செவ்வாய், 8 செப்டம்பர், 2009

நதியில்மிதக்கும் கானல்



நதியில் மிதக்கும் கானல்

விடை கொடுக்கும்போது

உன் முகத்தில் நிழல்கள் விழுவதில்லை

இ.ன்னும் நம்பிக்கைக்கு

இடமுண்டாவென திரும்பிப்

பார்க்கவே செய்கிறேன்

-மனுஷ்ய புத்திரன்

ரயில்நிலையத்தில் நிகழாமல் இருந்திருக்கலாம் அந்தப் பிரிவு. முன்பு ஒருநாள்மழைக்காலத்தில் அவன் அருகில் அமர்ந்திருந்தபோது இனிய சங்கீதத்தைப்போல தாலாட்டிய ரயிலோசை இன்று மிகப்பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இனிமேல் அவனிடத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை. வாழ்நாள் முழுதும் கூடவருவேன் என்று சொன்னவன் இப்படி ரயில்நிலையத்தில் ஒரு கைஅசைவில் நம்மிடையே உறவு

முறிந்துவிட்டது என்று சொல்வதற்காக வந்திருக்கிறான். ரயில் அவனைக் கடந்துபோகும் கணநேரத்தில் அத்தனை அன்பையும் காற்றில் விட்டுவிட்டுப் போய்விடுவேன் என்று நினைக்கிறானா? அவ்வளவு எளிமையானதா காதல்.

எந்த வினாடியும் என் கைகளைப் பற்றிக்கொண்டு "ஒரு பிரச்சினையும் இல்லடா. எதுக்கு

நீ தேவை இல்லாம மனசைப்போட்டுக் குழப்பிக்கிற. எல்லாமே அப்படியேதான் இருக்கு"

என்று சொல்லிவிடமாட்டானா என இதயம் தவித்தது. அவனோ மிக நிதானமாக

"எத்தனை மணிக்கு டிரெயின் கிளம்பும்" என்றான். இன்னும் நம்பிக்கை மிச்சமிருந்தது.

எனக்கான அன்பு, அவன் கண்களில் எஞ்சியிருக்கிறதா என்று தீவிரமாகத் தேடத்

தொடங்கினேன். அவன் முகத்தில் இறுக்கம் கூடக்கூட அவன் முன்பு எனக்குள்

ஏற்படுத்திய அன்பெல்லாம் நலிந்து சிதைந்து உருகி ஓடியது. காதலின் வேகத்தைப்

போலவே பிரிவும் அதே அழுத்தத்தோடு அவனிடமிருந்து வெளிப்பட்டது.

"நமக்குள்ளே இப்படி ஒரு பிரிவு வேணுங்கிறதை நீ புரிஞ்சிக்கணும். இவ்வளவு

சண்டையோட நாம எப்படி வாழ்க்கையைத் தொடங்க முடியும்" என்று அவன்

பேசிக்கொண்டே போக தாங்க முடியாத அருவருப்பில் இரண்டு கைகளையும் முகத்தில்

வைத்து மூடி 'சீ' என்று சத்தமாக கத்தினேன். "இதான், இந்த மாதிரி ஆர்ப்பாட்டம்

பண்றதாலதான் இத்தனை நாளும் உன்னைப் பார்க்காம இருந்தேன். அவ்வளவுதான்,

உனக்கும் எனக்கும் எல்லாம் முடிஞ்சுபோச்சு. இனி என்னைத் தேடி வந்து

அசிங்கப்படாதே''. என் பேச்சை கேட்க விரும்பாமல் உடனடியாக அந்த இடத்தைவிட்டு

நகரத் தொடங்கினான்.

அமிலம் சொட்டும் வார்த்தைகளை வீசிவிட்டு ஜனத்திரளில் ஊர்ந்து மறைந்து போனான்.

ஆடாமல் அசையாமல் அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்த நான் மிக

ஆக்ரோசமாக கத்தி அழத்தொடங்கினேன். என் அருகிலிருந்தவர்கள் எல்லாம்

கண்டிப்பாக என்னை நாகரீகமற்ற பெண்ணாக நினைத்திருக்கவேண்டும்.

அதைப்பற்றியெல்லாம் கவலைப்படும் நிலையில் நான் இல்லை. உணர்வுகள்

பெருக்கெடுத்து ஓடின. கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வயிற்றைப் புரட்டிக்கொண்டு

வந்தது. வாந்தி எடுக்க இடம் தேடினேன். ரயில்பாதையைத் தவிர வேறெதுவும்

தட்டுப்படவில்லை. பிளாட்ஃபார்மில் தலையைப் பிடித்து உட்கார்ந்தேன்.

பத்துவினாடிகள்கூட சென்றிருக்காது. என்னைச்சுற்றி பெருங்குரல்கள். 'ஏய் வாவா' என்று

ஒரே கூச்சல். எனக்கு தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. கண்களிலிருந்து காட்சிகள்

மறையத் தொடங்கின. யாரோ என்னை வேகத்தில் பிளாட்ஃபார்முக்குள்

இழுத்துப்போட்டார்கள். நான் செல்ல வேண்டிய மதுரை எக்ஸ்பிரஸ் சத்தத்தோடு

ஊர்ந்து நின்றது. என் பக்கத்திலிருந்து "என்னாச்சுமா" என்று

கேட்டுக்கொண்டிருந்தவர்கள் ரயிலில் இருக்கையைத் தேடக் கிளம்பிவிட்டார்கள். தன்

நினைவு மெதுவாக திரும்பிக்கொண்டிருந்தது. தலை கனத்து வெடித்துச் சிதறுவது

போன்ற வலி ஏற்பட்டது. ரயில்நிலையத்தின் எந்த மூலையிலிருந்தாவது மீண்டும் தோன்றி

என் கைகளை பிடித்துக்கொள்ளமாட்டானா என்று மனது ஏங்கியது.

