திங்கள், 28 செப்டம்பர், 2009

சூது நகரம் -சிறுகதை




நகரம் முழுதும் தீப்பிடித்து எரிவதைப்போன்று வெக்கை வழிந்துகொண்டிருந்தது. அன்று நாள்முழுதும் சங்கர் நகர்ந்து கொண்டே இருந்தான். ஒரு இடத்திலும் அவனால் நிலையாக நிற்க முடியவில்லை. நடந்தோ பஸ்ஸில் ஏறியோ தன் நகர்வை நிறுத்தாமல் தொடர்ந்துகொண்டிருந்தான். தனக்கான ஒரு மனிதனைத் தேடிக் கண்டுபிடிப்பது இல்லை யாரையேனும் தன்மீது கவனம் செலுத்த வைப்பது இதுதான் அவனது இன்றைய நோக்கமாக இருந்தது. வாழ்வின் மிகப்பெரும் சூது தன் மேல் செலுத்தப்பட்டதாக உணர்ந்தவன் அதன் ஆட்டத்துக்குள் மிக மெதுவாக நுழைந்தான்...

வேலை பார்த்து வந்த எந்த இடத்திலும் அவனை இதுவரை யாரும் மரியாதையாக நடத்தியதில்லை. பிச்சை போடுவதைப்போலதான் வேலை கொடுத்திருக்கிறார்கள். படித்த பி.ஏ வரலாறுக்கு நாற்காலியில் உட்கார்ந்து வேலை செய்யும் பணிகிடைக்கும் என்று நினைத்தவனுக்கு பல மாதங்கள் அலைந்து திரிந்ததில் கிடைத்த முதல் கௌரமான வேலை துணிக்கடையில் சேல்ஸ்மேன் வேலை .

துணிக்கடையின் பிரமாண்டம் முதலில் அவனை மயக்கியது. அந்தக் கடையில் கம்பியூட்டர் முன்னால் உட்கார்ந்து கணக்கு பார்க்க வேண்டும் என்ற கற்பனையிலேயே உள்ளே நுழைந்தான். சேல்ஸ்மேன் வேலை மட்டும்தான் இருக்கிறது பார்க்கிறாயா என்று கேட்டார்கள். பசி அவனை விழுங்கிக்கொண்டிருந்தது. மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டான். முதல்நாள் விற்பனை பிரிவில் சீருடையோடு போய் தயக்கதோடு நின்றான். அங்கிருந்தவர்கள் இவன் பெயரைக்கூட கேட்காமல் புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கியா என்று கேள்வியோடு தங்கள் வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

அவன் யாரோடும் பேசி பழக்கம் இல்லாதவனாக இருந்தான். எவரிடமும் பேசாமல் வரும் போகும் கஸ்டமர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். முதல் நாள்தானே வேலை பழகியதும் அவனும் தங்களைப்போல் ஆகிவிடுவான் என்று நினைத்தார்கள். அதற்கடுத்து தொடர்ந்த நாட்களிலும் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்ப்பவனாக மட்டுமே இருந்தான். கஸ்டமர்களிடம் நயமாகப்பேசி துணிகளை வாங்க வைக்க முடியவில்லை. ஒரு ஊமையைப்போல துணிகளை எடுத்துப் போடுவதும் மடித்து வைப்பதுமாக இருந்தான். இப்படி யாரோடும் பேசாமல் இருந்தால் வேலையைவிட்டு எடுத்துவிடுவோம் என்று சூப்பர்வைஸர் பலமுறை எச்சரித்துவிட்டார். சரி சரி என்று தலையாட்டிவிட்டு அமைதியாகப் போவான்.

