புதன், 5 மார்ச், 2014

”என் சிறுகதையில் பெண்கள்”

என் சிறுகதையில் பெண்கள்
என்று  தலைப்பை எங்கிருந்து ஆரம்பிப்பது.  வான் முழுதும் நீலமாக இருக்கும்போது அதில் கொஞ்சம் நீலத்தை மட்டும் எப்படி பிரிதெடுப்பது. வானிலிருக்கும் அத்தனை நீலத்தையும் எழுதிவிடத்தான் மனம் துடிக்கிறது. உலகின் அத்தனை பெண்களிடமும் தீராத பலகோடிக் கதைகள் நிறைந்துகிடக்கிறது. நொடிக்கொருதரம் மாறிக்கொண்டிருக்கும் வாழ்வில், பெண்களைப் பற்றிய கதைகள் குறைவாகத்தான் வெளிப்பட்டிருக்கிறது.. வழக்கமாக ஆண் எழுத்தாளர்களே பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். பெண்கள் நிறைய வாசிக்கத் தொடங்கிய பிறகு பெண்கள் எழுதத் தொடங்கினார்கள். அப்போது ஆண்லுலகம் விதித்திருக்கும் சமூக பண்பாட்டு அடிப்படையிலும், ஆண் எழுத்தாளர்கள் உருவாக்கி வைத்திருந்த அதே பெண் வடிவங்களையும், உணர்வுகளையுமே வெளிப்படுத்தினார்கள்.

தலித் இலக்கியம் எழுச்சி பெற்ற காலத்தில்தான் பெண்களும் தங்களுடைய உண்மையான உணர்வுகளை பாசாங்கின்றி எழுதத் தொடங்கினார்கள். இருந்தாலும் பெண் கவிதைகளில் இருந்த ஆதிக்க எதிர்ப்பு மூர்க்கம் சிறுகதைகளில் குறைவாகவே வெளிப்பட்டன. ஆனால் சிறுகதை எழுத்தாளர் அம்பையின் வரவிற்குபின் சிறுகதையிலும் ஆண் ஆதிக்க வன்முறை எதிர்ப்பு தொடங்கியது. கல்வி, சமூக, பண்பாட்டு அரசியல் என்று பல்வேறு சமூகக் காரணங்கள் தடைபோட்டுக்கொண்டிருந்தாலும் எண்ணற்ற பெண் படைப்பாளிகள் புத்தெழுச்சியாக தமிழ் நவீன இலக்கிய உலகத்திற்குள் நுழைந்து, தகிப்பும், தவிப்பும், புதிர்களின் ரகசியமும், பகிர்ந்துகொள்ள முடியாத வேதனைகளையும், வாழ்வின் கொண்டாட்ட மனநிலையையும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அம்பை, தொடங்கி பாமா. உமாமகேஷ்வரி,சு.தமிழ்ச்செல்வி. தமயந்தி போன்றோர் சிறுகதைகளில் யதார்த்த வாழ்க்கையையும், ஆதிக்க வன்முறைகளை எதிர்க்கும் கலகக்குரல்களையும் பதிவுசெய்திருக்கிறார்கள். நவீன இலக்கியத்தில் பெண் கவிஞர்களில் இடத்தினைப் பார்க்கும்போது, சிறுகதை இலக்கியத்தில் மிகச் சொற்பமான பெண் எழுத்தாளர்களே இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் நிறைய பெண் எழுத்தாளர்கள் சிறுகதை இலக்கியத்திற்குள் இயங்கினால்தான் பெண்களின் பரந்துபட்ட வாழ்வும், உண்மையான மனநிலையும், விருப்பவும் அதிக அளவில் பதிவுசெய்யப்படும். அப்போதான், அதன் சார்ந்து சமூகத்தில் மாற்றம் நிகழும்.  

கவிஞர் குட்டிரேவதி, வெண்ணிலா போன்ற பெண் கவிஞர்கள் தற்போது சிறுகதை தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்கள். அதைப்போல மற்ற பெண்கவிஞர்களும் சிறுகதைகளை எழுத முன்வரவேண்டும். கல்வி, வேலை, அரசியல், போன்றே இலக்கியச் செயல்பாடுகளிலும் பெண்களின் பங்கு அதிகமாக இருந்தால்தான், பெண்களின் முன்னேற்றத்திற்கும் ஆண்பெண் பேதகளின்றி சமநிலைச் சமுதாயம் உருவாவதற்கும் அது வழிவகுக்கும். அந்த வகையில் நான் தொடர்ந்து சிறுகதை உலகிற்குள் இயங்கவதை பெருமையாக நினைக்கிறேன்.

