சனி, 30 மே, 2009
பெளத்தம் - சரணம் - தமிழ் அழிப்பு
உலகில் மனிதம் செத்து விட்டது! அரசு என்ற போர்வையில் பல நாடுகளின் ராணுவ உதவிகளைப் பெற்று இலங்கை அரசு நிகழ்த்திய படுகொலைகளை இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற அதிகார வர்க்க நாடுகள்ஆதரித்துள்ளன.. போரில் மனிதாபிமானத்திற்கு இடமே இல்லை. மக்கள் படுகொலை செய்யப்படுவார்கள். இனவொழிப்பு நடக்கும். இனிமேல் யாரும் மனித உரிமை பற்றி பேசக்கூடாது என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது ஐ.நா வின் தீர்மானம். இலங்கை அரசு போர் குற்றம் நிகழ்த்தவில்லை என்ற முடிவுக்கு வந்ததோடு, இலங்கை அரசு கேட்ட போர் நிவாரண நிதிக்கு ஆதரவு அளித்து தீர்மானம் கொண்டுவந்திருக்கிறது. .
இலங்கை அரசின் க்ளஸ்டர் குண்டுகளுக்கு பயந்து பதுங்கு குழிக்குள் ஒடுங்கிய மக்களை பாதுகாப்பு வளையத்துக்குள் அழைத்து மொத்தமாக குண்டு பொழிந்து அழித்ததும், போரில் காயம்பட்ட மக்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் மருத்துவமனையில் தடை செய்யப்பட்ட விஷ குண்டுகளை வீசியதும் போர்க் குற்றம் இல்லையா? மனித நேயமான செயலா? பல ஆயிரம் தமிழ்பெண்கள் ராணுவத்தினரால் வல்லுறவு செய்யப்பட்டதும் போர்க்குற்றத்திற்குள் வராது என்று அதிகார வர்க்க நாடுகள் சொல்கிறதா?
இலங்கை அரசு தமிழின அழிப்பைச் செய்திருக்கிறது என்று ஐ.நா மனித உரிமைக் குழுவில், தமிழ் ஈழமக்கள் ஆதரவு நாடுகள் செயற்கை கோள் படக்காட்சிகளை காட்டிய பிறகும் அதிகார வர்க்க நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கிறது என்றால் உலகில் மனிதம் செத்துவிட்டது என்று தானே அர்த்தம்!
இலங்கையின் கொடுங்கோல் போர்க் குற்றத்திற்கு இந்தியா,சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உடன் பட்டிருப்பதன் பின்னணி என்ன? இந்த மூன்று நாடுகளும் தெற்கு ஆசிய நாடுகளின் தங்களை வல்லரசாக (தாதாக்களாக) காட்டிக் கொள்ளும் போட்டியில் பலமாக களமிறங்கிருக்கின்றனர். வர்த்தக, அரசியல் ரீதியாக இலங்கையை தன்வசப்படுத்த போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இதில் தமிழ் ஈழம் உருவானால் இரண்டு நாடுகளை சமாளிக்க வேண்டும். பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழம் அமைந்தால் இந்த வர்த்தக அரசியலுக்கு அவர் துளியும் இடம் கொடுக்கமாட்டார். எனவே இந்த மூன்று நாடுகளும் உலகில் தடை செய்யப்பட்ட ராணுவ ஆயுதங்களை இலங்கை அரசுக்கு தாராளமாக வழங்கி தமிழ் இனத்தினை அழிக்க உதவி இருக்கின்றன. இலங்கை அரசு செய்தது போர்குற்றம் என்ற தீர்மானத்தை ஐ.நா நிறைவேற்றினால், விசாரணையில் இந்த மூன்று நாடுகளும் உலக அரங்கில் நின்று பதில் சொல்ல நேரிடும். இதனால் தங்கள் கைப்பிடிக்குள் இருக்கும் பொடி நாடுகளை மிரட்டி இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க கட்டளை இட்டிருக்கிறது.