எப்படியும் தன்னை மாற்றிக் கொள்ளவேண்டுமென்ற முனைப்பில் மேன்ஷனில் உடன் தங்கும் அறைவாசிகள் யாரும் இல்லாத நேரத்தில் மற்ற விற்பனையாளர்கள் பேசுவதைப்போல் தானாகப் பேசிப்பார்த்தான். இளம்பெண்களிடம் 'இந்த கலர் உங்க ஸ்கின் கலருக்கு கரெக்ட்டா இருக்கும்' என்று இவன் சொல்ல அவர்களும் சிரித்துக்கொண்டே அந்த துணியை வாங்கிச் செல்வது போல் கற்பனை செய்தான். மறுநாள் எப்படியும் இன்று கஸ்டமர்களிடம் பேசி துணிகளை வாங்க வைப்பது என்ற முடிவுடன் சென்றால், அவன் திட்டம் எல்லாம் விற்பனை பிரிவுக்கு உள்ளே நுழையும் வரைதான். அதன்பின் அவன் வாய் விலங்கிட்டது போலாகிவிடும். சாதாரண நாள்களில் இருப்பதைவிட அப்படித் திட்டமிட்ட நாள்களில் முகம் இன்னும் காய்ந்து இறுகிக்கொள்ளும்.

தான் இருக்கும் இடத்தில் அடுக்கப்பட்டிருக்கும் துணிகளை பார்க்காமல் எல்லோரும் கடந்து செல்வதாகவே நினைத்தான். எல்லோர் மீதும் எரிச்சலாக வந்தது. விற்பவன் எதையாவது பேசவேண்டும் என்று ஏன் கஸ்டமர்கள் நினைக்கிறார்கள்? பிடித்திருத்தால் துணியை வாங்கிச் செல்ல வேண்டியதுதானே. எதற்காக பேசிச் சிரிக்க வேண்டும். எல்லாமே அவனுக்கு விகாரமாகப்பட்டது.

அவனால் ஒருபோதும் கஸ்டமர்களை கவரமுடியாது என்று நினைத்த நிர்வாகம் எல்லா விற்பனை பிரிவுகளிலும் மலைமாதிரி குவிந்து கிடக்கும் துணிகளை மடித்து வைக்கும் வேலையை மட்டும் செய்தால் போதும் என்று விற்பனை பிரிவிலிருந்து மாற்றிவிட்டார்கள். நாளெல்லாம் துணிகளை மடித்து மடித்து அவன் மணிக்கட்டிலும் முழங்கையிலும் எப்போதும் நீங்காத வலி இருந்துகொண்டே இருந்தது....

உடன் வேலை பார்க்கும் ஆண்களும் பெண்களும் சிநேகமாக பேச மறுப்பதும், யாரும் தன்னை விரும்பாதவர்களாக இருப்பதும் ஏன் என்றும் அவனுக்கு தெரியவில்லை. யாரும் தன்னிடம் நட்போடும் கைகுலுக்கி கொள்ளவில்லை என்பது அவனுக்கு பெரும் பாரமாக இருந்தது. இதுவரை முத்தத்தின் ஸ்பரிசத்தையும் அடையவில்லை என்று நினைக்கும்போது துக்கம் கழிவிரக்கமாகி உள்ளுக்குள் உடைந்து போனான். அந்த முதல் முத்தம் ஒரு பிச்சைக்காரியிடமிருந்தோ இல்லை ஒரு பைத்தியகாரியிடமிருந்தோ கிடைத்தால் கூட பரவாயில்லை ஆனால் அது வெகுவிரைவில் கிடைக்க வேண்டும் என்று நினைத்தான்.

எல்லோரும் எதன் நிமித்தமாகவோ விடாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள் பேசவிடாமல் தன்னைக் கட்டிப் போட்டிருப்பது எது என்றும் புரியவில்லை. எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு பெயிலானவர்கள் எல்லாம் அங்கே வாய்கொள்ளாச் சிரிப்பும் பேச்சுமாய் நிறைய ஆடைகளை விற்றுத் தீர்க்கிறார்கள். தான் படித்த டிகிரி இங்கே பேச்சற்று கேவலமாக மதிப்பிடப்பட்டு கிடக்கிறது. பேச்சுதான் எல்லாம் என்றால் படிக்காமல் சிறுவயது முதல் பேசுவதை மட்டுமே தகுதியாக வளர்த்திருக்கலாம். அதுவும் கொஞ்சம் பொய்யாக பேச பழகிவிட்டால் வாழ்க்கை சிரமம் இல்லாமல் கழியும் என்று தனக்குத் தெரியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டான்.

