புதன், 3 பிப்ரவரி, 2010
கவிஞர் விக்கிரமாதித்யனுடன் நேர்காணல் -மறுபதிவு
சந்திப்பு: சந்திரா
நன்றி:ஆறாம்திணை.
புகைப்படங்கள்- சந்தோஷ் நம்பிராஜன்
(பத்தாண்டுகளுக்கு முன் நான் ஆறாம்திணை என்ற இணைய இதழில் நிருபராக பணிபுரிந்துகொண்டிருந்தேன். அப்போது கவிஞர் விக்கிரமாதித்தனை நேர்காணல் செய்தேன். அது ஆறாம்திணை இதழில் வெளிவந்தது. கவிஞருக்கு விளக்கு விருது வழங்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த நேர்காணலை இங்கே மறுபதிவு செய்கிறேன்.)
கவிஞன் என்று சொல்வதை விட இவரை நாடோடிக் கவிஞன் என அடையாளப்படுத்துவது இவரது வாழ்வின் தன்மைக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். எழுதத் துவங்கிய காலம் தொட்டு இவரது வாழ்க்கை பயணமும் வறுமையும் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது.
நாடாறு மாதம், காடாறு மாதம் என்று வாழ்ந்தவன் பெயரைக் கொண்டதால் நம்பிராஜனின் வாழ்க்கையும் விக்கிரமாதித்தன் கதை போலவே ஆயிற்று. ஆனாலும் தென்காசி சைவப் பிள்ளைகளின் நசிந்த வாழ்க்கையும், மொழியும், தாமிரபரணிக் கரையின் செழுமையும் இவரது கவிதைகளில் நிறைந்திருக்கிறது.
தன்னுள் பொறியாய்க் கனன்று உதிக்கும் எதையும் கவிதையாய் எழுதி வரும் இவரது இயல்பு கவிதையில் கையாளப்படாத சில உணர்வுகள் கவிதையாய் வெளிவந்திருக்கிறது. இவரது பார்வைக் கோணங்கள் சற்று வித்தியாசமானது. பம்மாத்து இல்லாதது. அதனால்தான் இவரது கவிதைகள் அழுத்தமும் அர்த்தச் செறிவும் மிக்கதாகயிருக்கிறது.
'கவிமூலம்' தொகுப்பு இவரது வாழ்வின், இவரது கவிதையின் மூலத்தை ஓரளவிற்குச் சொல்லும் தொகுப்பு. இந்தத் தொகுப்பில் கூடத் தன்னையும், தன் கவிதைகளையும் முன்னிறுத்தாது, அந்த நிகழ்வுகளை ஒரு சக மனிதனின் பார்வையில் சொல்லியிருப்பார்.
நாடோடி நம்பியண்ணனாய் வாழ்ந்து கொண்டும், கவிஞர் விக்கிரமாதித்தனாய் எழுதிக் கொண்டும் வாழ்நாளைக் கழிக்கும் இவருடன் ஒரு நேர்காணல்.....
'பாரதி, பாரதிதாசனை மீறிய பிரமிள்' என்று சமீபத்தில் நீங்க எழுதியிருக்கீங்க. பிரமிள் இவர்களை விடவும் பெரிய கவிஞனா?
நிச்சயமாக, எந்த சந்தேகமுமில்லாமல் பாரதிதாசனை விட மிகப் பெரிய கவிஞன் பிரமிள். பாரதியை விடவும் பெரிய கவிஞன்தான். இப்ப அதைச் சொன்னால் அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசுகிறேன் என்று புரிந்து கொள்ளப்படும். அதனால் தான் அதைப்பற்றி நான் அதிகம் பேசுவதில்லை.
பிரமிள் பெரிய கவிஞன் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?
ஒரு விஷயம் சார்ந்து மதிப்பீட்டை முன்வைக்கும்பொழுது ஏற்றுக் கொள்ளப்படலாம் அல்லது ஏற்றுக் கொள்ளாமலும் போகலாம். இல்லையென்றால் காலம் தாண்டி ஏற்றுக் கொள்ளப்படலாம். பாரதியாரை மகாகவி என்றபோது எத்தனை பேர் அதை ஒத்துக் கொண்டார்கள். மிகப் பெரிய சர்ச்சை எல்லாம் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கே! ஒரு கவிஞன் சார்ந்த மதிப்பீட்டை முன்னுதாரணங்களுடன் வைக்கிறோம். உடனே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய அவசியமில்லை. பிரமிளைப் பரவலாக அறிந்த பின்புதான் மதிப்பீட்டிற்கான மதிப்பே கிடைக்கும்.
பிரமிளை ஏற்றுக் கொள்வதற்கான தமிழ்ச்சூழல் இன்று இருக்கிறதா? பிரமிள் கவிதை குறித்த விமர்சனப் பார்வை எந்த அளவிற்கு உள்ளது?
தமிழ்ச் சூழலில் பிரமிளை ஏற்றுக் கொள்வது இப்போதைக்கில்லாமல் இருக்கலாம். இன்னும் நூறு ஆண்டுகள் கழித்துக் கூட ஏற்றுக் கொள்ளப்படலாம் . ஆனால் அவனுடைய கவிதைகள் என்றும் வாழும். பிரமிள் கவிதைகளை சுப்பிரமணியம் என்பவர் முழுத் தொகுதியாய்க் கொண்டு வந்திருக்கிறார். அந்தத் தொகுதி ஆயிரம் பிரதிகளும் விற்றுத் தீர்ந்து விட்டது. பிரமிளை அறிவதற்கான முதல் முயற்சி அது. 'கணையாழி' யில் பிரமிளைப் பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதேபோல் ரா.சு. சுந்தரராசனின் கட்டுரை சுருக்கமாகயிருந்தாலும் பிரமிளைப் பற்றி மிகச் சரியாக மதிப்பீடு செய்திருக்கிறார். இன்னும் சிலர் விமர்சனம் செய்திருக்கிறார்கள். மிகச் சரியான புரிதல்கள், தீர்க்கமான முடிவு என்பது அவ்வளவு சீக்கிரம் கிடைத்துவிடாது.
