சனி, 3 அக்டோபர், 2009

ஷோபா என்றொரு தேவதைஊசி முனையில் கருந்தட்டுகள் சுழல,காற்றின் தேகமெங்கும் இசை பதிந்த காலமது.நம் விருப்பங்கள் தாண்டி,நம் அனுமதியற்று,நமக்குள் வந்தமரும் கலை.. இசை. என்னுள்ளும் இசை இப்படித்தான் வந்து சிம்மாசனமிட்டது. எங்கள் ஊர் ஒரு மலை கிராமம். மூன்று புறமும் மேற்குத் தொடர்ச்சி மலை அரண் அமைத்து இருக்கும் கூடலூர். அந்த ஊரில் இசையற்ற பொழுதுகளோ, காலங்களோ இல்லை.அது விசேசங்களின் ஊர்.. சடங்கு, காது குத்து, மொட்டை, மொய்விருந்து, மார்க் கல்யாணம், கிடா வெட்டு,..இப்படி ஏதாவது ஒரு விசேசம் நடந்துகிட்டே இருக்கும்.. எங்க வீட்டிலேயே இரண்டு வருசத்திற்கு ஒரு முறை விசேசம் நடக்கும். அந்த நேரங்களில் கரும் இசைத்தட்டுகள் சுழலுவதை பக்கத்திலிருந்து அதிசய பொருளைப் போல பார்ப்பேன். மைக் செட் போடுபவர் எனக்கு இசைக் கலைஞனாகத் தெரிவார். இவர் எப்படி இதில் பாட்டை வரவைக்கிறார் என்று வியப்பில் ‘எப்படிண்ணே இதுல பாட்டு வருது’ என்று கேட்பேன். ‘இந்த தட்டுல ஊசியை வச்சா பாட்டு வரும் அதை எடுத்துட்டுடா பாட்டு நின்னுடும்’ என்று ‘இங்கேயெல்லாம் வரக்கூடாது செட் கெட்டுப்போகும் ஓடிப்போ’ என்பார்.

ஊரில் திரும்பும் திசைகளெங்கும் கூம்புக் குழாய்கள்(loud speakers) ஏதோ ஒரு பாட்டை இசைத்துக் கொண்டிருக்கும். சிலசமயங்களில் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று இடங்களில் பாடல்கள் ஒலிபரபப்பாவதும் உண்டு. ' தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா' என ஒன்று கேள்வி கேட்கும்,மற்றொன்று ‘உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி’ என பதில் சொல்லும்.இப்படித்தான் என் பால்யங்கள் பாடல்களால் நிரப்பப்பட்டது. என்னைத் துயில் கொள்ளச் செய்வதும் ,என்னைத் துயில் எழுப்புவதும் ஏதோ ஒரு பாடலாய் இருக்கும். வெறும் பாடல்கள் என்ற நிலையிலிருந்து பாடல்கள் என்னை பித்துக்கொள்ளச் செய்தன. இளையராஜாவின் இன்னிசை பாடல்கள் என்று மைக் செட்காரர்கள் அறிமுகம் செய்து பாடல்களை ஒலிபரப்பினார்கள். பின் அந்தப் பெயர் மந்திரச் சொல் ஆனது. அது என் பாவாடை சட்டை காலம்.

சூரியன் மறையும் நேரம் அநேகமாய் எங்களூர் வானம் செந்நிறமாய் இருக்கும்.செவ்வானம் பார்த்தபடியே பாடல்கள் கேட்பது ஒரு சுகம். அப்படி பாடல்கள் கேட்கும் நேரத்தில் நானே செந்நிறமாக மாறி வானத்தில் மிதப்பது போன்ற உணர்வை இளையராஜாவின் பாடல்கள் ஏற்படுத்தின. அந்த காலக்கட்டங்களில் நான் என்னையே ஒரு கரும் இசைத்தட்டாகத்தான் உணர்ந்தேன். விழித்திருக்கும் கணங்களிலெல்லாம் என் உதடுகள் ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்தபடி இருக்கும் அல்லது என் மனதிற்குள் ஏதோ ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்.என் உடலுக்குள்ளும், மனதுக்குள்ளும் திரையிசைப் பாடல்கள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தியிருந்தது. அது என் படிப்பினை பாதிக்கவில்லை. இசை மனது எல்லா நல்ல விசயங்களையும் அழகாக உள்வாங்கியது. வகுப்பில் முதல் ஐந்து ரேங்க்குள் வாங்கினேன்.