சங்கருக்கு விவரம் தெரிந்த நாளில் உடம்பெல்லாம் புண்களோடு ஒரு சிறு நகரத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தான். எங்கிருந்து எப்படி அங்கே வந்தான் என்று யாரும் அவனுக்குச் சொல்லவில்லை அவனும் யாரிடமும் அதைக் கேட்க விரும்பவில்லை. முன்பு இருந்த பசி என்ற ஒரு விசயம் இல்லை என்பது மட்டுமே அவனுக்கு விடுதலையாக இருந்தது. சீழ் ஒழுகிய புண் ஏற்படுத்திய வேதனையால் அவன் இரவெல்லாம் கத்திக்கொண்டிருந்தான். அவன் கதறல் எல்லோருடைய தூக்கத்தைக் கெடுப்பதாகவும் அப்படிச் செய்தால் மீண்டும் தெருவில் கொண்டு விட்டுவிடுவோம் என்று அவர்கள் சொல்ல அவன் பற்களை கடித்தபடி வலியைப் பொறுத்துக்கொண்டான்.

சீழ் வடிந்து புண் தழும்பாகிப்போனது. வலியடக்கி பழக்கப்பட்ட நாளில் தானாக யாரிடமும் போய் பேசுவதை நிறுத்திக்கொண்டான். யாராவது பேசினால் மட்டும் பதில் சொல்பவனாக இருந்தான். அங்கே இருந்தவர்கள் என்ன செய்யச் சொன்னார்களோ அதை மட்டும் செய்துகொண்டிருந்தான். நான்கு மூலைக்குள் படிப்பு நான்கு மூலைக்குள் தூக்கம் இதுமட்டுமே வாழ்க்கை என்றாகிப்போனது. வரிசையாக சாப்பாட்டுக்குச் செல்வது. வரிசையில் நின்று குளிப்பது இது மட்டுமே உலகத்தின் ஒழுக்கம் என்று அங்கே கற்பிக்கப்பட்டது. சொல்லிக்கொடுக்கும் பாடங்களை அவனால் கற்பனைக்குள் கொண்டு விரிவுபடுத்த தெரிந்திருக்கவில்லை. கண்களில் பார்க்காத எதையும் காட்சிக்குள் கொண்டுவரமுடியாமல் தவித்தான். படித்ததில் மூளைக்குள் தங்கிய கொஞ்ச வார்த்தைகளை பேப்பரில் எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டான். அரசு கல்லூரி, அரசு விடுதி என்று அவனுடைய கல்லூரி காலத்திலும் வாழ்க்கை குறுகிய இருந்தது. கல்லூரி படிப்பை முடித்ததும் மிகப்பெரும் ஜன நெரிசலில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பது கனவாக இருந்தது. ஆதவற்றோர் இல்லத்திலிருந்து ஒருநாள் சொல்லிக்கொள்ளாமல் வெளியேறி இந்த பெரு நகர வாழ்க்கைக்குள் கரைந்தான்...

2

அக்கா வீட்டில் இல்லாத சமயங்களில் எல்லாம் படுக்கைக்கு அழைக்கும் மாமாவை சமாளிக்க முடியாமல் ராஜலட்சுமியும், கொடுமைப்படுத்தும் சித்தியை தட்டிக்கேட்காமல் மௌனசாட்சியாக அமர்ந்திருக்கும் அப்பாவை சகிக்க முடியாத கவிதாவும் ஊரைவிட்டு வெளியேற முடிவு செய்தனர். ராஜலட்சுமிக்கும் பதினெட்டு வயதும் கவிதாவிற்கு பதினேழு வயதும் ஆகியிருந்தது.

