ஞாயிறு, 29 ஜூலை, 2012

நட்சத்திரங்களை ப்ரசவிப்பவள்


துயர் நிரம்பிய மாலை
எம்பிக் குதிக்கும் உன் நினைவுகள்
பிரகாசமாய் துளிர்க்கிறது பேரன்பு பெருமழையாய்
ஒளி குறுகி நீளும் இரவு
இரவினைக் கொண்டாடும் நட்சத்திரம் மிகுந்த வானம்
இதயக்கூட்டுக்குள் அற்புதவாதையாய் ஒடுங்கிக்கொண்டாய்
என் சிறுபூனையே
கணத்தில் நிறமாறுகிறது                
இத்தருணத்தின் மகிழ்ச்சியின் ஆழ்ந்த ஒளியை
பத்திரப்படுத்துகிறேன்
விலகிச் செல்லும் நிழலினைப் போன்ற நீ
காரிருள் சூழ்ந்துகொள்ளும் நாளினை பரிசளிப்பாய்
அப்போது மரணித்தவளின் அகன்று விரிந்திருக்கும் விழியில்
உன்னை வழியனுப்பி வைப்பேன்
வெளியேறிச் செல்லும்போது தாவிஓடி
என்னைப் பதற்றப்படுத்தாதே
மென் பாதச்சுவட்டை
என் இதயத்தில் ஆழப்பதிந்தே வெளியேறலாம் அன்பே
அவை ப்ரியத்தின் குட்டி குட்டி நட்சத்திரங்களை
தினம் தினம் ப்ரசவிக்கும்.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

(உங்கள் தளத்திற்கு முதல் வருகை என்று நினைக்கிறேன்.)

நன்றி.

chandra சொன்னது…

நன்றி தனபாலன்.

சாய் ராம் சொன்னது…

இரவினைக் கொண்டாடும் நட்சத்திரம் மிகுந்த வானம்

எனில்,
இருளினைக் கொண்டாடும் நட்சத்திரங்களற்ற வானம்?

...

இருளினைத் தழுவிக் கொள்ளும் நட்சத்திரங்களற்ற வானம்...?

...

வானத்தின் நிறத்தை மாற்ற முயல்கிறதா நட்சத்திரங்கள்? ... பல பல யுகங்களாய்? தன் கவிதையைத் தேடும் கவிஞன் போல?