வியாழன், 2 ஆகஸ்ட், 2012

எனது சிறுகதைகள் குறித்து கவிஞர் ஏகாதசி



வயிற்றுப் பாட்டிற்காய் எங்கள் ஊர்க்காரர்களோடு சேர்ந்து என்
அம்மா கதிரறுக்க ஊர் ஊராய்ப் போய்த் திரிந்த என் பால்ய நாட்களின்
இரவுத் தூக்கமெல்லாம் என் அமத்தாவின் கயிற்றுக் கட்டில் கீழ்தான்.
என்னோடு சேர்ந்து என் கடைசி சின்னம்மா பரமேஸ்வரியும் என்
அமத்தாவின் மேல் படர்ந்து கிடக்கும் கறுப்புத் தேமல்போல்
வேம்பின் நிழல். அந்த கவிழ்ந்த ‘ப’ வடிவ கூரை வீட்டில் திண்ணை
யிலும் வீட்டிற்குள்ளுமாக என் மற்ற இரண்டு சின்னம்மாக்களும்
நான்கு மாமன்களும் படுத்திருப்பார்கள். சியான் நர்சரி காவலுக்கு
போய்விட்டிருப்பார். அம்மாவை பிரிந்திருக்கும் நான் ஏங்கிப்
போய்விடக் கூடாதென்பதற்காக என்னை கையோடே வைத்திருப்
பாள் அமத்தா. இவள் பெருங்கொண்டை கதைக்காரி.
அந்தக் காலக்கட்டத்து கிராமங்களில் நாய்களுக்கு பெரும்பாலும்
‘மணி’ என்றே பெயர் வைத்திருப்பார்கள். அப்படி ஒரு மணி எங்கள்
வீட்டிலும் இருந்தது. எங்கெங்கோ சுற்றிவிட்டு வந்தாலும் சாமத்தில்
அது என் கால்மாட்டில்தான் படுத்திருக்கும். மணிக்கு கதை பிடிக்காது
போலும். அமத்தா கதை ஆரம்பிக்கும் பொழுதும் முடிக்கும்
பொழுதும் என்னருகில் இருந்ததில்லை. “கதை கேக்காத நாய்
செருப்பக் கொண்டி அடி” என்பாள். கதை சொல்லிக் கொண்டிருக்
கும் பொழுது கட்டிலின் கீழிருந்து நான் ‘உம்’ கொடுத்துக்
கொண்டிருப்பேன். ‘உம்’ நின்றுவிட்டால் ‘சாமி?’ என்பாள்.
“கேட்டுக்குத்தான் இருக்கேன். ஒம்பாட்டுல சொல்லிகிட்டே இரு”
என்பேன். மீண்டும் சொல்லத் துவங்குவாள். நான் தூங்கிப் போய்
விட்ட பிறகும்கூட அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கதை
சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்பதும் நான் தூங்கிய பின்னும்கூட
அரை மணி நேரத்திற்கும் மேலாக ‘உம்’ கொடுத்துக் கொண்டிருந்த
அதிசய சிறுவனாகவும் இருந்திருக்கிறேன் என்பதும் வேடிக்கையான
விசயம்தான். அதனால்தான் விட்ட இடத்திலிருந்து துவங்கித்
துவங்கி ஒவ்வொரு கதையையும் பல வருசங்களாகக் கேட்டுக்
கரைந்திருக்கிறேன்.

கதை சொல்ல ஆரம்பித்த சில நொடிகளில் சின்னம்மா தூங்கி
விடும். இறுதியில் எல்லா கதைகளையும் கேட்டவனாக நான்
இருந்தேன். என் சுயபுராணத்தில் தூங்கிப் போன என் சின்னம்மா
விழித்திருந்து கதை கேட்டிருந்தால் சந்திராவைப் போன்று எழுத்தாள
ராக இருக்கும்.தலித் இலக்கியம் பேசுகிற கதை,கவிதை எழுதுகிற பெண்ணாக சந்திராவின் முகத்தை சில இதழ்களில் பார்த்திருக்கிறேன். சில வாரங்களக்கு முன்பு அவர்களின் ‘அழகம்மா’ நூல் பற்றிப் பேச என்னை அழைத்திருந்த தென் சென்னை த.மு.எ.க.ச
எம்.எம்.டி.எ. கிளை நடத்திய கூட்டத்தில் முதன்முதலாய் நேரில்
பார்த்தேன். சந்திரா என் சின்னம்மா பரமேஸ்வரியின் பிரதிபோல்
காணப்பட்டார். ஆனால், இவருக்குள் இவரது அம்மாவும்
பெரியம்மாளும் கதைகளோடு கூடுவிட்டு கூடு பாய்ந்திருக்கிறார்கள்.
சந்திராவும் அவரது தோழிகளும் கதை கேட்கும் சிறுமிகளாகவும் கதை
சொல்லும் கிழவிகளாகவும் இருந்திருக்கிறார்கள்.

