திங்கள், 5 ஜூலை, 2010

யூமா வாசுகியின் இருவேறு உலகம்-‘ரத்த உறவு’, ‘மஞ்சள் வெயில்’.யூமா வாசுகி எனக்கு பிடித்த எழுத்தாளர். வழக்கமாக சினிமாவில் emotional காட்சி வந்தால் என்னால் அழுகையை நிறுத்த முடியாது.’முள்ளும் மலரும்’, ‘சேது’ படங்களின் கடைசி காட்சி, ‘அழகி’ படத்தில் நந்திதா தாஸ் மகனை மடியில போட்டு நடுரோட்டில் உட்கார்ந்து அழும்காட்சியைப் பார்த்து என்னை மறந்து தேம்பி அழுதிருக்கிறேன். ஆனால் கதைப் பிரதிகளை வாசிக்கும் போது அந்த மாதிரியான உணர்வுநிலைகளைத் தூண்டும் எழுத்துக்கள் வரும்போது கண்ணீர் தழும்பும், துக்கம் கொள்ளும்,குற்ற உணர்வில், ஆற்றாமையில் மனம் நிம்மதியின்றி உருகித் தவிக்கும். ஆனால் கதறி அழுவது நிகழ்ந்ததில்லை. கண்ணீர் சாரை சாரையாக வழிந்ததில்லை. எல்லாம் யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’ நாவலை படிக்கும் வரைதான். கதையில் வரும் முக்கிய பாத்திரங்களான வாசுகி அக்காவையும் அவள் தம்பியையும் ஒரு மாத காலமாக மறக்க முடியாமல் தவித்தேன். எனக்கு வாய்த்தது போல் அல்லாமல் நேர்மாறான ஒரு அப்பா. அவர் குடும்பத்தில் நிகழ்த்தும் வன்முறைகள். ஒவ்வொரு வன்முறை நிகழும்போதும் இதயத்தை பிடுங்கி எறிவது போல் வாதை. கண்ணீராக கொட்டினால் மட்டுமே அந்த வாதை விலகும். பிரதியை வாசித்து முடித்தும் வன்முறையின் வாதை உடலெங்கும் ஓடிக்கொண்டிருந்தது. என்ன செய்ய? ஒரு வேளை யூமா வாசுகியிடம் பேசினால் பாரம் குறையும் என்று நினைத்து அஜயன் பாலாவிடம் அவர் தொலைபேசி எண்ணை வாங்கினேன். ஆனால் பேசினால் இன்னும் சோகம் அதிகமாகிவிடுமோ.அந்த பிரதியிலிருந்து என்றும் விடுபட முடியாதோ என்ற பயம். இன்று வரை அவரிடம் பேசவில்லை. இந்த நாவல் படித்த பின் என்னுள் ஒரு தெளிவு வந்தது. எதன் பொருட்டும் யாரும் என் மீது செலுத்தும் வன்முறையை பொறுத்துக் கொள்ளக்கூடாது என்பது.சிறுவயதிலிருந்தே யார் என்னை அடிக்க கை ஓங்கினாலும் திருப்பி நானும் கை ஓங்கி விடுவேன்.