இருவரும் ஒன்றாக கயிறுமில்லுக்கு பஸ்ஸில் ஏறி வேலைக்குச் செல்லும் நாளிலிருந்தது சிநேகிதிகளாக இருந்தனர். எப்போதும் சோகம் அப்பியிருக்கும் முகத்துடன் காணப்படும் அவர்களின் கற்பனை ஒன்றாக இருப்பதை கண்டுகொண்டனர். இந்த ஊருக்கு வெளியே எங்கோ தூர நகரத்தில் தங்களுடைய வாழ்க்கை சிறப்பாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்த அவர்கள் கிராமத்தைவிட்டு வெளியேறி சென்னை பஸ்ஸில் ஏறிய அன்று பெருமழை பெய்தது. பயண வழியெங்கும் கற்பனையைப் பெருக்கி ஆடையில் படிந்த ஈரவாசனையோடு கனவுகளை சுமந்து கோயம்பேடு பஸ்நிலையத்தில் வந்து இறங்கினார்கள்.

ஆதவற்றோர் இல்லத்திற்கு வாசகர்கள் நிதி அனுப்புமாறு நாளிதழில் வந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த முகவரியை தேடிச் சென்றனர். அந்த ஆதவற்றோர் இல்லம் நகரத்திலிருந்து விலகி ஒதுக்குப்புறமாக இருந்தது. இருவரும் எட்டாம் வகுப்புவரை படித்திருந்ததால் நாளிதழில் குறிப்பிட்டிருந்த முகவரியை தேடிக் கண்டுபிடித்துச் சென்றுவிட்டனர்.

யாருமே இல்லாத அநாதைகளுக்கு மட்டும்தான் இங்கே இடம் என்று இல்லத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெண்களை வெளியே போகச்சொன்னார்கள். அதுமட்டும் இல்லாமல் அவர்களுக்கும் கிடைக்கும் நிதியில் ஏற்கனவே அங்கே தங்கியிருக்கும் ஆதவற்றோர்களை கவனிக்கவே போதவில்லை என்று கூறினார்கள். தங்களால் ஊருக்கு திரும்பிப் போகமுடியாது, தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்று இரண்டு பெண்களும் அழுது புலம்பி அங்கேயே உட்கார்ந்தனர். மனமிறங்கிய இல்லத்தினர் தங்க இடம்கொடுத்து அவர்களுக்கு தையல் பயிற்சி அளித்தனர்.

அதற்குபின் இரண்டு பெண்களும் தூங்கும் நேரத்தில் பெருங்கனவுகளை பேசிக்கொண்டிருந்தனர். அந்த இல்லத்தைவிட்டு வெளியேறி எப்போதும் வாகனங்கள் இரைந்தோடிக்கொண்டிருக்கும் நகரத்தின் மையத்தில் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆறுமாத காலத்தில் தையல் பயிற்சி முடித்த அவர்கள் பெரிய துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டி பகலெல்லாம் நகரத்தில் அலைந்துகொண்டிருந்தார்கள். அந்த மாதிரியான நேரங்களில் பைக்கில் ஆண்களை கட்டிப்பிடித்து பறக்கும் பெண்களை பார்த்து ஏங்கினார்கள். சினிமா தியேட்டருக்குள் உள்ளே போகாமல் வெளியே இருந்தபடி சந்தோசமாக பேசி சிரித்துக்கொண்டிருக்கும் மனிதர்களை உற்றுநோக்கினார்கள். அவர்களைப்போல் தங்களுடைய சந்தோஷம் எதில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறியும் நோக்கில் அவர்கள் தேடுதல் நகர வீதிகளில், பிரமாண்டமான கட்டடங்களில், வாகன நெரிசல்களில் தொடர்ந்துகொண்டிருந்தது.

ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாத நிறத்தில் பாவாடை தாவணி அணிந்திருந்த பெண்கள் இருவரும் சங்கர் வேலைபார்த்த அந்த பிரமாண்டமான கடைக்குள் நுழைந்தார்கள். அந்தக் கடையில் வேலை கேட்பதே அவர்கள் நோக்கமாக இருந்தது. தாங்கள் அணிந்திருக்கும் கவனமில்லாத ஆடைகளை பார்த்து யாரும் வேலை தரமாட்டார்கள் என்று முடிவுசெய்து ஒரு புதுச் சுடிதாரை வாங்கும் பொருட்டு அந்த கடைக்குள் நுழைந்தார்கள்.

