திங்கள், 9 பிப்ரவரி, 2015

கட் சொன்ன பின்னும் கேமரா ஓடிக்கொண்டிருக்கிறது...

என்றும் இல்லாத அளவிற்கு அன்று படப்பிடிப்புக் குழு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. ஒரு காட்சியை இயக்குனர் இயக்கிக்கொண்டிருக்கும்போது இன்னொரு பக்கம் காஸ்ட்யூமர், மேக்கப் மேன்  எல்லாம் பிஸியாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். அடுத்த காட்சிக்கான  வேலையில் அவர்கள் மும்பரமாக ஈடுபட்டிருந்தனர். வழக்கமாக ஒரு காட்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது, தொடர்ந்து அடுத்த காட்சியைi உடனே ஆரம்பிக்க போகிறோம் என்றால் அதுபற்றி கோ டைரக்டர் மூலமாகவாவது உதவி இயக்குனரான என்னிடம் சொல்லி  இருப்பார் இயக்குனர். ஏனேன்றால், அந்தப் படத்தில் நடிகர்களுக்கு காஸ்டியூம், மேக்கப்பை பார்த்துக்கொள்ளும் பணி என்னிடம் தரப்பட்டிருந்தது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக அன்று என்னிடம் சொல்லாமலே அடுத்தக் காட்சிக்கு ஏற்பாடாகிக்கொண்டிருக்கிறது. ஏதோ அரசியல் நடக்கிறதோ என்று குழம்பிப்போனேன். சினிமாவில்  வேலையைவிட்டு அனுப்ப வேண்டும் என்றால் முதலில் அவரிடம் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பை அவருக்கே தெரியாமல் பிடுங்கிக்கொள்வார்கள் அல்லது வேலையே கொடுக்கமாட்டார்கள். அங்கும் நடக்கும் விசயங்களைப் பார்த்தபடி, இயக்குனர் இப்போது இயக்கிக்கொண்டிருக்கும் காட்சிக்கு கண்டினியூட்டி பார்த்துக்கொண்டு நானும் பரபரப்பாகத்தான் இருந்தேன். ரீடேக் போகும்போது நடிகையின் முடி கலைந்து முன்னால்விழ நான் இந்த எண்ண ஓட்டத்தில் இருந்ததால் அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன். ’டேக் என்று இயக்குனர் மைக்கில் சொல்ல, சட்டென்று இயல்புக்கு வந்து ஒன் செக்ண்ட் சார்என்று சொல்லி ஓடிப்போய் நடிகையின் முடியை பின்னால் எடுத்துவிட்டேன்.  உடனே  இயக்குனர் என்னை முறைத்தபடி டேக் மட்டும் போயிருந்தா அடிவாங்கியிருப்பீங்கஎன்றார். எங்கள் இயக்குனர் தொழில்நுட்பத்தில் ரொம்ப கவனமாக இருப்பார். ஒரு காட்சியில் எல்லா ஷாட்டும் காலமாறுபாடோ தோற்ற மாறுபாடோ இல்லாமல் சரியாக இருக்கவேண்டும். அவருக்கு பெர்ஃபெக்‌ஷன் ரொம்ப முக்கியம். நாம் செய்யும் தவறு செய்யாத தவறு இரண்டுக்குமே இயக்குனர் திட்டினார் என்றால் அங்கு நமக்கு பிரச்னை இல்லை என்று அர்த்தம். நம்மை கண்டுகொள்ளவில்லை என்றால் மூலையில் போய் உட்கார்ந்துகொள்ள வேண்டியதுதான் யூனிட்டில் ஒருத்தரும் நம்மை மதிக்கமாட்டார்கள். நல்ல வேளையாக அப்படி எதுவும் எனக்கு இல்லை. அப்புறம் எதுக்கு இந்த கோ டைரக்டர் அடுத்த காட்சியைப் பற்றி நம்மிடம் ஏன் ஒன்னும் சொல்லவில்லை. அவருக்கு நம்மேல் என்ன கோபம் என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே அந்தக் காட்சி முடிவடைந்தது.

அடுத்தக் காட்சி நடக்கும் இடத்திற்கு கேமரா மற்றும் படப்பிடிப்பு சாதனங்களை நகர்த்திக்கொண்டிருந்தார்கள்.அப்போதுதான் கவனித்தேன் இன்னொரு உதவி இயக்குனர் நான் செய்ய வேண்டிய வேலையை செய்து கொண்டிருந்தார். இயக்குனரிடம் வந்து ஒரு சேலையைக்காட்டி அடுத்தகாட்சிக்கு இது ஓகே வா என்றார். எனக்கு கடுங்கோபமாக வந்தது. நேராக கோ டைரக்டரிடம் போய் சார் ஏன் காஸ்டியூமை செந்தில் காட்டுறான் என்று கேட்டேன். ’இயக்குனர்தாங்க இந்த சீனுக்கு அவனை காஸ்டியூம், மேக்கப்பை பார்த்துக்க சொன்னாரு.’ ஏன் சார் என்றேன் புரியாமல் அதை அப்புறமா சொல்றேங்க. ஒரு பிரச்னையும் இல்ல என்றார். எனக்கு மேலும் குழப்பமாக சரி எதுவும் நடக்கட்டும் என்று நினைத்துக்கொண்டேன். அதுவும் இல்லாமல் அன்று சரியான வேலை லஞ்ச் பிரேக் இல்லாமல் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. சாப்பிட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தோம். அப்படி  வித் அவுட் பிரேக்கின் போது உதவி இயக்குனர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் போய் சாப்பிட்டு வரலாம். அந்த மாதிரி லஞ்ச் பிரேக் இல்லாத நாட்களில் பெரும்பாலும் உதவி இயக்குனர்கள் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுவிடும். அன்று நான் சாப்பிடாமல் நின்றபடி வேலைபார்த்தால் மயக்கமே வந்துவிடும் போலிருந்தது. படப்பிடிப்புதளத்தில் உதவி இயக்குனர்கள் உட்கார முடியாது. படப்பிடிப்புதளம் மாறும்போது மற்ற சாதனங்கள் இடமாறும் வரை அல்லது லைட்டிங் செட் பண்ணும்வரை, நடிகர் நடிகர்களுக்கான காஸ்டியூம் மேக்கப் செட்பிராப்பர்டி செட் பண்ணுவது  என்று எல்லா வேலையும் முடித்துவிட்டோம் என்றால் எங்காவது மூலையில் போய் உட்கார்ந்துகொள்ளலாம்.