பாடல்கள் என் ஆடை

பாடல்கள் என் அணிகலன்

பாடல்கள் என் உலகம்

என வாழ்ந்த காலம் அது.
எல்லா பாடல்களும் ஒரு சிறகு முளைத்த பறவைபோல வானத்தில் மிதந்து கொண்டிருப்பதாகத் தோன்றும்.பறக்கும் பறவைகளைப் பார்த்தபடியே பாடல்கள் கேட்டிருக்கிறீங்களா? சிறகசைக்காமல் தாளப் பறக்கும் பறவை 'பருவமே புதிய பாடல் பாடு’ என்று பாடியபடிப் பறப்பதாகத் தோன்றும். என் கற்பிதங்களும், என்னைச் சுற்றி இருந்த இயற்கையும் எல்லா பாடல்களுக்கும் ஒரு உருவத்தைக் கொடுத்து வைத்திருந்தது. பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் வழியெங்கும் பாடல்கள் ஒரு வழித்துணையாக வரும்.என் வீட்டிலிருந்து எங்கள் பள்ளிக்கூடம் இருக்கும் தூரம் இரண்டு பாட்டு கேட்கும் தூரம். நல்ல பாடல் என்றால் மூன்று பாடல் கேட்கும் தூரம். நினைத்தபோது மழை வரும் இயற்கைச் சூழல் உள்ள ஊர்(இப்போது வானிலை எல்லாம் மாறிப்போய்விட்டது). அதற்கு கால நேரமெல்லாம் கிடையாது பள்ளிக்குச் சென்று திரும்பும் பலசமயங்களில் எதிர்பாராமல் ஒரு திடீர் மழையைச் சந்திப்போம். அப்போதும் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். குடைகளற்ற அந்த பொழுதுகளில் மழையில் நனைந்தபடியே பாட்டு கேட்டுக் கொண்டே வருவேன்.

மழையில் நனைந்தபடி கேட்கும் பாடல்கள் இனிமையுடன், அந்த மழையோடு என்னைக் கரைத்துவிடுவதாக இருக்கும். ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையின் பூங்கோதையின் மனம்கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ பாடலை முதல் முறையாக கேட்டபோது மழையில் நனைந்தபடிதான் கேட்டேன். அது பள்ளியிலிருந்து திரும்பும் ஒரு மாலைப் பொழுது. அன்று கருஞ் சாம்பல் வண்ணத்தில் இருந்தது வானம். உதடுகளில் மழை வழிய நானும் அந்தப் பாடலை பாடியபடி வீடு வந்து சேர்ந்த ஞாபகத்தை, இன்றும் எல்லா மழைப் பொழுதுகளும் கிளர்த்துகிறது.

நான் என் சக வயது தோழிகள் போல் இல்லை என்பதில் என் குடும்பம் அநேக கவலை கொண்டிருந்தது. ஆனால் என் படிப்பு சிறப்பாக இருந்ததால் அவர்களால் என்னை தண்டிக்க முடியவில்லை. இது இல்லாமல் அப்பா ஒரு பிலிப்ஸ் ரேடியோ வாங்கி வந்தார். அதிலிருந்து அது என் உடமையாகி விட்டது. அப்பா செய்தி கேட்பதோடு சரி. நான் வீட்டிலிருக்கும் மற்ற நேரங்களில் அது என்னுடனே இருக்கும். அதில் பாடல்கள் ஒலிப்பரப்பாகும் நேரங்களை கணக்கிட்டு அப்போது வெளியே செல்லாமல் பாட்டு கேட்பேன். எல்லா இரவுகளிலும் என் தலைமாட்டிலேயே ரேடியோ ஒலித்துக் கொண்டிருக்கும் அல்லது என்னோடு தூங்கிக் கொண்டிருக்கும். அப்பா காலையில் எடுத்து செய்தியை போடுவார். அவர் மட்டும் நான் பாடல் கேட்பதை தடுத்ததே இல்லை. அம்மா,அக்கா, அண்ணன் எல்லோரும் என்னை பாட்டு பைத்தியம் என்பார்கள். நான் வேலை செய்யாமல் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கும் நாள்களில் ‘ஒரு நாளைக்காவது இந்த ரேடியாவை போட்டு உடைக்கப் போறேன் என்று அம்மா கத்தும்.