அன்று சுடிதார் செக்ஷனில் தள்ளுபடி போட்டதால் பெருங்கூட்டமாக இருந்தது. துணியை மடித்துக் கொண்டிருந்த சங்கரை கஸ்டமர்களை கவனிக்குபடி அங்கே அனுப்பினார் சூப்பர்வைஸர். அதை நிரந்தரமாக பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் வரிசையாக தொங்கவிடப்பட்டிருக்கும் துணிகளுக்கு மத்தியில் புன்னகையை வரவழைக்கும் பாவனையில் நின்றுகொண்டிருந்தான். முந்நூறு ரூபாய் மதிப்புள்ள சுடிதார் எண்பது ரூபாய் என்று போடப்பட்டிருந்த சுடிதார் செக்ஷனுக்கு வந்த பெண்கள் எல்லாம் துணியில் தரத்தை பார்த்துவிட்டு அந்த இடத்தைக் கடந்துகொண்டிருந்தார்கள்.

இவனிடம் எதுவும் பேசாமல் எண்பது ரூபாய் சுடிதார்களை ஆசையோடு வெகுநேரம்
தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்த ராஜலட்சுமியும் கவிதாவும் ஆளுக்கொரு சுடிதாரை தேர்வு செய்து பில்போடுமாறு அவனிடம் கொடுத்தனர். அவர்கள் இருவருக்கும் அந்த சுடிதார் பொருத்தமாக இருக்கும் என்று அவன் சொல்ல நினைத்தான். பின்பு எதுவும் சொல்லாமல் கவுண்டரை நோக்கி அவன்போக பின்னாடியே போன இருபெண்களும் தங்களிடம் இருந்த பணத்தை தேடித் தடவிக் கொடுத்தார்கள். பஸ்ஸுக்கு செல்ல பணம் மீதமிருக்கிறதா என்பதை பலதடவை உறுதிசெய்த பின்னரே பணத்தைக்கொடுத்தார்கள். அவர்கள் சிரித்த முகத்தோடு பையை வாங்கிச் செலவதையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

முன்பு போல் இல்லாமல் கொஞ்சம் சுமாராக துணிகளை விற்பனை செய்திருப்பதால் சங்கர் இனி தன்னை விற்பனை செக்ஷனிலே போடுவார்கள் என்று நம்பினான். ஆனால் அடுத்த நாளும் அவனை துணியை மடித்துவைக்குமாறு சூப்பர்வைஸைர் சொல்லிவிட்டார். கொஞ்ச நேரம் பதில் சொல்லாமல் அவர் கண்களையே பார்த்துக்கொண்டிருந்த சங்கர் ,தன்னால் நிற்க முடியவில்லை மயக்கமாக வருகிறது இன்று விடுமுறை வேண்டுமென்று கேட்டான். கீழேபோய் மேனேஜரிடம் கேட்டுவிட்டு போகுமாறு சொன்னார்.

அவன் கீழே இறங்கி செல்ல, அங்கே நேற்று சுடிதார் வாங்கிச் சென்ற பெண்கள் அந்த சுடிதாரை அணிந்துகொண்டு மேனேஜரிடம் தங்களுக்கு இந்தக் கடையில் வேலை கிடைக்குமா என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவன் நினைத்தது போலவே அந்த பெண்களுக்கு சுடிதார் பொருத்தமாக இருந்தது. உடனடியாக அதை அவர்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தான். இவன் நிற்பதை பார்த்த மேனேஜர் மிகக் கேவலமாக முகத்தை வைத்துக்கொண்டு என்ன என்று கேட்டார். இவன் விவரம் சொல்ல, செய்யுற வேலைக்கு லீவு வேற... போ என்று அவமரியாதையாக அனுப்பி வைத்தார். இதற்குமேல் இங்கே வேலையைத் தொடரமுடியாது என்று அவனுக்குத் தோன்றியது. வாங்கும் சம்பளம் தங்கும் இடத்திற்கு சாப்பாட்டுக்குமே போதவில்லை. சேமிப்பு என்று எதுவுமில்லை. பணத்திற்கு என்ன செய்வது என்று யோசித்தபடி அங்கிருந்து நடந்தான். 'இங்கே வேலை எதுவும் இல்லமா' என்று கறாரான குரலில் மேனேஜர் கத்த அந்த பெண்கள் இவனை பின்தொடர்ந்து கடையை விட்டு வெளியேறினார்கள்.