அடுத்ததாக  சாலையில் செல்லும் லாரியில் படம்பிடிக்கப்பட இருக்கிறது என்பதால் பெரிதாக வேலை இல்லை. ஆனாலும் என்னை இந்தக் காட்சியில் இயக்குனர் ஓய்வு எடுத்துக்கொள்ள வைத்த மர்மம் மட்டும் விளங்கவில்லை.  புரொடக்சன் பாயை கூப்பிட்டு ஒரு டீயை வாங்கிக்கொண்டு இயக்குனர் கண்ணுக்கு தட்டுப்படாமல் ஒரு ஓரமாக உட்கார்ந்துகொண்டேன். அப்போதுதான் கவனித்தேன் படப்பிடிப்பு தளத்தில் இருந்த பெரும்பாலான ஆண்களிடம் ஏதோ ஒரு புரிபடாத சந்தோசம். முகத்தில் லேசான சிரிப்பு. ’அடப்பாவிங்களா நமக்கு தெரியாம என்ன அப்படியொரு மர்மம் நடக்குது என்று யோசித்தபடி, சிரித்துக்கொண்டிருந்த மேக்கப்மேனிடம் என்ன நடக்குது இங்க என்றேன். ’மேடம் இத்தனை நாளா காஞ்சுகிடந்த யூனிட்டுக்கே இன்னைக்குதான் ஏதோ கண்ணுக்கு நல்ல குளிர்ச்சியா தட்டுப்படுது. இந்த படத்தில வெறும் கிழவிகளும் மாடு மாதிரி ஆம்பளைகளும்தான் இதுவரைக்கு நடிச்சாங்க. ஏதோ யூனிட் பொளச்சு போகட்டுமுன்னு உங்க டைரக்டர்  அந்த ப்ராஸ்டியூட் வர்ற சீனை எடுக்கப்போறாரு. பாலியல் தொழிலாளி வர்ற காட்சி எடுக்கப்போவது முன்பே எனக்கு தெரியும்தான். ’இதுல என்ன இருக்கு. சினிமானா எல்லாம் இருக்கும்னு தெரிஞ்சுதானே வந்தேன். எதுக்கு என்னை இந்த காட்சியில அந்த நடிகைக்கு காஸ்டியூம் பார்க்க வேணானு சொன்னார். குழப்பத்தோடு அவரிடம்அதுல என்ன அதிசயம்என்றேன். ’ மேடம் அதும் ஒன்னும் இல்ல. அந்த சீன்ல நடிக்கப்போறது நிஜ ப்ராஸ்டியூட். அதனால் நீங்க ஏதாவது நெனைச்சிடக்கூடாதுனு டைரக்டர் அப்படி சொல்லிருப்பார் என்றார்.

எனக்கு உண்மையாக அதை அக்கறையாக எடுத்துக்கொள்வதா அல்லது கட்டுப்பாடாக எடுத்துக்கொள்வதா என்று புரியாமல் இருந்தது. ஆனால் எங்கள் இயக்குனர் ஆண் பெண் என்ற பாகுபாடெல்லாம் பார்க்க கூடியவர் அல்ல. என்னை ஒரு ஆண் உதவி இயக்குனரைப் போலவேதான் நடத்துவார். இதனாலயே எனக்கு ஆண் உடல்மொழி வந்துவிட்டது. பெண்ணுக்கான நளினங்களை நானே உணர்ந்து பலநாள்களாகிவிட்டது. சரி ஏதோ ஒரு புரிதல் என்று அமைதியாக இருந்தேன். அந்த லாரியில் அந்த பெண் வருவதாக காட்சி அமைக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட ஷாட்கள் எல்லாம் குளோஷப்பில் இல்லாமல் லாங் சாட்டாக இருந்தது. வெளிப்புறப்படபிடிப்பு என்பதால் சினிமாவை வேடிக்கை பார்க்கும் கூட்டம் அதிகமாக இருந்தது. யூனிட்டே திருவிழாவைப்போல் காணப்பட்டது. மக்கள் மட்டுமல்ல யூனிட்டே படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தது.இயக்குனர் கேமராமேனிடம் பார்த்தீங்களா சார் ஷுட்டிங் நடக்கிறப்ப ஒரு பய ஸ்பாட்ல இருக்கமாட்டான் இப்ப பார்த்தீங்களா எல்லாரும் இங்கதான் இருக்காங்க  என்றார். நான் இயக்குனர் பக்கத்தில் இருக்கும் மானிட்டர் அருகே நின்றுகொண்டிருந்தேன். ’முதல்ல அந்த அம்மாவை அனுப்பிடனும் என்றார். இந்த மாதிரியான காட்சிக்கு வழக்கம்போல் ஒரு நடிகையை பயன்படுத்தாம ஏன் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் என்பதை விசாரித்து பார்த்தால், இயக்குனர் திடீரென்று காலையில் இந்தக்காட்சியை எடுக்க வேண்டும் என்றிருக்கிறார். சென்னைலிருந்து நடிகை யாரையும் உடனடியாக வரவைக்க முடியவில்லை. படப்பிடிப்பு நடக்கும் ஊரில் இந்த கதாபாத்திரத்திற்கு நடிக்க யாரும் தயாராக இல்லை.அதனால்தான் மேனேஜர் இப்படி நிஜ பாலியல் தொழிலாளியை ஏற்பாடு செய்து கூட்டி வந்துவிட்டார்.