என் வாழ்வில் நான் பார்த்த பெண்களின் கதையுலம், ”வெளிஅளவிற்கு விசாலமானது. அவர்களின் கதையுலகின் ஒரு சிறுதுளி தேனை சுவைத்துவிடும் ஆவலிலேயே அப்பெண்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவர்களிடம் கொட்டிக்கிடக்கும் கதைகளைத் தோண்டத் தோண்ட, நாம் நம் பழமையின் பிரமாண்ட கனவுலகத்தின் கோட்டைக்குள் ஒவ்வொரு அறையாக சந்தோசக்கூ ச்சலிட்டு அலையலாம்.. களிநடனம் புரியலாம். தேவதைகளை பரிசிக்கலாம். வீழ்ச்சியடையடையாத உலகத்தில் பேரரசிகளாக, பேரரசர்களாக உலா வரலாம். நான் இதுவரை என் கதைகளில் ஒரு துளித் தேனைக்கூட அருந்தவில்லை. அந்த தேனுக்கான வேட்டையிலேயே இருக்கிறேன்.

இப்பூமியின் முதல் உயிரைக் கொடுத்தவள் பெண்ணே. அது என் நம்பிக்கை. எனக்கும் உயிர்கொடுத்தவளும் அவளே. அவர்களின் மீதான என் முதல் ஞாபகம் இப்படித் தொடங்கினால்தான் சரியாக இருக்கும். ஏனேன்றால் என் வாழ்க்கையில் இருக்கும் பெண்களே அல்லது வாழ்க்கையில் நான் சந்தித்த பெண்களே என் கதைகளிலும் வருபவர்கள்.  இப்போது இருக்கின்ற எங்கள் ஊருக்கும்(கூடலூர்)  மூன்று வயதில் என் நினைவிலிருக்கும் எங்கள்  ஊருக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்பது, ஒரு கடல் உள்வாங்கி பின்சென்றதைப் போன்று மிகப்பெரிய வித்தியாசத்தைக் கொண்டிருக்கிறது.. இன்றைய ஊர் நிறையவே மாறிவிட்டது. கல்வியில். பொருளாதார வளர்ச்சியில், நாகரீகத்தில் அது மிகப்பெரிய உயரத்தை அடைந்து விட்டது. ஆனால் பன்னீர்மரக் கதைகளை இழந்துவிட்டது ஊர். தெருவுக்குத் தெரு வீட்டுக்கு வீடு அற்புதங்கள் ஒளிந்துகிடந்த வீடு இன்று திறந்துகிடக்கிறது. அங்கே ரகசிய அறைகளை தேடும் குழந்தைகள் இல்லை. கதவுக்கு பின்னால் மறைந்துகொண்டு பயமுறுத்தும் சக குழந்தைகள் இல்லை. ஆனால் அதில்  எனக்கு ஒரே ஒரு நிம்மதி மட்டும் இருக்கிறது. தொலைந்துபோன அந்த குட்டி குட்டி வனப்பான கனவுகளை, நினைவுகளை, வாழ்வினை நான் கதைகளாக எழுதியிருக்கிறேன் என்பதுதான் அது.

என் வாழ்வில்  என் முதல் ஞாபகத்தில் வரும் பெண்  அம்மா என்று நீங்கள் நினைக்கலாம். என் சிறுகதைகளில் பெண்கள்என்றுதான் தலைப்பு. ஆனால் எனக்கோ என் சிறுகதைகளில் இதுவரை இடம்பெறாத கொள்ளுப்பாட்டிதான் என் முதல் பெண். முதல் கதை நாயகி. பால்யத்தில் நினைவில் முதல் ஞாபகமாக பெரும்பாலும் அம்மாதான் இருப்பார் ஆனால் எனக்கோ என் கொள்ளுப்பாட்டிதான் ஞாபகத்தில் வருகிறாள். ஏனேன்றால் என் அம்மா எப்போதும் என்னுடனே இருப்பதால் அவர்களை ஞா பகமூட்டத் தேவையிருந்திருக்கவில்லை..