எங்கே போவது என்று தெரியாமல் பஸ் ஸ்டாண்ட்டில் சிமெண்ட் திட்டில் அமர்ந்து ஒவ்வொரு பஸ்ஸாக கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்த சங்கர் ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறிக்கிளம்பினான். புகையோடு வெக்கையைக் கிளப்பிக்கொண்டு சென்ற பஸ்ஸின் ஜன்னல் ஓரத்திலிருந்து பார்த்தான் அந்த பெண்கள் இருவரும் பஸ்ஸ்டாண்டில் சிமெண்ட் திட்டில் அமர்திருந்த இரண்டு இளைஞர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்படியே பஸ்ஸிலிருந்து இறங்கி அவர்களிடம் பேசலாமா என்று யோசித்தான். ஏனோ அந்தப் பெண்கள் அவனுக்கு மிக நெருக்கமான தோழிகளைப்போல் தோன்றினார்கள். அவன் யோசிக்கும்போதே பஸ் அங்கிருந்து நகர்ந்து தன் பங்குக்கு நகரத்தின் வெப்பத்தை கூட்டியபடி பாலத்தின் மேலே போய்க்கொண்டிருந்து. அவன் பெயர் தெரியாத நிறுத்தங்களில் பஸ்ஸிலிருந்து இறங்கி ஏறிக்கொண்டிருந்தான். மீண்டும் பஸ், ரயில் என மாறி மாறி வெறிகொண்டு அலைந்தான் .

நகரம் விரித்த வலையில் வசமாக மாட்டிக்கொண்டதாக நினைத்த அவன் பயணம் இலக்கில்லாமல் சென்றுகொண்டிருந்தது . ஓயாமல் எங்கேயோ நடந்து போய்க்கொண்டிருக்கும் மக்கள். நிரம்பி வழியும் ரயில், பஸ் நிலையங்கள். இரவெல்லாம் ஒளிரும் விளக்குகள் இப்படி எல்லாம் அவன் வாழ்வை மாற்றிவிடும் என்றிருந்தான். நாள்கள் செல்ல செல்லத்தான் நகரத்தின் சூழ்ச்சி புரிந்தது. தன்னைப்போல் தனிமை கொண்டு அலையும் மனிதர்களையும் நகரம் விடாமல் பிடித்திருக்கிறது என்பதையும் அதே ரயில், பஸ் நிலையங்களின் மதிய வேளைகளில் கண்டுகொண்டான். தனித்துவிடப்பட்ட பிச்சைக்காரன், பிச்சை எடுப்பவனையே பார்த்துக்கொண்டிருக்கும் மனிதன், ஒவ்வொரு ரயிலையும் தவறவிட்டு தண்டவாளங்களை வெறித்தபடி பார்த்துக்கொண்டிருக்கும் பெண் என்று கைவிடப்பட்டவர்களை நகரம் தன்னுள் வைத்து சிரித்துக் கொண்டிருக்கிறது.

வெயில் நீங்கிய மாலையிலும் வெம்மை தாக்கிக்கொண்டிருந்தது. வியர்வையில் நனைந்து உப்பு பரிந்த சட்டை கசகசப்பையும் அரிப்பையும் தந்தது. நிராகரிப்பின் வலி அவனை உள்ளுக்குள் கிளர்தெழச் செய்தது. முழுதாக வெளிச்சம் மறையக் காத்திருந்தான்.