அப்பாவோட புளியமரக் காட்டுக்குப் போகும்போது ‘வேலை முடியறவரைக்கும் இந்த ‘ஊஞ்சல்ல ஆடிகிட்டிரு’ என்று ஒரு கயிற்றில் ஊஞ்சல் கட்டிக் குடுப்பார். எங்க காடு மலைக்குப் பக்கத்தில் இருந்தது. மலைக்கு நடுவில ஊஞ்சல் கட்டி ஏகாந்தமா பாடற சந்தோசத்துக்காகவே நான் அப்பாகூட காட்டுக்குப் போவேன். மலைவாசத்தோடும் பயிர் வாசத்தோடும் பாடல்களை பாடுவது அல்லது பாடல்களில் நினைவுகளில் மூழ்குவது உலகில் இணையற்ற சந்தோசத்தை தந்தது.


எல்லோரும் விளையாட்டும் சிரிப்புமாக இருந்த பல நேரங்களில் எங்கேயோ தூரத்தில் சன்னமாக ஒலிக்கும் பாடலைக் கூட உட்கார்ந்து கவனமாகக் கேட்பேன். நான் எப்போதும் மாய உலகத்தில் மிதப்பதாக தோழிகள் பேசிக்கொண்டார்கள்.

இசை ஒரு அன்பான கலை என்பதை நான் தொடர்ச்சியாக பாடல்கள் கேட்பதன் மூலம் உணர்ந்திருந்தேன். இசை என்னுள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியையும் வலியையும் ஒருசேர ஏற்படுத்தியிருந்தது. நான் எதையோ தேடிக் கொண்டே இருந்தேன். கோடை வெயில் ,குளிர் இரவின் தனிமை ,பனியின் கூதல்,மழைவாசம்,எங்கள் ஊரின் இயற்கை..எனக்குள் வேறெதையோ உந்தித் தள்ளிக் கொண்டிருந்தது. முட்டையைத் தகர்த்து வெளியே வரத்தவிக்கும் ஒரு பறவைக் குஞ்சின் தவிப்பைப் போலிருந்தது.


ஒரு திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் கழித்துத் தான் எங்கள் ஊர் திரையரங்கிற்கு வரும் காலகட்டம் அது. அந்தப் படங்கள் வருவதற்கு முன்பே பாடல்கள் எனக்கு மனப்பாடமாக இருக்கும். திரையரங்கில் பாடல் காட்சிகள் வரும் போது அந்தப் பாடல்களைச் சத்தமாக பாடுவதற்காகவே நான் திரைப்படம் பார்க்கச் செல்வேன். ஒரு திரைப்படத்தையே பல முறை பார்த்திருக்கிறேன். எனக்குள்ள சினிமா மோகம் ஏற்பட்டதற்கு காரணமே பாட்டு மேல இருந்த பைத்தியம்தான்.


மழையில் இருளில் அதிகாலையில் செந்நிற மாலையில் நான் கேட்ட பாடலெல்லாம் திரையில எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்க்காகவே நான் சினிமாவுக்குப் போவேன்.ஒரு படத்தையும் விடறதில்ல.டப்பிங் படம் ஓடாத படம் எல்லாத்தையும் பாத்துடுவேன்.

அப்பத்தான் பாட்டு மேல் இருந்த அதிகப்படியான உணர்ச்சி சினிமா மோகமாக மாறியது. பத்து பைசா குடுத்து பிலிம் வாங்கி வீட்ல அப்பா வேட்டியில சினிமா போட்டுக் காட்டியிருக்கிறேன். என்னைப் போல பொண்ணுங்க யாரும் பிலிம் வாங்க மாட்டாங்க. வளையல் பாசி என்று வாங்கிக் கொண்டிருப்பார்கள். என்னைப் பார்த்து சரியான ‘கிறுக்கச்சி’ என்பார்கள். நான் படம் காட்டும் விளையாட்டில் ஆண்பிள்ளைகள்தான் ஆர்வம் காட்டுவார்கள்.

நிறையப் படம் பாத்து படம் பாத்து நல்ல படம் கெட்ட படம் எது என்று பிரிச்சுப் பார்க்கும் ரசனை வந்தது. அப்பவும் எல்லாம் மசாலாப் படங்களையும் பார்க்கும் கட்டாயத்திற்கு ஆளானேன். வீட்டில் மற்றவர்கள் அந்தப் படத்தை விரும்பிப் பார்த்தார்கள். அப்போது சினிமா தவிர வேறு பொழுது போக்கு இல்லை என்பதும் ஒரு காரணம். பாலச்சந்தர் ,பாரதிராஜா ,மகேந்திரன், பாலு மகேந்திரா படங்களை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் படங்களில் கதாநாயகிகள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். அன்புக்கு கட்டுப்பட்டவர்கள் அல்லது தன்மேல் திணிக்கப்படும் அதிகாரத்தை எதிர்பவர்களாக இருந்த கதாநாயகிள், உண்மையில் என் இயல்பில் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அதன் பின் நடிகர் நடிகைகளில் நடிப்பில் என் கவனம் சென்றது.

அப்போது எனக்குள் வந்த தேவதைதான் ஷோபா. ஒரு தீவிர மோகத்தோடு நான் சினிமா பார்த்துக் கொண்டிருந்தாலும் எந்த நடிகர், நடிகையருக்கும் ரசிகையாக இருந்ததில்லை. ஆனால் ஷோபாவை என்னாலே எனக்குள்ள இருந்து பிரிக்க முடியவில்லை. ‘என்னை பாரு என்னை ரசி என்னை நினைச்சுகிட்டே இரு வேற எதுவும் செய்யாதே’ என்று சொன்ன மாதிரி இருந்தது. அத்தனை எளிமையான கதாநாயகியை அதற்கு முன் நான் திரையில் பார்த்ததில்லை. பக்கத்து வீட்டு காலேஜ் படிச்ச அக்கா மாதிரி, இயல்பான வாழ்வில் வரும் அன்பான தங்கை மாதிரி, நான் மாற நினைக்கும் ஒரு நாகரீகப் பெண்ணாக இருந்தார். அதுவரைக்கும் எந்த நடிகையாகவும் என்னை கற்பனை பண்ணிப் பார்க்காத நான் திரையில் வரும் ஷோபாவின் கதாபாத்திரத்தைப் போல் இயல்பில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்..அதுக்கு ஒரு அன்பான காரணம் இருந்தது. ஷோபா தனக்கு கிடைச்ச எல்லா கதாபாத்திரங்களையும் ஒரு நுட்பமான அன்பின் வெளிப்பாட்டை கொண்டு நடித்திருந்தார். இயற்கையையும் அன்பையும் நேசிக்கின்ற ஒரு மனுசிதான் இத்தனை நுட்பமான அன்பை வெளிப்படுத்த முடியும்.

ஷோபாவும் என்னைப்போல் இசையும், மழையும் விருப்பமுடைய பெண்ணாக இருக்க வேண்டும். அவர் தனக்கு விருப்பப்பட்ட பாடல்களைச் சத்தமாக பாடுபவராக இருக்க வேண்டுமென்று விரும்பினேன். கள்ளமில்லாத அந்த சிரிப்புக்குள்ள ஒரு தேடல் தெரிந்தது. மனசுக்குப் பிடிச்ச விஷயங்களில் தன்னைத் திளைத்துக் கொண்டு அதில் கரைந்து போகும் மனம் இருந்தது. ஆனால் அவர் விருப்பங்கள் எதுவாக இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்குள் இருந்த ஷோபா இப்படித்தான் இருந்தார். அந்த முகத்தில் வழிகின்ற சந்தோசத்தை, சிரிப்பை, குழந்தைத்தனத்தை,தேடலை எனக்குள்ளேயும் கொண்டு வர விரும்பினேன்.
வள்ளியா ,இந்துவா நடிச்ச ஷோபாவுக்குள்ள நான் எங்கே இருக்கிறேன் என்று தேடினேன்.

அழியாதகோலங்கள், முள்ளும் மலரும், மூடுபனி, பசி ..இந்தப் படங்களெல்லாம் எனக்கும் ஷோபாவுக்கும் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தின படங்கள்.

அழியாத கோலங்கள் படத்தில் வருகின்ற இந்து டீச்சர் படத்தில் வருகின்ற எல்லா கதாபாத்திரங்களின் மேலும் சந்தேகமற்ற அன்பை செலுத்தும் பெண்ணாக இருப்பார். கடைசியில் அந்த ஆத்ம அன்பு அந்த கதாபாத்திரங்களை வாழ்நாளில் கடைசி வரைக்கும் கரைய வைக்கும். அந்தப் படம்தான் அவங்களை எனக்குத் தேவதையா காட்டியது. என்னைப் பொருத்தவரைக்கும் தேவதைகள் அழகானவர்கள் இல்லை. அன்பானவர்கள் .அன்பும் குழந்தைத்தனமும்தான் ஒரு பெண்ணை அழகாக்கும்.

சின்னச்சின்ன பாவனைகள்ல அவங்க காட்டற அக்கறை.ஒரு பாவத்திலயிருந்து இன்னொரு பாவத்துக்கு மாறி இரண்டையும் இயல்பான நடிப்பாக மாற்றி பார்வையாளனுக்கு கொண்டு சேர்த்த நடிகை ஷோபாவாகத்தான் இருக்கும்.

அப்படியொரு காட்சி முள்ளும் மலரும் படத்தில் வரும். மருத்துவமனையிலிருந்து திரும்பி வருகின்ற அண்ணனை(ரஜினி) வீட்டுக்கு தூரத்தில் வரவேற்க ஓடுவார். அண்ணனை பார்த்ததும் முகம் கொள்ளா மகிழ்ச்சியில் கட்டிக் கொள்வார். மெது மெதுவாக காற்றில் அண்ணனின் கை இல்லாத சட்டையை தொட்டும் உணரும் போது அந்த மகிழ்ச்சி கொஞ்ச கொஞ்சமாக இறங்கி தாங்க முடியாத துக்கத்தில் விம்மி அழுவார்.

அதே திரைப்படத்தில் கடைசி காட்சியில் தான் விரும்பும் ஆண், ஒரு வளமான வாழ்க்கை, தனக்காக வரும் ஊர் மக்கள் இவை எல்லாவற்றையும், அண்ணன் கூப்பிட்டதும் உதறித்தள்ளிவிட்டு ஒரு குழந்தையைப் போல் ஓடிவந்து உன்னைத் தவிர
வேறு எதுவும் வேண்டாமென்று சொல்லி அழும் காட்சியைப் பார்த்தால் இன்றும் என் கண்கள் ஈரமாகிவிடும்.

மூடுபனி படத்தில் ஷோபா ஒரு சினிமா தியேட்டருக்கு போகும் காட்சி. அக்காட்சியில் இடைவேளையில் திரையரங்கிற்கு வெளியே வருவார். அப்போது யார் என்று தெரியாத ஹீரோவிடம் விரிந்திருக்கும் கூந்தலை மிக இயல்பாக கொண்டை போட்டபடி மணி என்ன என்று கேட்டுவிட்டு ஒரு திண்டில் உட்காருவார். ஹீரோவைப் போல் இப்படியொரு இயல்பான பெண்ணா என்று நாமும் திண்டாடிப் போவோம். இப்படி அவர் நடித்த படத்தை மிக நுட்பமாக பார்க்கும்படி அவர் என்னை இன்னமும் ஈர்த்துக் கொண்டிருக்கிறார்.

இன்று சினிமாதான் தொழில் ,சினிமாதான் வாழ்க்கை என்றானபின் உலகத் திரைப்படங்கள் பலவற்றைப் பார்த்த பிறகும் ஷோபா எனக்குள் ஏற்படுத்திய பிம்பம் உடையவே இல்லை.

ஒரு தேவதைப் பெண் திடீரென்று விளிம்புநிலை கதாபாத்திரத்தில் நடித்தால், உடனே நாம் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையயோடு ஏற்பது சிரமம். ஒரு பிரியாணிக்காக தன்னை இழப்பது தெரியாமல் இழக்கும் இரு வெகுளிப்பெண்ணாக, பசித்தலையும் குப்பத்து பெண்ணாக அந்த கதாபாத்திரமாக மாறியிருப்பார்.


புத்தகங்களை மறுவாசிப்பு செய்வது போன்று அவருடைய திரைப்படங்களை திரும்பப் பார்க்கிறேன். அதே நடித்த படங்களின் பாடல் காட்சிகளையும் திரும்பத் திரும்ப பார்க்கிறேன். இன்று என்னைப் பற்றி, இசை பற்றி, சினிமா பற்றி, ஷோபா பற்றி எழுத முக்கிய காரணம் அவர் நடித்த ‘பூ வண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்’ பாடல் என் பழைய ஞாபங்கங்களை கிளப்பிவிட்டது. இந்தப் பாடல் முழுதும் அன்பால் நிறைந்து இருக்கும். இசையில், குரலில், பாடல் வரிகளில்,ஷோபா நடிப்பில் அன்பு தளும்பி வழியும். அந்தப் பாடலைக் திரும்ப கேட்க கேட்க ஷோபா என் மனதில் ஆழமான அழகான படிமமாக படிந்து போயிருப்பது தெரிந்தது. அவர் நடித்த நான்கு பாடல் காட்சிகளை என் வாழ்க்கையிலிருந்து
பிரிக்க முடியாது. ஒரு முழுநீளத் திரைப்படத்தில் காட்ட வேண்டிய பாவனைகள் அனைத்தையும் ஒரு பாடல் காட்சிக்குள்ளயே செய்து காட்டிடுவார்.

‘பூவண்ணம் வண்ணம்’ பாடல் காட்சியில் காதலனும் காதலியும் ஒருத்தரை ஒருத்தர் இறுக்கமாக கட்டிக்கொள்ளமாட்டார்கள். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் உயர்ந்த அன்பை, காதலை, ரொமான்ஸை தன்னோட முக பாவனைகளில் ,உடல் மொழியில் கொண்டு வந்திருப்பார்.

‘அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை’ பாடல். இது ஷோபா மட்டும் தனிமையில் பாடகின்ற பாடல் .இயற்கையை நேசிக்கின்ற எந்தப் பெண்ணும் அந்தப் பாடலோடு தன்னை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது.தனக்கான ஆணின் முகம் தெரியாது,அவனுக்கான அன்போடவும் தாபத்தோடவும் இருக்கின்ற பெண்ணோட உணர்வை வெளிப்படுத்துகின்ற பாடல். ஒரு ஏரிக் கரையில தண்ணீரில் முழ்கி தன் கூந்தலை லேசாக அசைத்து தன் முகம் தெரியாத காதலனுக்காக தவிக்கின்ற தவிப்பை மிக நுட்பமாக கலை உணர்வோட வெளிப்படுத்தியிருப்பார். அந்த உணர்வு அந்த நீரோடையோடு கலந்திருக்கும் ஒரு தூய்மையான அன்பின் ,ஏக்கத்தின் வெளிப்பாடாக இருக்கும்.

தன்னை கடத்திட்டு வந்தவன் தன் மேல் இருக்கும் அதீத காதலை பாடலாகப் பாடுகிறான்.’என் இனிய பொன் நிலாவே’ ..அந்தப் பாடலை சூழ்நிலை இறுக்கம் ,மனத்தவிப்பு இதையெல்லாம் மீறி அந்த நிமிசத்துக்கான நேர்மையோடு ரசனையோடும் அந்த பெண் பாடலைக் கேட்கிறாள்.இதுதான் அந்தக் காட்சி. அதில் குழந்தைத்தனமான முகபாவத்தோடும் ரசனையோடும் குறுகுறுப்பான அழகில் மின்னுவார்.

ஒரு ஆண் இயற்கையை வர்ணித்துப் பாடுகின்ற பாடல்தான் ‘செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா’ பாடல். படத்தில் சரத்பாபுதான் பாடுவார். இடையிடையே சின்னச்சின்ன குளோசப் காட்சிகளில் ஷோபாவின் முகம் காட்டப்படும்.அந்த சின்னச்சின்ன காட்சிகள்தான் அந்த பாடல் காட்சிக்கு ஒரு ஜீவனைத்தரும் .அந்த பாடல் காட்சியிலிருந்து ஷோபாவோட குளோசப் காட்சிகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் அந்தப் பாடல் ஒரு முழுமையற்ற தன்மையோடு இருக்கும்.

இந்த எல்லாவற்றையும் நான் ஒரு ஏக்கத்தோடு எப்பவுமே நினைச்சுப் பார்ப்பேன்..ஏனெனில் இப்போது அந்த தேவதை உயிருடன் இல்லை. மிக அதீதமான அன்புதான் ஷோபாவின் தற்கொலைக்கு காரணம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆமாம் அவர் ஒரு அன்பின் உருவமாகத்தான் எனக்குத் தெரிந்தார். ஆனாலும் அவர் புன்னகைக்குள் ஒரு மென்சோகம் இழையோடி இருக்கும். ஷோபாவின் புன்னகை ஒரு மோனலிசா புன்னகை. அவர் அன்பை மட்டுமே நேசித்த பெண்ணாக இருந்திருக்க வேண்டும். அது முழுமையாக கிடைக்காத போதுதான் அவர் இந்த உலகத்தைவிட்டுப் போயிருக்க வேண்டும். ஷோபாவின் மரணத்தை நான் ஒரு தோற்றுப் போன அன்பாகத்தான் பார்க்கிறேன்.

இந்த மாதம் உயிரெழுத்து இதழில் வெளியான எனது கட்டுரை

17 கருத்துகள்:

கன்னல் சொன்னது…

தோழி.. இசை குறித்தும், ஷோபா குறித்தும் நான் உணர்ந்த பலவற்றை உங்கள் எழுத்தில் படிக்கும் போது.. ஒத்த ரசனையின் பகிர்தலில் கிட்டும் பெருமகிழ்ச்சி கிடைத்தது! மனதை வருடும் மிக அழகான பதிவு.. அன்பின் வாசம் உங்கள் எழுத்து நெடுகிலும்.. நன்றி

chandra சொன்னது…

மிக்க நன்றி கன்னல்

உமா ஷக்தி சொன்னது…

அன்பின் சந்திராவிற்கு,
கட்டுரையை 'உயிர் எழுத்தில்' வாசித்தபோதே மிகவும் ரசித்தேன். மிகவும் நெகிழ்ச்சியான பதிவு. மீண்டும் மீண்டும் வாசித்தாலும் சலிக்காது தோழி, புகைப்படத்தில் உறைந்திருக்கும் ஷோபாவின் மென்சோகச் சிரிப்பைப் போலவே.

chandra சொன்னது…

நன்றி தோழி என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்கு

ராஜன் சொன்னது…

இதை வாசித்த போது நான் உணர்ந்தவற்றை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தற்செயலாக ஷோபா சக்தியின் facebook page மூலம் உங்கள் blog பார்த்தேன், உங்களைப் பற்றி எதுவும் தெரியாது,ஆனால் நவீன தமிழ் சினிமாக்களின் தாக்க்த்தால் தமிழ் நாட்டுப் பெண்கள் பற்றி என் மனதில் ஏற்பட்டிருந்த பிழையான பிம்பத்தை நொறுக்கியிருக்கிறீர்கள். நன்றி.

chandra சொன்னது…

நன்றி ராஜன்.