 என் அம்மாவின் அம்மா, என் அம்மா சிறுவயதாக இருக்கும்போதே இறந்துவிட்டதால், தன் மகள் விட்டுப்போன என் அம்மா உட்பட, மூன்று பெண் குழந்தைகள்  மற்றும் மூன்று ஆண் குழந்தைகளை வளர்த்தெடுத்தவள் அந்த ஆதித்தாய் என் கொள்ளுப்பாட்டி.  ஆனால் என் முதல் பெண்ணை நான் இதுவரை கதைகளில் எழுதவில்லை. ஏனேன்றால் அவள் என்னிடம் காட்டிய அன்பு என்பதை நான் ஒரு நாளும் கதையாகவே பார்க்க முடியாது. எனக்கு வாழ்வளித்தவளை வாழ்வாகப் பார்க்காமல் எப்படி கதையாகப் பார்ப்பது .
எங்கமாவுக்கு நான் மூன்றாவது குழந்தை. ஏற்கனவே அம்மாவிற்று  ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் இருந்ததால்..மூன்றாவது பிறந்த என்னை சிசுக்கொலை செய்யச் சொல்லி ஊர்காரர்களும், உறவினர்களும் வற்புறுத்தியிருக்கிறார்கள். அம்மா சொந்தக்காரர்களிடம் முடியாது என்று  சண்டை போட்டுக்கொண்டிருக்க, என் அப்பா கோபமாக என்னைத் தூக்கிக்கொண்டுபோய் என் கொள்ளுப்பாட்டியிடம் கொடுத்து, என் மகளை இந்தப் பேய்களிடமிருந்து   காப்பாற்ற என்று  அழுதபடி கொடுத்திருக்கிறார்  என் பேரன்புமிக்க அப்பா.

அன்று என் கொள்ளுப்பாட்டியின் கைகளுக்குப் போனேன். அந்தக் கைகளின் அன்பின் வாஞ்சைகளை இன்னும் என் உயிரில் உணர்ந்துகொண்டிருக்கிறேன். அதை எப்படி கதைகளாக எழுதுவது. கம்யூனிஸ்ட்டான என் அப்பா எனக்கு வேலண்டினா என்று பெயர் வைக்க, பாட்டியால் அந்த பெயரை உச்சரிக்க முடியாததால் சந்திரா என்று பெயரிட்டிருக்கிறாள் அந்த ஆதித்தாய். பின் அவள் என்னை சந்திர சூரியரே என்றுதான் அழைப்பாள். நான்கு வயதாக இருக்கும்போது அவள் கரங்களிலிருந்து என்னை விடுவித்துவிட்டு என்னென்றைக்கும் திரும்பி வராதாவளாகிவிட்டாள். அதன்பின் சந்திர சூரியரே என்று யாரும்  என்னை அழைக்கவில்லை. நானும் யாரும் அப்படி அந்தப் பெயரிட்டு அழைப்பதை விரும்பவில்லை. என் கதையில் நான் எழுதாத அந்த முதல் பெண் இறந்த நாளில் என் சித்தியின் மகளான 6 மாதக் குழந்தையை  என் மடியில் வைத்து பன்னீர்மரத்துக்கு அடியில் உட்கார்ந்திருந்தேன். மிகப்பெரிய அழுகைச் சத்தமும் பல்வேறு சடங்குகளோடும் அவள் காணாமல் போய்விட்டாள்.  

ஏதோதோ கதைகளை என் நேரமும் என் காதுகளுக்குள் முணுமுணுத்துக்கொண்டிருந்த என் கொள்ளுப்பாட்டிதான் எனக்குள் கதையுலகத்தை வளர்த்துவிட்டவள். அவள் தன்னுடைய இறுதி காலத்தில் இருந்ததால் என்னவோ, வானம்தான் அவள் கடைசியாக சென்றடையும் வெளி என்பதில் தீராத நம்பிக்கைகொண்டிருந்தாள்.. அதனால்தான் அவள் எப்போதும் வானத்தைக் காட்டி பேசிக்கொண்டிருப்பாள். பலநாள் பாட்டியே நிலாவில் உட்கார்ந்து வடைசுட்டுக்கொண்டிருப்பதாகத் தோன்றும். அவள் இறந்துபோய் வானத்திற்குச் சென்றதாகவும், அங்கே இருந்த கடவுள்கள் அவளைப் பாவம் பார்த்து மீண்டும் உயிர் கொடுத்து பூமிக்கு அனுப்பிவிட்டதாகவும், அங்கே அவள் கண்ட காட்சியை வெளியே சொன்னால் அவள் தலை வெடித்துவிடும் என்றும் கதை சொல்வாள்.  