இதில் முதல் குற்றவாளியாக நிற்பது இந்தியாவாகத்தான் இருக்கும். உலகில் மிகப்பெரிய ஜனநாயக, அமைதியை விரும்பும் நாடு என்று சொல்லிக் கொண்டு கொடுங்குற்றத்திற்கு ராணுவ உதவியைச் செய்திருக்கிறது. பல்வேறு இனக்குழுக்களை கொண்டது இந்தியா. அதில் தமிழ் இனமும் ஒன்று. இதே தமிழ் இனத்தை இலங்கையில் அழிக்க உதவியிருக்கும் இந்தியா இங்கே வாழும் மற்ற இனங்களையும் எப்படி நடத்தும் என்ற மிகப் பெரிய கேள்வியை இது ஏற்படுத்தும். இலங்கை அரசுக்கு உதவிய தவறை மறைக்க, பல தவறுகளை செய்கிறது இந்தியா. கேள்வி கேட்க எவரும் இல்லை. இங்கு நாம் ஓட்டு அடிமைகளாக மாறிவிட்டதன் பிரதிபலிப்பைத்தான் நெஞ்சழுத்தமாக ஐ.நாவில் பதிவு செய்திருக்கிறது இந்திய அரசு.
தமிழ் நாட்டில் வாழும் ஏழு கோடி தமிழர்கள் தனக்கு மிக அருகில் வாழும் ஈழ தமிழர்களின் கொடுர மரணத்தை விரும்புவார்களா?. இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டதற்கு பின்பும் இந்தியா, இலங்கை அரசின் தமிழ் இனத்தொழிப்புக்கும், இலங்கை அரசுக்கு நிவாரண நிதி கிடைப்பதற்கும் ஆதரவாக தன் கரங்களை உயர்த்தி இருக்கிறது . அவ்வளவு அலட்சியத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது தமிழனின் இன உணர்வு.
ஏற்கனவே தமிழ் மக்களுக்காக இங்கிருந்து அனுப்பப்பட்ட போர் நிவாரண நிதி யாருக்கு பயன்பட்டது என்பது உலகறிந்த செய்தி. இதில் இன்னும் இலங்கை அரசு தமிழ் மக்களின் வாழ்விடங்களை புதுபித்து வாழசெய்யும் என்று கனவுதான் காணவேண்டும். அப்பாவியாக எல்லாவற்றை வேடிக்கை பார்க்கும் துர்பார்க்கியம் தமிழனுக்கு.
யுத்தம் முடிந்து விட்டது. போரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க செஞ்சிலுவை சங்கம் முதல் ஐ.நா அமைப்புகள் வரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. காரணம் லட்சக்கணக்கில் பிணமாக்கப்பட்ட தமிழர்களின் ரத்தக் கறையை இன்னும் இலங்கை அரசால் துடைக்க முடியவில்லை. தன்னுடைய கொடூரம் உலக அரங்கிற்கு கொண்டு செல்லப்படுவதை தடுத்துக்கொண்டிருக்கிறது. அரை உயிர், கால் உயிராக இருக்கும் மக்களும் மருத்துவ வசதி இல்லாமல் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இது துவக்க நிலைதான். அடுத்து சிங்கள அரசு என்ன செய்யும்?
மீண்டும் தமிழ் இன ஒழிப்புதான் வேறென்ன? இந்தியா, பாகிஸ்தான், சீனா தனக்கு உதவி செய்ய இருப்பதால் இலங்கை ஐ.நா உள்ளிட்ட எந்த அமைப்பு முன்வைக்கும் போர் நிவாரணப் பணிகளை சட்டை செய்யாது சிங்கள அரசு. முதல் வேலையாக தமிழ் குடியிருப்புகளில் சிங்களவர்களை குடியேற்றும். பத்து சிங்களவர்கள் குடியேற்றப் பகுதியில் தமிழ் குடும்பத்தை வைத்து தனிமைப்படுத்தும். அடுத்து பொது இடங்களில் இடம்பெறும் தமிழ் பெயர்களை முற்றாக அழித்து சிங்கள மொழியை முன் நிறுத்தும். சிங்கள தமிழ் கலப்பினங்களை வலுக்கட்டாயமாக உருவாக்கும் இழிநிலையும் நடக்கும். இவை எல்லாவற்றையும் மீறி தமிழ் இன மக்களுக்குள் மதம் மற்றும் உள்ளினக் கலவரங்களை சூட்சமமாக உருவாக்கும். ஒட்டு மொத்த தமிழ் இன, மொழி, கலாச்சாரத்தை வேரறுத்து இலங்கையை முழுமையான சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதுதான் சிங்கள அரசின் நோக்கம்.
இப்படித் தொடர் கொடூரங்களால் அங்கு நம் மக்கள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது உணர்வுகள் ஒன்றினையாமல் அங்கங்கு பிரிவினையாக இருப்பது நமது குற்றம்தான். ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வுகள் ஒன்றுபட வேண்டும். கை, கால்களை இழந்து, கண் குருடாகி, பசியிலும் நோயிலும் செத்துக்கொண்டிருக்கும் நம் ஈழ மக்களை காப்பாற்றும் உணர்வை ஒவ்வொரு தமிழனும், அரசுக்கு உணர்த்த வேண்டும்.
அரசியல் பேரம்தான் ஓய்ந்துவிட்டதே இனியாவது தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு குழு
அமைத்து , செத்து கொண்டிருக்கும் மக்களை பாதுக்காக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசிடம் அரசியல் பேரம் பேசுவதை நிறுத்திவிட்டு மனித நேயத்துடன் தமிழ் மக்களை காக்கும் வேலையைச் செய்யுங்கள் தலைவர்களே!
ஒட்டு மொத்த உலக அரசியல் சூழ்ச்சிகளில் தமிழினம் சிக்கியிருக்கிறது. ஒரு சில நாடுகள் தமிழ் இனத்திற்கு ஆதரவு அளித்தாலும் அது வெறும் ஆதரவு மட்டுமே. தமிழ் இனத்தை வென்றெடுப்பதும் தமிழ் இனத்தைக் காப்பாற்றுவதும் ஒவ்வொரு தமிழனின் கையில்தான் இருக்கிறது.
மதத்தின் கோட்பாடுகள் தனித் தனி மனித மனதிற்குள் கொண்டு செலுத்தபடுவதுபோல் ஒவ்வொரு தமிழனின் மனதிற்குள்ளும் தமிழ் இன உணர்வை கொண்டு செல்ல வேண்டும். தமிழ் இனத்தைக் காப்பாற்றி உலக அரங்கில் தமிழ் இனத்தை தலை நிமிரச் செய்யும் உணர்வு ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் தீயெனப் பரவ வேண்டும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
7 கருத்துகள்:
Chandra,
மிகவும் வருந்தத்தக்க செய்தி. பதிவு உண்மையின் பிரதிபலிப்பாக இருந்தது. தொடர்ந்து அவலங்களைத் தெரியப்படுத்துங்கள்.
ஸ்ரீ....
இந்தப் பதிவில் நீங்கள் குறிப்பிட்ட அனைத்து விடயங்களும் முற்றிலும் உண்மை. மிகச் சரியான அலசல். ஆழமான பார்வை.
இங்கே, எனது புரிதலின் அடிப்படையில் ஒரு விடயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எனது புரிதல் எந்த அளவுக்கு சரியானது என்பது தெரியவில்லை என்பதையும் முதலிலேயே குறிப்பிட்டுக்கொள்கிறேன்.
- ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இணைந்து இலங்கைக்கு எதிராக வாக்களித்ததன் நோக்கம் என்ன? பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் உயிர் கொல்லப்பட்டிருக்கிறது என்பதா? இல்லவே இல்லை என்றே கருதுகிறேன். அவர்களது நோக்கம் தெற்கு ஆசிய நாடுகளைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே. அதற்கு ஒரு கருவியாகத்தான் இலங்கைத் தமிழர் பிரச்னையை அவர்கள் அணுகிறார்கள். இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி விட்டு, அதிகாரப்பூர்வமாக அந்நாட்டுக்குள் சென்று தங்களது தளத்தை அமைத்து, அங்கிருந்தபடி தெற்கு ஆசிய நாடுகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றே நம்புகிறேன். அவர்களுக்கு தெற்கு ஆசியா நாடுகளில் ஏதாவது ஒரு இடத்தில் தளம் தேவைப்படுகிறது. நேட்டோ படைகளைக் கொண்டு வந்து கடை விரிக்க வேண்டும் என்ற கொதிப்பு கொண்டுள்ளனர். இதுவே பிரதான நோக்கம் என்றே கருதுகிறேன்.
அவர்களுக்கு இலங்கை அல்ல... ஏதாவது ஒரு தளம் தெற்கு ஆசியாவில் இருந்து தேவைப்படுகிறது.