அவன் எப்படி என்னை வெறுத்து மறந்துபோக முடியும். ஆனால் அவன்

என்னைவிட்டுப் போனது நிஜம். அந்த இடத்தைவிட்டு உடனடியாக நீங்கிச்செல்ல

விரும்பினேன். கனவைப்போன்று எல்லாம் நடந்துகொண்டிருந்தது. கண்ணீரைத்

துடைத்துக்கொண்டேன். முற்றிலுமாக அவனை என் ஞாபகத்தில் இருந்து அகற்ற

வேண்டும். இல்லை ஓடும் ரயிலிலிருந்து குதித்துச் சாக வேண்டும். நொடிப்பொழுதில்

எனக்குள் வீம்பும் வைராக்கியமும் உருவாகின.





ராணுவவீரனைப்போல் கட்டுக்கோப்பாக உடலும் மனமும் இறுகிப்போனது. லக்கேஜை

எடுத்துக்கொண்டு என் இருக்கையில் போய் அமர்ந்தேன். நானே அறிய முடியாத

நிலையில் இருந்தது என் மனநிலை. மறுபடியும் மனம் அவனிடத்தில் சிக்கிக்கொண்டது.

இதயம் தெறித்து சிதறுவதைப்போல வலித்தது. இதையெல்லாம் அவன் உணர்ந்தால்

என்னை இப்படித் துடிக்கவிடமாட்டான். ஆனால் அவனுக்கு எப்படித்தான்

புரியவைப்பது? என்னுடைய வார்த்தைகள் அவனுக்கு விஷமாகப்பட்டது. என் வலிகள்

அவனுக்கு ஆன்ம சந்தோசத்தை கொடுத்ததோ என்னவோ?

என்னால் இருக்கையில் அமரமுடியவில்லை. எழுந்து ரயில் கதவுகளுக்குப் பக்கத்தில்

போய் நின்று கொண்டேன். கதவின் இரண்டு பக்கக் கம்பிகளையும் பிடித்துக்கொண்டு

வெளியே காற்றை தலையால் முட்டிக்கொண்டிருந்தேன். ரயில் தண்டவாளத்தில் உருண்டு

செல்லும் சத்தத்தில் என் இதயம் கதறிக்கொண்டிருந்தது. மாலைநேரக் காற்றின்

குளிர்ச்சியை முகம் உணர்வதை அனுபவிக்க இயலவில்லை. இதுவே அவன் என்னிடம்

அன்பு செலுத்தும் நாளாக இருந்திருந்தால் இந்தச் சூழல் எவ்வளவு ஏகாந்தமாக

இருந்திருக்கும். வரையறுக்க முடியாத ஆனந்தத்தில் காற்றில் மிதந்து

கொண்டிருந்திருப்பேன். ஆனால் இப்போது ரத்தம் சுண்டி சோர்ந்து கிடக்கிறேன்.

எந்தக் கணமும் ரயிலிலிருந்து குதித்து விடுவேனோ என்று நினைத்தேன். "இந்தப்பக்கமா

தள்ளி நில்லுங்க" நான் மிக மெதுவாக தலையை நிமிர்த்தி இனிமேல் வாழ்வதற்கு என்ன

இருக்கிறது என்பதைப்போல் குரல் வந்த திசையைப் பார்த்தேன். ஒரு நடுத்தர வயது

மனிதர் என் முகத்தில் ததும்பிய உணர்வுகளை நோட்டமிட்டபடி "இல்ல காத்து பலமா

வீசுது. பிடி நழுவப் போகுது. அதான் தள்ளி நில்லுங்கன்னு சொன்னேன்". புன்னகையை

நன்றியாக்கிவிட்டு கதவில் சாய்ந்து நின்றேன். என்னை யாரென்றே தெரியாத ஒருவருக்கு

நான் செத்துப்போவதில் விருப்பம் இல்லை. எல்லாம் முடிந்துவிட்டது என்று அவன்

சொல்லிப் போன பின்பு எப்படி நான் உயிரோடு இருப்பேன் என்று நினைத்தான். நான்

அவனிலிருந்து விலகிப் போகவேண்டும். அது என்னுடைய மரணமாக இருந்தாலும்

பரவாயில்லை என்ற நிலையில் அவன் இருக்கிறானா?

எவ்வளவு நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தேன் என்று தெரியவில்லை. ரயிலின்

கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன. டீ விற்பவர், சாப்பாடு ஆர்டர் எடுப்பவர், டிக்கெட்

பரிசோதகர், கழிப்பிடத்தை உபயோகிக்கும் பயணிகள் என்று எல்லோரும் என்னைக்

கடந்து சென்றார்கள். நான் ஏன் அங்கேயே நிற்கிறேன் என்பதில் சில பயணிகளுக்கு

சந்தேகம் வந்துவிட்டது. என்னைக் காப்பாற்றும் பொருட்டு யாராவது ஒருவர் என்னைத்

தள்ளி நில்லுங்க என்று சொல்லிப் போனார்கள். கிட்டத்தட்ட அந்த

கம்பார்ட்மெண்ட்டில் அனைவரும் தூங்கச் சென்றுவிட்டார்கள். நானும் என்

படுக்கையில் விழுந்தேன். அதற்குமுன் பல இரவுகள் நான் தூங்காமல் விழித்திருக்கிறேன்.

ஆனால் இந்த இரவைப் போன்று கொடுமையான இரவை அனுபவித்ததில்லை.