என்னுடைய நான்கு வயதில் கேட்ட இந்தக் கதை இப்போதுவரை என் ஞாபகத்தில் இருக்க என் பெரியம்மாதான் காரணம்.   பாட்டியின் அருகிலிருந்து என்னைப்போலவே அந்தக் கதையைக் கேட்டுக்கொண்டிருந்த என் பெரியம்மா, பாட்டியைத் தொடர்ந்து அதே பாட்டியின் கதையை என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். நான் வளர்ந்து எழுத்தாளரானபின்னும் என் பெரியம்மா என் பாட்டிக்கு நடந்தது உண்மைதான் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். இப்படிப்தான் பெண்களின் கதைகள் அல்லது பெண்கள் சொல்லும் கதைகள் காலங்காலமாக தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இப்போது எல்லோரும் டீவிக்கு முன்னால் உக்கார்ந்திருப்பதால் கதை சொல்லிகளும் கதை கேட்பவர்களும் இல்லாமல் போய்விட்டார்கள். அது பால்யகாலத்தின் இறுதியிலேயே தொடங்கிவிட்டது.

கதைசொல்ல பெரும் விருப்பம் உள்ள ஒரு இளம் பெண் தொலைக்காட்சியின் வருகைக்குப்பின், கதைகேட்கும் தன் குட்டி இளவரசிகளை இளவரசர்களையும் இழந்து, கடைசியில் ஆழமான தனிமைக்குள் போய் பித்தாகி எங்கோ தொலைந்துபோனாள் என்று எழுதியிருக்கிறேன். அந்தக் கதையில் வரும் அகிலா நிஜமான அழகான கதை சொல்லி..நிஜவாழ்வில் அங்கயர்கண்ணியாக இருந்தவளை கதையில் அகிலாவாக்கிவிட்டேன். நிஜவாழ்வில் கணவனின் வன்முறையால் தற்கொலை செய்துகொண்ட அவளை கதையில் பித்தாகி எங்கோ சென்றுவிட்டாள் என்று எழுதினேன். ஆனால் அவள் பன்னீர்மரத்துக்கு கீழே அமர்ந்து, பூக்களை உதிர்ப்பதுபோல் கதை சொன்னது உண்மை..

 கோடைகாலத்தில் அழகான கலர்க்கொடை பிடித்து வேலைக்குச் செல்லும் அந்தக் அக்கா அப்படியே பாரதிராஜா படமான கடலோரக் கவிதைகள் ரேகா போலவே இருப்பாள். நீண்டகாலமாக திருமணமாகாத அந்த அழகான பெண் தொலைக்காட்சி வரவுக்கு பின்,தனிமையில் உழன்று, தன் அண்ணியின் வற்புறுத்தலால் அவளுக்கு பொருத்தமற்ற மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டாள். கணவனின் வன்முறையை தாங்கமுடியாத அவள் தற்கொலை செய்து மாண்டுபோனாள். அதுவும் நிறைமாத கர்ப்பமாக அவள் தூக்கில் தொங்கினாள் என்பதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. அதை அப்படியே கதையாக எழுதும் மனதைரியம் எனக்கில்லை. நிஜத்தினை கொஞ்சம் புனைவு கலந்து பன்னீர்மரத் தெரு என்ற அந்தக் கதையை எழுதினேன். நிஜத்திலிருந்து புனைவாக மாறும் இந்த சிறுமாற்றம்தான் சிறுகதைக்கு தேவையானம் ஆகும்.

இது தவிர்த்து முழுக்க முழுக்க யாதார்த்த கதைகளையும் எழுதிப் பார்க்கலாம். நான் எழுத்தாளராக பரவலாக அறியப்பட காரணமாக இருந்த. என்னுடையபுளியம்பூஅந்த வகை யதார்த்தக் கதைதான். அது பெண்பார்வையில் (என் பார்வையில்) எழுதப்பட்ட அப்பாவின் கதை. அது பெண்ணின் கதையாக இல்லாவிட்டாலும், மகள் அப்பாவின் அன்பைப் பற்றி, அவரது கனவு, அப்பா அவள் மேல் வைத்திருக்கும் அன்பு என்று எனக்கு மிகவும் பிடித்த எனது வாழ்வில் நடந்த சொந்தக் கதை.   

என் சிறுகதைகளில் மிக முக்கிமான அழியாத பெண் சித்திரம் அழகம்மா. அது என் அப்பாவின் அத்தையாம். 1950 களில் நடந்த அவளது கதையை எங்கள் வம்சத்தில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் சொல்கிறார்கள். அது மிகவும் துயரார்ந்த பெண்ணின் கதை. அந்தக் கதையை கேட்டு முடிக்கும்போது அழகம்மா அநீதிக்கு எதிராக வெகுண்டெழுந்த பிரமாண்ட பேரசியாகத் தோன்றும்.. அந்தக் கதையை படிக்கும்போது பழைமை வாய்ந்த தொன்மக் கதையாகவோ சிறு தெய்வம் அல்லது பேயுறு கதையாகத்தான் உங்கள் மனதில் படியும். அழகம்மா என்ற உண்மைப்பெண்ணை உங்களால் கற்பனை செய்ய முடியாது.

ஆனால் அழகம்மா என்றழைக்கப்பட்ட என் அப்பாவின் அத்தை குடும்ப பிரச்னையால் விவாகரத்து ஆனபின், தன் கணவனாலும் அவனுடைய நண்பர்களாலும் வஞ்சமாக அழைத்துச் செல்லப்பட்டு அடர்ந்த சோளகாட்டுக்குள் இருக்கும் கிணற்றுக்குள் அவளை தூக்கி எறிந்து தலையில் கல்லைப்போட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்ள்.. சிதைந்த சிதிலமாக கண்டெடுக்கப்பட்ட அப்பெண் பேயுறுகொண்டு அவர்கள் எல்லோரையும் பழிவாங்கியதாக கதை. அதன்பின் அவளைக் கொலை செய்த குடும்பத்தில் எந்த ஆண் பிள்ளைகள் வெகுகாலம் தங்குவதில்லை. விரைவில் மரணத்தை அடைந்துவிடுவார்கள் என்று இன்றும் என் குடும்பத்தினரால் சொல்லப்பட்டுவருகிறது. அந்த குடும்பத்தோடு தண்ணீர் புழக்கம் கூட இல்லாமல் காலங்காலமாக தள்ளிவாழ்கிறார்கள்.

இக்கதை எங்கப்பாவின் மூலமாக எனக்குச் சொல்லப்பட்டு என் மூலமாக என் மகளுக்கும் இந்த உலகத்திற்கும் சொல்லப்பட்டிருக்கிறது. பகுத்தறிவாளியான எனக்கு கடவுள்,பேய் நம்பிக்கையில்லை. ஆனால் அநீதியை பழிவாங்கிய  அழகம்மாளை எனக்குப் பிடித்திருக்கிறது.

இக்கதை குறித்து விமர்சனம் செய்த கவிஞர் ஏகாதேசி இப்படிச் சொல்கிறார் 

அழகம்மா கதையை நான் படித்துக்கொண்டு செல்கையில் நெஞ்சதிர்கிற ஒரு இடம் வந்து நான் மீண்டும் வாசிக்கத் தொடர்கிற மனதறுந்தவனாய் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அதன் அட்டை மீது என் பார்வையை தவழ்விட, நூல் வாங்கிய ஒரு வார காலமாக ஒன்றும் செய்யாத அந்த அட்டை ஓவியம் துக்கம் சுமந்த அந்தப் பெண்ணின் முகம்.அதுவும் அழகம்மாவின் முகம் . அட்டையைவிட்டு மெலெழும்புவதை துடிப்பதைக்கண்டு குலை நடுங்கிப்போனேன். அதிலிருந்து மீண்டு அந்தக் கதையைத் தொடர சில மணிநேரம் ஆனது. அடுத்த இரண்டு நாள்களாக என் மேஜையின் முன் அட்டை காட்டிக் கிடக்கும் அந்த அழகம்மா வெளியேறத் துடித்தாள். எனக்குப் பயமாகப் போனதால் அதை எடுத்து மறைத்து வைத்துவிட்டேன். யோசித்துப் பார்க்கிறேன் என் பயத்திற்கான காரணத்தை ஒருவேளை அழகம்மாவின் கொடூர கணவன்  என்கிற குறும்பன் நான்தானோ  என்று, உண்மைதான் என்பது போலவே என உன்மனம் படக்படக்கென அடித்துக்கொண்டது”.அழம்மாளைப் பற்றி கவிஞர் ஏகாதேசியின் விமர்சனம் இது.

எங்கப்பாவிற்கு அழகம்மா என்ற அத்தை இருந்தைப்போல எனக்கு மொக்கத்தாய் என்ற அத்தை இருந்தாள். அவள் என் அப்பாவின் தங்கை. நான்கு குழந்தைகளுக்கு தாயான அவள் தன் கணவனின் தொடர் வன்முறையால் தற்கொலை செய்துகொண்டார்.
அழகம்மாவைப்போல அன்பும் அழகும் கொண்ட அத்தைக்கு நான் செல்லக்குழந்தை. அவள் வாழ்ந்த வருசநாடு என்னும் மிகவும் வறண்ட ஊருக்கு விடுமுறைக்கு அழைத்துச் செல்வாள். என் பாதம் நோகும் என்று ஐந்து கிலோமீட்டர் தூரமுள்ள மலைமுகட்டின் பாதைகளில் என்னை தூக்கிச் செல்வாள். முகத்தில் சிறு சுணக்கம் காட்டாத வீரமான அமைதியான பேரழகி..விடுமுறை முடிந்து வீடு திரும்பும்வரை தினமும் கோழிக் குழம்பும், எனக்கு பிடிக்கமெயென்று கேப்பக்கழியும் செய்துகொடுப்பாள்.. அத்தை என்றாலே எனக்கு கோழிக்குழம்பு வாசம்தான் வீசும்.

எனக்கு அன்பையும் உழைப்பையும் சொல்லிக்கொடுத்த என் அத்தை தன் கணவனிடம் அதிர்ந்து பேசமாட்டாள். என் அப்பா என் அத்தை மகளின் சடங்கிற்கு சிறப்பாக செய்முறை செய்யவில்லை என் அத்தையின் கணவன் அத்தையை அடித்து நொறுக்க, அண்ணன் கஷ்டப்படும்போது இந்த வேதனையைச் சொல்ல வேண்டாமென்று நினைத்த என் அத்தை அரளிவிதையை அரைத்துக்குடித்துச் செத்துவிட்டாள். அழகம்மாவும் அத்தையும் ஒன்றே என்று எனக்குத் தோன்றியது. இனி என் குடும்பத்தில் எந்த அழகம்மாவும் தோன்றக் கூடாது என்று அழகம்மாக்களின் கதையை என் குடும்பத்தின் அத்தனை குழந்தைகளுக்கும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இந்த உலகத்திற்கும்தான். அதனால்தான்  அழகம்மாவைஅறைக்குள் புகுந்த தனிமை  பெண்ணின் சித்திரமாக உருமாற்றத் தோன்றுகிறது எனக்கு.

என் சிறுகதையானஅறைக்குள் புகுந்த தனிமைஎழுத்தாளர் ஜெயமோகன் இப்படிச் சொல்கிறார்.

”சந்திரா எழுதிய அறைக்குள் புகுந்த தனிமை’ .சென்ற மாதம் கோயில்பட்டி சென்றிருந்தபோது நான் இந்தக்கதை பற்றி தேவதச்சனிடம் பேச ஆரம்பித்ததுமே அவர் உத்வேகத்துடன் எக்ஸாட்லி இதே கதையைத்தான் நான் யோசிச்சிட்டிருந்தேன்என ஆரம்பித்தார். 
உப்பைப்போல் வெறுமை கொண்டிருந்த உடலாகத் தன்னை உணரும் ஒரு பெண்ணின் ஒரு நாள் இந்தக்கதை. தோழியைச் சந்திக்கச் செல்கிறாள். தோழியுடனான அவளுடைய உறவின் நுட்பமான சிலதருணங்கள் வழியாகச் செல்லும் கதை அவள் ஒரு ஆணைச் சந்திக்கும்போது புதியதாக ஆரம்பிக்கிறது. அவளை அவன் கவர முயல்கிறான். அவள் அதை அனுமதிக்கிறாள்.மெல்லிய சல்லாப பாவனைகள். ஓர் இடத்தில் நான் படிக்கலை, பிராஸ்டிடியூட்டா இருக்கேன்என்கிறாள் பொய்யாக. 
உடனே அவன் பாவனைகள் அனைத்தும் தலைகீழாகின்றன. அவன் அலட்சியமும் திமிரும் கொண்டவனாக ஆகிறான். அவள் அவனைத் தன் வீட்டுக்குக் கொண்டு வருகிறாள். ஏமாற்றி அவனை ஓர் அறைக்குள் மூடிவிடுகிறாள். இரவெல்லாம் அவனை அங்கே வைத்திருக்கிறாள். அவன் சட்டென்று இன்னொரு தோற்றம் கொள்கிறான். அஞ்சி நடுங்கி அழுது புலம்புகிறான். காலையில் அவள் திறந்து விடும்போது குழிந்த கண்களும் நடுங்கும் உடலுமாகக் குறுகிப்போய் வெளியேறுகிறான்.

பலதளங்களில் பலவாசிப்புகளுக்குச் சாத்தியமளிக்கும் இக்கதையை நான் சொல்லவோ விளக்கவோ போவதில்லை. நான் இதை வாசித்த இரு முக்கியமான வழிகளை மட்டும் கோடிகாட்ட விரும்புகிறேன். ஒன்று தோழியுடன் அவளுக்கிருக்கும் உறவுக்கும் ஆணுடன் இருக்கும் உறவுக்குமான வேறுபாடு. தோழியுடனான உறவு இயல்பானதாக ஆனால் சற்றே சலிப்பானதாக இருக்கிறது. அங்கே அவளுக்கு மர்மங்கள் இல்லை. ஆகவே அவள் சீண்டப்படுவதில்லை. அவள் இயல்பாக இருக்கிறாள்.

ஆனால் ஆணுடனான உறவு அவளைக் கொந்தளிக்கச் செய்கிறது. அதில் அவளுக்கு பலவகையான மர்மங்கள் உள்ளன. ஆகவே விதவிதமான சுயபாவனைகள் வழியாக அவள் அவனை அணுகுகிறாள். கொஞ்சிக்குலாவும் காதலியாக, விபச்சாரியாக, அவனைத் தண்டிக்கும் குரூரம் கொண்டவளாக. ஒருபாவனையில் இருந்து இன்னொன்றுக்கு இயல்பாகச் செல்கிறாள். எல்லா பாவனைகளுமே அவளுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது. 
அந்த பாவனைகளுக்கு ஏற்ப அவள்முன் அவன் மாறிக்கொண்டே இருக்கிறான் என்பதே இந்தக்கதையின் இரண்டாவது நுழைவு வழி.

பெண்ணை அவள்போக்கிலேயே சென்று கொஞ்சி புகழ்ந்து வசியப்படுத்த நினைக்கும் காதலனாக இருக்கிறான். அவள் விபச்சாரி என்றதுமே அவன் வாடிக்கையாளனாக ஆகிவிடுகிறான்.வாடிக்கையாளனுக்கான எல்லா முகங்களும் வந்து விடுகிறது. அவள் உடலை விலைகொடுத்து வாங்கிய அவன் அதை உடல்மட்டுமாகவே அடைய நினைக்கிறான். ஆகவே அவள் மனதை வதைத்து ஆளுமையை அவமதிக்க முனைகிறான் 
அவள் சட்டென்று தண்டிப்பவளாக ஆகிறாள். அந்தப் புரிந்துகொள்ளமுடியாமை காரணமாக அவனை தாண்டிச்செல்கிறாள். அந்நிலையில் அவனுக்கு அவளை எதிர்கொள்ள எந்த முன்னர் தயாரிக்கப்பட்ட பாவனையும் கைவசமில்லை. சட்டென்று சரணடைகிறான். மன்றாடுகிறான். தோற்றுப் பின்வாங்குகிறான். அவள் வெற்றியின் வெறுமையில் அமர்ந்திருக்கிறாள்

ஆண்-பெண் உறவின் பாவனைகளின் நடனம் இந்தக்கதை. நாம் வாழ்க்கையில் காணும் எல்லாவகையான ஆண்-பெண் உறவுகளுடன் இதைப் பொருத்தி விரித்துக்கொள்ளமுடியும். ஒவ்வொரு தளத்திலும் நம் வாழ்க்கையை நாம் புரிந்துகொள்ள திறப்புகளை அளித்துக்கொண்டே செல்கிறது . இந்த உண்மையான வாழ்க்கை அம்சம்தான் கலையை அர்த்தமுள்ளதாக்குகிறது. சந்திராவின் இந்தக்கதையைக் கலையாக்குவதே ஆணின் மாறிமாறிச் செல்லும் நுண்பாவனைகள் பற்றிய அற்புதமான அவதானிப்புதான். 
இதை ஒருவர் மொழியை அளைந்து அடைய முடியாது. செயற்கையாக உருவாக்க முடியாது. மொழியும்வடிவமும் நிலமும்நீரும் போல. விதை விழுந்தால்மட்டுமே முளை எழமுடியும். விதை வாழ்க்கைபற்றிய ஆழ்ந்த அவதானிப்பில் இருந்து வருகிறது. அந்த அவதானிப்பு ஆராய்ச்சியாலோ ,வாசிப்பாலோ, சிந்தனையாலோ, விவாதத்தாலோ அடையப்படுவதல்ல. ஆராய்ச்சியும், வாசிப்பும், சிந்தனையும் கொண்டவர்கள் மேலோட்டமான கோட்பாடுகளையே பேசமுடியும். கலைக்கான கச்சாப்பொருள் எழுத்தாளனின் நுட்பமான ஆழ்மனம் தன்னைச்சுற்றி நிகழும் வாழ்க்கையில் இருந்து தன்னை அறியாமலேயே தொட்டு எடுக்கக்கூடிய ஒன்று”  அறைக்குள் புகுந்த தனிமை கதையைப்பற்றி அவருடைய தளத்தில் எழுதியிருக்கிறார். 