பஸ் ஸ்டாண்டில் பார்த்த இளைஞர்கள் வேலை வாங்கித் தருகிறோம் என்று சொல்ல ராஜலட்சுமியும் கவிதாவும் அவர்களுடன் சென்றார்கள். எக்ஸ்போர்ட் கம்பெனியிலே நாளைக்கே வேலை கிடைச்சுடுமா என்று நம்பமுடியாதவளாய் திரும்பத் திரும்ப அந்த இளைஞர்களைக் கேட்டுக்கொண்டே வந்தாள் கவிதா. ரோஸ் கலர் சட்டை போட்ட இளைஞன் தனக்கு காதலனாக கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த ராஜலட்சுமி அவன் பெயரைக் கேட்டாள். அவன் அவள் கைகளை பிடித்து சுரேஷ் என்றான். அவள் கைகளை பின்னால் இழுத்து வெட்கத்துடன் சிரித்துக்கொண்டாள். நீல கலர் பனியன் அணிந்த இளைஞன் கவிதா கேட்காமலே என் பேர் ரமேஷ் என்றான். இரண்டு பெண்களும் ஏதோ ஜோக்கை கேட்டது போல் சுரேஷ், ரமேஷ் என்று அவர்களின் பெயர்களைச் சொல்லி சிரித்தார்கள். பின்பு நகரத்து காதலர்களைப்போல சினிமாவுக்கு போனார்கள். இளைஞர்களை தங்கள் காதலர்களாக நினைத்துக்கொண்ட பெண்கள் படம்பார்க்கும்போது கைகளை பிடித்துக்கொள்ளச் சம்மதித்தார்கள். இடைவேளையில் ஐஸ்க்ரீம் வாங்கிச்சாப்பிட்டார்கள்.

கடற்கரை, ஸ்பென்சர் என்று நேரம் போவது தெரியாமல் இளைஞர்களின் பின்னால் போய்க்கொண்டிருந்தார்கள். அந்த பெண்களுக்கு நகரம் மிகச் சுதந்திரமானதாகத் தெரிந்தது. இருட்டில் நகரம் இன்னும் அழகாக இருப்பதாக நினைத்தார்கள். நகரத்தின் நடுவில் ஓடிய கூவம் ஆறும், அதைச் சுற்றிய குடிசைகளும், பழைய அடுக்குமாடிக் கட்டடங்களும் அவர்களுக்கு வசீகரமாகவே தெரிந்தன. நகரத்தின் மாயவலைகள் கால்களைச் சுற்ற, புதிர்களை அவிழ்க்கும் விடையாக இரவை நினைத்தார்கள்.

இருட்டின் நிறமும் நகரத்தின் வெளிச்சமும் சங்கரின் தனிமையை அதிகப்படுத்தியது. இனி யாரிடமும் கைகட்டி நின்று பேசி சிரிச்சு வேலை பார்க்க கூடாது. ஆனால் பணத்தை எப்படியாவது சம்பாதித்து விடவேண்டும் என்று முடிவெடுத்தான் சங்கர். வெளிச்சம் குறைந்த நகரத்தின் புறநகர் பகுதியில் யாருக்கோ காத்திருப்பதைப்போல் இருட்டில் நின்று தன்னைக் கடந்து செல்லும் பெண்களின் கழுத்தை பார்த்துக்கொண்டிருந்தான். ஒடிசலான தேகம் கொண்ட ஒரு பெண் ரோட்டில் நடந்து செல்கிறோம் என்ற பிரஞ்ஞையே இல்லாமல் போய்க்கொண்டிருந்தாள். பஸ் நெரிசலில் பின்னால் நின்று இடித்தவனின் கோர முகமோ, புழுக்கம் குடிகொண்டிருக்கும் சமையல் அறையின் வாசனைபற்றியோ, அல்லது ராத்திரி படுக்கையில் கேட்கப்போகும் கணவனின் வசைச்சொல்லோ ஞாபகத்தில் வந்து அவளை கலக்கமுறச் செய்திருக்கலாம். தன் கழுத்தில் விழுந்த கைச் செயினை அறுத்துக்கொண்டு ஓரடி முன் வைக்கும்வரை அவள் எதையும் உணரவில்லை. அந்தப் பெண்ணைத் திரும்பி பார்த்தபடி ஓடத்துவங்கினான்.