கொடும்வாள்கள் பல சூழ்ந்து நெஞ்சைப் பிளப்பது போலிருந்தது. எங்கே இருக்கிறேன்?

என்னைச்சுற்றி என்ன நடக்கிறது? எதுவும் புரியவில்லை. நரமாமிசம் சாப்பிடும்

அரக்கர்களிடம் மாட்டிக்கொண்டதைப்போல் மனத்தில் பீதி ஏற்பட்டது. ஞாபகங்களை

இழந்துகொண்டிருந்தேன். அதுவும் ஒருவகையில் நல்லதாகத்தான் பட்டது. அவன்

பிரிவின் மரணவலி, அதில் மறக்கடிக்கப்பட்டால் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கும்.

ஆனால் மற்ற நினைவுகள் எல்லாம் மறக்கடிக்கப்பட்டு அவன் மட்டுமே நினைவற்ற

நினைவில் முழுவதுமாக இருந்தான். அவன் நினைவில் அழுகிக்கொண்டிருக்கும் என்

ஆத்மாவை பிய்த்து எறிந்தால்தான் சந்தோசம் கிடைக்கும். என் உயிர் பிரிந்து நிசப்தத்தில்

முடிந்தாவது அந்த வலியை மறக்கடிக்க விரும்பினேன். தீவிரமான அன்புத் தேடலின்

உயிர்தொடும் மூர்க்கம்தான் என் காதல் என்பது அவனுக்குப் புரியாமல்போனது

சோகம்தான்.

ஒருபொட்டுக்கூட தூங்காமல் கொடைரோடு ரயில்நிலையத்தில் இறங்கிக்கொண்டேன்.

என்னுடைய சில செயல்கள் அதிசயமாகத்தான் தெரிந்தன. இத்தனை நினைவற்ற

மனநிலையில் அனிச்சையாக எப்படி சரியான நிறுத்தத்தில் இறங்கினேன் என்றே

தெரியவில்லை. மதுரையில் இருக்கும் அப்பா கொடைரோட்டுக்கு வந்து காத்திருக்கிறேன்

என்று சொன்னார். "சிரமப்பட வேண்டாம். இரண்டு நாளில் நான் கல்லூரியில்

செட்டிலானவுடன். நிதானமாக கொடைக்கானல் வாங்க" என்று சொல்லிவிட்டேன்.

அப்பா மிகவும் சந்தோசத்தில் இருப்பார். அவருக்கு பிடித்தமான கல்லூரி லெக்சரர்

வேலையில் சேரப் போகிறேன். தினப்பத்திரிகையில் நான் பார்த்தது நிருபர் வேலை.

"எம்.பில் எம்.எட் படிச்சிட்டு என்னம்மா நிலையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் வேலை.

மாப்பிள்ளை பார்க்க கஷ்டமாக இருக்கிறது" என்று சொல்லிக்கொண்டே இருப்பார்

அப்பா. நான் அவனைக் காதலித்தது வீட்டுக்குத் தெரியாது. காதலிப்பது மகா குற்றமாக

கருதும் எங்கள் குடும்பத்தில் என் காதல் தோல்வி அடைந்துவிட்டது என்று

சொன்னால் எப்படி இருக்கும்? அந்த விதத்தில் கொஞ்சம் பாதுகாப்பாக

இருந்திருக்கிறேன். பள்ளி, கல்லூரி என்று மதுரையில் இருந்தவரை காதலைப் பற்றி

யோசிக்க நேரமில்லை. காதலிக்காமல் இருப்பது பெரும் கௌரவமாக நினைத்துப்

பெருமிதப்பட்டுக்கொண்டிருந்தேன். பாவம் ஒருத்தன் ரொம்ப காலமாக என் பின்னால்

சுற்றிக்கொண்டிருந்தான். அவன் முகத்தைக்கூட சரியாகப் பார்க்காமல் அவனை

அவமதித்திருந்தேன். பலமுறை யோசித்தும் இன்றும் அவன் முகம் ஞாபகத்துக்கு வர

மறுக்கிறது. அவன் விட்ட சாபமோ அல்லது அவனை அலையவிட்ட பாவமோ

தெரியவில்லை இப்படித் துன்பவலையில் சிக்கித் தள்ளாடுகிறேன்.

நான் பார்த்துக்கொண்டிருந்த நிருபர் வேலையை விட்டுவிட்டேன் சென்னையில்

இருந்தால் கண்டிப்பாக அவன் நினைவில் செத்துவிடுவேன். ரொம்ப நாளாக அப்பா

வற்புறுத்திக்கொண்டிருந்ததை இப்போது என்னைக் காப்பாற்றிக்கொள்ள

பயன்படுத்திக்கொண்டேன். கொடைக்கானல் பல்கலைக்கழகத்தில் தற்காலிக லெக்சரர்

வேலை கிடைத்ததும் மலைநகரத்திற்கு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். லேசாக

விடியத் தொடங்கியது. கொடைக்கானல் செல்லும் பஸ்ஸுக்காக காத்திருந்தேன்.

லக்கேஜை இழுத்துக்கொண்டு ரோட்டில் இருந்த டீக்கடையில் டீ சாப்பிட்டேன்.

