திங்கள், 4 மே, 2009


யாரும் பருகாத காட்டருவி...

உதிராமல் செடியிலேயே சருகாகி தொங்கும்
நீலமலர்
இருண்மையின் முழுநிறமுடைய
அடர்ந்த காட்டின் தனிமை
கனவுகள் முழுக்க கருமை
உன் நிறத்தைத் தாங்கி..
...




என் வீட்டு மரமல்லிப் பூக்கள் முழுதையும்
உதிர்த்துவிட்டு செல்கிறது பேய்க்காற்று
கொலையுண்டு சாய்கிறது பூக்கள்
விழிகள் கனத்துத் ததும்புகிறது
இதயம் அறுந்து தொங்குகிறது

வெளியற்ற வெளிக்குள் மறைகிறது
உன்னிலிருந்து தொடங்கும் என் ஆகாயம்
தாங்கிப் பிடித்திட மறுக்கிறது பூமி
நிலையற்று அலைந்து கொண்டிருக்கிறது
ஊனாகி உருகி வழியும் உடல்

என்னிலிருந்து பிரிந்து சென்று கொண்டிருக்கிறாய்
பேரன்பே
என்வீட்டு அரளிச்செடி காய்ந்து குலுங்குகிறது
மரணத்தை நோக்கி..

...




தனிமையின் நிழல் படிந்த
இந்நாள்கள் பெருந்தீயாய்
எரிக்கிறது உடலை
நீருற்றி அணைக்கும் தூரத்தில்
நீ

என் கதறல்கள்
ஆன்ம சந்தோஷத்தைக் கொடுக்கிறது உனக்கு
ஓநாய் குதறி
பிய்ந்து தொங்கும் என் உடல்சதை
எரிந்து சாம்பலாகுவதுதான் தர்மம் என்கிறாய்

சீதை அகலிகைபோல்
உடல் சாபமாக்கப் பட்டிருக்கிறது
எனக்கும்..

* * * * 


2 கருத்துகள்:

கலப்பை சொன்னது…

புகைப்படங்களும், கவிதையும் நன்றாக உள்ளன.
/உதிராமல் செடியிலேயே சருகாகி தொங்கும்
நீலமலர்/ படிமம் அற்புதம்.
/சீதை அகலிகைபோல்
உடல் சாபமாக்கப் பட்டிருக்கிறது
எனக்கும்../



ஆனால், எல்லாப் பெண்களும் வரமும், சாபமும் கொண்டவர்கள்தான்.

chandra சொன்னது…

நன்றி ராமசாமி.