நவீன இலக்கியவாதிகளுடைய படைப்புகள் எந்த அளவில் வரவேற்கப்படுகிறது?
இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கிறது. பல்கலைக்கழக அளவில் நவீன இலக்கியவாதிகளைக் கருத்தில் கொள்வதில்லை. பிரபல பத்திரிகைகள் இந்த கவிஞர்களுடைய கவிதைகளைப் பிரசுரிப்பதில்லை. இந்தக் கவிஞர்களின் கவிதைகள் நூலகங்களிலும் வைக்கப்படுவதில்லை. பிச்சமூர்த்தி படைப்புகளை சி.சு செல்லப்பா கொண்டு வந்தார். பிரமிள் கவிதைகளை அக்ரு. பரந்தாமன் புத்தகமாகப் போட்டார். இலக்கியவாதிகள் ஒன்று தாங்களே தொகுப்பு கொண்டு வர வேண்டும் அல்லது அவர்களின் நண்பர்கள் அதைச் செயல்படுத்த வேண்டும். இப்படிப்பட்ட நிலையில்தான் நவீனத் தமிழிலக்கியச் சூழல் இருக்கிறது. பத்திரிகைகளும், பதிப்பகங்களும் இவர்களைக் கண்டு கொள்வதில்லை.
நவீன கவிதைகள் எல்லாம் புரியாமல் எழுதப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?
நவீன கவிதைகள் புரியாமல் இருக்கின்றன என்பதெல்லாம் மிகவும் அபத்தமான கூற்று. நகுலனுடைய கவிதைகள் கூடப் புரியக்கூடியவைதான். பிரம்மராஜன் கவிதைகள் புரியவில்லை என்றாலும், திரும்பத் திரும்பப் படித்தால் புரிந்து கொள்ளக்கூடியவை தான் . முக்கியமாகக் கலாப்பிரியாவின் கவிதைகள் எல்லோருக்கும் புரியும். புரியக்கூடியக் கவிதைகளையும் எத்தனை பேர் மதிக்கிறார்கள், பொருட்படுத்துகிறார்கள் என்றால் முடிவு சரியானதாகயில்லை.
நவீன கவிஞர்கள் அக உலகத்தைப் பற்றித்தான் அதிகமாக எழுதுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?
அப்படிப் பார்த்தால் சங்க காலத்திலிருந்தே அக உலகம் பேசப்பட்டு வருகிறது. புற உலகத்தைப் பற்றிப் பேசுவதற்குத்தான் தினசரி பத்திரிகைகளும், ஜூனியர் விகடன், நக்கீரன் போன்ற பத்திரிகைகளும், ஏராளமாக இருக்கிறதே! அக உலகம்தான் எந்த வடிவத்திலும் வைக்கப்படவில்லை. அதனால் அக உலகத்தைப் பற்றிப் பேசுவது முக்கியம் என்று நினைக்கிறேன். எப்போதும் ஒரு கலைஞன் அல்லது கவிஞன் அக உலகத்திற்கு நெருக்கமாக இருக்கிறான். so called progress writersதான் புற உலகம், புற உலகம் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதுவும் இப்பொழுது மாறிக் கொண்டிருக்கிறது. அக உலகத்தைப் பற்றி பேசுவது தான் மிகச் சரியான தெரிவு எனச் சொல்லலாம்.
எழுபதுகளில் முற்போக்குக் கவிஞர்களுடைய அடையாளம் மிஞ்சிய அளவிற்குக் கவிதைகளில் போதுமான அளவு கவித்துவமும், கவி ஆளுமையும் வெளிப்படவில்லையே? விமர்சகர்கள் இவற்றை அடையாளப்படுத்தியிருந்தால் இந்தத் தன்மை குறைக்கப்பட்டிருக்கலாமோ?
ஆரம்ப காலங்களில் பொதுவாக விமர்சகர்கள் நாவல், சிறுகதைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் கவிதைக்குக் கொடுக்கவில்லை. இலங்கை விமர்சகர்கள் கைலாசபதி, சிவத்தம்பி என்று எல்லோருமே அப்படித்தான் இருந்தார்கள்.
சி.சு. செல்லப்பா கூடக் கவிதை பற்றிப் பின்னாடிதான் பேசுகிறார். கனகசபாபதி கொஞ்ச காலம் பேசிக் கொண்டிருந்தார். அவரும் விட்டுட்டுப் போயிட்டார். தமிழவன் ஒரு காலகட்டம் வரை பேசிக் கொண்டிருந்தார். இப்ப அவரும் கவிதைகளைப் பற்றிப் பேசுவதே கிடையாது.
விமர்சகர்களுக்கு நாவல், சிறுகதை பற்றித் தெரிந்த அளவிற்குக் கவிதை பற்றிய அக்கறையில்லை. அல்லது நுட்பமான பார்வையில்லை என்று சொல்லலாம்.இப்ப கூட தமிழில் 'ஃபிக்ஸன் ரைட்டர்ஸ்' களாக இருக்கும் என்னோட நல்ல நண்பர்கள் நிறையப் பேருக்குக் கவிதை பற்றித் தெரியாது. பின் நவீனத்துவ எழுத்து, படிமங்கள் கொண்ட எழுத்து என்று தங்கள் எழுத்துக்களில் கட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் கவிதை பற்றிய போதுமான அறிவு அவ்வளவாக இருக்காது.