அடித்தால் திருப்பி அடிப்பேன் என்னால் முடிந்தவரை. இதன்பின் அந்தத் தெளிவை உறுதிப்படுத்திக் கொண்டேன். ஏனேன்றால் நம்மீது நிகழ்த்தப்படும் வன்முறை வெறும் வாதையை மட்டும் ஏற்படுத்துவதில்லை. மனச்சிக்கலை, தாழ்வு மனப்பானமையை உள்ளுக்குள்ளே நொருங்கிப் போகும் தன்மையை இவை எல்லாவற்றிர்க்கும் மேலே நமக்குள் மிகப்பெரும் எதிர் வன்முறையையும் உருவாக்குகிறது. குறைந்த பட்சம் வன்முறையை உடனக்குடன் எதிர்க்கும்போது நமக்குள் வளரும் வன்முறையாவது குறையும். அதேபோல் இந்த நாவலைப் படித்தால் நம்மையும் அறியாமல் குழந்தைமேல் நாம் செலுத்தும் சிறுசிறு வன்முறைகளையும் தூக்கி எறிந்துவிடுவோம். முத்தங்களால் சாத்தியப்பட்ட வாழ்க்கையையே குழந்தைகளுக்கு தர விரும்புவோம். இந்நாவலில் வரும் வாசுகி தம்பியின் குறைந்த பட்ச ஆசை அப்பாவின் கைகளை பிடித்துக்கொண்டு தெருவில் நடப்பதுதான். அதுவும் ஒரு நாள் அதிசயமாக நிகழ்ந்தது எண்ணெய் தேய்த்து தலைசீவி வெளுத்த ஆடை அணிந்து தெருவில் அப்பாவோடு... தம்பியின் வாழ்வில் அப்பாவோடு மகனின் நெருக்கமான நினைவு என்றால் அதுதான் அதுவும் வீடு திரும்பும் போது மாறிவிட்டிருந்தது. வன்முறையின் தீவிர வசீகரம் அப்பாவை விட்டு விலகவில்லை. குடித்துவிட்டு கண் மண் தெரியாமல் மனைவியையும் குழந்தைகளையும் அடிக்கிறார்.குடிக்காத போதும் அப்படியே. யார் தங்கள் பிள்ளைகளை கொடுமைபடுத்தினாலும் கண்டுகொள்ளாமல் வெறுப்பையே உமிழ்ந்துவிட்டுச் செல்கிறார். எதன் பொருட்டு அவர் வெறுப்பை உமிழ்கிறார். மகளின் கண்ணீரும் மகனின் வேண்டுதலும் அவரின் கொடூர அதிகாரத்தில் சிறு அதிர்வைக்கூட ஏற்படுத்தவில்லை. உட்சகட்ட அதிகார போதையிலேயே இருக்கிறார் அப்பா. மிகைஉணர்வைத் தூண்டி வெறும் கண்ணிரை வரவழைப்பது மட்டும் இந்நாவலின் நோக்கமாக இல்லை. சிறுவயதில் ஏற்படும் இத்தகைய வாதை கொடுமையிலும் கொடுமை. உண்மை...மரணம் மட்டுமே அதனை விரட்டி அடிக்கச் செய்யும். ஒரு வன்முறையாளனின் மரணத்திற்காக காத்திருப்பதைத் தவிர பிரதியை வாசிக்கும் நம்மால் வேறு ஒன்றும் செய்ய முடியாதது மேலும் துக்கத்தை அதிகபடுத்துகிறது. இங்கே அன்பில் பெயரால் நிகழ்த்தி கொண்டிருக்கும் அதிகாரத் தோரணை,குடும்பத் தலைவனின் ஏதாச்சாதிகார போக்கு அதனால் ஏற்படும் சிதைவை உற்று நோக்குவதை அவசியமாக்கியிருக்கிறது இந்த பிரதி. குடும்பம் என்னும் நிறுவனத்தின் மீது பல கேள்விகளை எழுப்பி இருக்கும் இந்நாவல் அதனை ஒழுங்குபடுத்த வேண்டிய கட்டாயத்தையும் உருவாக்கி இருக்கிறது.