எழுத்தாளர்களாக இருந்து கொண்டு சினிமாவில் குதிக்க
நினைக்கும் மனிதர்களுக்கு நடுவில், சினிமாவில் இருந்துகொண்டு
எழுத்தாளராக மலர்ந்திருக்கும் சந்திராவை எனக்குப் பிடித்திருக்
கிறது. கிளைகள் நகரத்தில் படர்ந்திருப்பினும் வேர்கள் கூடலூர்
மண்ணில்.

11, 12 வயதுகளில் பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்தப்பட்
டிருந்த சிறுமிகள் ஒரு நாள் “கல்யாணத்துக்கு வந்துருண்ணே” ன்னு
சொல்லிவிட்டுப் போவார்கள். பின்னொரு நாள் “மூத்தவனுக்கு காது
குத்து வச்சிருக்கேன் மறக்காம வந்துருண்ணே” என்பார்கள்.
படிப்படியாக சிதைந்து கொண்டிருக்கும் அவர்களது வாழ்வும்
உருவமும் என்னைச் சாகடிக்கும்.
“எங்கள் ஊரில் நிறைய பெண் பிள்ளைகளின் படிப்பு தரை
வகுப்புகளோடு முடிந்துவிடும்” எனச் சொல்லும் சந்திராவின்
‘திறக்கப்படாத பள்ளிக்கூடத்தின் கதவுகள்’ கதையில் பெண்களின்
ஜீவன் கண்ணெதிரே மாண்டு போவதைப் பார்க்க முடிகிறது.
காலங்காலமாய் கல்வி மறுக்கப்பட்டு வருவதால் கேள்விகளைப்
பெற முடியாத பெண்கள் ஆண் சமூகம் என்கிற பாம்புக் கூட்டத்திற்
குள் வாழ்ந்து மடிகிற அவலம் இந்தக் கதையின் குறுக்கு வெட்டாய்க்
கிடக்கிறது.

“சீக்கிரம் சாப்பிடும்மா இவன் உன் பங்கை பிடுங்கிடுவான்”
என்று அண்ணன் என் பங்கு இருக்கும் கையைப் பிடித்துக்
கொள்வான். “சின்னப் பையன் அவனுக்கு ஆசையா இருக்கும்ல,
இனிமே நான் சாப்பிட்டு என்ன ஆகப்போகுது” என்று தன் பங்கில்
பாதியை அம்மா கொடுத்துவிடும். எனக்கு விபரம் தெரியத் தெரிய
என் பங்கைக் கடைசியாய்ச் சாப்பிட்டேன் என்று குழந்தைகள்
நிறைந்த வீட்டைப் பற்றியும் அவர்களின் அன்பு பரிமாற்றம் பற்றியும்
பேசி மனதை நெகிழ்வுறச் செய்கிறது “பூனைகள் இல்லாத வீடு”.
பெற்ற பிள்ளைகளையும் வளர்க்கும் பிராணிகளையும் சமமாய்ப்
பாவித்து பாசம் காட்டுகிறது குடும்பம். வீட்டைச் சுற்றிக் கிடக்கிற
இலைகளின் வாசனையும் மலர்களின் வாசனையும் வீட்டோர்களின்
குணமெனக் காட்டுகிறது. ஏழ்மையிலும் பிரியத்தால் உயர்ந்து நிற்கிற
சுத்தமான குடும்பம், காலச்சூழல் காரணமாக ஒரு நிலைக்
கண்ணாடியைப் போல் தன் பாதரசத்தைத் தோய்த்து நிற்கிறது. அந்த வீட்டில் வாழ்ந்த அத்தனை பேரும் வீட்டை விட்டுப் பிரிந்துவிட்டார்கள். மனிதர்கள் ஒவ்வொருவராக வீட்டை விட்டுச் செல்ல செல்ல பிரிவுத் துயராலும் பசி பட்டினியாலும் பூனைகளும்
செத்துப் போகின்றன. கூட்டமாக இருந்த வீட்டை தனிமையும் துயர
வெப்பமும் ரெண்டாய்ப் பிளந்து போட்ட சோகத்தைப் பதிவு
செய்துள்ளது இந்தக் கதை.