ச.முத்துவேல் சொன்னது…

ரசனை, அனுபவம், வயது, போன்ற காரணிகளால் மிகவும் பிடித்திருந்தது இந்தப் பகிர்வு.மிக நன்றாக எழுதுகிறீர்கள், எதையும்.

நானும் கொஞ்சம் பாட்டுப்பைத்தியம் என்று நம்பிக்கை கொண்டிருந்தேன்.
ஆனால்,
/என் வீட்டிலிருந்து எங்கள் பள்ளிக்கூடம் இருக்கும் தூரம் இரண்டு பாட்டு கேட்கும் தூரம். நல்ல பாடல் என்றால் மூன்று பாடல் கேட்கும் தூரம். /

இதைப் படித்துவிட்ட பிறகு என் நிலைக்கெல்லாம் பெயர் ,பித்து நிலை என்பது கொஞ்சம் மிகைதான்.

chandra சொன்னது…

உங்கள் கருத்துக்கு நன்றி முத்துவேல்.

thamizhini சொன்னது…

ungalaippoel naanum oruvahayil KIRUKKACHCHIdhaan..Ennudaya KUTTI KAALATHTHU dhaevadhayaahavae SHOBA irundhdhirukkiraaL.I share the same feels with you.Ival oru penn alla-dhaevadhai.neengaL solvadhupoendra mananilayilae avar irundhdhirukka koodum.all those subtle feelings which were against leading a normal,practical life could have been the result for the tragic end.anyway nice write-up.keep doing things the way you like it to be done....VAAZHHA VALAMUDAN.

chandra சொன்னது…

பாராட்டுக்கு நன்றி தமிழினி.என் ரசனையும் உங்கள் ரசனையும் ஒரே மாதிரியாக இருப்பது சந்தோசமே.

chandra சொன்னது…

Zanfar Ar
சோபாவின் நடிப்பில் அவள் முகத்தின் ரசனைக்குள் நான் சிக்குண்டுள்ளேன். அவளின் அமைதியான முகதிட்குள் எத்தனை 1000 வாழ்க்கைகள் இருந்தனவே

உங்களின் பிரதியைப் பார்த்த போது சோபாவின் படங்களை மீளவும் பார்க்க வேண்டிய மன மேலிடல் ஏற்பட்டு விட்டது தோழி. நன்றி

வளைந்து நெளிந்து போகும் பதை...... Read More

என் இனிய போன்னிலவே..

butterfly Surya சொன்னது…

அருமையான பதிவு.

பகிர்ந்தமைக்கு நன்றிகள்..

chandra சொன்னது…

நன்றி சூர்யா

Muthukumar சொன்னது…

நெகிழ்ச்சியான பதிவு

SAMAYAVEL சொன்னது…

THIS SHOBA ARTICLE REASSURED THE IMAGE CREATED BY YOUR SHORT STORIES.
A NICE ARTICLE ON BOTH OF YOU.
BOTH YOU ARE ALREADY IN MY HEART.
VAZHTHUKKALUDAN, SAMAYAVEL

chandra சொன்னது…

thanks appa

தோழி சொன்னது…

ரொம்ப அருமையா இருக்கு. இவ்வளவு அனுபவித்து வாழ்ந்த இளமைக் காலங்கள் மீது சற்றே பொறாமை வருகிறது. ஷோபா - எனக்கு ரொம்ப பிடித்த நடிகை ஆனால் இவ்வளவு கவனித்ததில்லை. எனினும் அவரின் பாடல்களோ படங்களோ மனதிற்கு அருகில் இருக்கும் எப்போதும்