இந்தக் கதையை பொறுத்தவரை எழுத்தாளர்களிலிருந்து, வாசகர்கள் வரை ஒரே ஒரு கேள்வியைதான் என்னிடம் கேட்டார்கள்.. இது உண்மைக்கதையா? யாரை அப்படி உள்ளே வைத்து பூட்டினீர்கள்? என்றுஇவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக. என் புத்தக  விமர்சனக் கூட்டத்தில் ஒரு எழுத்தாளார் எழுந்து, ”ஒரு ஆணை எப்படி வீட்டுக்குள் பூட்டி வைக்கலாம். அவர்களை நாயாக மாற்றுகிறீர்கள் பாம்பாக மாற்றுகிறீர்கள் என்று கொதித்தார். நானும் தடாலடியாக பதில் சொன்னேன். இருந்தாலும். என்னால் அதை புரிந்துணரவே முடியவில்லை.

பெண்கள் இத்தனை முன்னேற்றம் அடைந்த பின்னும்…. ஆண்கள் தங்கள் மீது செலுத்தும் வன்முறையை எதிர்த்து, பெண்கள் எதிர் வன்முறை செய்யும்போது அதை ஆண் எழுத்தாளர்களே மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.ஆனால் ஆனால் சில வாசகர்கள் புரிந்துணர்ந்து நம்மிடம் அன்பினை பகிர்ந்துகொள்கிறார்கள். பெரும்பானவர்களால் பெண்களின் வன்முறை முகத்தைச் சகித்துக்கொள்ள முடியவில்லை.  அதுவும் கதைகளிலே. அப்போ நிஜவாழ்வில் காலங்காலமாக வன்முறையை அனுபவிக்கும் பெண்களின் நிலையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அறைக்குள் புகுந்த தனிமையும் கற்பனைக் கதையே ஆனாலும் அவை காண்ட்ரம்ரியாக நடக்கும் கதையாக இருப்பதால், அந்த அறைக்குள் இருக்கும் ஆளாக ஆண்கள் தங்களை கற்பனை செய்துகொள்கிறார்கள்..ஏன் அப்படி நீங்கள் உங்களை கற்பனை செய்துகொள்ளவேண்டும்? ஏனேன்றால் நீங்கள் உங்கள் முன் அமர்ந்திருக்கும் பெண்ணை உங்கள் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யும் பெண்ணாக மட்டுமே கற்பனை செய்கிறீர்கள்.பெண்னை சகமனுஷியாக அணுகினால் அவள் உங்களை அறைக்குள் பூட்டி வைக்க மாட்டாள். திறந்த வெளியின் அத்தனை அற்புதங்களையும், வாழ்வின் சுக துக்கங்களையும் ஒரு தோழியிடம் பகிர்ந்துகொள்வதைப்போல உங்களிடம் பகிர்ந்துகொள்வாள்.

பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகளை இந்த பகுத்தறிவு காலத்தில் வெறும் பேயுறு கதைகளாக மட்டுமே சொல்லி உங்களை பயமுறுத்த முடியாது. அது உண்மை என்று நம்பும் வெள்ளந்தியான குழந்தையும் இல்லை நீங்கள்உங்களை கொல்வதில் கூட பிரச்னை இல்லை. உங்களை அடைத்து வைப்பதில் அவமானம் அடைகிறீர்கள்..ஏனேன்றால் உங்களின் கொடூர முகத்தில் குற்றவுணர்ச்சியை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நீங்கள் குற்றவுணர்ச்சியை எட்டியபின் குற்றங்களின் பின்னால் போகமாட்டீர்கள். அப்பா அண்ணன் மாமா என்று ஆண்களின் மிகச் செல்லக்குழந்தையாய் இருப்பவள் நான். எனக்கு பேரன்பைச் சொல்லிக்கொடுத்தவர் என் அப்பா எனக்கு ஆண்களோடு பேதம் இல்லைநாம் இவ்வுலகில் ஆண் பெண்ணுக்கான இயல்பான நியதிகளுடம் அவரவருக்கான விடுதலையோடு வாழ்வோம்.

பின்குறிப்பு: என் மூன்று தொகுப்பில் வரும் பெண்களைப் பற்றி முழுவதுமாக விரிவாக எழுத வேண்டுமென்றால் நிச்சயமாக நூறு பக்கங்களுக்கு மேல் ஆகும். நேரப் பளு காரணமாக நான் அதை இப்போது முழுமையாகச் செய்ய முடியாது. நானே அப்பெண்களைப் பற்றி விரிவாக எழுதி ஒரு புத்தகம் பதிப்பிப்பதற்கான ஆர்வத்தை இந்நிகழ்வு கொடுத்திருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு வாய்ப்பளித்த மனோன்மணியம் பல்கலைக்கழகத்திற்கும், என்னை பேச அழைத்த பேராசிரியர் அ.ராமசாமி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் அன்பும்.