ஊரே பயந்து கிடக்கிறது ஒரு பேய்க்கு. அந்தப் பேய் ஊர்
நினைப்பது போன்றில்லாமல் ஒரு சிறுமியிடம் அன்பாகப் பேசி
முத்தம் கொடுக்க, அந்த சிறுமிக்கு பயம் போய் பேய் மேல் பரிதாபம்
ஏற்படுகிறது. அது ‘கிழவி நாச்சி’ கதை. பிஞ்சுகளின் வேர்களில்
நம்பிக்கை நீரை ஊற்றிச் செல்கிறது. பயம் என்கிற சொல்லை
உடைக்கிற ஒரு ஆயுதமாக இந்தக் கதையைப் பார்க்கிறேன்.

ஜாதி, மதம் மீறி காதலித்து திருப்பூருக்கு ஓடிவந்து தாலி கட்டிக்
கொள்கிறார்கள் நிகிலா-செல்வம் ஜோடி. வேலை நிமித்தமாகச்
சென்னை சென்று வருவதாக கூறிச் செல்கிற செல்வம் பல
மாதங்களாக வீடு திரும்பாமலும் தகவலின்றியும் போக, வயிற்றுப்
பிள்ளையோடு செல்வத்தைத் தேடி சென்னையில் அல்லாடுகிறாள் நிகிலா.
மாமிச வெறி பிடித்த மனித மிருகங்களின் கண்களிலிருந்து தப்பித்துத்
தப்பித்து பிரசவ வலியோடு துடிக்கும் நிகழ்வின் துக்கம் என்
நெஞ்சில் பாராங்கல்லைத் தூக்கிப் போடுகிறது. இது ‘நிகிலா’
என்கிற கதை. இந்தக் கதையைப் படித்த பின்பு நகரத்து
சாலைகளிலும் தெருக்களிலும் துணிப்பைகளோடு பிச்சையெடுத்துக்
கொண்டு அலையும் ஒவ்வொரு பெண்களுக்குப் பின்னும் ரணம்
மிகுந்த கதை ஒன்று இருப்பதாகவும் அவர்கள் அதை ஆற்ற
முடியாமல் தவிப்பதாகவும் படுகிறதெனக்கு.

மருதாணிக்கும் ஐயப்பனுக்கும் சண்டை வந்து அவளை சைக்கி
ளின் பின் சீட்டிலும் குழந்தையை முன்னால் இருக்கும் கேரியர்
கூடையிலும் வைத்துக்கொண்டு ஆற்றுப் பாலத்தின் வழியாகச்
செல்லும் போதெல்லாம், குழந்தை, மரம், செடி, கொடிகளை
வேடிக்கை பார்த்தபடி ஆனந்தத்தில் கூத்தாடிக்கொண்டு போகும்
என்று ‘மருதாணி’ கதையில் வரும் காட்சி என் மனத்திரையில் எதை
எதையோ எழுதிச் செல்கிறது. அதன் உள்ளீடு வெளிகளை எரித்தபடி
என்னை உக்கிப் போகச் செய்கிறது.

திரைப்படத் துறையில் அனுபவம் பெற்று இவர் எழுதியிருக்கும்
சில கதைகளில் ‘கட் செய்த பின்னும் காமிரா ஓடிக் கொண்டிருந்தது’
என்னும் கதை ‘ரிச் கேர்ள்ஸ்’ என்றாலே உதாசீனப்படுத்தி ஏலனம்
பேசும் தவறான கண்ணோட்டத்தை மிக வன்மையாகக் கண்டிக்
கிறது. வயிற்றுப் பசிக்காக ஆடைகளை அவிழ்க்கும் என் பெண்களின்
அரை நிர்வாணத்தை நினைக்கும்பொழுது என் கண்கள் கண்ணீரை
உதிர்க்க தெம்பின்றி உடைந்து விழுகின்றன.

இறுதியாக ‘அழகம்மா’ என்கிற கதையைச் சொல்லியாக
வேண்டும். பெருங்குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாகப் பிறந்த
அழகம்மா செல்லமாய் வளர்க்கப்படுகிற பேரழகி. 
தேவதை. அவள் அக்காமார்களுக்கும் அண்ணன்மார்களுக்கும்
பிரியமாகச் சமைத்துப் போடுவதைத் தவிர வேறு வேலைக்கோ ஏன்
சொந்த தோட்டத்திற்கோகூட செல்ல அனுமதிக்கப்படவில்லை.
குழந்தையைப் போன்றே அவளை கொஞ்சி மகிழ்ந்தார்கள். திடீரென
எல்லோரும் முழித்துக் கொண்டிருக்க ஒரு நாள் பெரிய பெண்ணாக
மலர்ந்தாள் அழகம்மா. அடுத்த சில வருசங்களில் அழகம்மாவிற்கும்
அதே தெருவைச் சேர்ந்த குறும்பனுக்கும் திருமணம் நடந்தேறு
கிறது. அழகம்மா வலது கால் வைத்து நுழைந்த நிமிடத்திலிருந்தே
மாமியாரின் விசம் கலந்த வார்த்தை மெல்லிய மனதைக் காயப்படுத்
துகிறது. எதற்கெடுத்தாலும் “வெடுக் வெடுக்” என்று பேசுவதும்,
சாணி சகதியை பொழுதெல்லாம் அள்ளவிட்டு நொறுக்குவதுமாய்த்
தொடர, இதில் குறும்பனும் சேர்ந்துகொண்டு அவளை அடித்து
உதைத்து... என அந்தக் கதையை நான் படித்துக்கொண்டு
செல்கையில் நெஞ்சதிர்கிற ஓர் இடம்வந்து நான் மீண்டும் வாசிக்கத்
தொடர்கிற மனதறுந்தவனாய் புத்தகத்தை மூடி வைத்து அதன்
அட்டை மீது என் பார்வையை தவழ விட, நூல் வாங்கிய ஒருவார
காலமாக ஒன்றும் செய்யாத அந்த அட்டை ஓவியம் துக்கம் சுமந்த
அந்த பெண்ணின் முகம். அதுவும் அழகம்மாவின் முகம்.
அட்டையை விட்டு மேலெழும்பத் துடிப்பதைக் கண்டு குலை
நடுங்கிப் போனேன். அதிலிருந்து மீண்டு அந்தக் கதையைத் தொடர
சில மணி நேரம் ஆனது. அடுத்த இரண்டு நாட்களாக என் மேஜையின்
முன் அட்டை காட்டிக் கிடக்கும் அந்த நூலிலிருந்து அழகம்மா
வெளியேறவே துடித்தாள். எனக்குப் பயமாகவும் போனதால் அதை
எடுத்து மறைத்து வைத்துவிட்டேன்.யோசித்துப் பார்க்கிறேன் என் பயத்திற்கான காரணத்தை. ஒருவேளை அழகம்மாவின் கொடூர கணவன் என்கிற குறும்பன் நான்
தானோ என்று, உண்மைதான் என்பது போலவே என் உள்மனம்
படக்படக்கென அடித்துக் கொண்டது.

இப்படியாக சந்திராவின் எந்தக் கதையைப் பற்றியும் எழுதாமல்
என்னால் இடம் பெயர முடியவில்லை. இருப்பினும் இட ஒதுக்கீடு
அளவு காரணமாக சிலவற்றை மட்டும் குறிப்பிட்டு உள்ளேன்.
சந்திராவின் கதைகள் ஆச்சரியப்படுத்துவதைத் தாண்டி கதைகளின்
வரிகளே கூட சாகசத்தையும் சூதாட்டத்தையும் சாமர்த்தியமாய்
நிகழ்த்தி விடுகின்றன. சந்திராவின் எல்லா கதைகளின் முடிவும்
மனதை கனக்கச் செய்கின்றனவாய் இருக்கின்றன. இது படைப்பாளி
யின் வெற்றிதான் எனினும் கதைகளின் வெவ்வேறு முகங்களையும்
சந்திராவின் எழுத்து கொண்டுவர வேண்டும் என்பது என் தனிப்பட்ட
கருத்து. “தோழர்கள் கடத்தல்காரர்களான கதை” என்னும் கதை
அவரின் சொந்த அனுபவங்களிலிருந்து சரியென்று தோன்றினாலும்
ஒரு பெரிய இயக்கத்தின்பால் போராட்டக் குழுவின்பால் எறிகிற சிறு
கல்லாக இருக்கிறது. பரவாயில்லை, அதை விமர்சனமாகக்கூட
எடுத்துக் கொள்ளலாம்.

இவர் வாழ்க்கையை ஓரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்
கொண்டு எழுதியதாய்ப் படவில்லை. கதவைப் பற்றி திண்ணையில்
உட்கார்ந்தும் தந்தையின் மடியில் உட்கார்ந்தபடி மீசையைப் பற்றியும்
அம்மாவின் அடிவயிற்றுக் கதகதப்பில் முகம் புதைத்து அவளின்
பசியையும் தோழிகளின் தீட்டுத் துணியை கையில் ஏந்தியபடி
அவர்களின் அவஸ்தையையும் பால்ய நண்பர்களை வாசம் மாறாமல்
நெஞ்சில் சுமந்துகொண்டும் வனம் தந்த கறுப்பு வெய்யிலை
முதுகில் சுமந்துகொண்டும் நகரத்தின் கூர்மையான கத்திகளை
உடலில் செலுத்திக் கொண்டும் வாழ்வை இடைவெளியின்றி எழுதி
யிருக்கிறார். மருத்துவச்சி பிரசவம் பார்க்கிற கலை நுட்பத்தோடு.
‘பூனைகள் இல்லாத வீடு’ முதல் தொகுப்பில், ‘புளியம் பூ’,
‘திறக்கப்படாத பள்ளிக்கூடத்தின் கதவுகள்’, ‘பூனைகள் இல்லாத
வீடு’, ‘கிழவி நாச்சி’, ‘நிகிலா’, ‘ராஜா ராணி ஜோக்கர்’ போன்ற
கதைகளும், சந்திராவின் இரண்டாவது தொகுப்பான ‘காட்டின்
பெருங்கனவு’ நூலில் ‘காட்டின் பெருங்கனவு’, ‘மருதாணி’,
‘ரத்தத்தில் மிதக்கும் படுக்கையறை’ உள்ளிட்ட கதைகளும்,
கடைசியாய் வந்த ‘அழகம்மா’ தொகுப்பில் ‘அழகேசனின் பாடல்’,
‘கட் சொன்ன பின்பும் காமிரா ஓடிக்கொண்டிருந்தது’, ‘அழகம்மா’,
‘வெகு நாட்களுக்குப் பின்னான மழை’ போன்ற கதைகளும் தமிழ்
சிறுகதை உலகில் மிகமிக முக்கியமான சிறுகதைகளாகப் பார்க்கி
றேன். முதல் தொகுதியை உயிர்மையும் அதன்பின் வந்த இரண்டு
தொகுதிகளை உயிர் எழுத்தும் வெளியிட்டிருக்கிறார்கள். நீங்கிச்
செல்லும் பேரன்பு என்னும் கவிதை நூலும் சந்திராவுடையது.
என் அக்காக்களையும் தங்கைகளையும் மரங்களைப் போன்று
வெட்டிக் கூறு போட்டு ரத்த ருசி பார்த்துக் கொண்டிருக்கும்
ஆணாதிக்க வெறியர்களின் பட்டியல் சந்திராவின் கதைகளில்
குறிக்கப்பட்டிருக்கிறது. சாதி மனித மனங்களை எப்படி ஒரு தாளைப்
போல் கிழித்துப் போட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் பதிவு
செய்யப்பட்டிருக்கிறது.

கதைகள் முழுக்க வெக்கை மிகுந்த வாழ்வின் நசநசப்பையும்
குரூரத்தையும் மிக மிக அருகிருந்தும் அனுபவித்தும் எழுதியிருக்
கிறார் சந்திரா. முல்லை பெரியாறு நதியிலிருந்து இரு கை நிறைய
தண்ணீரை அள்ளிக்கொண்டு ஒரு சொட்டுக் கூட சிந்தாமல் ஐநூறு
கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்து சென்னையில் சேர்த்தது போல்
இருக்கிறது இவரின் கதைகள்.

சிறுகதைத் தொகுதிகள்
- பூனைகள் இல்லாத வீடு, உயிர்மை, டிச. 2007
- காற்றின் பெருங்கனவு, உயிர் எழுத்து, டிச. 2009
- அழகம்மா

நன்றி:மாற்றுவெளி ஆய்விதழ்

- 2012 ஜுன், ”மாற்றுவெளி” சிறுகதைச் சிறப்பிதழில் எனது சிறுகதைகள் குறித்து கவிஞர் ஏகாதசி எழுதிய ஆய்வுக்கட்டுரை.