அந்த ஷாட் முடிந்ததும் முப்பது வயது மதிக்கதக்க அந்தப் பெண் லாரியிலிருந்து கீழே இறங்கி வந்தார். அந்த பெண்ணின் மேல் மிகக் கேவலமான பார்வைகளை வீசிக்கொண்டிருந்தார்கள் ஆண்கள். ஆனால் அந்தப் பெண் எதையும் பொருட்டாக மதிக்கவில்லை. எப்போதும் போடும் வேசம்தானே என்று மிகச் சாதாரணமாக இருந்தார். ஒரே சமயத்தில் அத்தனை ஆண்களின் வேட்கையும் ஒரு பெண்ணை நோக்கி இருப்பதை பார்த்து நான் மிரண்டு போனேன். அந்தப் பெண்ணின் பொருட்டு எனக்கு துக்கம் பீறிட்டது. ஆண்களின் இயல்பைக் கண்டு வெறுப்பாக இருந்தது. இயக்குனரும் அதை உணர்ந்திருப்பார்போல உடனடியாக மேனேஜரைக் கூப்பிட்டு அந்தப் பெண்ணை இங்கிருந்து அனுப்பி வை என்றார். ’ஏன் சார் என்றார் அவர். யோவ் இப்படியே படப்பிடிப்பை நடத்தினா என் நெலைமை மோசாமாயிடும். பார்த்தியில எல்லாரும் அந்தப் பொண்ணை எப்படி பார்க்கிறானுங்கேனு போய்யா போய் அனுப்பு என்றார். ’சார் எடுத்த ஷாட்டுக்கு கண்ட்டினுட்டி என்று மேனேஜர் இழுத்ததும் அதை நான் பார்த்துக்கிறேன் எல்லாம் லாங் ஷாட்டுதான். மெட்ராஸ்லருந்து துணை நடிகை யாரையாவது இந்த கேரக்டர்னு சொல்லி  வரச்சொல்லு  என்றார். அவரும்  சரியென்று சொல்லி அந்தப் பெண்ணை அனுப்பி வைத்தார்.  வழக்கமாக ஆறுமணிக்குத்தான் படப்பிடிப்பு முடிவடையும். அடுத்து அந்தப் பெண்ணை வைத்து அந்தக் காட்சியை எடுக்க வேண்டாம் என்று முடிவானதால்  இயக்குனர் அன்று ஐந்து மணிக்கே பேக்கப் சொல்லிவிட்டார். அந்தப்பெண்ணை அனுப்பிவிட்டார்கள் என்றதும் யூனிட்டில் பலபேரின் முகம் வாடிப்போனது.

இரண்டு நாள்கள் படத்தின் வேறுகாட்சிகள் படம்பிடிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. மீண்டும் பாலியல் தொழிலாளி வரும் காட்சி எடுக்க முடிவானது. காலையில் அந்த நடிகை சென்னையிலிருந்து  வந்து சேர்ந்தார். அவரை யூனிட்டில் அன்று நடித்த பாலியல் தொழிலாளியைப் போல வித்தியாசமாக பார்க்கவில்லை. ஒரு நடிகையைப்போலவே பார்த்தார்கள். அந்தப்  பெண்ணுக்கு படத்தில் இரண்டு காட்சிகள் இருந்தன. கதாநாயகனோடு  அந்தப் பெண் நடிக்கும் காட்சி அது. அந்தக் காட்சியில் காஸ்டியூம் மேக்கப் மேற்பார்வையை  நானே கவனித்துக்கொண்டேன். அந்தப் பெண்ணின் தோற்றம் பாலியல் தொழிலாளியைப் போலவே இருந்ததால் இயக்குனர் திருப்தியாகி அந்தப் பெண்ணிடம் காட்சிக்கான பாவனையை விளக்கி இயக்கத் தாயாரானார்.  கதாநாயகனை தொழிலுக்கு அழைப்பதைப்போன்ற முதல் பகுதியை இயக்குனர் இயக்கினார். அந்தக் காட்சியில் அந்தப் பெண்ணின் உடல்மொழி பாலியல் தொழிலாளியின்  உடல்மொழியைப் போலவே இயல்பாக இருந்தது.அந்தக் காட்சி முடிந்ததும் அறைக்குள் போய் அந்தப் பெண் சேலை தலைப்பை எடுப்பதுபோன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

அந்தக் காட்சியை இயக்குனர் விளக்கியதும் அந்தப் பெண்ணின் முகம் சுருங்கிவிட்டது. தயக்கத்தோடு அந்தப் பெண் மெதுவாக சார் சேலை தலைப்பை எடுக்கணுமா இதையெல்லாம் சொல்லல சார். என்னால அப்படி நடிக்க முடியாது சார் என்றார். உடனே இயக்கனர் இல்லம்மா நானும் கிளாமரா எடுக்கமாட்டேன் நீ சேலைத் தலைப்பை மட்டும் எடுத்தா போது அதுக்குள்ள ஹீரோ மனசு மாறி அந்த எடத்தைவிட்டு போயிடுவார். நான் வேற எதையும் காட்டமாட்டேன். நீ லேசா சேலை தலைப்பை மட்டும் எடுத்தா போதும். அந்தக் காட்சியை  எடுக்கிறப்ப தேவையில்லாத ஆட்களைக்கூட வெளியில அனுப்பிடலாம் சரியா என்று சொல்லிவிட்டு ஷாட் பற்றி கேமராமேனிடம் பேச ஆரம்பித்துவிட்டார்.

அந்தப் பெண் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து கொஞ்சம் தள்ளிப்போய் தன்னை அழைத்துவந்த ஏஜேண்ட்டிடம் ஏதோ சத்தமாக பேசிக்கொண்டிருந்தாள். அவனும் ஏதோ சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தார். உடனே அவர் மேனஜரிடம்போய் சொல்ல, அவரும் ஏதோ கோபமாக பேசி கோ டைரக்டரை  அழைத்து விசயத்தைச் சொன்னார். என்ன  ஆனாலும்  அந்தப் பெண் சேலைத்தலைப்பை எடுக்க முடியாது என்கிறாள் என்றதும், அவரும் போய் அந்தப் பெண்ணிடம் பேசிப்பார்த்தார். அவள் இப்போது கொஞ்சம் கோபமாகவே முடியாது என்று மறுக்க, விசயம் இயக்குனர் காதுக்கு போனது. எங்கள் இயக்குனர் மேனஜரை பிடித்து திட்டத் தொடங்கினார். ’எல்லாம் சொல்லித்தானய்யா உன்னை  கூட்டிட்டு வரச்சொன்னேன்.நானென்னா மத்தவனுங்க மாதிரி நடிகை உடம்பைக் காட்டியா படம் எடுக்கிறேன்.  இந்தக் காட்சி அவசியங்கிறதாலதான. ஏய்யா எனக்குனு  இப்படி வாய்க்குது.உனக்கெங்கய்யா அறிவு போச்சு

இல்ல சார் ஏஜேண்ட்கிட்ட எல்லாத்தையும் சொல்லித்தான் கூப்பிட்டேன்.அவன் அந்த பொண்ணுகிட்ட சொல்லல போலிருக்கு

யோவ் அந்தப்பொண்ணு போய்டுச்சுனா வேற நடிகையை வச்சு திருப்பி எல்லாத்தையும் எடுக்கனுமா. புரொடியூசருக்கு யாரு பதில் சொல்வா. இப்ப அறை நாள் வேஸ்ட் உடனே அடுத்த சீனும் பிளான்  பண்ண முடியாது. முழுநாளும்  வேஸ்ட்டா போயிடும் எப்படியாவது  போய் சொல்லி நடிக்க ஏற்பாடு பண்ணுய்யா என்று சொல்லிவிட்டு என்னைக் கூப்பிட்டு, இந்தக் காட்சியில உடம்பை எதுவும் காட்ட மாட்டோம் சேலை தலைப்பை மட்டும் எடுத்தா போதும்னு சொல்லுங்க என்றார் என்னிடம். நானும் அந்தப் பெண்ணிடம் போய் இது தப்பான சீன் இல்ல நடிங்க என்றேன். அந்தப் பெண் சிரித்தபடி. ’நான் இந்த சீன்ல நடிக்கமாட்டேன் என்றாள். அங்கே இயக்குனர் கத்திக்கொண்டிருந்தார். எனக்கும் அந்தப்பெண்மேல் கோபமாகிவிட்டது.’நடிக்கத்தானே வந் அப்புறம் எதுக்கு இப்ப பிகு பண்றேஎன்று கடினமாக பேசத்தொடங்கினேன். ’ மேடம் என்கிட்ட நடிக்கத்தான் கூப்பிட்டாங்க இந்த மாதிரி கேரக்டர்னு சொல்லல என்றார். உடனே அருகிலிருந்த ஏஜேண்ட்டை பார்த்து ஏன் உங்ககிட்ட மேனஜர் சொன்னார்ல அப்புறம் ஏங்க அந்தப் பொண்ணுகிட்ட சொல்லல என்றேன். உடனே அவர் இல்ல மேடம் அந்தப் பொண்ணுகிட்ட சொல்லிட்டேன் என்றார். இப்போது அந்தப் பெண்மேல் பயங்கர கோபம் வந்தது. ’ஷாட் ரெடியாகிடுச்சு வந்து நடிங்க என்று மிரட்டலான தொனியில் சொல்லிவிட்டு அந்த இடத்தைக் காலி செய்தேன். அந்தப்பெண் அலட்டிக்கொள்ளவே இல்லை. அமைதியாக நின்றுகொண்டிருந்தாள். இயக்குனருக்கு கோபம் எகிற எகிற யூனிட்டே பரபரப்பாக இந்த விசயத்தை பேசிக்கொண்டிருந்தது. இயக்குனர்  அடுத்து என்ன சொல்லப்போகிறாரோ என்று அவர் பக்கத்தில் உதவி இயக்குனர்கள் எல்லாம் நின்றுகொண்டிருந்தோம்.படப்பிடிப்பைச் சேர்ந்த யாரோ ஒருவர் இயக்குனரிடம் சார் அதிகமா பணம் பிடுங்கிறதுக்காக ஏஜேண்ட்டும் நடிகையும் பிளான் பண்ணிகூட இப்படிச் செய்வாங்க. எதுக்கும் அதிகமா பணம் கொடுக்கிறோம்னு  சொல்லுங்க. நடிப்பானுங்க என்று சொல்ல இயக்குனரும் மேனஜரிடம் பணம் அதிகமா கொடுக்கிறோம் என்று பேசிப்பார்க்கச் சொன்னார். ஏஜேண்ட்டிடம் மேனஜர் விசயத்தை சொல்ல பணம் எல்லாம் அதிகமா வேணாம் சார் அந்தப் பொண்ணு நடிக்க மாட்டேங்குது சார்.  இதுல என்ன இருக்கு நடிச்சிடும்னு நெனச்சுதான் அந்த பொண்ணை கூட்டிட்டு வந்தேன். அது இதுவரைக்கு டயலாக் பேசி கூட நடிச்சதில்ல சார்  ரிச்கேர்ளாதான் அட்மாஸ்பியர்ல வந்துட்டு போகும். நான்தான் நல்ல வாய்ப்பு இதையேன் வேணான்னு சொல்லப் போக்குதுன்னு கூட்டிட்டு வந்திட்டேன். அந்தப் பொண்ணுக்கு  அடுத்த மாசம் கல்யாணமாம் சார். அதான் மாப்பிள்ளை வீட்ல பார்த்தா பிரச்னை ஆயிடும்னு பயப்படுது’.