'வானம்பாடி' கவிதைப் போக்கிலிருந்து உங்கள் கவிதைப் போக்கினை எவ்வாறு வேறுபடுத்திக் கொண்டீர்கள்?
'வானம்பாடி' கவிதைகளில் எனக்கிருந்த வெறுப்பு (aversion) என்னவென்றால் அவர்கள் ஒரு போலியான சமூக, அரசியல் சித்தாந்தப் பார்வையோடு, மேடைப்பேச்சு பாணியிலான கவிதைகளை வண்டி வண்டியாய் எழுதிக் குவித்துக் கொண்டிருந்தார்கள். அவற்றுக்குள்ளிருந்த சமூக அக்கறை, சித்தாந்த அக்கறை எவ்வளவு நம்பிக்கைக்கு உரியதாகயிருந்தது என்ற கேள்வி எனக்குள் இருந்து கொண்டிருக்கிறது.
இந்த இருபது முப்பது ஆண்டுகளில் பார்த்தீர்களானால் அவர்கள் எப்படி வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்பது புரியும். ஒன்று தி.மு.க. சார்பானவர்களாகவோ, இந்திய கம்யூனிஸ்ட் வலது கொஞ்சம் இடது என்று மேடைப் பாங்கிலான கவிதையாளர்களாகவோ இருந்தார்களே தவிர, கவிதைகளில் கவிதை அம்சமிருக்காது. இந்த மாதிரியான கவிதை தோன்றவே முடியாது என்ற பிரிவைச் சேர்ந்தவன் நான்.
'வானம்பாடி' கவிதைகளினால் கவிதை உலகத்திற்கு எந்த வளர்ச்சியுமே கிடையாதா?
நிச்சயமாகக் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் கவிதை வளர்ச்சியில் ஒரு பத்தாண்டு காலம் பின் தங்கிவிட்டது என்பது என்னோட தனிப்பட்ட அபிப்ராயம்.
பாரதிதாசனையே அப்படித்தான் சொல்வேன். பாரதியார் தமிழ்க்கவிதையை இருநூறு ஆண்டுகள் முன்னெடுத்துப் போனார். அதே தமிழ்க் கவிதையை பாரதிதாசன் இருநூறு ஆண்டுகள் பின்னெடுத்துச் சென்றார்.
எந்த அடிப்படையில்?
ஒரு கருத்தைக் கவிதை என்று சொல்வது, அதையே நிறைய வரிகளில் சொல்வது. அதை அவரோடு மட்டும் நிறுத்திவிட்டுப் போகவில்லை. பாரதிதாசன் பரம்பரை என்று சொல்லி பத்து, பன்னிரெண்டு கவிஞர்களை ஏற்படுத்தி ஒரு பிரிவாகவே செய்து விட்டார்.
ஒரு மொழியில் வெவ்வேறுவிதமான கவிதைப் போக்கு வேண்டும். ஆனால் ஒரு ரோடு ரோலர் (Road Roller) வந்து எல்லாத்தையும் அழிச்சிட்டுத் தார் ரோடு போட்ட மாதிரி கவிதையைத் தட்டையாக ஆக்கி விட்டார்கள்.
பாரதியிலிருந்து வெவ்வேறு விதமான கவிதைப் போக்குகளுடன் கவிஞர்கள் கிளைத்தெழுந்தார்கள். கம்பதாசன் என்று ஒருவர் வந்தார். அவருடைய கவிதை பாணி வேறு மாதிரியாகயிருந்தது. நாமக்கல் கவிஞரோ, எஸ்.டி. சுந்தரமோ அவ்வளவு பெரிய கவிஞர்களாக இல்லையென்றாலும் அவர்களுக்கென்று தனி மேடையிருந்தது, தங்களுடைய போக்கில் எழுதலாம் என்று.
பாரதிதாசனுடைய பாணி வெகு சுலபமானது. அதில் அவர் தனித்தன்மையுடன் எழுதினார் என்பதிலெல்லாம் ஒன்றுமில்லை. அந்தக் காலகட்டத்தில் இன உணர்வு, மொழி உணர்வு பற்றிப் பேச வேண்டிய நெருக்கடியுமிருந்தது. அந்த வகையில் அவர் செய்தது சரி. அதில் எவ்வளவு கவிதை என்று பார்த்தோமேயானால் மிகக் கடுமையான மதிப்பீட்டை வைக்க வேண்டியதிருக்கும். அந்த மதிப்பீட்டை பாரதிதாசன் மீது வைக்க வேண்டாம் என்ற தாட்சண்யம் கருதி கூட விட்டு விடலாம். ஆனால் சமகாலக் கவிஞர்களிடம் அப்படி கருதத் தேவையில்லை. மறைந்து போன கவிஞரைப் பற்றி, தமிழ்க் கவிதைச் சூழலில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்து வைத்திருந்த, அதே சமயத்தில் சமூக நோக்கத்திற்காகச் செயல்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான விமர்சனத்தை வைக்க வேண்டாம் என்று நம்புகிறவன் நான். அப்படிச் சொல்ல நேர்ந்தாலும் கூடத் தனிப்பட்ட முறையில் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்வேன்.
யாருடைய கவிதைகளில் தமிழ்க்கவிதை மரபுச்சூழல் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
பிரமிள், நகுலன் ஓரளவுக்கு ஞானக்கூத்தன். ஞானக்கூத்தனை ஓரளவுக்கென்று சொல்வதற்குக் காரணம் அவர் யாப்பை விடவே மாட்டார். யாப்பு வடிவத்திலேயே கவிதையைக் கட்டுகிறார். அது நவீன கவிதை ஆகாது. ரொம்ப அப்சர்ட் (Absurd) கவிதைகளை எழுதும்போது கூட ஓசையை விட மாட்டார். இந்த நவீன காலத்திற்கு எவ்வளவு ஓசை வேணுமோ அதை inner rhythm என்று சொல்கிறோம்.
இன்னர் ரிதம் தமிழில் பிரமிள், நகுலனிடம் ரொம்ப exclusive-வாக இருக்கும். ஆனால் ஞானக்கூத்தன் ஒரு வகையான சந்தத்தில், யாப்பினால் வரக்கூடிய ஓசையில் பண்ணிக் கொண்டிருப்பதால் அவரை முழுக்க முழுக்க தமிழ் மரபு சார்ந்தவர் என்று சொல்ல முடியாது. பிற்கால மரபு சார்ந்தவர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
தமிழில் கம்பன், திருத்தக்க தேவரிலிருந்து தான் ஓசை, சந்தம் கூடி வருகிறது. சங்கப் பாடல்களிலெல்லாம் இன்னர் ரிதம்தான் இருக்கிறது. இந்த இன்னர் ரிதம்தான் நகுலன், பிரமிளிடமும் இருக்கிறது.திரும்பத் திரும்ப இவர்களைச் சொல்லிக் கொண்டிருக்கக் காரணம், இவர்கள் கவிதைக் கட்டமைப்பிலும், விஷயத் தெரிவுகளிலும் சங்க மரபு சார்ந்து வருகிறார்கள். பழைய கவிதையாகயிருக்கிறது; அதே சமயத்தில் இன்றைய வாழ்க்கையை, இன்றையப் பிரச்சினைகளை, இன்றைய மனோபாவங்களை எடுத்துச் சொல்வதால் முழுக்க முழுக்க நவீன கவிதையாகவும் இருக்கிறது.
அதனால்தான் நான் நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறேன். இங்கே நவீன கவிதையைத் தோற்றுவித்தவர்கள் யாரும் கவிஞர்கள் அல்ல. ஃபிக்சன் ரைட்டர்ஸ்'. பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா, வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன் உள்பட எல்லோருமே சிறுகதை எழுத்தாளர்கள். க.நா.சு. மாதிரி ஒரு சிலர்தான் நாவலாசிரியர்கள்.
பாரதிதாசன், பாரதிதாசன் பரம்பரையில் தமிழ்க்கவிதை நசிந்து பொங்கல் வாழ்த்து மாதிரி சம்பிரதாயமாக ஆகும்போது உலகக் கவிதைகளையெல்லாம் பார்த்து, நாமும் வேறு பாணியில் எழுதலாமே என்று தனித்தனியாக முயற்சி செய்தார்கள்.அதற்குப் பின் தான் 'எழுத்து' அமைப்பு வருகிறது. இங்க யாருமே கவிஞர்களாகயில்லை. ஒருவேளை கவிஞர் என்று சொன்னால் 'எழுத்து' அமைப்பில் நகுலன் ஒருவர்தான் கவிஞர்.
அதன் தொடர்ச்சியாகத் தமிழ் வாழ்வு சார்ந்த , முக்கியமான கவிஞர்களாகக் கலாப்ரியா, சுகுமாரன், தேவதேவனைச் சொல்லலாம். அவர்களுடைய இன்னர் ரிதம் எப்படியிருக்கு. ஓசை எப்படியிருக்கு என்பதையெல்லாம் இரண்டாம்பட்சமாகக் கூட வைத்துக் கொள்ளலலாம்.
சமீபத்தில் ஜெயமோகன், தேவதேவனை முன் வைத்து நவீன கவிதைகளை வகைப்படுத்தினார். அவருடைய புரிதல்கள் பற்றிய கருத்துக்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஜெயமோகனைப் பொறுத்தவரை தொடர்ந்து ஏதாவது அரசியல் செய்து கொண்டிருப்பார். சுந்தர ராமசாமி இதுபோல முன்னர் தொடந்து செய்து கொண்டிருந்தார். இப்ப வயதாகிவிட்டதால் செய்வதில்லை. ஜெயமோகன் செயல்படுவது என்பதும் அரசியல் செய்வதென்பதும் சேர்ந்தே வருது. இங்கேயிருக்கும் கவிதைப் போக்கினை அவர் ஒரு சார்ட் அவுட்டுக்குள் கொண்டு வருகிறார்.
ஜெயமோகன் வெறும் அரசியல் மட்டும் செய்தால் அப்படியே அவரைத் தவிர்த்து விட்டுப் போயிடலாம். அவருக்கு லட்சியவாதம், கனவு, தத்துவம் சார்ந்த சிந்தனை என்று ஒரு உயர்ந்த லட்சியங்களைக் கொண்ட மனோபாவம் அவரிடம் இருக்கு. இந்த மாதிரி மனநிலை உள்ளவர்கள் தமிழில் வெகு சீக்கிரம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள, தேவதேவனோடு சேர்த்துத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள். அதனால் தான் ஜெயமோகன் தேவதேவனை முன்வைத்துப் பேசுகிறார். கவிதையை முன் வைத்து பேசினாரென்றால் ஒரு கலாப்ரியாவையோ, விக்கிரமாதித்தனையோ, சுகுமாரனையோ பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. அவர்களையெல்லாம் பிடிக்காமல் தேவதேவனைப் பிடிக்கிறது என்பதற்குக் காரணம் என்னவென்றால், தன்னுடைய லட்சிய மயக்கங்கள், கனவுகள், தத்துவார்த்தப் போக்குகளை முன்னெடுத்துச் சென்று ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஜெயமோகனின் லட்சிய மனப்பான்மைக்கு தேவதேவன் மட்டும்தான் பொருத்தமாக இருப்பார். வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டோம்.
கலாப்ரியாவை எடுத்துக் கொண்டால் ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்த சிதிலங்களை முன்னெடுத்து நிறுத்தினார். சுகுமாரனை எடுத்துக் கொண்டால் தகப்பனுக்கும், மகனுக்குமான விரோதமான போக்கு, இந்தச் சமூகத்தில் தனித்து அலைய வேண்டிய வாழ்க்கை நெருக்கடிகளைப் பற்றி எழுதியிருக்கிறார்
ஜெயமோகன் ஒரு ஃபிலாசபிகல் ஃபிக்சன் ரைட்டர், அதனால் அவர் ஒரு ஃபிலாசபிகல் ஃபிக்சன் போயட்டை முன் வைக்கிறார் அவ்வளவுதான்.
இங்கு வாழ்வியல் சார்ந்து பேசுகின்ற கவிஞர்கள் மேற்கத்திய கவிதை போன்ற ஒரு அறிவியல் சார்ந்த தத்துவார்த்த விசாரணையில் ஈடுபடக்கூடியவர்களாகயில்லையே ஏன்?
தேவதச்சன் கொஞ்சம் தத்துவார்த்தக் கவிதைகளைத்தான் பேசிட்டிருக்கார். அவற்றை 'இன்டலக்சுவல்' என்று சொல்லாம். முழுக்க முழுக்கத் தத்துவம் சார்ந்து தமிழில் வரவில்லை தான். தத்துவம் படித்த மாணவர் என்பதால் தேவதச்சனின் கவிதைகள் அந்த அமைப்பிற்குள் வந்தது. ஆனந்துக்கும் அந்த ஈடுபாடிருந்தது. அதுக்கு முன்னாடி கே.ராஜகோபால் இருந்தார். அந்தக் காலகட்டத்தில் அது வாசகர்களைச் சரியாகச் சென்றடையவில்லை. சி.எம். மணியுடைய கவிதைகள் தத்துவம் படிந்த ஒரு தத்துவமாக வரும். அது மேலோட்டமான தத்துவமாக இருந்ததே தவிர ஆழமானதாகயில்லை.
தேவதேவனின் ஆரம்ப காலக் கவிதைகளில் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் பாதிப்பு நிறைய இருக்கும். அதை அவர் மறுக்கலாம், இல்லையென்று வாதிடலாம். ஆனால் ஜே. கிருஷ்ணமூர்த்தியைப் படித்து விட்டு தேவதேவனைப் படித்தால் அந்தப் பாதிப்பு மிக ஆழமாக இருப்பதை உணரலாம்.
தமிழ்க் கவிதைச் சூழலில் ஒரே மாதிரியான கவிதைப் போக்கு. அதாவது பசவய்யா என்று எடுத்துக் கொண்டால் அதனைத் தொடர்ந்து அதே பாணியிலான கவிதைகள். சில கவிதைகளில் பெயரை எடுத்துவிட்டால் ஒரே மாதிரியான கவிதையாகத்தான் இருக்கும் . இது எவ்வகையில் சாத்தியப்படுகிறது?
நான் சங்கப் பாடல்களை மனம் போனவாறு படித்திருக்கிறேன்; ஒட்டுமொத்தமாகப் படித்தேன் என்று சொல்ல முடியாது. என்னுடைய பார்வையில் கபிலர், பரணர், அவ்வை, சாத்தியார் இந்த மாதிரி சில பேரோட பாடல்கள் தனியாகத் தெரியும். கலித்தொகையையே எடுத்து கொண்டீர்களானால் பத்து பன்னிரெண்டு கவிதைகள்தான் தனியாகத் தெரியும். மற்றவையெல்லாம் அவற்றின் நகல் மாதிரியோ அல்லது ஒரு ஸ்கூல் மாதிரியோ தெரியும். இது எல்லாக் காலத்திலேயும், எல்லா மொழியிலேயும் இருக்கின்ற ஒன்று. அதில் தனித்தன்மையோடு இருப்பவன்தான் கவிஞன். அதுதான் ரொம்பக் காலத்துக்கு நிக்கவும் செய்யும்.
உங்களுடைய கவிதைக்கான புரிதல்கள் என்ன? அல்லது ஒரு கவிதையை எப்படி உணர்ந்து கொள்கிறீர்கள்?
சில கவிதைகளைப் பத்து ஆண்டு காலங்களுக்குப் பிறகு கூட புரிந்து கொள்ள முடியும். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால் சமயவேலின் 'காற்றின் பாடல் கலைகள்' தொகுதியைப் படிக்கும்போது எனக்கு ரொம்பவும் சாதாரணமாகப்பட்டது. பத்து வருசத்துக்கப்புறம் இப்ப பார்க்கிறப்போ 'அடடா ரொம்ப நல்லாருக்கு' ன்னு தோணுது. அப்போது அவரிடம் அதைப் பற்றி பேசியிருந்தால் இன்னும் நிறைய எழுதியிருப்பார். அல்லது சரியான திசையை நோக்கிப் போயிருந்திருப்பார். 'ஐயோ நாம அதைச் செய்யலையே' என்ற வருத்தம் கூட எனக்கிருக்கு. எளிய சொற்களைக் கொண்டிருப்பதாலேயே அது சாதாரண கவிதை என்று நினைத்து விடக்கூடாது. ஆரம்ப காலத்தில் எனக்கு பிரமிளையே உள்வாங்கிக் கொள்ள முடியாமலிருந்தது. இந்தக் கவிதையை இப்படிப் பார்க்கக்கூடாது என்று, நண்பர் என்ற முறையிலும் என்னை விட ஆங்கில அறிவு அதிகமுள்ளவர் என்ற முறையிலும் சமயவேல் மாதிரி நல்ல நண்பர்கள் எனக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.
அதேபோல் தற்போது என்.டி. ராஜ்குமார் என்ற இளைஞரோட கவிதைகளில் வாழ்வு புதுசாக இருக்கிறது. பேய் ஓட்டுவது, பேய் பிடிப்பது, மோகினிப் பிசாசு என்று புதிய விசயத்துடன், புதிய மொழிகளும் ஒரு மாயக் கவர்ச்சியுமாயிருக்கிறது. நாம திரும்பத் திரும்பப் படித்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லத் தூண்டுகிறது.
நல்ல கவிதையைக் கண்டுபிடிப்பதும், நல்ல கவிஞனைக் கண்டுபிடிப்பதும் திரும்பத் திரும்பப் படிப்பதனாலும் பயிற்சியின் மூலமும் தான் சாத்தியம் என்பது என்னோட தனிப்பட்ட அனுபவம். மேம்போக்காகப் படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்து விடக் கூடாது.ஒரு கவிஞரின் இரண்டாவது தொகுதி வந்திருக்கும் என்றால் முதல் தொகுதியைப் படித்து அது எந்த மாதிரி வந்திருக்கிறது என்று இரண்டிலும் ஒரு பார்வை இருக்க வேண்டும். முக்கியமாக நவீன கவிதைக்கு அந்தப் பார்வை அவசியம் தேவைப்படுகிறது.
சங்கப் பாடல்களைப் பற்றி நமக்கு எல்லாமே கற்றுத் தரப்பட்டிருக்கிறது. சின்ன வயதில் பள்ளிக்கூடங்களில், திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கூட அதைப் பற்றி பேசியிருக்கிறார்கள். நவீன கவிதையைப் புரிந்து கொள்வதற்கு ஒரு வழிகாட்டி வேண்டியிருக்கிறது. அது நானாகயிருக்கலாம். அல்லது இன்னொரு கவிஞனாக இருக்கலாம். அதற்கான தொடர்ந்த வாசிப்பும், அந்தக் கவிதைகளைப் பற்றி பேசுவதும் தொடர்ச்சியாக இருக்கும் போதுதான் நவீன கவிதை சரியாக முன் வைக்கப்படுகிறது.
'ரொமான்டிக் கவிஞர்' என்று உங்களைச் சொல்கிறார்களே? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
எஸ். ராமகிருஷ்ணன்தான் என்னை 'ரொமான்டிக் கவிஞர்' என்று சொன்னார். எழுதி எழுதி எனக்குள் ஒரு பகுதியைக் காலியாக்கிவிட்டேன. ஒரே மாதிரியாக எழுதுவது எனக்கே அலுப்பாயிருந்தது. ஒரு பால்ய கால சிநேகிதியைப் பற்றி எழுதிப் பார்க்கலாம் அல்லது குடும்ப வாழ்க்கையில் மனைவி சார்ந்த இனிமையான நிகழ்வுகளை எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றியது.
என்னுடைய இளைஞ நண்பர்கள் எல்லாருமே, 'ஏன் அண்ணாச்சி ஒரே மாதிரி எழுதுறீங்க. ஃபிக்சன்(fiction) எழுதிப் பாருங்க, கவிதை பற்றிய கட்டுரை எழுதுங்க. அல்லது கொஞ்ச நாளைக்கு எழுதாமலிருங்க' என்றார்கள். 'எழுதுகிறவைகளை எல்லாம் அப்படியே பத்திரிகைக்கு அனுப்பாதீங்க. கொஞ்சம் தெரிவு செய்து அனுப்புங்களேன்' என்றும் சொன்னார்கள். அதனால் ரொமான்டிக் எழுதிப் பார்த்தேன். எனது சொந்த வாழ்க்கையில் ரொமான்டிக் பக்கமே கிடையாது. என்னோட சிறு வயதில் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னாடியே உணவு தேட வேண்டியதாயிடுச்சு. கல்வி தேடுவது, வேலை தேடுவது என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்க்கையின் அடிப்படையான விசயங்களைத் தேடுவதிலேயே என்னோட காலம் போய் விட்டது. இப்ப ஒரு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னாடிதான் கொஞ்சம் ரொமான்டிக் கவிதை எழுதினேன்.
பிரேம் ரமேஷ், சமயவேல் மாதிரி நண்பர்கள் என்னை 'ஆன்டிக் பொயட்' என்று தான் சொல்வார்கள்.
எனக்கு சங்கப்பாடல்கள் மீது அளவு கடந்த காதலிருந்தது. அதைப்போல வாழ்க்கையில் இனிமையான விஷயங்களை எழுதலாம் என்று தோன்றியது.
'தனிப்பாட்டுத் திரள்' பார்த்தீர்களானால் ஒரு வறட்சியான எதிர்க்கவிதையாக இருக்கும்.கவிதை சார்ந்து ஆங்கில அறிவு எனக்குக் குறைவு என்பதால் இந்த இரண்டு விஷயங்களும் தமிழ் மரபு சார்ந்துதான் அமைந்திருக்கிறது.
உங்கள் 'கவிமூலத்தில்' காணப்படும் மனிதர்கள் எல்லாம் நல்லவர்களாகவே இருக்கிறார்களே எப்படி?அல்லது எல்லோரையும் நீங்கள் நல்லவர்களாகப் பார்க்கிறீர்களா?
ஒரு வகையில் பார்த்தால் மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள்தான். அப்படி நான் கான்ஷியசாகப் (consious) பார்க்கவில்லை. நான் சொல்லியிருக்கின்ற மனிதர்களுக்குள் ஒரு இனிமையான பகுதி இருந்திருக்கலாம் அல்லது எனக்கே மரபு சார்ந்த ஒரு நல்ல அணுகுமுறை இயல்பிலேயே அமைந்திருந்திருக்கும். உண்மையில் மனிதர்களை நல்லவர்களாகப் பார்க்க முயற்சி செய்கிறேன்.
ஈழத்துக் கவிதைகளிலிருக்கும் வெவ்வேறு தளங்கள் தமிழ்க் கவிதைகளில் இல்லை என்று சொல்கிறார்களே? அதைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்க?
தமிழ்க் கவிதையை விட ஈழத்துக் கவிதை சிறந்தது என்று எண்பதுகளிலிருந்து பிரச்சாரம் பண்ணிட்டு வர்றாங்க. 'இலக்கு' நடத்திய கருத்தரங்கில் நானே மேடையில் இதை மறுத்துப் பேசியிருக்கிறேன். ஈழத்திலிருக்கின்ற அரசியல், சமூக நிலைமைகள் வேறு. இங்கேயிருக்கின்ற அரசியல் சூழல் வேறு. அதைப் பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஜெயபாலன்கிட்ட இதைப் பற்றிப் பேசுவதற்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆதவன்கிட்ட நிறையப் பேசியிருக்கிறேன். எனக்கும் அவருக்கும் தமிழ்க்கவிதை பற்றி, நகுலன் கவிதை வரைக்கும் ஒத்த சிந்தனையிருக்கிறது. தமிழ்க் கவிதைக்கும், ஈழத்துக் கவிதைக்கும் நிறைய வேறுபாடிருக்கிறது. இரண்டையும் ஒப்பிட்டுப் பேசுவது என்பது எந்த வகையிலும் பொருத்தமற்றது. தமிழ் என்ற மொழியில் எழுதுவதாலேயே அவற்றைத் தமிழ்க்கவிதையாகக் கருத வேண்டுமென்றோ அங்கீகரிக்க வேண்டுமென்றோ கட்டாயமில்லை.
கவிதையைப் பொறுத்தவரையில் இலங்கை சார்ந்த கவிதைகளையெல்லாம் படித்து விடுவேன். ஈழத்துக் கவிஞர்களான ஜெயபாலன், சேரன் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ஈழத்துக் கவிதைகளையும் தமிழ்க் கவிதைகளையும் வேறு வேறாகத்தான் பார்க்கிறேன். இப்போதுதான் ஈழத்துக் கவிதைகள் ஒரு கட்டமைப்புக்குள் வந்திருக்கிறது. அவர்களுக்குக் கவிதைகள் மிக நீளமாக இருக்க வேண்டும். மனுஷ்ய புத்திரனிடம் எனக்கிருக்கின்ற சங்கடமே அதுதான். ஒரு விஷயத்தை எழுத ஆரம்பித்தார் என்றால் இரண்டு பக்கத்திற்கு இழுத்துக் கொண்டே போவார். இருபத்தைந்து வரிகளுக்கு மேலே ஒரு கவிதையை என்னால் படிக்க முடிவதில்லை. கவிதை என்பது ஒரு பொறி. அது மிக நீளமானதாகயிருக்க முடியாது. இப்ப பரவாயில்லை. சின்னதாக எழுதுகிறார்கள். ஆனாலும் சமயங்களில் மூன்று பக்கத்துக்குப் போய் விடுகிறது. இவையெல்லாம் தாண்டி அவர்களுக்கு ஒரு அரசியல், சமூக நோக்கம் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளலாம். அதற்காகத் தமிழ்நாட்டுக் கவிஞர்களை விட இலங்கைக் கவிஞர்கள் பெரிய ஆளுங்க என்று எந்தக் காலத்திலும் என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. இதைத் தாராளமாக நீங்கள் பதிவு பண்ணிக் கொள்ளலாம்.
பெண் கவிஞர்கள் அதிகமாக இல்லாததற்குக் காரணம்?
முதலில் கவிதை மேலே அக்கறை வேண்டும். நீண்ட கால உழைப்பு வேண்டும். ஒரு பத்து ஆண்டு உழைப்பு இருந்தால் ஒரு நல்ல நாவலாசிரியராகி விடலாம். ஆனால் கவிதை வந்து அப்படி பத்து ஆண்டுகளில் கைகூடி வந்து விடாது. அதில் ஆழ்ந்து போய் விட முடியும் என்று சொல்ல முடியாது. ஒரு வேளை தன் போக்கில் அப்படி வரலாம். அது ரொம்ப அபூர்வமானது. அப்படித் தன் போக்கில் அமைந்து விடுவதில் கூட அதை வளர்த்தெடுத்துப் போவதற்கும், செழுமைப்படுத்துவதற்கும் தொடர்ச்சியான உழைப்பு வேண்டும். தொடர்ந்த வாசிப்பும், தொடர்ந்து அதைப் பற்றி யோசிப்பதும், கவிதை பற்றிய சரியான பார்வையும் மிகவும் அவசியம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
10 கருத்துகள்:
தமிழில் கவிதைகளே இல்லை என்பது ஒரு முக்கியமான அறிவிப்பு.அதே நேரம் கவிதைக்கு ஒரு முதன்மைத் தன்மையை வழங்க எத்தணிப்பது உடன்பட முடியவில்லை.ஜெயமோகன் பற்றிய புரிதல் சரியானதும் கவன ஈர்ப்புக்குமான அறிவிப்பு.இவைகளுக்கு வெளியே இந்த உரையாடல் இப்போது இடம்பெற்றிருந்தால்,நிச்சயம் இலக்கியம் இலக்கியமற்றது போன்ற வற்றுக்கிடையிலான ஊடாட்டங்களும் அவைகளால் நிகழந்த வரலாற்றுப் பறமொதுக்கல்களைப் பற்றியும் உரையாடப் பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.எனது எழுத்துக்கள் இலக்கியத்தை கொல்பவனின் சாட்சியம் என்பதால்...இலக்கியம் என்ற பெரும் பேராசை நிரம்பி பலர் இருக்கின்றனர்.கதை சொல்லாத நாவல்களும்,கவிதை செய்யாத கவிஞர்களும் தமிழில் அதிகம்.தனிப்பட்ட நிரந்தரமான ஒரு அடையாளம் என்பது,மனிதர்களுக்க மாத்திரமல்ல எழுத்துக்களுக்கும் சாத்தியமில்லை.பல அடையாளங்கள் உலவும் இடம் அது.ஒரு பிரதி,கதையும் சொல்லும்.கவிதைக்கான வேலையையும் செய்யும்.அதேநேரம் ஒரு விமர்சனமாகவும் இருக்கும்.அதற்கு ஒரு பெயரையிட்டு,பெயரின் அடிப்படைகளில் பிரிந்து செல்லும் வாசிப்புக்கள் முடிவுறும் காலமிது.பலவகைச் செயற்பாடுகளை பரிந்துரைக்கும் பிரதிகளை கண்டடைவதற்கான வாசிப்புக்களின் பக்கம் நகர்ந்து செல்லுவதற்காகவே இதை எழுதுகிறேன். சந்திரா...
மாற்றுப்பிரதிக்கான உங்கள் தேடல் என்னையும் இப்போது வந்தடைந்திருக்கிறது நண்பரே.நன்றி.
மாற்றுப்பிரதிக்கான உங்கள் தேடல் என்னையும் இப்போது வந்தடைந்திருக்கிறது நண்பரே.நன்றி.
Good one chandra.
Keep posting such good ones.
Thank you.
ஓ! இது மறுபதிப்பா? நன்றி.
நன்றி செல்வராஜ் ஜெகதீசன், ச.முத்துவேல்
அன்புடையீர்,
என் உற்ற தோழனுக்கு, என் நம்பிக்கு
இந்த விருது உரித்தானதே..!
நானும் நம்பியும்..திரியாத இடங்களில்லை அலையாத அலைச்சல் இல்லை.
கவிதை பற்றிக் கதைத்துக்கொண்டே அல்லது
கதைபற்றிக் கவித்துக் கொண்டே குடித்த மது
மமாஆஆஆஆஆஆஆஆஆஆஆது
கள்
சொல்லி மாளா.
....................
அவர் நீண்ட காலம் வாழ வேண்டும்.
அவரிடம் மிக நேர்மையான நெஞ்சு இருந்தது.
என்னிடமுந்தான்.
இதனால் பல தடவை..அவரை நான் பிரிந்திருக்கிறேன்.
...........
எனினும் கவியெனும் மெல்லியல்பால் அவரெனை அணைப்பார்.
நானும் அது கண்டு நாணுமோர் பெண்ணணங்காய் சிலிர்ப்பேன்.
...........
எனக்கென்னவோ இங்கே இதை எழுதவேண்டுமென்று தோன்றிற்று.
....
மேலே உள்ள பேட்டியில் என்னைக் குறிப்பிட அவர் தயங்கவில்லை.
எனக்கு அவரைப் பிடிக்கும் ஆனால் பிடிக்காது.
அவரது கவிதைகளையும் பிடிக்கும் ஆனால் பிடிக்காது.
....
சொல்லுக் கேக்காத மனிசர் மேல்..
செல்லப் பிள்ளை மேல்..
கோபத்தையும் மீறி ...ஏதொவொன்று வரும்.
அது அனுதாபமில்லை. ஒரு வகைக்
கண்டறியாக் காதலெனலாம்.
அது அவர் மேல் அடிக்கடி எனக்குவரும். அவருக்குள் எழுகிற கவிதைபோல.
...
இப்படிக்கு
நம்பியின்
ஆதவன்.
சூர்யாவும் ஆதவன் ஒருவரே என்றே நம்புகிறேன். விக்கிரமாத்தின் மேலான உங்கள் அன்பை புரிந்துகொள்கிறேன்.அதேபோல் அவர் மீதான உங்கள் விலகலையும்.
நன்றி தங்கள் வருகைக்கு.
நன்றி நண்பி.
ஆனால் பல soorya க்கள் இங்கே வலம் வந்து என் பெயரையும் ஆதவனின் பெயரையும் கெடுக்கின்றன. கவனமாக இருங்கள்
நம்பி குறிப்பிட்ட்ட ஆதவன் நாந்தான்.
sooryavinothan@gmail.com
வேறென்ன...
தொடருங்கள் உங்கள் பணியை.
நன்றி.
good one............
கருத்துரையிடுக