கொஞ்சம் கொஞ்சமாக மனநிலை மாறத் தொடங்கியது. அந்த இடம் மிக குளிர்ச்சியாக

இருந்தது. முகத்தில் அடித்த ஜில்காற்று இதமாக இருந்தது. டீக்கடை பெஞ்ச், பேப்பர்

படித்தபடி டீ சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆண்கள், கவனமாக டீ

போட்டுக்கொண்டிருப்பவர் எல்லாம் என் வாழ்வில் நிதானத்தை

அளித்துக்கொண்டிருந்தார்கள். நான் இப்போது காணும் ஒவ்வொரு காட்சியும் எனக்கு

முக்கியமாகப்பட்டது. என்னைக் காப்பாற்றும் காரணியாகவே எல்லாவற்றையும்

நினைத்தேன். தனித்துவிடப்பட்ட நான், மிகச் சுதந்திரமானவளாக உணர்ந்தேன். என்னை

வெறுக்கும் ஒருவனை மறக்க வேண்டும். என் முன் இருந்த சவால் அது.

டீயை ரசித்துக் குடிக்க ஆரம்பித்தேன். சூடாக டீ உள்ளே இறங்கியது. அப்போது ஒரு

பஸ் டீக்கடை அருகில் வந்து நின்றது. பஸ்ஸிலிருந்தவர்களை கவனமாகப் பார்க்க

ஆரம்பித்தேன். இன்னும் தூக்கத்திலிருந்து விழிக்காத பெண் ஜன்னலில் தலைசாய்த்து

படுத்திருந்தாள். அந்தப் பெண்ணின் முகத்தில் பயணத்தின் களைப்பு இல்லை.

கவலைகளை மறக்கடிக்கும் பாவனை இருந்தது, அவளது தூக்கத்தில். அப்பாவின் விரல்

பிடித்து பஸ்ஸிலிருந்து இறங்கி சுற்றும் முற்றும் பார்த்து மறைந்து நின்று ஒன்னுக்கடித்த

சிறுவன் என்னுள் லேசான புன்னகையை வரவழைத்தான். சிறு முறுவலிப்புடன் கேசம்

ஒதுக்கி மணி பார்த்துவிட்டு, ஜன்னல்வழி வெளியுலகம் பார்த்த சுடிதார்பெண் அந்தக்

காலையில் மிக அற்புதமான பனிஓவியம் போலிருந்தாள். ஒவ்வொருவராக டீக்கடையை

ஆக்ரமித்தார்கள். சுடுதண்ணீர் வாங்கி பொறுப்பாக பால்பாட்டிலை கழுவி பின்

கடையில் பால் வாங்கி பாட்டிலை மனைவியிடம் கொடுத்த மனிதன் உலகின் மிக

உன்னதமாகப்பட்டார் எனக்கு. அழுதுகொண்டிருந்த குழந்தை அழுகை அடக்கி,

ஓரேமூச்சில் பாலைக் குடித்துவிடும் நோக்கில், பாட்டிலின் நிப்பிளை வேக வேகமாக

உறிஞ்சியது. அவனில்லாத உலகத்தை ஒருநாளில் அழகானதாக மாற்றிவிட முடியாதுதான்.

வாழ்க்கை அழகானதாக இல்லாவிட்டாலும் மிக மெதுவாக நகர்ந்து ஒருநாள்

வலியற்றதாக மாறலாம் என்பதை அந்தக் காலைக் காட்சிகள் உணர்த்தின.

கொடைக்கானல் பஸ் முழுமையாக நிறைந்திருக்கவில்லை. சந்தேகமே இல்லை

ஜன்னலோர சீட்டில்தான் அமர்ந்தேன். மலைப்பாதையில் பஸ் உயர உயர உடல் குளிரத்

தொடங்கியது. வெயிலும் பனியும் கலந்து வெளிர்மஞ்சள் நிறத்தில் இருந்தது வெளி. நான்

இதற்கு முன் வானத்தை அத்தனை அழகாகப் பார்த்ததில்லை. சூரியனால்

ஒளிரத்தொடங்கிய வானத்தில் நீலநிறம் பிரிந்து வெண்மையும் மஞ்சளும்

கூடிக்கொண்டிருந்தது. கொட்டும் பனி, ஒளிரும் வெளிச்சம், தூரத்தில் பள்ளத்தாக்கில்

மேய்ந்துகொண்டிருக்கும் காட்டு மான்கள், உணவுகளை தேடிப்பிடித்துச் சாப்பிடும்

குரங்குகள் அத்தனையும் அழகு. காட்சிப் பிழையாக அவன் முகம் எங்கும் இல்லை.

கொட்டும் அழகாக இருந்த இயற்கை எழிலில் மூழ்கிப் போனேன்.

மனம் சீராகத்தான் இருந்தது பஸ்ஸில் காதல் பாடல்கள் ஒலிபரப்பாகும்வரை. 'காதலின்

தீபம் ஒன்று', 'வசந்தகால கோலங்கள் வானில் மிதந்த கோடுகள்', 'வண்ணம்கொண்ட

வெண்ணிலவே', 'நீ பாதி நான் பாதி' அத்தனையும் காதல் பாடல்கள். மனம் தறிகெட்டு

ஓடி அவனில் வந்து நின்றது. ஓடிப்போய் பாட்டை அணைத்துவிட நினைத்தேன்.

கண்களிலிருந்து கண்ணீர் தானாக வழிந்துகொண்டிருந்தது. சிறு வயதிலிருந்தே

இளையராஜாவின் பாடல்கள் எனக்குள் மிகப்பெரும் காதல் உணர்வை

ஏற்படுத்தியிருந்தன. ஒருநாளாவது இளையராஜாவின் இசையைக் கேட்காமல் இருந்தது

இல்லை. வாழ்வின் அன்றாட செயலைப்போல அவரின் பாடல்கள் காற்றில் கலந்து

என்னுள் பெருமிதமான, மென்மையான காதலை உணர்த்தியது. என் மனத்தில் இருந்த

அத்தனை அழகான இசை காதலுக்கு கௌரவம் செய்யும் பொருட்டே சராசரி ரசனை

உள்ள எவனையும் நான் அனுமதிக்கவில்லை. அவனைப் பார்த்தபோது அவன்

நானாக இருந்தான். அவனும் என்னைப்போல உணர்வோடு கலந்த இசையின் காதலியைத்

தேடிக்கொண்டிருந்தான். எனது இருபத்திரெண்டாவது வயதில் அவனைக்

கண்டுபிடித்தேன். உணர்வுகள், ரசனைகள், விருப்பங்கள் ஒன்றிப்போயின. என்னுள்

இருந்த இசை அவனைப் பார்த்ததும் பொங்கியது. மனம் சிறகடித்து பறந்தது.

