்பு இடச்சொன்னால் நான் வைப்பது விலக எத்தனிக்கும் அன்பும், கையறு நிலைக்கு முந்தையை கணங்களும் என்று வைப்பேன். ஆம். அந்தளவு ஒரு சிறுகதை தவிர்த்து மற்றவைகள் அனைத்திலும் விலகஎத்தனைக்கும் அன்பையும், விலகியப்பின் சூழப்போகிற வெறுமையும் கையறு நிலைக்கும் இடைப்பட்ட கணங்களை ஒருவித பரிதவிப்போடே எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது. கதையாக்கத்தில் எவ்வித சிக்கலுமற்று நேர்க்கோட்டு நடையில் எழுதியிருப்பது இன்னும் நெருக்கமாக்குகிறது.

சந்திரா இப்படி எழுதுவதற்கான மனநிலை அவர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல அவரது அப்பாவின் மரணம் முக்கியமான காரணமாக இருக்கக்கூடும். இழந்துபோன அப்பாவின் அன்பை மற்ற உறவுகளில் பொருத்திப் பார்த்தோ அல்லது ஏற்கனவே இழந்த அன்புக்கதையாடல்களை மீட்டுறுவாக்கம் செய்யவோ அவருடைய அப்பாவின் மரணம் முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்.

அவற்றில் முக்கியமான கதையாக பன்னீர் மரத்தெரு கதையைச் சொல்லலாம். குழந்தைகளுக்கான கதை சொல்லலில் பூரணத்துவம் ஆகிற பெண்ணிடமிருந்து குழந்தைகள் தொலைந்துபோகிற நாளிலிருந்து அவள் மனப்பிறழ்வாகிறாள். மனப்பிறழ்வற்ற நாட்களுக்கும் இப்போதைக்குமான இடைவெளிகள் அவளுக்கே தெரிவதுதான் சிக்கலான ஒன்றாக இருக்கிறது. இதே சிக்கலில்தான் ரத்தத்தில் மிதக்கும் படுக்கை அறை கதையில் வரும் பெண்ணும் சிக்கிக்கொள்கிறாள். விபத்து மற்றும் இன்னபிற விடங்களால் மனப்பிறழ்வாகிறவர்களுக்கும் புறக்கணிப்பட்ட அன்பினால் மனப்பிறழ்வாகிறவர்களுக்கான வித்தியாசத்தை மிக நேர்த்தியாக இந்த இரு கதைகளில் பதிவு செய்திருக்கிறார் சந்திரா.

பன்னீர்மரத்தெரு கதையில் வரும் அகிலாவிற்கு தன்னிலிருந்து பறிக்கப்பட்ட அல்லது எது வாழ்நாள் இறுதி வரை போதுமென நினைத்திருந்தமோ அது தொலைந்ததை ஏற்றுக்கொள்ளமுடியாமல் அவள் தனக்குள்ளே சுழன்று சுழன்று பேசிக்கொள்கிறாள். ஒருவேளை சிறார்கள் கேட்க மறுத்ததை கூட அவள் சொல்லிக்கொண்டேயிருந்திருக்கலா ம். அதற்கு இடையூறான எல்லாவற்றின் மீதும் அவள் வன்மம் கொள்கிறாள். அதன் வன்மத்தை மனிதர்கள் மீது பிரயோகிக்க அவள் எந்த சூழலிலும் தயாரில்லை. தன் காதுகளை அடைத்துக்கொள்வதும், டிவி பின்களை யாருமில்லாத நேரத்தில் பிடுங்குவதுமான அவள் மனநிலை இன்னும் யாருக்கோ கதை சொல்லுவதற்கான தயாரிப்போடே இருப்பதற்கான வெளிப்பாடே.

ஏறத்தாழ இதே மனநிலையோடேதான் ரத்தத்தில் மிதக்கும் படுக்கையறை கதையில் வரும் பறிக்கப்பட்ட அன்பிற்கெதிராகவும் வன்மத்தை பிரயோகிக்காத மனநிலையோடே இருப்பதுபோன்ற சித்திரிப்பு அவர்களின் இழந்த இயல்பு மனவோட்டம் குறித்த பிரக்ஞையோடு இருப்பதுதான்.

நதியில் மிதக்கும் கானல் மற்றும் காட்டின் பெருங்கனவு கதைகளில் இதோ.. இதோ .. கண்ணெதிரே துடிக்கவிட்டு பிரியும் அன்பினை பற்றிய தவிப்பாகவும் வெளிப்பட்டிருக்கிறது. இதிலும் இயல்பாக இருக்கிறாள் ஆனால் இயல்பாக அவள் சிந்திக்கவோ செய்யவோ முடியவில்லை. இந்த மனத்தள்ளாட்டத்தான் கதையில் முக்கிய இழையாக நகர்கிறது.

இந்த தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் இரண்டை ஒன்றாக்கினால் கூட அவை ஒன்றின் தொடர்ச்சிபோலவே காணப்படுவை பன்னீர்மரத்தெரு மற்றது ரத்தத்தில் மிதக்கும் படுக்கையறை .குழந்தைக்களுக்கான கதை சொல்லி அத்தெரு வீடுகளில் தொலைக்காட்சி ஆக்கிரமித்துவிட தனித்து போனவளின் மனச்சிதைவு திருமணத்தை மறுத்து அவள் ஏற்றுக்கொள்ளும் தனிமை தருகிற கூடுதல் சிதைவு.. இவளின் நீட்சியாக தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை செய்து அதன் மூலம் அவள் கணவன் சந்தேகித்து மனச்சிதைவுக்குள்ளாகிற பெண் இருவரும் ஏறத்தாழ ஒருவளே. இருவருக்கும் இயல்புக்கு இயல்பற்றவைக்கு இனம் காணமுடிவதே மனச்சிதைவை விடவான சிக்கலாகிவிடுகிறது. நான் சரியாகிவிடுவேனா என மருத்துவரிடம் கேட்குமளவும் , வீடுதிரும்பிய தன்னுடன் கணவன் வன்புணர்வு செய்வதை வழியற்று ஏற்றுக்கொள்ளும் அல்லது புரிந்துக்கொள்ளுமளவான தெளிவே அவளுக்கு பெருதுயராக மாறிவிடுகிறது.

சந்திராவின் கதைகளின் மிக இயலபாக நிகழ்வது கதை சொல்லப்படும் பகுதியின் நிலவியல் வரையறை. காட்டின் பெருங்கனவில் காட்டின் சூழலும் அங்கே வாழும் மனிதர்களின் வாழ்நிலையில் அதனின் இருப்பும் கதையோட்டத்தில் தனித்து தெரியாது சொல்லப்படுவதைப்போல, நகரமும் நகர்புறம் சார்ந்த மனிதர்களின் மனநிலையை வாழ்பகுதி எந்த அளவு பாதிப்பு நிகழ்த்தும் என்பதற்கு சூதுநகரம் கதை சிறந்த உதாரணமாக சொல்லலாம். கூடுதலாக கழிவறை காதல்பிரதி கதையும் இதில் அடங்கும்.

சந்திராவின் கதைகள் உள்ளோட்டமாக இன்னுமொன்றையும் காணமுடிகிறது. நகரமயமாதலின் அத்தனை கூறுகளும் எளிய வாழ்முறையை மேற்கொள்ளும் மனிதர்களின் எண்ணவோட்டத்தையும், எதிர்கால சூழல் மீதான மிகையற்ற நினைவில் இருப்பவர்களின் கருத்துக்களை புரட்டிப்போடுவதை நகரமயமாதலின் விளைவுகளாக கதைகள் வெளிப்படுகின்றன. பன்னிர்மரத்தெருவிற்கு தொலைக்காட்சி வருவதும், செல்போன் தகவல்கள் தொடக்கமாகி சிதையும் மனநிலை, கட்டணக் கழிவறையில் காசு வசூலிக்கும் வேலைக்கு செல்லும் பெண்ணின் இருப்புச்சூழல் என ஒரு வாழ்முறையிலிருந்து அடுத்த வாழ்முறைக்கு கட்டாயமாக மாற்றப்படுவதன் மீதான அவஸ்தையை நுணுக்கமாக பதிந்து செல்கின்றன கதைகள்.

இழந்த அன்புக்கு பிறகான கையறு நிலையை எல்லா கதைகளும் பேசுகையில் ஒரேயொரு கதை மாத்திரம் விருப்பட்ட ஒன்றினை வேறெந்த சூழல் குறித்து கவலையேதுமற்று வன்முறையாக அந்த அன்பை தனக்கானதாக்கி கொள்ளும் கதையாக மருதாணி. கணவரின் நண்பர் மீது தவிர்க்கவே முடியாமல் ஏற்பட்டுவிட்ட அன்பை , அந்த அன்பு தவிர மற்றவைகளை துச்சமாக எண்ணி , அதன் புற விளைவுகள் பற்றி அச்சமற்று அந்த விருப்பத்தை பூர்த்தி செய்து கொள்வது இடாலோ கால்வினா வின் மனைவியின் சாகசம் கதையை ஒத்தது. கால்வினா கதையிலும் இரவு முழுவது வெறொருவருடன் செல்வழித்துவிட்டு விடியலில் வீட்டிற்கு வரும் மனைவி, அந்த அடுக்குமாடி வாசல் திறக்கும்வரை எதிரேயிருக்கும் உணவு விடுதியில் நேரத்தை கழிக்கையில் சந்திக்கும் மனிதர்கள் மூலம் அவளின் மனநிலை வாசகருக்கு வெளிப்படுத்திவிடும் வித்தையாக இருக்கும். குறியீட்டு கதையாக வரும் தரை தேடிப்பறத்தல் கதையில் இன்னும் அக்கரையோடு எழுதியிருக்கும்பட்சத்தில் சிறந்த கதையாக வரவாய்ப்பிருக்கிறது.

சந்திராவின் கதை உலகம் மிக இயல்பாக ஆனால் கூர்மையாக கைகூடிய மொழிநடையுடன் பயணிக்கிறது. ஜெயமோகன் குறிப்பிடுவது போல..
"இன்றைய சிறுகதையின் முன் உள்ள சவாலே இதுதான் என்று படுகிறது. உண்மையின் பலவேறுபட்ட ஆழங்களைச் சொல்லும் கவித்துவம் கொண்ட வடிவையும் பலக்குரல்தன்மையையும் இன்றுள்ள தேவைக்கு ஏற்ப அடைவது எப்படி என்பது. அதற்கான முயற்சிகளாக எதிர்கால கதைகள் இருக்கலாம்."
அம்முயற்சிகளாக தொடங்கியிருக்கும் சந்திராவின் அடுத்தடுத்த கதைகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் எனும் நம்பிக்கையை தருகின்றன இத்தொகுப்பிலுள்ள கதைகள்.