யூமா வாசுகியின் அடுத்த நாவல் மஞ்சள் வெயில். இந்த நாவலில் வரும் சில வரிகளை கவின்மலர் தன் முக நூலில் எடுத்துப் போட்டிருந்தார். அதுவே நான் யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’ நாவலைப் பற்றி இந்த சிறு பகிர்தலுக்கு காரணமாக இருந்தது. இந்த நாவலை படித்து முடித்த உடனே அதை பகிர்ந்து கொண்டிருந்தால் மிகை உணர்ச்சியில் நானும் இன்னொரு கண்ணீர் காவியத்தை பதிவாக வெளிப்படுத்தியிருப்பேன்.

மஞ்சள் வெயில் நாவலை யூமா வாசுகி எழுதியிருப்பதை ஒரு சிறுபத்திரிக்கையில் பார்த்துவிட்டு புக்லேண்ட்ஸ் போய் அந்த நாவல் இருக்கிறதா என்று கேட்டேன். அந்த நாவல் வரவில்லை. என்னைப்போல் வேறு சிலரும் அந்த நாவலை கேட்டுவிட்டுப் போனதாகச் சொன்ன கடையில் இருந்த நண்பர் ‘எந்த பதிப்பகம்’ என்று கேட்டார், ‘அகல் பதிப்பகம்’ என்றதும் ‘வாங்கி வைக்கிறேன்’ என்றார். வேறு புத்தகங்களை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டேன். மறுபடியும் போய் கேட்டால் இன்னும் வரவில்லை என்றார்கள். அது உடனே கிடைக்காமல் போனதும் ஆர்வம் அதிகமானது. நண்பர்களிடம் அகல் பதிப்பகம் எங்கு இருக்கிறது என்று விசாரித்தேன். ராயப்பேட்டை டி.டி.கே சாலையில் இருந்த ஒரு இடத்தைச் சொல்லி அங்கே கிடைக்கும் என்றார்கள். நண்பர் ஒருவரோடு பரபரப்பான டி.டி.கே சாலையிலிருந்து பிரிந்துசென்ற தெருவின் தொடக்கத்தில், ஒரு மூலையில் ஒடுங்கியிருந்த அந்த அறைக்கு முன்னால் போய் நின்றேன். அறை மூடியிருந்தது. அப்படியே முகம் சோர்ந்துவிட்டது. கைக்கு எட்டாமல் விலகிச் செல்லும் குழந்தையை உச்சி முகரும் ஆசை அப்புத்தகத்தின் மீதும் எழுந்தது. எனக்கு மிகப்பெரும் ஆச்சர்யமாக இருந்தது நான் அதுவரை ஒரு புத்தகத்தைத் தேடி இப்படி அலைந்தது இல்லை. யூமா வாசுகியின் எழுத்தின் மீது உணர்வுப்பூர்வமாக இருந்த நெருக்கம்தான் என் ஆர்வத்தை குறைக்காமல் இருந்தது. அடுத்த நாள் நான் கிளம்பத் தயாரானேன் நண்பர் ‘அந்த பக்கமாக போகும் வேலை இருக்கிறது நானே வாங்கி வந்துவிடுகிறேன்’ என்றார். புத்தகம் கைக்கு கிடைக்கும் வரை அதன் நினைவாகவே இருந்தது. அடுத்த நாள் நண்பர் அந்த அறையில் புத்தகத்தை வாங்கும்போது யூமா வாசுகி அங்கிருந்ததாகச் சொன்னார். நீங்கள் அவரிடம் பேசுனீர்களா என்று நண்பரிடம் கேட்டேன். அவர் என்ன சொன்னார் என்றேன். யூமா வாசுகி சிரித்தார். நானும் சிரித்தேன் என்றார். நான் போயிருக்கலாம் என்று தோன்றியது எனக்கு.

மஞ்சள் வெயில் என்ற தலைப்பே எனக்குள் ஒரு அழகான படிமத்தை ஏற்படுத்தியிருந்தது. மார்கழியில் வெயிலும் குளிரும் பிணைந்து உண்மையாகவே மஞ்சள் வெயில் அடித்துக்கொண்டிருந்த பொழுதில்தான் புத்தகத்தை வாசிக்கத்தொடங்கினேன். இந்த வானிலை அழகு தற்செயலானது. நாவல் கடித வடிவமைப்பில் அமைக்கப்பட்டிருந்தது.

‘அன்பிற்குரிய ஜீவிதா...’
என்று நாவலின் எளிமையான தொடக்கமே உள்ளே இழுத்தது. தொடர்ந்து குளிருக்கு இதமான வார்த்தைகள்..
‘இந்த புதிய காலையில் மலர்கிற அனைத்துப் பூக்களையும் உங்களுக்கு அர்ப்பணித்து மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.ஆளற்ற கடலோரம் கிளிஞ்சல்கள் பொறுக்கியபடி தொலைதூரம் போகும் சிறுவனாக –நான் இப்போது...’