அந்தப் பெண்ணிடம்  எவ்வளவோ பேசி  சண்டை போட்டும் பார்த்தாகிவிட்டது அந்தப் பெண் மசிவதாக இல்லை. எல்லோரும் அந்தப் பெண் மீது  பெரும் எரிச்சலில் இருந்தார்கள். பயங்கர  திமிர் பிடிச்ச பெண் எப்படி அசையாம நிக்கிறா பாரு என்று கோபமாக இருந்தேன். அந்தப் பெண்ணின் நிலையிலிருந்து துளிகூட யோசிக்கவே இல்லை. ’நடிக்க வந்துட்டு அப்படி நடிக்கமாட்டேன் இப்படி நடிக்கமாட்டேனா  வீட்ல இருக்க வேண்டியதுதானஅசல் ஆண்குரலில் அவளைத் திட்டிவிட்டுவந்தேன். அப்போது ஆள் ஆளுக்கு  யூனிட்டில்  அவளைப்பற்றி  பேச ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப் பெண் ஏற்கனவே மலையாள பிட்டு படத்தில் நடித்தவள். அந்த படத்தில் நான்தான் மேக்கப் போட்டேன் என்று அஸிஸ்டெண்ட் மேக்கப்மேன் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். இன்னொருவர் நீங்க வேற இது சரியான ஐயிட்டம் நடிப்புங்கிறது சும்மாதான்.. இப்படி கேவலமாக பேச ஆரம்பித்ததும்தான் அந்தப் பெண்ணைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். இந்த ஆண்கள் பெண்களை என்னவேணுனாலும் பேசுவார்கள். அதுவும் சினிமாவில் நடிக்கும் பெண்களை  அவர்களின் எல்லா வக்கிரப் பேச்சுகளுக்கும் ஆளாக்கிகொள்வார்கள். எல்லோரும் அவளை  கேவலமாகப் பேசப்பேச எனக்கு அவள்மேல் பரிவு உண்டாகியது. இந்த ஆண்களின் வாயை மூடும் அதிகாரம் எனக்கில்லை.அந்தப் பெண்ணை கடுமையாக பேசியதைக் குறித்து வருத்தப்பட்டேன்.  அந்தப் பெண்ணிடம்  எந்த சமாதானப்பேச்சும் வேலைக்கு ஆகவில்லை என்பதால் அன்றும் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டும் படப்பிடிப்பு பேக்கப் செய்யப்பட்டது.

நான் தங்கியிருந்த லாட்ஜில்தான் அந்தப் பெண்ணுக்கும் ரூம் போட்டிருந்தார்கள். வண்டியிலிருந்து  இறங்கி  அறைக்கு லிப்ட்டில் போகையில் அந்தப் பெண்ணும் என்னோடு இருந்தாள். அவள் முகம் வருத்தத்தில் இருந்தது. எனக்கு அவள் மேல் பரிவு ஏற்பட்டாலும்  அவளால்  படப்பிடிப்பில் குளறுபடி ஏற்பட்டதால் அவளிடம் சிநேகமுகத்தை காட்டாமல் இருந்தேன். என் முகத்தில் முன்பிருந்த கோபம் இல்லாதது அவளுக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்த்தோ என்னவோ லிப்ட்டிலிருந்து விலகிப்போகையில் சோகமாக என்னைப் பார்த்து புன்னகைத்துவிட்டுப்  போனாள். நான் பதிலுக்கு புன்னகையும் செய்யவில்லை. கோபமோ வெறுப்போ எதுவுமே இல்லாத ஒரு கேவலமான முகபாவனையை அவளிடம் வெளிப்படுத்திவிட்டு என் அறைக்குப் போனேன்.

வரவர ஆண்களின் அதிகாரத்தோரனை எனக்கு வந்துவிட்டதாக நினைத்து வெட்கமாக இருந்தது. ஆனால் வேலை நிமித்தமாக ஆண்களிடம் அதிகார தோரணையைக் காட்டுவதற்காக நான் வெட்கப்பட்டதும் இல்லை வருத்தப்பட்டதும் இல்லை. ஆனால் பெண்களிடம் அப்படி நடந்துகொண்டால்  எனக்கே என்னைப்பார்த்து கேவலமாக இருக்கும்.

கட்டிலில் அப்படியே படுத்துக்கிடந்தேன் ஒரு அரை மணிநேரம் ஆகியிருக்கும் அந்தப் பெண்ணிடம் பேச வேண்டும்போல் தோன்றியது. அறையைவிட்டு வெளியே வந்தேன்.  அந்தப் பெண் வராண்டாவில் நின்று யாரிடமோ செல்போனில் கவலையோடு பேசிக்கொண்டிருந்தாள். நான் அவளைப் பார்த்தபடி நின்றதும் அந்தப்பெண் பேசி முடித்தபின் என்னை நோக்கி வந்தாள். அறைக்குள் போய் பேசலாம் என்று அவளை அழைத்துப்போனேன்.

அவளைக் கடுமையாக பேசியது குறித்து என் வருத்தத்தை தெரிவிக்காமல் என்னை விட்டுக்கொடுக்காமல்  அவளிடம் உனக்கு என்ன பிரச்னை  ஏன் அப்படி நடந்துகிட்டஎன்று  ஆரம்பித்ததும் நான் உங்களை அக்கானு சொல்லலாமா என்று கேட்டுவிட்டு பேச ஆரம்பித்தாள்.

அக்கா எனக்கு இந்த மாதிரி கேரக்டர்னு தெரியாது.இதுக்கு முன்னாடி ரிச் கேர்ளாதான் நடிச்சிருக்கேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கா..உங்க  டைரக்டரோட போன படத்தில ரிச் கேர்ளா அட்மாஸ்பியர்ல வந்தேன். அந்த படத்தில நீங்க அஸிஸ்டெண் டைரக்டரா இருந்தீங்க. நாங்க நெறைய கேர்ல்ஸ் இருந்ததால உங்களுக்கு ஞாபகம் இருந்திருக்காது. அப்பவே உங்க டைரக்டர் மேல மரியாதையோடதான் இருந்தேன். அந்தப் படத்தில ரிச்கேர்லா அட்மாஸ்பியர்ல வந்த ஒரு  பொண்ணு  ரொம்பவும் கிளாமரா இடுப்புத் தெரியிற டீ சர்ட் போட்டுட்டு வந்துச்சு. கிளாமரா இருக்குனு சொல்லி டைரக்டர் வேற டிரெஸ் போட சொன்னாரு. இப்பகூடத் தெரியும் அவர் கிளாமரா அந்த சீனை எடுக்க மாட்டாருனு. ஆனா  நான் ஒரு பிராஸ்டியூட் கேரக்டர்ல சேலையை எடுக்கிற மாதிரி நடிக்க முடியாது. எனக்கு அடுத்த மாசம் கல்யாணம்.

நான் எப்பவும்  நடிக்க  ஆசப்பட்டதேயில்ல. குடும்ப கஸ்ட்த்துக்காகத்தான் நடிக்க வந்தேன். எங்கம்மா இருபது வருசத்து முன்னாடி சினிமா டான்ஸரா இருந்தவங்க. டான்ஸருக்கெல்லாம் கொஞ்சகாலந்தாக்கா மதிப்பு. அம்மாவுக்கு வயசு ஆக ஆக வாய்ப்பு குறைஞ்சிருச்சு. சுத்தமா வாய்ப்பில்லாம போனப்ப சினிமாவில சின்ன வேடங்கள்ல நடிச்சிட்டிருந்த அப்பாவை அம்மா காதல் கல்யாணம் பண்ணியிருக்காங்க. அப்பா கொஞ்சநாள் சினிமாவில நடிச்சிருக்காரு அப்புறம் அவருக்கும் வாய்ப்பு இல்ல.  வேற வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டாரு. அப்பா எட்டாவதுதான் படிச்சிருக்காரு அதனால பெருசா எந்த வேலைக்கும் போக முடியல. பெயிண்ட் அடிக்கிறது பிட்டர் வேல பார்க்கிறதுனு கெடச்ச வேலையை செய்வாரு. குடிப்பழக்கம் பாக்கு போடுற பழக்கம் அப்பாவுக்கு இருந்திருக்கு.  அம்மா  குடும்பச் செலவுக்கு பணம் பத்தலனு கேக்குறப்பல்லாம் அம்மாவை சந்தேகப்பட்டு கேவலமா கெட்ட  வார்த்தையில திட்டுவாரு. ”அறை குறை ட்ரெஸைப் போட்டு அவுத்து போட்டு ஆடினவதானடினு அடிப்பாரு”. ”எல்லாம் தெரிஞ்சுதானய்யா கல்யாணமுடிச்சேனுஅம்மா கேட்டா அடிச்சு நொறுக்குவாறு. அம்மா நல்ல சேலை சட்டை உடுத்தவிடமாட்டாரு. அம்மாவை ஜடைபின்னிக்கூட  போடவிடமாட்டாரு. இவருக்கும் சரியா வேலை இருக்காது.அப்படியே கெடச்சாலும் குடிச்சது போகத்தான் மீதி. அப்பாவுக்கு சினிமாவில ஜெயிக்க முடியலனு ஒரு கோபம் இருந்துகிட்டே இருந்துச்சு. அந்தக்கோபத்தை அம்மா மேல காட்டுனாரு. வேணுன்னே குடிச்சு  குடிச்சு உடம்பை பாழட்டிச்சுகிட்டாரு. அம்மா வேற வழியில்லாம வீட்டு வேலைக்கு போனாங்க. அப்பா குடிச்சிட்டு பஸ்ல ஏறினப்ப தடுமாறி விழுந்து ஆக்ஸிடெண்டாகி செத்து போயிட்டாரு. பத்தாவதுக்கு மேல அம்மானாலே என்னை படிக்க வைக்க முடியல. அம்மா வீட்டு வேலை செஞ்சு எப்படி வாடகை குடுத்து, நாங்க சாப்பிட முடியும். வீட்ல ஒரு நேர சாப்பாட்டுக்கு வழியில்ல. வாடகை குடுக்க முடியாம வீட்டு ஓனர்கிட்ட அம்மா கேவலமா திட்டு வாங்கிட்டு இருந்தாங்க.  நாங்க சினிமாக்காரங்க குடியிருக்கிற ஏரியாவிலதான் இருக்கோம். ஏஜேண்ட் மூலமா அப்பதான் ரிச்கேர்லா நடிக்கப்போறேனு அம்மாகிட்ட கேட்டேன். என் நிலைமை உனக்கு வரக்கூடாது. சினிமாவில  நடிக்க வேணானு சொல்லிட்டாங்க. ரிச்கேர்ளா நடிச்சா கூட்டத்தோட கூட்டமா போயிடலாம்  முகம் தெரியாதுங்கிறதை சொல்லி அட்மாஸ்பியர்ல வர ஆரம்பிச்சேன். ஒரு நாளைக்கு கம்பெனியைப் பொறுத்து ஐநூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரைக்கும் கிடைக்கும். டயலாக்கும் பேசவேணாம். இப்படிதான்க்கா போயிட்டிருந்தது. ஏஜேண்ட்தான் வம்படியா இங்க நடிக்க கூட்டிட்டு வந்தாரு. நெஜமாவே எனக்கு அடுத்த மாசம் கல்யாணம் அம்மாவோட தூரத்துச் சொந்தம். நான் சினிமாவில அட்மாஸ்பியர்ல வருவேனுகூட  அவங்களுக்கு தெரியாது.இந்த படத்தில ஹீரோயினுக்கு ப்ர்ண்ட் கேரக்டர்தான் ஒரு நாளைக்கு மூணாயிரமுன்னு சொல்லி கூட்டிட்டு வந்தாங்க. கல்யாணச் செலவுக்கு ஆகும்னுதான் வந்தேன். ஆனால் இப்படினு தெரிஞ்சா எங்கம்மா உயிரை விட்டுடும். கல்யாணத்துக்கப்புறம் மாப்பிள்ளை வீட்ல சினிமாவில இந்த சீன்ல நான்  நடிச்சதை பார்த்தா துரத்தி விட்டுடுவாங்கல்லக்கா. இன்னைக்கு இந்த பணத்துக்காக நடிச்சா. எனக்கு நாளைக்கு வாழ்க்கை இருக்காது.அதான்க்கா சாரிக்காஎன்றாள்.