நீங்களே கவனித்திருப்பீர்கள்... ஐ.நா.வில் இலங்கைக்குச் சாதகமான முடிவு மேற்கொள்ளப்பட்ட அடுத்த நொடியில் இலங்கைத் தமிழர் பிரச்னையை மறந்துவிட்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, "பாகிஸ்தானின் அணுகுண்டுகள் மலிந்துள்ளன. பயங்கரவாதம் கூத்தாடுகிறது," என்று ஆணித்தரமாக உரைக்கிறார். அவரது பார்வை பாகிஸ்தான் பக்கம் சட்டென மீண்டும் திரும்பி விட்டது. இப்போதைக்கு தெற்கு ஆசிய நாடுகளில் மிகச் சுலபமாக அமெரிக்க படையினர் நுழையக் கூடிய இடம் என்றால், அது பாகிஸ்தான் தான். இதிலிருந்தே புரிகிறதல்லவா, அமெரிக்காவின் உண்மையான நோக்கம் என்ன வென்று.
ஆக... ஒன்று மட்டும் தெளிவாகிறது. தமிழினத்தவரின் பிணங்கள் மீது ஏறி நின்று கொண்டு உலகின் வல்லரசு, வல்லரசாகத் துடிக்கும் நாடுகள் சர்வதேச அரசியல் சதிதிட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நமக்கு நல்ல முடிவு எப்போது கிடைக்கும்? எப்படி கிடைக்கும்?
///அரசியல் பேரம்தான் ஓய்ந்துவிட்டதே இனியாவது தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு குழு
அமைத்து , செத்து கொண்டிருக்கும் மக்களை பாதுக்காக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசிடம் அரசியல் பேரம் பேசுவதை நிறுத்திவிட்டு மனித நேயத்துடன் தமிழ் மக்களை காக்கும் வேலையைச் செய்யுங்கள் தலைவர்களே!///
வழிமொழிகின்றேன்...
சும்மா இருங்கள் ! என்ன நடந்தாலும் தமிழகம் காப்பாற்றும் என்று நம்பி இருந்த மக்களுக்கு தமிழகம் என்ன செய்தது?
ஓசி டிவி க்கு ஆசைப்பட்டு தமிழனையே அழிக்கும் ஒரு அரசையே தமிழக மக்கள் மீண்டும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் .
ஓசி டிவி க்கும் ஒரு ரூபாய் அரிசிக்கும் மயங்கும் நிலைக்கு எமது இனம் வந்த பிறகு ....
இந்த இனம் இருந்தால் என்ன அழிந்தால் என்ன?
பரவாயில்ல.....அவங்கள்ளாம் நல்லா இருக்கட்டும்....எதிர் வரும் காலங்களில் அவர் சந்ததியாவது இந்த கொடுமைகளை அனுபவிக்காமலிருக்கட்டும்
உங்கள் கருத்து உண்மையை எடுத்து வைக்கிறது. தமிழக அரசியல் தலைவர்கள் ஒன்று பட வேண்டும் என்பதை, பிரச்னைக்கு தீர்வாக நினைத்திருக்கிறீர்கள். அது நடக்காது. அரசியல்வாதிகளின் முதலும், கடைசியுமான நோக்கம் என்னவென்பது உலகின் அத்தனை மூலைகளிலும் இருக்கிற தமிழனுக்கு நன்றாகவே தெரியும். தீயைப் பற்ற வைக்க தீ தான் தேவை. ஒரு புரட்சிக்கு, கிளர்ச்சி தான் தேவை. மீண்டும் சிலிர்த்தெழ ஈழ, தமிழக, உலகத் தமிழர்கள் உயிரைப்பயணம் வைத்து ஓரணியில் திரண்டால் தமிழர்களுக்கென்று ஒரு நிலம் சாத்தியம். தலைமை சரியாக அமைந்தால் கனவு நனவாகும்.
உங்கள் கருத்து உண்மையை எடுத்து வைக்கிறது. தமிழக அரசியல் தலைவர்கள் ஒன்று பட வேண்டும் என்பதை, பிரச்னைக்கு தீர்வாக நினைத்திருக்கிறீர்கள். அது நடக்காது. அரசியல்வாதிகளின் முதலும், கடைசியுமான நோக்கம் என்னவென்பது உலகின் அத்தனை மூலைகளிலும் இருக்கிற தமிழனுக்கு நன்றாகவே தெரியும். தீயைப் பற்ற வைக்க தீ தான் தேவை. ஒரு புரட்சிக்கு, கிளர்ச்சி தான் தேவை. மீண்டும் சிலிர்த்தெழ ஈழ, தமிழக, உலகத் தமிழர்கள் உயிரைப்பயணம் வைத்து ஓரணியில் திரண்டால் தமிழர்களுக்கென்று ஒரு நிலம் சாத்தியம். தலைமை சரியாக அமைந்தால் கனவு நனவாகும்.
கருத்துரையிடுக