ஒரு பெரிய கம்பெனியில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக இருந்த அவன் எங்கள் பத்திரிக்கை

அலுவலகத்திற்கு சில தமிழ் சாப்ட்வேர்களை அறிமுகப்படுத்த வந்திருந்தான். கட்டுரை

எழுதும்போது என் பக்கத்தில் அமர்ந்து சாப்ட்வேர்களை எப்படி பயன்படுத்தவேண்டும்

என்று சொல்லிக்கொண்டிருந்தான். எப்போதும் சன்னமான குரலில் இளையராஜாவின்

பாடல்களை முμமுμத்துக்கொண்டிருந்த அவன் என்னை ஈர்த்ததில் வியப்பில்லை.

அவன் வந்து இரண்டு நாட்கள்தான் ஆகியிருந்தன. வெகுநாட்கள் பழகியவனைப்போல்

நெருக்கமாகப் பேசினான்.பெயர் சொல்லி அழைத்தான். மழை பெய்துகொண்டிருந்த நாளில் "டீ சாப்பிட

வர்றீங்களா" என்று கேட்டான். அவன் பார்வை மிகக் கூர்மையாக இருந்தது. என்னை

வீழ்த்தும் பார்வை சந்தேகமே இல்லை. இதற்குமுன் நான் யாருடைய கண்களையும்

இப்படி நேருக்கு நேர் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதில்லை. தவறி அவன்

கண்களைச் சந்திக்க நேரிட்டால் சிரிப்பும் வெட்கமும் காதலுமாய் இருந்தது என்

பார்வை. நானும் அவனை நேர்கொண்டு பார்க்க முயன்றேன். மஞ்சள் பூக்கள் உதிர்ந்து

கிடக்கும் டீக்கடை கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதே அவன் கைகளை

பிடித்துக்கொள்வேனோ என்று பயமாக இருந்தது. அவனைப் பார்க்கும் ஒவ்வொரு

கணமும் இதயம் மெல்லியதாக அதிர்ந்தது. அவன் "சிகரெட் பிடிக்கவா" என்று

கேட்டான். "சரி" என்று தலையாட்டினேன். டீயை உறிஞ்சியபடி அவன் புகைப்பதை

ஓரக்கண்ணால் பார்த்தேன். அவன் புகைபிடிக்கும் விதம் மிக அழகாக இருந்தது. அவன்

ஊதிய புகை மழைத்தூறலோடு சேர்ந்து காற்றில் ஓர் ஓவியத்தைப்போல மிதந்தது.

மரங்கள் அடர்ந்த எங்கள் அலுவலகத் தெருவில் நாங்கள் மட்டுமே

தனித்துவிடப்பட்டதுபோல் ஒரே நேர்கோட்டில் இணையாக நடந்து சென்றோம்.

இனிமையான குரலில் பாடிய பறவைகள் எங்கள் தலைக்கு மேலே பறந்து சென்று

கூட்டில் அடைந்தன. இருவருமே ஒரே உணர்வில் கண்களை நேர்கொண்டோம். "நான்

உங்களை லவ் பண்றேனு நினைக்கிறேன்" என்றான். அகமகிழ்ந்து போனேன். அவனிடம்

எதையும் காட்டிக்கொள்ளாமல் "இரண்டு நாளில் காதலா? காமெடி பண்ணாதீங்க"

என்றேன் பொய்யாக. "எனக்கு இரண்டு நாள். உங்களுக்கு எப்ப தோணுதோ அப்ப

சொல்லுங்க. வெயிட் பண்றேன். அதுவரைக்கும் ஃப்ரண்ட் மாதிரி பேசுங்க"

நான் எதையும் உடனடியாகச் சொல்லவில்லை. ஆனால் அவனுடன் விருப்பத்தோடு

பேசிக்கொண்டிருந்தேன். ஒரு வாரத்தில் எங்கள் ஆபிஸ் புராஜெக்டை முடித்துக்கொண்டு

போய்விட்டான்.

அதன்பின் அவன் இல்லாத வெறுமையை உணரத் தொடங்கினேன்.

அவன் என்னோடு தொடர்ந்து தொடர்பில் இருந்தான். என் அலுவலகத் தெருவில்

எனக்காக காத்திருந்து என்னை பைக்கில் அழைத்துச் சென்று விடுதியில் விட்டான். நான்

மறுப்பேதும் சொல்லாமல் இசைந்தேன். பில் பற்றி கவலைப்படாமல் ஃபோனில்

பேசிக்கொண்டிருந்தான். "நானும் உன்னைக் காதலிக்கிறேன்" என்று அவனிடம்

நேரடியாக சொல்லாமலே ஒன்றிரண்டு மாதங்களில் நாங்கள் காதலர்கள்

போலாகிவிட்டோம். எனக்கான காத்திருப்பு, அலுவலக வேலை இரண்டையுமே சரியாகச்

செய்துகொண்டிருந்தான். அவன் விழிகள் எப்போதும் சுறுசுறுப்புடன் பரபரத்தபடி

இருக்கும். என் நினைவில் இருக்கும் அவன் முகம் எப்போதும் புன்னகைத்தபடி இருக்கும்.