அவள் கண்களில் தெரிந்த மிரட்சியையும் சோகத்தையும் பார்த்த அவனால் வெறிகொண்டு ஓட முடியவில்லை. நடை தளர்ந்தது. அவன்
பின்னால் கூக்குரலுடன் ஆட்கள் ஓடிவந்துகொண்டிருந்தார்கள். எப்படி கீழே விழுந்தோம் என்றே தெரியாமல் அவன் முதல் திருட்டில்
பிடிபட்டான். அன்று முழுதும் அவன் சாப்பிட்டிருக்கவில்லை.

புறநகர் காவல் நிலையத்தில் பிளந்த உதடுடன் மூலையில் உட்கார்ந்திருந்தான். அவன் கடையில் சுடிதார் வாங்கிய ராஜலட்சுமியும் கவிதாவும் கிழிந்த நாராய் அவன் பக்கத்திலிருந்த மரபெஞ்சில் கிடத்தப்பட்டனர். நேற்று முழுவதும் அந்தப் பெண்களுடன் சுற்றிய முன்பின் தெரியாத அந்த இளைஞர்கள், நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் ரயில்வே தண்டவாளத்தின் பின்புறமிருந்த புதருக்கு அடியில், இரு பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அதோடு அடங்காத வெறிபிடித்த நாய்கள் அவர்களின் மற்ற நண்பர்களையும் வரவழைத்து பெண்களை நாசம் செய்திருக்கிறார்கள். அந்தப் பெண்கள் தங்கள் சக்தியெல்லாம் ஒன்று சேர்த்து கத்த பக்கத்தில் செங்கல் சூளையில் வேலை பார்த்தவர்கள் வந்து காப்பாற்றி இருக்கிறார்கள்.

'எவன் கூப்பிட்டாலும் பின்னாடியே போயிருவீங்களா? அப்படி உடம்பு தெனவு எடுத்து போய் திரிஞ்சிருக்கீங்க...இன்னும் வாய் கூசும் கெட்ட வார்த்தைகளால் பெண் காவலர்கள் இருபெண்களையும் ஏசினார்கள். கூனி குறுகி அவமானத்தில் நெளிந்த பெண்களின் கண்களிலிருந்த கனவு முற்றிலுமாக தொலைந்திருந்தது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சங்கரை போலீஸ் வேனில் ஏற்றினார்கள். அவனுக்கு எதிர் இருக்கையில் ராஜலட்சுமியையும் கவிதாவையும் அமரவைத்திருந்தார்கள்.. தன்னை துணிக்கடையில் பார்த்தது அந்த பெண்களுக்கு ஞாபகத்தில் இருக்க வாய்ப்பில்லை என்றே அவனுக்குத் தோன்றியது. அவர்கள் உணர்விழந்து நொறுங்கிக்கிடந்தார்கள். அந்தப் பெண்களை பெண் காவலர்கள் அரசு மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றார்கள். இப்போது நகரம் அவர்களுக்கு சாப இடமாக காட்சியளித்தது. நகரத்தின் எந்த மூலையிலிருந்தும் கொடும் வாள்கள் தங்கள் மீது பாய்ச்சப்படலாம் என்று பயப்பட்டார்கள்.

நேற்று பஸ்ஸிலிருந்து இறங்கி அந்தப் பெண்களிடம் பேசியிருந்தால் இன்றைய நிகழ்வு எதுவுமே நடந்திருக்காது என்று சங்கர் நினைத்தான். நகரத்தின் தார்ச்சாலையெங்கும் அவன் தனிமையையும் பயத்தையும் பரப்பியபடி வாகன நெரிசலில் போய்க்கொண்டிருந்தது போலீஸ் வேன். இன்னும் இன்னும் மனிதர்களை உள்ளிழுக்கும் வசீகரத்துடன், பரபரப்பாகவும் பகட்டாகவுமே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது நகரம்.

கருத்துகள் இல்லை: