புதன், 29 பிப்ரவரி, 2012

2006 ல் என் சிறுகதைக்கு வந்த முதல் வாசகர் கடிதம்

இல்லோடு. 4.9.2006.
அன்புள்ள சகோதரி சந்திராவுக்கு,
உங்களுடைய ’புளியம் பூ’ கதையை காலச்சுவடு இதழில் வாசித்தேன். சிறப்பாக இருந்தது. படித்தபின் உங்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டேன்.

கதை கூறும் முறையும்,சொற்பிரயோகமும் கதைக்குள் சரியாகப் பொருந்தும்படி அமைந்துள்ளன. இந்தக் கதையில் இரண்டு அம்சங்கள் சிறப்பாக பதிவாகியுள்ளன. ஒன்று, கதை சொல்லியின் குழந்தை பருவத்து மனது. இன்னொன்று, அப்பாவின் மனம். பேருந்து பயணத்திற்காகவே காட்டிற்குச் செல்ல ஆசைப்படுவது, காட்டில் வேலை செய்யும் ஆட்களைப்போல் முடி தெரியாமல் இருக்க தானும் தலையில் துண்டு கட்டிக்கொள்வது,அங்கு அப்பா கட்டிய குடிசை தான் தட்டங்குச்சியில் செய்யும் பொம்மை போலத் தெரிவது,இரவு நேரத்தில் காட்டில் ஏற்படும் பயம்,லீவு லெட்டர் எழுத வேண்டுமென்பதற்காக தான் ஆசைப்பட்ட பொருட்கள் வாங்குவதற்காக வைத்திருந்த காசை அண்ணனிடம் கொடுப்பது,கன்னிமார் சாமிமேல் பொறாமைப்படுவதற்கான காரணம்,மாயாண்டி தாத்தாவிடம் கேள்வி கேட்பது என கதைசொல்லியின் குழந்தை பிராயத்து மனம் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கதையின் பெரும்பாலான பகுதியை அப்பா பாத்திரம் வியாபித்துள்ளது. புளியங்கன்னுகளை நடுவதற்கான ஆசையிலிருந்து தொடங்கி அவரது உழைப்பு, அதன் பலனாகக் கிடைத்த மகிழ்ச்சி,தோப்பை விற்கும்போது மனதை சுக்குநூறாகத் தகர்த்தெரியும் துக்கம்,தவிப்பு, தோப்பை விற்கச்சொல்லும்போது மகனின் மீதான கோபம் என அப்பாவின் எல்லா உணர்வுநிலைகளும் இக்கதையில் சிறப்பாகப் பதிவாகியுள்ளன.

அண்ணனின் பொறுப்பின்மை,அலட்சியம் ஆகியவையும் நல்ல பதிவு.எனினும்,இவரது குணாம்சங்களை மேலும் சற்று விரிவுபடுத்தியிருந்தால் கதையின் அழுத்தம் இன்னும் கூடியிருக்கும் என நினைக்கிறேன்.

‘என் நோக்கில் வாழ்க்கையை கற்பனை மூலம் மறுநிகழ்வு செய்துகொள்வதற்குப் பெயர்தான் இலக்கியம்’ என்பார் ஜெயமோகன். உண்மைதான். இக்கதையிலும் கதைசொல்லியின் குழந்தைப் பருவத்து நிகழ்வுகள் சிறப்பாக மறுநிகழ்வு செய்யப்பட்டுள்ளது. கிராமிய வாழ்வியல் போலித்தனமின்றி இக்கதையில் பதிவாகியுள்ளது. இந்த ஒரே கதையை மட்டும் படித்துவிட்டு உங்களின் ஒட்டுமொத்தப் படைப்புத்திறனை நிர்ணயிக்க இயலாது என்றாலும்,சிறந்த எழுத்தாளருக்கான படைப்புக் கூறுகள் இக்கதையில் பெரும்பாலும் செம்மையாக இருப்பதாக நான் உணர்வதால் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

கிராமிய வாழ்வியலை சிறப்பாக வெளிப்படுத்துவதில் இன்றைய இளம் படைப்பாளிகளில் கண்மணி குணசேகரன் நிறைய சாதனைகளைச் செய்திருக்கிறார். இவரது அனைத்துச் சிறுகதைகளையும் வாசித்துப்பாருங்கள்.இன்னும் பல முக்கிய ஆளுமைகளின் படைப்புகளைத் தொடர்ந்து வாசிப்பது நமது ஆளுமையை மென்மேலும் செலுமைபடுத்திக்கொள்ள உதவும்.
காலை நேரத்தில் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டது உங்களுக்கு கொஞ்சம் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கும் என நினைக்கிறேன். உங்களுடன் பேசுவதற்கு முந்தைய நாள் இரவு தொடர்புகொண்டேன். நீங்கள் அப்போது இல்லாததால் மறுநாள் காலையில் தொடர்புகொள்ள வேண்டியதாயிற்று.

நான் சமீபத்தில் வாசித்த காலபைரவனின் ‘புலிப்பானி ஜோதிடர்’ சிறுகதைத் தொகுப்பை உங்களுக்கு அனுப்புகிறேன். இத்துடன் சிறந்த இலக்கிய விமர்சகரான சி.மோகனின் ‘காலம் கலை கலைஞன்’ நூலையும் அனுப்புகிறேன். இந்நூல் இலக்கியம் குறித்தான புரிதலை ஆழப்படுத்திக்கொள்ள உதவும். தொடர்ந்து இலக்கிய இதழ்களில் படைப்புகளை வெளியிடுங்கள்.வாழ்த்துகள்.

அன்புடன்
தீ.அருண் பிரசாத்.
தீ.அருண்பிரசாத்
இல்லோடு அஞ்சல்,விழுப்புரம் மாவட்டம்..

2 கருத்துகள்:

ஒ.நூருல் அமீன் சொன்னது…

தீ.அருண் பிரசாத் அழகாக இலக்கிய தீயை முட்டி இருக்கிறார்.அடுத்த கதையை காணோமே? சகோ!

வியபதி சொன்னது…

இவருடைய கடிதம் வெறும் பாராட்டு மடலாக மட்டம் இல்லாமல் இலக்கிய உலகுக்கு ஒரு வழிகாட்டியாகவும் உள்ளது