அந்தப் பெண் சொல்லி முடித்ததும். ’ உன்னோட டிஸிஸன் சரிதான் என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தேன். அந்தப் பெண்ணும் அன்றிரவே சென்னைக்கு கிளம்பிவிட்டாள்.

மறுபடியும் படத்தின்  மற்ற காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன. பாலியல் தொழிலாளி வரும் காட்சியை அந்த செட்யூலில் முடித்தே ஆகவேண்டிய  கட்டாயம். மறுபடியும் சென்னையிலிருந்து வேறொரு நடிகையை படத்தின்  கேரக்டரை விவரமாகச் சொல்லி வரவழைத்தார்கள். அந்தப் பெண்ணைப்  பார்த்தால்  படு மாடர்னாக ஒல்லியாக இருந்தாள். கிராம புறத்தில் இருக்கும் பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்திற்கு அவள் சிறிதும் பொருந்தமாட்டாள் என்று தெரிந்தும் உடை மேக்கப் எல்லாம் போட்டு இயக்குனரிடம் காட்டினோம். பார்த்தவுடனே அந்தப் பெண் பொருத்தமாக இருக்கமாட்டாள் என்று மறுத்துவிட்டார். அந்தக் காட்சியையும் முடிக்க வேண்டும் என்ற நெருக்கடி இருந்ததால் அந்தப் பெண்ணை ஊருக்கு அனுப்ப வேண்டாம் என்றுசொல்லி படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வரச்சொல்லிவிட்டார். முதலில் வேறொரு காட்சியை பிளான் செய்தவர். பின்பு பாலியல் தொழிலாளி வரும் காட்சியை எடுக்கலாம் என்று முடிவுசெய்து அந்தப் பெண்ணை  ரெடி  பண்ணச் சொன்னார். சரி நானும் அந்தப் பெண்ணை உடை மாற்றச் சொன்னேன். அந்தப் பெண் என்னைத் தனியாக அழைத்து மேடம் எனக்கு சேலை கட்டத் தெரியாது. நீங்க எனக்கு கட்டிவிட முடியுமா?’ என்றாள்.’ நேத்து கட்டியிருந்தியே.. காஸ்டியூமர் கட்டிவிட்டாரா.. இன்னைக்கும் அவரையே கட்ட சொல்ல வேண்டியதுதானே என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவள் அணிய வேண்டிய சேலையை கையில் பிடித்தபடி காஸ்டியூமர் நின்றிருந்தார். அந்தப் பெண் என்னை கெஞ்சும் பாவனையில் பார்க்க, ’சேலையை குடுங்க நானே கட்டிவிடுறேன் என்று கேட்க காஸ்டியூமர் அந்த பெண்ணை முறைத்தபடி வேண்டா வெறுப்பாக என்னிடம் சேலையைக் கொடுத்தார். நானும் அந்த பெண்ணும் வேனுக்குப் போனோம். நடுக்காட்டில் படப்பிடிப்பு நடந்ததால் தனியாக அறை எதுவும் இல்லை. வேனில்தான் உடை மாற்றிக்கொள்ள வேண்டும். அந்தப் பெண்  தான் போட்டிருந்த பேண்ட் டீ சர்டை மாற்றிவிட்டு பாவாடை ப்ளவுஸை போட்டுக்கொண்டாள். நான் சேலை கட்டிவிடும்போது. ’சாரி மேடம் நான் உங்களைத் தொந்தரவு பண்றேனு நெனைக்காதீங்க. அந்த ஆளு நேத்து மடிப்பை சொருகும் போது வேணுனுன்னே ரொம்ப நேரமா வயித்தில கையை வச்சுட்டே இருந்தாரு என்னாலே ஒன்னும் சொல்ல முடியலஎன்று கண்ணீர் மிதக்கச் சொன்னாள். அப்பவே என்கிட்ட சொல்ல வேண்டியதுதானே அந்த ஆளை மேனஜர்கிட்ட சொல்லி கம்ப்ளைண்ட் பண்ணியிருக்கலாமே. ’அதெல்லாம் ஒன்னும் வேணாம் மேடம். சினிமாவில இந்த மாதிரி நெறையா இருக்கும். நாமதான் ஃசேபா ஒதுங்கனும். நாம் இதெல்லாம் பிரச்னையா சொன்னா சினிமாவில இருக்க முடியாதுஎன்று பிராக்டிகலா பேசினாள். கீழே இறங்கி காஸ்டியூமரை தேடினால் என் கண்படாமல் கொஞ்ச நேரம் எங்கேயோ ஓடி ளிந்துகொண்டார். அந்தப் பெண்ணை நடிக்கச் சொன்னார்  இயக்குனர். ஆனால் அவள் உடல்மொழியோ,தோற்றமோ, உடல் அமைப்போ கொஞ்சமும் பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லாததால் அன்றும் அந்தக் காட்சி எடுக்கப்படவில்லை.

இந்தக் காட்சி எடுக்கப்  போகும்பொதெல்லாம் தடங்கள் வருவதால் அப்படி எடுக்க முடியாமல் போனால் மாற்று ஏற்பாடாக இன்னொரு காட்சியை முடிவு செய்துவைத்திருந்தார் இயக்குனர். அந்தப் பெண்ணை அனுப்பிவிட்டு ஏற்கனவே திட்டமிட்டிருந்த வேறொரு காட்சியை எடுத்தார்.

அடுத்த  இரண்டு நாளில் இன்னொரு பெண் வந்தாள். யூனிட்டை சேர்ந்தவர்கள் அந்தக் காட்சி ஒரு முடிவுக்கு வராது என்று முடிவு செய்து வைத்திருந்தார்கள். வந்த பெண்ணுக்கு அதே சேலை மேக்கப் போட்டு இயக்குனர் முன்னால் நிறுத்தப்பட்டாள். அவள் பொருத்தமாகத்தான் இருந்தாள். பாலியல் தொழிலாளி கதாநாயகனை அழைக்கும் காட்சி திருப்பி எடுக்கப்பட்டது. அந்தப் பெண்ணும் இயக்குனர் சொல்லிக் கொடுத்ததைப்போல சிறப்பாகவே  நடித்தாள். அடுத்து அறைக்குள் போய்  சேலைத் தலைப்பை எடுக்கும் காட்சி. அப்போது   மேனஜர் இயக்குனர் அருகில் வந்தார். இயக்குனர் என்னய்யா என்ன குண்டைத் தூக்கிப் போடப்போற, அந்தப் பொண்ணு நடிக்கலனு சொல்லிடுச்சா என்றார். ’இல்ல சார் இந்தப் பொண்ணு எப்படி வேணுனாலும் நடிக்கிறேனு சொல்லுச்சு சார் அதான் உங்ககிட்ட அதைச் சொல்லாம்னு சரி சரி நான் பார்த்திக்கிறேன் போ என்றார்.

அந்தக் காட்சியில் அந்தப் பெண் சேலைத் தலைப்பை எடுக்க வேண்டும் என்பதால் தேவையில்லாத யாரையும் அந்த அறைக்குள் இருக்க இயக்குனர் அனுமதிக்கவில்லை. கேமராமேன்,ஆபரேட்டர் கேமராமேன், அஸிஸ்டெண்ட் கேமராமேன் ஒருவர் அப்புறம் நான் இப்படி எங்களைத்தவிர மற்றவர்கள் வெளியே அனுப்பபட்டார்கள்.  சுற்றி ஆட்கள் இருந்தால் சங்கோசத்தில் அந்தப்பெண் நடிக்க வெட்கப்படுவாள் என்று இந்த ஏற்பாடு. இயக்குனர் அறைக்கு வெளியே டீ.வி மானிட்டர் முன் உட்கார்ந்து காட்சியை பார்த்துக்கொண்டிருந்தார். அதற்குமுன் காட்சியைப்பற்றி அந்தப்பெண்ணிடம் விளக்கிவிட்டார். சேலை தலைப்பை எடுத்துவிட்டு ப்ளவுஸின் முதல்பின்னை மட்டும் அவிழ்ப்பதுபோல் பாவனை செய்யச் சொன்னார்.

இயக்குனர் ஆக்ஸன் சொன்னதும் அந்தப் பெண் கதாநாயகனைப் பார்த்து பேசியபடி சேலைத்தலைப்பை எடுத்துவிட்டு முதல்பின்னை அவிழ்க்கத் தொடங்கினாள். தாளிடப்பட்ட அறையில்தான் இந்தக்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இயக்குனர் அறைக்கு வெளியே  இருந்ததால் ஷாட் முடிந்ததும்  அவர் கட் சொன்னது உள்ளே இருந்த எங்களுக்கு கேட்கவில்லை. இயக்குனர் கட் சொல்லாதவரை கேமராமேன் கட் செய்யமாட்டார். கட் என்ற வார்த்தை கேட்காததால்  கேமராமேனும் கட் செய்வதா வேண்டாமா என்ற யோசனையில் அப்படியே படம்பிடித்துக்கொண்டிருந்தார். அந்தப்பெண் அவளுக்குச்  சொல்லப்பட்ட  ஆக்ஸனோடு  நிற்காமல்  ப்ளவ்ஸின் எல்லாப் பின்னையும் கழற்றி ப்ளவ்ஸை தனியாக கழற்றி எறிந்தாள். கேமரா ஓடிக்கொண்டே இருந்தது.    

(என் சிறுகதை தொகுப்பான “அழகம்மா” விலிருக்கும் ஒரு சிறுகதை)