திங்கள், 1 பிப்ரவரி, 2010

விக்கிரமாதித்யன் என்ற ஆளுமை



கவிஞர் விக்கிரமாதித்யன் அவர்களுக்கு தமிழின் சிறந்த இலக்கிய விருதான விளக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கான பாராட்டு விழா 31.01.2010 அன்று நடந்தது. மிகப்பெரிய கூட்டம் இல்லை. ஆனால் அவரை விரும்பியவர்கள் அல்லது அந்த ஆளுமையை புரிந்துகொண்டவர்கள் அங்கே இருந்தார்கள். விக்கிரமாதித்யனைப் பற்றி சொல்லும்போது காடாறு மாதம் நாடாறுமாதம் வாழ்கிறவர் என்பார்கள். அவரை விரும்பியவர்களால் நாடோடி நம்பியண்ணன் என்று செல்லமாக அழைக்கப்படுபவர். அவருடைய வாழ்க்கை முழுதும் பயணத்தால் நிரம்பியிருக்கிறது. அது தத்துவார்த்தமும் விரக்தியும் வறுமையும் தேடலுமான பயணம். விக்கிரமாதித்யனை ஒரு கவிஞனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்கிறார்கள். ஆனால் அப்படி கவிஞனாக வாழ்வதில் உள்ள பொருளாதார சிக்கலும் மனச்சிக்கலும் மிகப் பெரிது. வலி நிறைந்தது. ஒரு கவிஞனாக வாழ்வதில் அவருக்கு மிகப்பெரிய ஆனந்தம் எதுவும் இருக்கப்போவதில்லை. ஆனால் அவரால் ஒரு கவிஞனாக மட்டுமே வாழமுடியும்.

அவருக்கான விளக்கு விருது பாராட்டு விழாவில் மிக அசௌகரியமாகவே உட்கார்ந்திருந்தார். ஆம் அவர் மேடையையும் பாராட்டையும் விரும்பவில்லை என்றே தெரிந்தது. அவர் தன்பின்னால் எந்த ஒளிவட்டத்தையும் வைத்துக்கொள்ளவில்லை. அதுவே அவரை மிகச் சிறப்பான இடத்தில் வைத்திருக்கிறது. அவரைப்பற்றி, கவிதையில் அவர் ஆளுமையைப்பற்றி, அவர் வாழ்க்கையைப்பற்றி விழாவில் கலந்துகொண்டவர்கள் பேசும் போது அதை மிக ஆர்வமாக எளிமையாக எதிர்கொண்டார். சிலசமயம் வெட்கத்தோடு ஒரு சிறுவனைப் போல் சிரித்துக்கொண்டார். என்னை அவரிடம் பலமுறை பலபேர்(இலக்கிய நண்பர்கள்) அறிமுகப்படுத்திக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் இவங்களை எனக்கு ‘நல்லாத் தெரியுமே’ என்பார். ஆம் அவரை ஆறாம்திணை இணைய இதழுக்காக நேர்காணல் செய்திருக்கிறேன். அப்பொழுது முதல் இலக்கிய கூட்டங்கள் புத்தகக் கண்காட்சிகளில் சந்திக்கும் போது நினைவு கூர்ந்துகொள்வார். நேர்காணலில் மட்டும் அவரிடம் நிறைய பேசினேன். அதன்பின்னான சந்திப்புகளில் நலம் விசாரிப்புகளோடு பேச்சு முடிந்துவிடும். ஆனால் எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞராக இருந்தார். அவரைப் பற்றிய செய்திகளை அங்கங்கே கேட்டுக்கொண்டே இருப்பேன்.

ஏனேன்று தெரியவில்லை. அவருடைய கவிதையை விட அவருடைய வாழ்க்கை மிகவும் அவதானிப்புகளுக்கு உள்ளாக்கப்படுகிறது. ஒரு கவிஞனின் நலிந்த வாழ்க்கை சுவாரஸ்யத்தை கொடுக்கிறதா? இது மிகப்பெரிய கேள்வியாக எனக்குள் இருக்கிறது. சமிபத்தில் அவருக்கு சினிமாவில் பாடல் எழுத வாய்ப்பு வந்தது. அவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார். பாடல் ஒலிப்பதிவு நடக்கும் நாளை அவரிடம் தெரியபடுத்த படக்குழுவினர் முற்பட்டபோது வழக்கப்போல் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. அவரிடம் செல்போனும் கிடையாது. அவர் பாடல் எழுதும் வாய்ப்பை விரும்பியோ விரும்பாமலோ தவறவிட்டார். அதைப்பற்றி விசனத்தோடு இருக்கிறாரா என்றும் தெரியவில்லை. ஆனால் எப்போதும்போல் சிரித்த முகத்தோட இருக்கிறார். இந்த விசயம் கேள்விப்படும் அனைவரும் ‘ஏன் இவர் இன்னும் பொழைக்கத் தெரியாம இருக்கிறார்’ என்பார்கள். அவை எல்லாவற்றிர்க்கும் அவருடைய பதில் ஒரு சிரிப்பாகத்தான் இருக்கும். நான் கடவுள் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அது பற்றியும் அவருக்கு பெரிதான அபிப்ராயம் இருப்பதுமாதிரி தெரியவில்லை. அதையும் தன் வாழ்வின் ஒரு சாதாரண நிகழ்வாகவே நினைக்கிறார்.

புதிதாக எழுத வருபவர்களை எந்த தலைமைப்பீடத்தையும் தலையில் வைத்துக்கொள்ளாமல் பாராட்டி வளர்த்துவிடுவார் என்பார்கள். ‘ஆரம்பகாலத்தில் விக்கிரமாத்தியன்தான் என் எழுத்தை பாராட்டி அதை பத்திரிக்கைகளில் வெளிவருவதற்காகவும் முயற்சி செய்தார்’ என்று அஜயன்பாலா விழாவில் பேசினார். விக்கிரமாதித்யனைப்பற்றி பல சுவாரஸ்யமான விசயங்களை பகிர்ந்து கொண்டார். ஒரு நாள் விக்கிரமாதித்யனுக்கு நடிகை விஜயசாந்தியை பார்க்க வேண்டும் போல் இருந்திருக்கிறது. அஜயன்பாலாவை அழைத்துக்கொண்டு விஜயசாந்தி வசிக்கும் தி.நகர் ப்குதியில் ராத்திரியெல்லாம் அலைந்துகொண்டிருந்திருக்கிறார். இது ஒரு சாதாரண ரசிகன் ஒரு நடிகையை பார்க்கும் ஆவலைப்போல் இல்லை. அவருக்கும் தெரிந்திருக்கும் ராத்திரியில் ஒரு நடிகையின் வீட்டை கண்டுபிடித்து அவரைச் சந்திப்பது சாத்தியமில்லை என்பது. இருந்தும் அந்த ராத்திரி முழுதும் அந்த நடிகையின் ஞாபகத்தில் இருக்க விரும்பி இருக்கிறார். அந்த கவிதை மனது சரியானதா இல்லையா என்பது விசயம் இல்லை. ஆனால் அவர் அப்படித்தான் இருந்திருக்கிறார். அதேபோல் ‘பருவராகம்’ என்றொரு இதழ். அது ஒரு பாலியல் விசயங்களை உள்ளடக்கிய இதழ். அந்த இதழில் விக்கிரமாதித்யனின் கவிதை ஒரு காலத்தில் வந்திருக்கிறது. அந்த இதழுக்கெல்லாம் எழுதி அவர் சம்பாதிதார் என்று அர்த்தம் இல்லை. அது எதிர்புரட்சியும் அல்ல. வாழ்க்கை மீது விருப்பு வெறுப்பு என்று பிரித்தறிய முடியாத ஏதோ ஒரு சுவை அதில் அடங்கியிருக்கிறது. காலம் இவரை தவறவிட்டுக்கொண்டிருக்கும் அல்லது சிலநேரம் காலத்தை இவர் தவறவிட்டுக்கொண்டிருப்பார். எதுவாக இருந்தாலும் காலம் இவரை ஒரு கவிஞனாக வைத்திருக்கிறது. இது சாபமா? வரமா? என்று தெரியவில்லை.

17 கருத்துகள்:

adhiran சொன்னது…

a good expression about nambi. ennaipporuththavaraiyil pala nerankalil avarin paal ovvaamaiyunaru irunthaalum antha aalumai thavirka mudiyaathathu.

chandra சொன்னது…

ஆமாம் ஆதிரன் நீங்கள் சொல்வது சரிதான். ஆனாலும் ஆளுமைகள் சரியாக புரிந்துகொள்ளப்படாமல் போவது சாபக்கேடுதான்.

chandra சொன்னது…

Amudha Thamizh(f.b ல் எழுதிய கருத்து)
maybe we have elements of VIKRAMAADHITHYAN..
but not the WHOLESOME..
ESRA maadhiri oru thaedal..
koenangi madhiri ondru..
it varies ..... See More
.........................................
aanaal the society HAS A diffy outlook..
adhu MOOLAIYIN vaazhvaiyae vaazha virumbum..
manadhin vaazhvai alla..
...........................................
after a long time nandri for introducing a person like him..
im awed at the charm and the MULTITUDES of his PERSONALITY..
..............................................
IVARKAL GNAANIYAI POENDRAVARKAL..
oru kaaala kattathil ellaam ondraakavae thoendrum ivarkaluku..
ungalayum ennayum poendravarkaladhu ARIVUTHTHAEDAL maadhiriallaadhu idhu manadhin thaedal..
...................................................
we are UN POLLUTED-HYPOCRITES befor him..
meeendum nandri..
iththanai manikku ennai badhil ezhudha vaiththadhae indha katturaiyin vettri..

chandra சொன்னது…

அமுதா டியர் எப்படி இருக்கீங்க. உங்களுடைய வாசிப்பின் பார்வை ஆழமாக இருக்கிறது. நான் நிருபராக வேலைக்குச் சேர்ந்த புதிதில் விக்கிரமாதித்யனை நேர்காணல் செய்தேன். எனக்கு மிகவும் பிடித்த நேர்காணல் அது. அப்போது அவருடைய கவிதைகளும் கவிதை பற்றிய அவருடைய பார்வைகளுமே எனக்கு முக்கியமாக இருந்தன. அவரை கவனிக்க கவனிக்கத்தான் தெரிந்தது அவர் கவிதைகளும் வாழ்வும் பிரித்த... See Moreறிய முடியா கூறுகளுடன் இருந்தன. விக்கிரமாதித்யனை பேசும்போது அவர் கவிதைகளை மட்டும் அல்லாது அவர் வாழ்வின் மொத்த ஆளுமையையும் சேர்ந்துதான் படிக்க வேண்டி இருக்கிறது. உங்கள் ஆழமான கருத்துக்கு நன்றி தோழி.

dr.raghav சொன்னது…

wishes to you sir

Thenammai Lakshmanan சொன்னது…

nice sharing
thanks chandra

chandra சொன்னது…

உங்கள் வருகைக்கு நன்றி தென்னம்மை

விஜய் மகேந்திரன் சொன்னது…

மிகைபடுதல் இன்றி துல்லியமான பதிவு.பாராட்டுகளையும் அங்கீகாரங்களையும் எதிர்பார்த்து இயங்கிருந்தால் இவ்வளவு நெடுநாட்கள் கவிஞனாக தமிழ் சுழலில் இயங்கி இருக்கவே முடியாது.விக்ரமாதித்யன் ஒரு சஹாப்தம்.

chandra சொன்னது…

நன்றி மகேந்திரன்.

ச.முத்துவேல் சொன்னது…

இயன்றால், விக்கி அண்ணாச்சியுடனான உங்களின் நேர்காணலை வலைப்பூவில் அளீக்கவும்.

Ayyanar Viswanath சொன்னது…

மிக்க மகிழ்ச்சி.

உங்களின் எழுத்தின் வழி விரியும் விக்ரமாதித்யனின் மீதான அன்பைப் புரிந்து கொள்ள முடிகிறது.
மேலும் அவரின் பிம்பத்தின் மீது நமக்கிருக்கும் அன்பு விருதுகளை விடப் பெரியதுதான் இல்லயா :)

chandra சொன்னது…

நன்றி ச.முத்துவேல். அந்த நேர்காணலை என் வலைப்பூவில் பதிவு செய்ய இருக்கிறேன்.

chandra சொன்னது…

உண்மைதான் அய்யனார். அவர் மீதான என் அன்பு அலாதியானதுதான்.

ajayan bala baskaran சொன்னது…

நன்றி சந்திரா, என் தந்தைய்யை போன்ற மரியாதைக்குரியவராக நான் விக்கியை கருதுகிறேன்.நான் எதை நினைத்து அந்த சம்பவங்களை சொன்னேனோ அதை கருத்த்காமாற்ரியமைத்து தந்தமைக்கு நன்றி.விக்கி என் வாழ்வின் உணர்வின் தவிர்க்க முடியாத அங்கம்.இது போன்ற விருதுகள் அவரது ஆளுமைக்கு மிகவும் சிறியன என்பது மறுக்க முடியாத உண்மை .வருங்காலங்களில் அவரை நோக்கி கவியுலகம் மையம் கொள்லும் என நம்புகிறேன். நகுலன் பிரமிளுக்கு பிறகு விக்கிரமாதித்யனை தைரியமாக கூறலாம் என மனசு தடையில்லாமல் கூச்சலிடுகிறது .இத்னை அனைவரும் ஆமோதிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்.

chandra சொன்னது…

நன்றி அஜயன்பாலா.நிச்சயமாக கவியுலகம் விக்கிரமாதித்யனின் ஆளுமையை இன்னும் சரியாக அடையாளங்கொள்ளும்.

soorya சொன்னது…

சந்ரா,,,,,,,,,,,
நான் உங்களை அறியேன்.
என் நம்பி மேல் எனக்கு மிகுந்த மரியாதையுண்டு.
அது ஒருபுறமிருக்க.
ஆளுமை என்ற வேற்றுமொழி உளவியல் தத்துவம் இங்கே பொருந்தாது.
தமிழ்க் கவிஞனை தமிழ் உளவியலால் அளப்பதே தர்மம்.
தான் சார் உலகையும் சார்புலகையும் ப்ரமிள் கண்டதுபோல, நகுலன் கண்டது போல..

நம்பியின் சார்புலகைக் காண ஒரு தமிழ் உளவியல் வேண்டும்.

யார் செய்தல் கூடும்...........

நன்றி.

chandra சொன்னது…

சூர்யா உண்மைதான் பொதுவாகவே கலைஞர்களின் சார்புலகைக் அவர்களின் தனிப்பட்ட வாழ்நிலை, மனநிலை கொண்டே தீர்மானித்தல் அவசியம். அதுவும் விக்கிரமாதித்யன் மாதிரியான தீவிரமான படைப்பாளிகளை புரிந்து கொள்வதற்கு நீங்கள் சொல்வதைப்போல
வாழ்நிலை சார்ந்த தமிழ் உளவியல் தேவை.