அன்பும் தனிமையும் காதலும் தொடர்ந்த வார்த்தைகள் அழகிய வாசிப்பு அனுபவத்தை தரப்போகிறது என்று நினைத்தது பொய்யில்லை. ஒரே மூச்சில் படித்து முடித்துவிடும் சுவாரஸ்யத்தை கொண்டிருந்தது. ஒரு ஆண் உள்ளுக்குள் ஒடுங்கும் வலி புரிந்தது. பிரிவும் ஆற்றாமையும் அழகிய கவிதை மொழியில் நாவல் முழுவதும் விரவி கிடக்கிறது.

‘நான் உங்களை பார்த்தேன் இந்த ஒரு வரிதான் என் ஜீவிதத்தின் மகா மந்திரம். மஞ்சள் ஒளி தோய்ந்த வராண்டாவில் நலன் சிந்தும் கொலுசுகளுடன் நடந்து போகும் உங்களைப் பார்த்தேன். கற்பனை இல்லை.கனவு கண்டு உறங்கவில்லை.சத்தியமாக அளப்பரிய உண்மையாக தத்ரூபமாக உங்களைப்பார்த்தேன்......’ ஏன் இந்த நாவலின் வரிகளை குறிப்பிட்டு பேச வேண்டியிருக்கிறது என்றால் மொழியின் சிறப்பே இந்நாவல்.

‘நீங்கள் எங்கே இருந்தாலும் நன்றாக இருப்பீர்கள். நான் உங்களை மறக்கமாட்டேன். எனக்கு நீங்கள் செய்தது நன்மையன்றி வேறில்லை.உங்களை எப்போதாவது மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.கிடைக்காமலும் போகலாம்.என்றைக்கும் அந்த மஞ்சள் வெயிலின் நண்பன் நான்.விடைபெறுகிறேன்’. நாவலை முடிக்கும் போது சலிப்பு இல்லை. தன் காதலை ஏற்காத காதலியை வாழ்த்தி இப்படி முடித்திருக்கிறார்.

மஞ்சள் வெயில் மறுக்கப்பட்ட காதலின் நினைவுப் படிமம்.

6 கருத்துகள்:

vijayaselvan சொன்னது…

neenda naatkal aagirathu,thodarnthu eluthungal thozhi.......

நதியானவள் சொன்னது…

அழகான பதிவு..! புத்தகத்தை நானும் தேடத் தொடங்கிவிட்டேன்...!

chandra சொன்னது…

வருகைக்கு நன்றி மனோ.படியுங்கள்.நிச்சயமாக நல்ல வாசிப்பு அனுபவமாக இருக்கும்.

Karikalan சொன்னது…

படிக்கும் போது நேர்ந்த உணர்வுகளை அழகாக பதிவு செய்து உள்ளீர்கள்! யூமா வாசுகி'யை அடையாளம் காட்டியதற்கு நன்றி. படிக்க ஆவலுடன் உள்ளேன்.

Mayoo Mano சொன்னது…

ரத்த உறவு படித்தேன் அக்கா..!! என் கிராமமும் சில மனிதர்களும் நினைவுக்கு வந்தார்கள். அவர்கள் நினைவுடனேயே பேரூந்து, ரயில், வகுப்புக்கள் என்று அலைந்தேன்.! இப்போது மஞ்சள் வெயிலைத் தேடி அலைகிறேன். உங்களது ரசனையை மிக நெருக்கமாக உணர்கிறேன் அக்கா, நிறைய அன்பு உங்களுக்கு.

பெயரில்லா சொன்னது…

I am in Hyderabad . I am repeatedly calling the phone no given by them 044-28115584 but no answer . I could not their books in 2014 books exhibition also . Will you please guide for the address . I will try next time when I go Chennai.