பொங்கல் விடுமுறைக்கு என்னுடைய ஊருக்கு கிளம்புகிறேன். ஆறுமணிக்கு டிரெயின்

என்று சொல்லியிருந்தேன். அவனை "வழியனுப்பி வைக்க வா" என்று வெளிப்படையாக

அழைக்கவில்லை. அவனாக வரவேண்டும் என்று நினைத்தேன். ஐந்து மணியிலிருந்து

ரயில்நிலையத்தில் காத்திருந்தேன். அவனிடமிருந்து ஒரு ஃபோன்கூட வரவில்லை.

மனத்தில் கவலை பரவியது. ஒரு ஃபோன் பண்ணி வரவில்லை என்று

சொல்லியிருக்கலாம். குறைந்த பட்சம் வேலை இருக்கிறது என்றாவது

தெரியப்படுத்தியிருக்கலாம். அவன் மனத்தில் காதலும் இல்லை, ஒரு மண்ணாங்கட்டியும்

இல்லை. எரிச்சலும் கண்ணீருமாய் இருந்த எனக்கு ரயில் சத்தமும் பயணிகளிகளின்

சத்தமும் வாதையை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. எல்லாச்சத்தங்களும் பயத்தை மட்டுமே

கிளப்பின. இப்படியான மனநிலையில் ரயில்நிலையம் ஏன் ஒரு பயங்கரமான

உலகத்தைப்போல் காட்சியளிக்கிறது? அவனிடமிருந்து ஃபோன் வந்தது. வந்துவிட்டான்

என்று துள்ளலுடன் பேசினேன். "சாரி எனக்கு முக்கியமான புராஜெக்ட் வேலை.

வரமுடியல நீ பத்திரமா போய்ட்டுவா. நான் அப்புறமா பேசுறேன்" என்று சொல்லி

ஃபோனை வைத்துவிட்டான். கவலை மனத்தை வாட்டியது.

டிராலி உருண்டோடும் சத்தத்தை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தபோது அதன்

பின்னாலிருந்து அவன் வந்துகொண்டிருந்தான். மனத்தில் அரும்பிய சந்தோசத்தை

வெளியே காட்டாமல் அவனைப் பார்த்தேன். "என்ன கோபமா?" என்று கேட்டான்.

கண்களில் ஈரம் படர அமைதியாகச் சிரித்தேன். பின் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோம்.

அவன் வந்ததும் பயம் உண்டாக்கிய எல்லாச் சத்தங்களும் இசையாக மாறிவிட்டன. ரயில்

நிலையம் முழுக்க அழகு நிரம்பி வழிந்தது. ரயில் புறப்படும் நேரம் வந்துவிட்டது.

அப்போதுதான் கவனித்தேன் அவனிடமும் ஒரு பை. "என்ன" என்றேன். "சும்மா"

என்றான். சரி என்று ரயிலில் ஏறும் அவசரத்தோடு எழுந்தேன். அவன் "இரு நான் கோச்

நம்பர் பார்க்கிறேன்" என்றான். பின் கம்பார்ட்மென்டைப் பார்த்து ஏறினான். "ஏய் இது

இல்ல" என்றேன். "சும்மா இரு எனக்கு தெரியும்" என்றவன் என் பேக்கை

வாங்கிக்கொண்டு ஒரு இருக்கையில் உட்கார வைத்தான் அவனும் என்னோடு உட்கார்ந்து

கொண்டான். எங்கள் இருவருக்குமான வேறொரு டிக்கெட்டை எடுத்திருந்தான். என்

டிக்கெட்டை கிழித்து காற்றில் பறக்கவிட்டான். "ஏண்டா இப்படி பண்ணின" என்று

கோபத்துடனும் சந்தோசத்துடனும் அவன் கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டேன்.

வழிநெடுக எங்கள் வார்த்தைகளில் காதல் வீரியம் கூடியது. யாராலும் பிரிக்க முடியாத

காதல் நிலையை அடைந்தோம். மதுரையில் இறங்கியதும் மீண்டும் சென்னை திரும்பி

விட்டான்.

அவனுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். அவன்மேல் எனக்கு மிகப்பெரும் ப்ரியம்

ஏற்பட்டதும் அவன் வேறு நண்பர்களிடம் பேசினால் சண்டையிடத் தொடங்கினேன்.

அவன் முழுமையாக எனக்கானவன் என்பதில் உறுதியாக இருந்தேன். நான்

உள்ளொடுங்கிய மனுசி. எனக்கான நெருக்கமான மனிதர்கள் மிகக்குறைவு. ஆனால் அந்த

மனிதர்களிடம் அத்தனை அன்பையும் கொட்டி வைத்திருந்தேன். அவனிடம்

சண்டையிட்ட ஒரு நாளில் சொல்லிக்கொள்ளாமால் பஸ்ஸில் ஊருக்குக் கிளம்பினேன்.

கடைசியில் மனசு கேட்காமல் பஸ் கிளம்புவதற்கு முன்பாக "ஊருக்கு கிளம்புகிறேன்"

என்று சொன்னேன். எந்த டிராவல்ஸ் என்பதை விவரமாகக் கேட்டுக்கொண்டான்.

கண்டிப்பாக அவன் வருவான் என்று தெரியும் அதற்குள் பஸ் கிளம்பிவிட்டது. இரண்டு

நிமிடத்தில் அவனிடமிருந்து ஃபோன். பஸ் எந்த இடத்தில் இருக்கு? பஸ்ஸில் நான்

உட்கார்ந்திருக்கும் இடம் எது என்று தெரிந்து கொண்டான். பஸ் நெரிசலில் நின்று

கொண்டிருந்தது. புலி மாதிரி படுவேகத்தில் என் ஜன்னலோர சீட்டுக்கு பக்கத்தில் வந்து

நின்றான். அவன் பறந்துதான் வந்திருக்க வேண்டும். பிஸ்கெட், பழங்கள் உள்ள ஒரு

பையை என்னிடம் தூக்கிப்போட்டான். பஸ் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. "சரி நீ

போ. நான் ஃபோனில் பேசுறேன்" என்றேன். அவன் அதை காதில் வாங்காமல் பஸ்

பின்னாடியே வந்துகொண்டிருந்தான். ''போடா போடா'' என்று கத்தினேன். பஸ்

நெடுஞ்சாலையில் விரையத்தொடங்கியது. காற்று வேகத்தில் தொடர்ந்து பைக்கில்

வந்தான். எனக்கு பதற்றம் கூடியது. செல்போனை எடுத்து அவனிடம் பேசினேன்.

திரும்பிப் "போ போ" என்று கெஞ்சினேன். "நீ என்கிட்ட சொல்லாம போனேலே. நான்

மதுரை வரைக்கும் உன் பின்னாடியே வர்றேன்" என்றான். மதுரவாயல் நெடுஞ்சாலையில்

அடுத்தடுத்து இரண்டு பைக் ஆக்ஸிடெண்ட்.. அவனிடம் "போ" என்று சொல்லி

போனில் கெஞ்சி கத்தி அழுதேன். வண்டி ஓட்டியபடி அவன் பேசிக்கொண்டிருந்தான்

எனக்கு பயத்தில் உயிர் கலங்கியது. கடைசியாக மிகப்பெரும் அழுகையோடு போனை

வைத்துவிட்டேன். அவன் செங்கல்பட்டு நெடுஞ்சாலைவரை வந்தான். பஸ் சிட்டாக

பறந்தது. சிறிது நேரத்தில் அவனிடமிருந்து ஃபோன். "சரி நான் போகிறேன். இன்னொரு

முறை கோபித்துக்கொண்டு இப்படியெல்லாம் செய்யக்கூடாது" என்றான். பயம் நீங்கி

ஆசுவாசம் அடைந்தேன். அவனின் தீவிரமான அன்பு மனத்தை உருக்கியது. உயிரை

பணயம் வைத்து அன்று என்னோடு அவன் பயணம் செய்தான்.

நானும் அவனும் நினைத்தாலும்கூட எங்கள் காதலைப் பிரிக்க முடியாது என்று நினைத்தேன்.

காதல் வலிமையானது. அன்பின் வற்றாத ஊற்று என்று நினைத்தேன்.

எல்லாம் அவன்ஒரு மாதம் புராஜெக்ட் விசயமாக பெங்களூர் செல்லும்வரை. எனக்கும் அலுவலக

நெருக்கடி. பாய்ந்து பாய்ந்து கட்டுரைகளைத் தயார்செய்யும் நிலைமை ஆகிவிட்டது.

செய்தி சேகரிப்பில் படுபிஸியாகிவிட்டேன். அவனை உடனடியாகத் திருமணம் செய்ய

வேண்டும் என்றால் பணிநிரந்தரம் அடையவேண்டும். அதற்காகத்தான் என் வேலை

பளுவைக் கூட்டிக்கொண்டு கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நினைத்தேன்.

அவன் என்னுடன் பலமுறை பேச முயலும் போதெல்லாம் ஒன்றிரண்டு வார்த்தை

பேசிவிட்டு வேலை இருக்கிறது என்று சொல்லி ஃபோனைத் துண்டித்தேன். அதை அவன்

புரிந்துகொள்வான் என்றே நினைத்தேன். இதன் தொடர்பாக ஃபோனிலேலேயே

இருவரும் சண்டையிடத் தொடங்கினோம். ஏன் இப்படி புரிந்து கொள்ள மறுக்கிறான்

என்று எனக்கு கோபமாக வந்தது. நான் ஒதுக்குவதாக அவனுக்குப் பட்டது. அவன்

கோபத்தின் வீரியத்தையெல்லாம் அப்போதுதான் அறிந்தேன். வார்த்தைகள் தடித்து,

எல்லோரிடமும் சிரித்து வழிகிறேன். அவனை மட்டும் ஒதுக்கிறேன் என்றான். கெட்ட

வார்த்தைகள் எல்லாம் சொல்ல ஆரம்பித்தான். எனக்கும் அவனுக்குமாக நான் கட்டி

வைத்திருந்த வீடு எரிந்து சாம்பலாகியது. எவ்வளவு சண்டையிட்டும் எங்களின் அன்பு

உடைந்து போகும் என்று நான் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை.

அவன் புராஜெக்ட் முடித்து வந்ததும் ஹோட்டலில் சந்தித்து கொண்டோம். பிரிவும்

சண்டையும் புதிதாக அன்பு செலுத்துபவர்களைப்போல் கொஞ்சம் தயக்கத்தைக்

கொடுத்து. சண்டையை மறந்து ரொமான்ஸோடு அமர்ந்திருந்தேன். இருவரும்

செல்போன்களை சாப்பாட்டு மேஜையில் வைத்திருந்தோம். இந்தத் தடவை அவனுக்கு

ஒரு சில குறுஞ்செய்திகளைத்தான் அனுப்பியிருந்தேன். அதைப் பார்க்க அவன் ஃபோனை

எடுத்தேன். அதை எதிர்பார்க்காத அவன் "ஃபோனை குடு" என்று என் முன்னால்

வந்தான். நான் தரமறுத்து பின்னால் போனேன். ஹோட்டலில் கூட்டம் அதிகமாக

இருந்தது. தலையைப் பிடித்து உட்கார்ந்தான். "வேணுமின்னா என் ஃபோனை பாரு"

என்று என் ஃபோனை அவன்பக்கம் தள்ளினேன். அவன் நிமிர்ந்தே பார்க்காமல்

ஃபோனை நோண்டிக்கொண்டிருந்தான். அவன் குறுஞ்செய்தியை திறந்து படிக்க படிக்க

என் இதயம் பதறியது. ஒரு நம்பரிலிருந்து இவன் ஃபோனுக்கு "சாப்பிட்டியாடா,

தூங்கினியாடா", பதிலுக்கு "கிஸ் மி டி. உன் ஃபோட்டோவை நெட்டில் அனுப்பி வை"

இப்படி இன்னும் ஏ ஜோக்ஸ் என்று நிரம்பிக் கிடந்தது. பத்ரகாளியைப்போல் என்

விழிகள் பிதுங்கியது. ரத்தம் கொதித்தது. அவன் ரொம்ப சாதாரணமாக அவன்

ஃபோனை பிடுங்கிக்கொண்டு என் ஃபோனை என் பக்கம் தள்ளினான். "நீ ரொம்ப

விவரமானவ உன் பாய்ஃப்ரண்ட்ஸ் அனுப்பினதெல்லாம் தெளிவா டெலிட்

பண்ணியிருப்ப". அருவருப்பாக உடல் குறுகி நடுங்கியது. அங்கிருந்து எழுந்து

கிட்டத்தட்ட ஓடினேன் என்றுதான் சொல்ல வேண்டும். பில்லை செட்டில் பண்ணிவிட்டு

பின்னாடியே வந்து என்னை வழிமறித்தான். "அதெல்லாம் என்னோடது இல்லடா. என்

ரூம் மேட் ஒருத்தனுக்கு ரோமிங் இல்ல. அவன்தான் இந்தப் ஃபோனை பயன்படுத்தினான்"

என்று சமாதானம் செய்தான். நான் எதையும் காதில் வாங்காமல் விடுதிக்குப்

பறந்துவிட்டேன். எனக்கு ஃபோன் செய்து கொண்டே இருந்தான். நான் ஃபோனை

அணைத்துவிட்டுப் படுத்துக்கொண்டேன்.

அவன் சொன்னது உண்மையாக இருக்கலாம் என்று லேசாக சமாதானம் அடைந்தேன்.

ஃபோனை உயிர்ப்பிக்கச் செய்ததும் பல குறுஞ்செய்திகள். "சத்தியமாக அது நான்

இல்லை. அந்த நண்பனை பேச வைக்கிறேன்" என்றான். மனம் இறங்கி சிறிது ஊடலோடு

அவனோடு பேசத்தொடங்கினேன். ஆனால் என் மனம் அவனிடம் மிகப்பெரும் காதலை

வைத்திருந்தது. என் தீவிரம் அவன் சுதந்திரத்தைப் பறிப்பதாக நினைத்தான். அவன்

என்னைத் தவிர்க்கத் தொடங்கினான். அவன் எனக்காக காத்திருந்த பொழுதெல்லாம்

திரும்பத் தொடங்கின. நான் அவனுக்காகப் பலமுறை அவன் அலுவலக வாசலில்

காத்திருந்தும் வேலை இருக்கிறது என்று சொல்லி என்னைப் பார்க்க மறுத்தான்.

அப்படிப் பார்த்து, பேசிய கணங்களெல்லாம் சண்டை. அவன் பலமுறை பேசியும் பிரிவை

பற்றி மட்டும் பேசவில்லை. இப்படியே சண்டையிட்டுக்கொண்டிருந்தால் இருவரும்

வேலையில் கவனம் சிதறிவிடுவோம் என்று இருவருக்கும் தெரிந்தது. "என்னை

வேணான்னா வேணான்னு சொல்லுடா. என்னைச் சிதைக்காதே" என்று அவனிடம்

பலமுறை கேட்டும் பிரிவைச் சொல்லாமல் மழுப்பலாகவே பதில்

சொல்லிக்கொண்டிருந்தான். நானாக அவனைப் பிரிந்தால் எந்தக் குற்றஉணர்வும்

இல்லாமல் இருந்திருக்கலாம் என்று நினைத்திருக்கலாம். கடைசியாக இந்த ரயில்நிலையச்

சந்திப்பில் என் குரல்வளையை அறுத்துச் சென்றுவிட்டான்.

பஸ்ஸில் பாடல்கள் அடங்கியது. சிறுசிறு நிறுத்தத்தில் மக்கள் இறங்கத்

தொடங்கினார்கள். தூக்கம் இல்லாத கண்கள் தானாகச் சோர்வில் சொருகியது.

கடைசியாக அவனுக்கான கவிதை வரிகள் மனத்தில் தோன்றின.

மணல் காற்று வீசும்

நெடும் பாலை நிலத்தில்..

ஆதி ஓவியங்கள் சூழ

சிங்கம் வாழ்குகையில்

இருண்மையில் கிடக்கின்றேன்..

பாறையிடுக்கில் கசியும் ஒளி

ஞாபகம் கிளர்த்துகிறது

மண்வாசத்தோடு

உன் நினைவும் சிரம் அறுக்கிறது

ஆசைகள் இறுகிக் கடக்கும் முன்

நீ வந்தடைவாய் எப்படியும்

ஒரு மரணமுத்தத்தோடு.

.

கருத்துகள் இல்லை: