வெள்ளி, 30 செப்டம்பர், 2011
அறைக்குள் புகுந்த தனிமை
இன்று பிற்பகல் சுவற்றோடு கரைந்த வெறுமையில் உப்பைப்போல் அவளுடல் வெக்கை கொண்டிருந்தது. தன்னிலை கொள்ளமுடியாமல் கண்கள் அலைந்தோய்ந்து கொண்டிருந்தன. அலைபேசியில். நீண்ட யோசனைக்குப் பின்பாகவே அவள் தன் தோழிக்கு போன் செய்தாள். பேசத் துவங்கிய சில நொடிகளிலேயே அவர்கள் இருவரும் ஒரே மனநிலையில் இருப்பது தெரிந்தது. பொதுவான விசாரிப்புகளுக்கு பிறகு மெளனமாகவே இருந்தார்கள். இருவரின் மனதிலும் வெறுமையின் மிகநீண்டதொரு வரைபடம். எங்கேயாவது வெளியில் செல்லலாமா என்று கேட்டாள் அவள். ’வேலை விசயமா இன்னைக்கு ஒருத்தரை பார்க்கிறேன்னு சொல்லியிருக்கேன்.அஞ்சு மணிக்கு பஸ் ஸ்டாப்ல நிற்கிறேன் வந்து கூட்டிட்டு போ. உன்னை பார்த்துட்டு அப்படியே அவரை பார்க்கப்போறேன்’ என்றாள் தோழி.
பஸ் ஸாடப்பில் நின்று கொண்டிருந்த தோழியை தன் ஸ்கூட்டியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டாள். ’க்ளைமேட் அழகா இருக்குல்ல’ . ஆமாம் என்று அவளுக்கு பதில் சொல்கையில் இருவரின் மனமும் லேசாக மகிழ்ந்தது. பாலத்தில் ஏறும் போது ஏதோ காற்றில் பறப்பதாக நினைத்து கைகளை விரித்துக் கொள்ள நினைத்தாள். டீசலப்பிய காற்று வேகமாய் தீண்டிச்செல்லவும் சில நொடி முகத்தை இடது பக்கமாகத் திருப்பி மீண்டும் சாலையைப் பார்த்தாள். தோழி மெதுவாக அவள் தோளை தொட்டு ’இந்த பாலத்தில் இப்படி உன்னோடு வர்றது என்னமோ மனதிற்கு மிகப்பெரிய சுதந்திர உணர்வையும் நம்பிக்கையும் கொடுக்குது’ என்றாள். தோழியுடைய வார்த்தைகள் அவளை உற்சாகப்படுத்தியது. அருகருகே அவளை நெருங்கிச் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தவில்லை. அப்படி வாகனங்களுக்கிடையே செல்வது அவளுக்கு ஆனந்தமாகவே இருந்தது. இப்படியொரு பயணம் எப்பபொழுது வேண்டுமானாலும் அவளுக்கு சாத்தியமாகலாம். ஆனால் ஏனோ அப்படிச் செய்யாமல் அறைக்குள் உறைந்து கிடக்கவே விரும்புகிறாள். மனம் நெருக்கடியில் தவிப்பதை விரும்புகிறாள் போல. மரண அவஸ்யையைவிட கொடுமையான தனிமையின் கணங்களை அதே வாதையோடு அனுப்பவிக்கிறாள். முரண்டு ஓடும் மனம் நிர்கதியற்று ஒரு புள்ளியில் வந்து நிற்கும் போது கண்கள் பஞ்சடைத்து மனம் சக்கையைப்போல் அறையில் மூலையில் கிடக்கும். யாருடனும் பகிர்ந்து கொள்ளப்படாத நெருக்கத்தை அன்பை வாஞ்சையோடு தடவி மீண்டும் அறையின் மூலையில் எரிந்துவிடுகிறாள். திருப்திபடுத்த முடியாத வாழ்வை விட்டகழ்வதும் முடியாதென உணரும் பொழுதில் யாரிடமாவது பேசத் துணிவாள். அப்படித்தான் அன்று தோழியை அழைத்தாள். பின்புதான் தெரிந்தது அவளும் இதே மனநிலையில் இருப்பது.
எங்கு செல்வது என்று தோழியிடம் கேட்டாள். அவள் பதில் சொல்லாது காற்றை நுகர்ந்து கொண்டிருந்தாள். தோழி தன்னோடு பயணப்பட விருப்பம் இல்லாமல் இருக்கிறாளோ என்று சந்தேகம் வர ’நீ யாரையோ பார்க்கனும்னு சொன்னியே எங்கன்னு சொல்லு அங்க உன்னை எறக்கிவிட்டுறேன்’ என்றாள். ’நீ எங்க போற’ என்று கேட்டாள் தோழி. பதில் சொல்லாது கொஞ்ச நேரம் யோசித்தவள் ’உன்னை எறக்கிவிட்டுட்டு அப்படியே பீச்சுக்கு போறேன்’ என்றாள். தோழி உடனே, ’நானும் வர்றேன். அந்தாளை கொஞ்ச லேட்டா பார்த்துக்கிறேன்’ என்றாள். இருவரும் கடற்கரை ரோட்டை அடைந்தார்கள். ’இந்தப்பக்கம் வந்த ரொம்ப வருசமாச்சு’ என்ற தோழி ’நான் இப்போ சந்தோசமா இருக்கேன்’ என்றாள். அவள் எந்த கேள்வியும் கேட்காமல் சிரிக்க, ’இந்த சூழல் நல்லாருக்கு. இந்த ரோடு இவ்வளவு அழகா இரும்னு நெனைக்கல’ என்றாள் . வண்டியை நிறுத்திவிட்டு காந்திசிலைக்கு அருகே போய் உட்கார்ந்துகொண்டார்கள். ஏதோ வேறு தேசத்தில் இருப்பதைப்போன்று இருவருக்கும் ஒருவித உணர்வு. புறவெளியின் இயக்கத்திலிருந்த யாரும் அவர்கள் மனதில் பதியவில்லை. அவர்களைத் தவிர மற்றவர்கள் பேசியது எல்லாம் காற்றில் கரைந்து கொண்டிருந்தது. தோழி அவளைப் புகைப்படம் எடுக்க விரும்பினாள். அவள் விருப்பத்துடன் இயைந்து கொடுத்தாள். தான் அழகாக இருக்கும்படியான போஸ்களை மிக கவனத்துடன் செய்தாள். அவளின் அந்தக் கவனமும் ஒத்துழைப்பும் தோழியை உற்சாகப்படுத்தியது. பத்துக்கு மேற்ப்பட்ட புகைப்படங்களை எடுத்தாள். போதும் என்று சொல்லி அந்த இடத்தைவிட்டு எழுந்து தோழியை காந்தி சிலைக்கு கீழே திண்டில் உட்காரச் சொன்னாள். அவள் நீண்டகாலமாய் பாதுகாக்கப்படும் ஓவியத்தைப்போல் கண்ணில் மட்டும் உயிர்ப்பை தேக்கி அசையாது அமர்ந்தாள். அவளை மேலும் நான்கு புகைப்படங்கள் எடுத்துவிட்டு வெளிச்சம் போதவில்லை என்றாள். இருவரும் பேசியபடியே அங்கிருக்கும் கடைக்குச் சென்றனர். தோழியின் இடது கையைப் பற்றியபொழுது அவளின் கை குளிர்ந்து போயிருந்தது, ‘சுத்தி இருந்தவங்க எல்லாம் போட்டோ எடுக்கிறதையே பார்த்துகிட்டிருந்தாங்க. அதான் போதும்னு சொல்லிட்டேன். அதுவும் இல்லாம லைட் வேற இல்ல’ என்றாள். தோழி எடுத்த புகைப்படங்களை பார்த்தாள். அவள் விரும்பிய அழகில் இருந்தது. திருப்திபட்டுக்கொண்டாள். ஏதோ நிம்மதி இருந்தது அதில். ’வாழ்க்கையோட போதாமையே திருப்தி இல்லாம இருக்கிறதுதான். நாம எதையாவது செஞ்சு அதை போக்கிடனும். இல்லன்னா நாம எப்பவும் துன்பபட்டுகிட்டுதான் இருக்கனும்’ புகைப்படங்களை பார்த்துக்கொண்டு வந்த அவள் தோழியின் பேச்சை கேட்கும் பொருட்டு அதை மூடி வைத்தாள். ஏனோ அவள் அதற்கு மேல் அந்த பேச்சை தொடர விரும்பாமல் அந்த கடைக்கு செல்வதை மட்டும் கவனமாகச் செய்தாள். இருவரும் மிக முக்கியமான ஒன்றை அடைவதைப் போன்று அந்த கடையைச் சென்றடைந்தார்கள். கடல் பற்றியோ கடலுக்கு அருகே செல்வது பற்றியோ இருவரும் பேசிக்கொள்ளவில்லை. கடலைச் சுற்றிய காட்சிகள் வெறும் காட்சிகளாகவே இருந்தது. அதைபற்றிய எந்த அவதானிப்பும் அவர்கள் மனதில் இல்லை.வெறும் மனிதர்கள்,கடைகள்,கடல் அடங்கிய இடமாக மட்டுமே அந்த இடத்தை உணர்ந்தார்கள்.
இருவரும் அந்தக் கடைக்கு முன்னால் போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்தார்கள்.அவள் சென்னாவும்,தோழி சீஸ் பிரட்டும் ஆர்டர் செய்தார்கள். அவர்கள் மனதிற்குள் கிடந்த கசப்புகள் அந்த நேரத்தில் எழவே இல்லை. வேலை, வாழ்வின் இருப்பு,சினிமா, இலக்கியம்,நண்பர்கள் எதை எதையோ பேசினார்கள். எந்த பேச்சிலும் ஆழ்ந்த பொருள் இல்லை. அப்படி இல்லாமல் இருக்குமாறு இருவரும் கவனமாக பார்த்துக்கொண்டார்கள். ஒரு விசயத்தின் ஆழமே அவர்கள் இருவரையும் பாதிப்பதாக இருந்தது. அதை உணர்ந்து மேலோட்டமாகவே பேசினார்கள். அங்கே இருப்பதற்கான தேவை தீர்ந்ததும் ஒரே நேரத்தில் இருவரும் கிளம்பலாமா என்றார்கள். அவள் தான் பார்க்க வேண்டிய நபரை காந்தி சிலைக்கு வரச்சொல்லி அங்கே வந்ததும் போன் செய்யச் சொன்னாள். அவர் அலுவலகம் கடற்கரைக்கு பக்கத்திலேயே இருந்ததால் பத்து நிமிடத்தில் வருவதாகச் சொன்னார் அவர் வரும் வரையில் வாகனம் நிறுத்தும் இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். விடைபெறும் தருணத்திலும் முக்கியமான எதையும் அவர்கள் பேசிவிடவில்லை. அடுத்த பத்துநிமிடத்தில் அந்த நபர் போன் செய்ய தோழி ’இதோ பக்கத்திலிருக்கிறேன் வந்துவிட்டேன்’ என்றாள். ’அவரை பார்த்துட்டு போறியா’ என்றாள் அவளிடம். அவள் ’இல்ல நான் பார்க்கல’ என்று சொல்லிவிட்டு தோழியை அனுப்பி வைத்தாள். தோழி அந்த இடத்திலிருது செல்வதை பார்க்கத் தோன்றவில்லை. கைப் பையிலிருந்த போனை எடுத்து அதில் வயரை பொருத்தி பாடலை ஓடவிட்டு காதில் வைத்து வாகனங்கள் இருக்கும் இடத்தைப் பார்த்தாள். இருபத்திமூன்று வயது மதிக்கதக்க ஒரு இளைஞன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இப்பெருநகரத்தில் இப்படியான பார்வைகளை எதிர்நோக்குதல் ஒன்றும் புதியதான விசயமில்லை. அதிலும் இவன் முகத்தில் தீர்க்கமுடியாதவொரு வெக்கையப்பிக் கிடந்தது. தயக்கமின்றி இவளுடலில் பார்வையை அலையவிட்டவன் இவள் நெருங்கி வருகையில் வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டான். அவளுக்கு உண்மையாகவே சிரிப்பு வந்தது. எப்படியும் அவன் அவளைவிட நான்கைந்து வயதாவது குறைந்தவனாக இருப்பான். அவள் அவனை கவனித்தபடியே அவள் வண்டி இருக்கும் இடத்திற்குச் சென்றாள். அவன் வண்டி இருந்த இடத்திலிருந்து ஒரு இருபது முப்பது வண்டி தாண்டியே அவள் வண்டி இருந்தது. இப்போது அவன் ஸ்டாண்ட் எடுத்து வண்டியில் உட்கார்ந்தான். அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஒரே சமயத்தில் தன்னுடல் முழுக்கவிருக்கும் வெறுமையும் அவனுடலில் தெரியும் பதட்டமும் ஏதோவொரு வகையில் ஒரேபுள்ளியில் மோதிச்செல்வதாயிருந்தது. அவன் தன்னை பின்தொடரப் போகிறான் என்பதை உடனே யூகித்துக்கொண்டாள். அவளுக்கு லேசான உற்சாகம் எழுந்தது. அவனால் அவள் வயதை கண்டுபிடிக்கத் தெரியவில்லையா இல்லை அவள் அணிந்திருக்கும் ஆடை அவனை அப்படி நினைத்திருக்கச் செய்திருக்கலாம். அல்லது அவனுக்கு வயது ஒரு தடையாக இல்லாமல் இருந்திருக்கலாம்.அவள் சிக்னலுக்காக காத்திருந்தாள், அவன் இவள் வண்டியை எடுப்பதற்காக காத்திருந்தான். அவனை கண்டுகொள்ளாமல் சிக்னல் விழுந்ததும் வண்டியை வேகமாக ஓட்டிப்போனாள். அவன் அவளுக்கு இணையாகவே வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான். ஹெட்போன் வழியாக கேட்டுக்கொண்டிருந்த பாடல் அவளை உற்சாகமூட்டியது. விரைந்து வண்டியை ஓட்டினான். அவனுக்கு தெரியாமல் அவனை கவனித்தபடி வந்தாள். அவன் இவளைத் தொடர்வதை நிச்சயமாக அவளைத் தவிர்த்து இன்னும் சிலரும் கவனித்திருக்கக்கூடும். தனது யவனத்தின் மீது பெருமிதம் கொள்ளமுடிந்தது அவளால். நிச்சயமாக அவனுக்கு சில வார்த்தைகளை பரிசளிக்க வேண்டுமென சிரித்துக் கொண்டாள்.
அவள் திரும்பிபார்க்காமல் எந்த சைகையும் செய்யாதபோதும் அவன் விடுவதாக இல்லை பின்னால் வந்துகொண்டே இருந்தான். ஞாயிற்றுகிழமை ஆதலால் நகரத்தின் சாலை வெறிச்சோடிக் கிடந்தது. கடற்கரை சாலையை கடக்கும்போது வெளிச்சமாகவே இருந்தது. அதைத்தாண்டி மேம்பாலத்தில் அவர்கள் சென்றபோது இருட்டத் தொடங்கியது. அவன் அவள் பக்கத்தில் வண்டியை ஓட்டியபடி சிரித்துக்கொண்டு வந்தான். மேம்பாலத்தில் வண்டியை செலுத்தி போகும்போதெல்லாம் அந்தரத்தில் பறப்பதைப்போலவே தோன்றும். ராட்டினத்தில் ஏறிய குழந்தை போலவே சிரித்துக்கொண்டாள். அவளுடைய சிரிப்பை தனக்கான சைகையாக பின்தொடர்ந்தவன் நினைத்துக் கொண்டான். அவளும் அதை கலைக்க விரும்பவில்லை. வண்டியை தி.நகரை நோக்கி ஓட்டினாள். ஒரு டீக்கடையை பார்த்து வண்டியை நிறுத்தினாள். ஜி.என்.ஜெட்டி சாலையில் மரத்துக்கு கீழே பிளாட்பாரத்தில் அந்த டீக்கடை இருந்தது.அங்கே போடப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் சேரில் தனியாக அமர்ந்து கண்ணாடி டம்ளரில் டீ குடிக்க அவளுக்கு பிடிக்கும். தெருவோர டீக்கடைக்கு அவள் போவதை நினைத்து ஆச்சர்யமாகி அவனும் வண்டியை நிறுத்தி அவள் பக்கத்தில் வந்து “நீங்க கவிதா ஃபிரண்ட்தானே கல்யாணத்தில் பார்த்தோமே ஞாபகம் இல்லையா ” என்றான். அவளால் இப்போது சிரிக்கமுடியவில்லை. அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தாள் விழிநரம்புகளெங்கும் காமத்தின் மெல்லிய சுவடுகள் வரியோடிக்கொண்டிருந்தன. அவன் சொற்கள் அவளுக்கு அபத்தமாகப்பட்டது. அவன் உடல் கொதித்து வெடித்துவிடத் தயாராயிருப்பதை முகத்தின் வெக்கை உணர்த்தியது. ’நீங்க நேரடியாவே நான் யாருன்னு கேட்கலாம்’. ’இல்ல தப்பா நெனைச்சுகாதீங்க எனக்கு அப்படித்தான் தோணுச்சு’ என்றான் அசடு வழிந்தபடி. ’டீ சாப்பிடுறீங்களா’ என்றாள்.அவள் திட்டப்போகிறாள் என்றிருந்தவனுக்கு அவள் அப்படிக் கேட்டதும் வியப்பாக இருந்தது. ’ஒகே’ என்று சொல்லிவிட்டு அவனே ஆர்டர் செய்தான். டீயை வாங்கிவந்து அவள் கையில் கொடுத்துவிட்டு ’சாரி நீங்க கவிதா ஃபிரண்டுன்னு நெனைச்சுதான் உங்க பின்னாடி வந்தேன்’ என்றான் மறுபடியும். அதற்கு மேல் அவள் எரிச்சல் அடைந்தவளாக ’ஆமாம் நான் கவிதா ஃப்ரண்டுதான்’ என்றாள். திரும்பவும் ஒரு அபத்தமான சாரியை சொல்லி ’இல்ல நீங்க கோபமாகிட்டீங்க போல அதான் கவிதா ஃபிரண்டுன்னு சொல்றீங்க’ என்றான். ’உங்க பிரச்னை என்ன நான் கவிதா ஃபிரண்டா இருக்கனுமா? இல்ல இல்லாமல் இருக்கனுமா எது உங்களுக்கு வசதி’என்றாள் அவன் முகம் சுருங்கிவிட்டது. அன்றைய பொழுதை அவள் நேசிக்க விரும்பினாள். யாரென்று தெரியாத ஒருவனிடம் பேசுவதும் கோபித்துக்கொள்வதும் இனம் புரியாத மகிழ்ச்சியைக் கொடுத்தது. இன்னும் கொஞ்சம் கடுமையாக பேசினால் அவள் இங்கேயே கழன்று கொள்ள நேரிடும். அதை அவள் விரும்பவில்லை. அவனை சகஜமாக்க ’எங்க வேலை செய்றீங்க’ என்றாள். அவன் பெயரைக் அவள் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை. அவள் பெயரையும் அவன் கேட்கவில்லை. அவன் எம்.பி.ஏ படித்திருப்பதாகவும் ஏதோ ஒரு கம்பெனியில் நிர்வாக பிரிவில் மேலாளராக இருப்பதாகச் சொன்னான். அவன் கழுத்தில் குறுக்காக ஒரு பையை போட்டிருந்தான். அதற்குள் லேப்டாப் இருக்கலாம். அவனுடைய அதிகாரித்தனமான ஆடை, பையை குறுக்காக போட்டிருந்தவிதம் எதுவும் ரசனைக்குரியதாக இல்லை. எந்தவித ஈர்ப்பும் அவளுக்கு அவனிடம் இல்லை. அவன் பின்தொடர்ந்து வருவதும் அவள் அத்தகைய சூழலில் இருப்பது மட்டுமே முக்கியமானதாக இருந்தது. டீக்கான காசை அவள் கொடுக்க அதை மறுத்து அவனே கொடுத்துவிட்டு வந்தான். அவர்கள் இருவரும் காதலர்கள் அல்லது தெரிந்தவர்கள் என்று கடைக்காரன் நினைத்திருப்பான், அவன் எந்தவித ஆச்சர்ய பார்வையும்யின்றி காசை வாங்கிக் கொண்டான். அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனை அவளிடம் இல்லை. வண்டியில் ஏறி அமர்ந்தாள். அவள் கை சாவிக்கு போகும்போது ’வாங்களேன் ரெஸ்டாரெண்ட் போய் சாப்பிட்டுட்டு போகலாம்’. மீண்டும் அவளுக்கு சிரிப்புதான் வந்தது. செய்வது சரியா தவறா என்ற யோசனையெல்லாம் இல்லை. ஏதோ ஒரு நெம்புசக்தி உந்தித்தள்ள ’சரி’ என்றாள். அந்த சூழ்நிலையில் உணர்ச்சிபிளம்பாக இருந்தாள். இத்தகைய செயல்கள் தனிமையை காலுக்கடியில் போட்டு மிதிப்பதாக நினைத்த அவள்மனதில் அதேசமயத்தில் தனிமையின் கூட்டை இன்னும் அகலப்படுத்திக்கொண்டிருப்பதாகவும் தோன்றியது. அவள் ஒரே நேரத்தில் இரண்டு எதிர் எதிர் உணர்ச்சி நிலைக்குள் இருந்தாள். எல்லா நினைவுகளையும் ஆயுதமின்றிக் கொலைசெய்ய தனிமையால் மட்டும்தான் எப்பொழுதும் இயல்கிறது. தன்னைத் தொடர்ந்துவரும் அந்த இளைஞன் யாராக இருப்பான்? எல்லா ஞாயிறுகளிலும் இதுமாதிரி புதுப்புது கவிதாவின் தோழிகளையோ அல்லது கவிதாக்களையோ பின்தொடர்பவனாக, அவர்களோடு சல்லாபித்து அந்த தினங்களின் இரவுகளுக்கு மட்டும் அவர்களின் உடல் மீதான உரிமை கொண்டாடுகிறவனாய் இருக்கலாம். இன்னும் திருமணம் ஆகியிருக்க வாய்ப்பில்லையென கொஞ்சமாய் முளைக்கத் துவங்கியிருந்த மீசையும் தாடியும் சொல்லிக் கொண்டிருந்தன.
முதலில் ரெஸ்டாரெண்ட் போகலாமா என்று கேட்டவன் பின்னர் பீட்ஸா கார்னர் போகலாமா என்றான். எந்த யோசனையின்றியும் சரி என்றாள். அவன் வண்டியை ஓட்டிக்கொண்டு முன்னால் போக இவள் அவன் பின்னாலயே வண்டியை ஓட்டிக்கொண்டு போனான். பீட்ஸா கார்னரில் ஒரு மூலையில் போய் அமர்ந்துகொண்டார்கள். அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். குளிர்பானம் மட்டும் போதும் என்றாள். அவனுக்கு ஒரு பீட்ஸா சொல்லிக்கொண்டான்.
’அப்புறம் என்ன படிக்கிறீங்க’? என்று கேட்டான். அவள் அமைதியாக ’எம்.ஏ ஹிஸ்ட்ரி’ என்றாள். பனிரெண்டாவதுக்கு மேல் படிக்கவில்லை என்று சொன்னால்கூட அவன் இத்தகைய அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கமாட்டான்போல. ஒரு எரிச்சலும் அகங்காரமும் கலந்த தோரணையில் ’ஹிஸ்ட்ரியா? இந்த காலத்திலும் எம்.ஏ ஹிஸ்ட்ரி படிப்பாங்களா?’ என்றான்.
அவனை முழுவதுமாக அளக்கும் பாவனையில் உற்றுக் கவனித்தாள். ’எம்.ஏ ஹிஸ்ட்ரி படிச்சிட்டு என்ன வேலை பார்க்க போறீங்க?’ எளக்காரமாக பேசிக்கொண்டே போனான்.
’உங்கள பாத்தா வழக்கமான பெண் மாதிரி தெரியலையே..?’
’வழக்கமான பெண்னுனா..?’
’இல்ல சம்திங் டிஃபரெண்ட்..வழக்கமா தெரியாத பெண்கிட்ட நீங்க கவிதா ஃபிரண்டானு கேட்டிருந்தா இல்லைனு பதில் சொல்லிட்டு கட் பண்ணிட்டு போயிடுவாங்க .,யூ ஆர் டிஃபரெண்ட்..ஐ மீன் யூ ஆர் ஃப்ரெண்ட்லி’
’ஓ அப்படியா..ஃப்ரெண்ட்லியா இருந்தா டிஃபரெண்ட்னு அர்த்தமா’
ஹா..ஹா ..என போலியாக சிரித்தவாறு..’யு காட் மீ ராங்..நான் அப்படி சொல்ல வரல..சரி விடுங்க ., அப்புறம் உங்கள பத்திச் சொல்லுங்க’
தெரியாத ஆண் தன்னை பற்றி என்ன நினைக்கிறான் என அறிந்து கொள்வதில் அவளுக்கு ஆர்வம் ஏற்பட்டது.’நீங்களே கெஸ் பண்ணி சொல்லுங்களேன் என்னைப் பற்றி, டிஃபெரெண்டான பெண்னுனு நீங்க கண்டுபிடிச்ச மாதிரியே.,’
’ஓ நைஸ்., இது நல்லா இருக்கே..சரி உங்கள் வயது 24-25 இருக்கும்’
”ம்ம்ம்”
”சரிதானே..”
”கிட்டதட்ட...”
’நீங்க இவ்வளவு ஈசியா பிராட் மைண்ட்ட்டா இருக்கிறத பார்த்தா நீங்க நிறைய புக்ஸ் படிப்பீங்க சரியா’
சிரித்துக்கொண்டு ’ஆமா..கரெக்ட்’
’என்ன மாதிரி புக்ஸ் படிப்பீங்க..’
’ஆனந்தவிகடன் குமுதம்..’
ஹா..ஹா..பெரிய ஜோக் சொன்னது போல் மறுபடியும் போலியாகச் சிரித்தான்
’இல்ல ..நான் கேட்டது நாவல், போயம் மாதிரி’
’இல்ல நான் அதெல்லாம் படிக்கறதில்ல ஆர்வமில்ல..’
’ஓ..அதெல்லாம் இல்லாமலயே யூ ஹேவ் பிராட் நாலெட்ஜ்’
என்னை புகழ்ந்தே எப்படியும் மடக்கிவிட வேண்டுமென ஆயத்தமாகியிருப்பான் போல...
அவன் பெயரைச் சொன்னான்
’ம்ம்ம்., நல்ல பெயர்.,’
’நன்றி., ஒருத்தவங்க பேரச் சொன்னா பதிலுக்கு நாமளும் பேரச் சொல்லனும்.,’சிரித்தவாரே கேட்டான்
’பெயர் தெரியலன்னா பேச முடியாதா., இவ்வளவு நேரம் பெயர் இல்லாமல்தானே பேசினோம்’ நக்கலாகச் சொன்னாள்..
’உங்களுக்குத் தெரிந்த கவிதாவின் ஃப்ரண்டுக்கு என்ன பேரோ அதுவே என்னோட பேரா இருக்கட்டும்…’ சிரித்தாள்.
அவன் சில நொடிகள் அந்த இல்லாத கவிதாவையும் அவளின் தோழியையும் நினைத்துக் கொண்டு சிரித்தான்.
’யூ ஆர் ரைட்…ஆமா பேசுவதற்கு எதற்கு பெயர்.. எதற்குமே எதுக்கு பெயர்..ஹா..ஹா..’ மறுபடியும் ஜோக் அடித்தது போல் அவனே சிரித்துக்கொண்டான். அவள் என்ன சொன்னாலும் அதை ஆமோதித்து நெருங்கி வருவதற்கான எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டிருந்தான்.
’நீங்க இப்படித்தான் பொண்ணுகள பின் தொடர்ந்து பிக்-அப் பண்ணுவீங்களா..? இதுக்கு முன்ன எவ்ளோ பேர இப்படி பிக் அப் பண்ணியிருப்பீங்க?...ஒரு இருபது?..’
சிரித்தவாறே கேட்டாள்.
கோபம் அடைந்தவனாக ’ஏன் இப்படி கேக்குறீங்க..நான் நீங்க நினைக்கிற மாதிரி தப்பானவன் இல்ல.. நிஜமா கவிதா ஃப்ரெண்ட்னு நினச்சுதான் வந்து பேசுனேன்....’ முகம் சுருங்கிச் சொன்னான். அப்பாவியாய் நல்லவனைப்போல் காட்டிக்கொள்ள முனைப்புக் காட்டினான்.
‘அந்த மாதிரி பசங்கள்லாம் தப்பானவங்கன்னு நான் சொல்லலையே...” அவன் போலித்தனத்தில் கல்லெறிந்ததை நினைத்துச் சிரித்தாள்.
அவன் இன்னும் சமாதானமாகவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான்.
’அய்யோ கோவிச்சுகாதீங்க சும்மா கிண்டலுக்குதான் சொன்னேன்…அப்படியே இருந்தாலும் ஒரு பெண்ணை ஆண் தொடர்வது இயல்புதான..இதுக்கு எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க’
ரிலாக்ஸ் ஆனவனாய் புன்னகைத்து கொண்டான் ’ரொம்ப ஃப்ராங்க்கா பேசுறீங்க ஐ லைக் யூ’
உள்ளுக்குள் நகைத்துக் கொண்டு,’இதுக்கு நான் என்ன பதில் சொல்லனும் “மீ டூ லைக் யூ”..?னா..சிரித்தவாறு கேட்டாள்
மிகப்பெரிய ஜோக்குக்கான அதே சிரிப்புடன் “பிடிச்சிருந்தா சொல்லுங்க”
“இதுக்கு முன்ன உங்ககிட்ட யாராவது லைக்யூன்னு சொல்லியிருக்காங்களா?”
அவன் ‘அப்டில்லாம் இல்லையே…என்று இழுத்து விட்டு சில சமயம் கூட வொர்க் பன்ற பொன்னுங்க கலாய்க்கிறதுக்காக அப்பிடி சொல்றதுண்டு… ஏன்?...
அவன் முகத்தில் சலனமில்லை. தன்னைப் பற்றி அதிகமாக அவளிடம் சொல்கிறோமோ என அவன் நினைத்திருக்கலாம்.
“இல்ல நீங்க சொன்னவிதத்துல இருந்து நிறைய சொல்லிப் பழக்கப்பட்ட மாதிரி இருந்துச்சு…” அவள் சிரித்துக்கொண்டாள்.
அவன் அமைதியாக இருந்தான். அவனோடு பேசுவது அந்த நொடியிலேயே போரடித்துவிட்டது அவளுக்கு. அங்கிருப்பது ஒருவித அசூயை உணர்வை அவளுக்கு ஏற்படுத்தியது.உடனே அங்கிருந்து கிளம்ப விரும்பினாள்.தொடர்பை அறுத்துக்கொள்ளும்விதமாக
”நீங்க மட்டும் இல்லீங்க எனக்கு எல்லா ஆண்களையும் பிடிக்கும்” இதைச் சொல்லும்போது அவன் கண்கள் இவளையே பார்த்துக் கொண்டிருந்தன.
’புரியல எல்லா ஆண்களையும்னா ..அப்பா,அண்ணன்,தம்பி’ அவன் அப்படிக் கேட்டது அவளுக்கு மிக அசிங்கமாகப்பட்டது.
’இல்ல..இது வேற நான் என்ன வேல செய்யுறேன்னு தெரியுமா?’
’சொன்னாதான தெரியும்’ புதிரை அறியும் ஆர்வத்துடன் கேட்டான் குழப்பத்துடன். அவனை பேச்சற்று போகும்விதமாக ’நான் உண்மையைச் சொல்லட்டுமா’ என்றாள்.அவன் வியப்போடு பார்க்க. ’நான் படிக்கல.பிராஸ்டியூசன் பண்றேன்’ என்றாள். தெரியாத பெண்ணோடு டேட்டிங்கை அனுபவித்துக் கொண்டிருந்த அவனுடைய சந்தோசத்தில் மண் விழுந்தது. இதுவரையில் அவளை பின் தொடர்ந்துவந்தவிதம் அவள் திட்டிவிடுவாளோ என்று பயந்து பயந்து பேசியதை நினைத்து அவனுக்கு வெட்கமாக இருந்தது. அவன் கண்கள் சிவந்து கோபம் கொப்பளித்தது. ‘நானும் ஒரு பிராஸ்டியூட்டை தேடிக்கிட்டுத்தான் இருந்தேன்’ என்று அகங்காரமாக பேச்சை தொடர்ந்தவன் முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல ’இவ்வளவு அலைச்சல் உன்னைப்போய் தப்பா நினைச்சு சே...’ அவன் தன்னுடைய செய்கைகளை நினைத்து வருதப்பட்டான். இப்போது அவன் அவளை ஒருமையில் பேசிக்கொண்டிருந்தான்.
அதற்குமேல் அவளிடம் பேச எதுவும் இல்லை என்று முடிவு செய்து
’சரி எவ்வளவு’ என்றான் எடுத்த எடுப்பில். அவள் இரண்டாயிரம் என்றாள். உண்மையில் அவளுக்கு தான் எவ்வளவு விலைபோவோம் என்று தெரியவில்லை. இரண்டாயிரமா என்று அவன் இழுக்க அவள் அதிகமாக சொல்லிவிட்டோமோ என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே ‘சரி போகலாம்’ என்றான். உள்ளுக்குள் உலர்ந்து வயிற்றை புரட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு. வாயில் கசப்பை உணர்ந்தாள். கொஞ்ச நேரம் முன்புவரை வெறுமையை உணர்ந்த அவள் இப்போது பெரும் ஆபத்தான சூழலுக்குள் இருப்பதைப் போன்ற பயவுணர்வும் அதே சமயத்தில் தன் உடல் மீதான அருவருப்பையும் உணர்ந்தாள். விழுங்கக் காத்திருக்கும் காண்டாமிருகத்தைப்போல எதிரில் இருந்தவன் தோன்றினான். அவன் முகத்தில் முன்பிருந்த லேசான பயவுணர்வு நீங்கி அதிகாரமும் இனம்புரியாத வன்மமும்
தெரிந்தது அவளுக்கு. அந்த நொடியில் அவனை கொலை செய்யத் தோன்றியது. ’வா கிளம்பலாமா’ என்று கேவலமான தொனியில் கேட்டவன் அந்த நொடியிலிருந்து அவளை முழுவதும் தீர்மானிக்கும் அதிகாரத்தை எடுத்துக்கொண்டான். ’எங்க உன் இடத்துக்கா என் இடத்துக்கா’ என்றான். அவள் அவனை பேசாமல் பார்த்துக்கொண்டிருக்க, ’என்ன முழிக்கிறே இரண்டாயிரம் ஓகே குடித்திடுறேன்’ என்று எழுந்து ’முடிஞ்சதும் பணத்தை குடுக்கிறேன் வா’ என்றான். விட்டால் அவளை தரதரவென்று பிடித்து இழுத்துச் சென்றுவிடுவான்போல. ’எங்க வச்சுக்கலாம்’ என்றான் மறுபடியும்.
அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் ’என் இடத்துக்கே போகலாம்’ என்றாள். ’உன் இடம் ஃசேபா இருக்குமா’ என்று கேட்டான். ’வீட்ல யாருமே இல்லை. ஃபேமிலி எல்லாம் ஊருக்கு போய்ட்டாங்க’. ’பேமிலியா? சும்மா பணம் அதிகமா வாங்கிறதுக்காக ஃபேமிலினு சொல்லக்கூடாது. இரண்டாயிரத்துக்கு மேல தரமாட்டேன்’ என்றான். பாலியல் தொழிலாளியின் தொழில் சூட்சமத்தை கண்டுணர்ந்தவன்போல பேசினான். அவள் கண்களில் காட்டிய வெறுப்பை உதாசீனம் செய்தான். ஏளனத்தோடு அவன் உடலை அறுத்துக்கொண்டிருக்கும் அவள் பார்வையை ஒரு பொருட்டாகக்கூட அவன் மதிக்கவில்லை. அடிமையை இழுத்துச் செல்லும் வீரனைப்போல உடல் நிமிர்த்தி கிளம்பலாம் என்று கண்ஜாடை செய்தான். அவள் சரியென்று ஆமோதித்துவிட்டாள். ஆனால் தலை கிர்ரென்று சுற்றியது. ஒரு நொடி உலகம் முழு இருளாகி தெளிந்தது. கசப்பில் ஊரும் நச்சுபாம்பினைப்போல் அவள் நெளிந்துகொண்டிருந்தான். தீண்டும் கரங்களை விழுங்கக் காத்திருக்கும் கொடியவிலங்கினை அவன் அதிகாரத்தின் சாட்டையைக்காட்டி அழைத்தான். ’என் பின்னாடியே வாங்க’ என்று வண்டியை எடுக்கக் கிளம்பினாள்.’ஏரியா எங்க’ அவன் கேட்க கோடம்பாக்கம் என்றாள். அவன் பின்னாடியே போனான்.
அந்த ஞாயிற்றுக்கிழமையிலும் தி.நகர் சாலை பரபரப்பாக நெரிசலோடு இருந்தது.அவன் அவள் பின்னாடியே வந்துகொண்டிருந்தான்.முன்பு அவனிடம் இருந்த குறுகுறுப்பு மறைந்து வேட்கை வெளிப்படையாகத் தெரிந்தது. எல்லாவற்றையும்விட அவன் அதிகாரத்தோரணைதான் அவளைத் தொந்தரவு செய்தது. கோடம்பாக்கத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குள் அவள் செல்ல அவனும் வந்தான். அவள் வண்டிக்கு பக்கத்திலேயே அவனும் வண்டியை நிறுத்தினான். இரண்டாவது தளத்தில் ஒரு ஒரு வீட்டைத் திறந்தாள். அவள் வீட்டுக்கு எதிரே இருந்த வீடும் பூட்டிக் கிடந்தது. இரண்டு படுக்கை அறையைக் கொண்டிருந்தது. ஏதோ சினிமா படத்தில் காண்பிப்பதைப் போல அந்த வீட்டில் இன்னும் வேறு பெண்கள் இருப்பார்கள் என்று நினைத்தான். யாரும் இல்லாததைக் கண்டு ’உன்கூட வேற பெண்கள் இல்லையா?’ என்றான். அவள் அதைக் காதில் வாங்காமல் ’என்ன சாப்டிறீங்க’ என்றாள். ’இல்ல அதெல்லாம் வேணாம் நான் பாத்ரூம் போயிட்டு வாறேன்’ என்றான். அறைக்குள் இருந்த அட்டாச்டு பாத்ரூமை காட்டினாள். அவன் தன்னுடைய பேக், ஃபோன் எல்லாவற்றையும் ஹாலில் வைத்துவிட்டு பாத்ரூம் போனான். அவன் திரும்பிவந்து பார்க்கும்போது அறைக்கதவு சாத்தியிருந்தது. அவன் கதவை திறக்க அது வெளிப்பக்கமாக சாத்தியிருப்பதை உணர்ந்து பயம்கொள்ளத் தொடங்கினான். கதவை லேசாகத்தட்டினான். கதவு திறப்பதாக இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவன் பயம் அதிகரிக்க மிரண்டுபோய் பலமாக கதவைத் தட்டினான். அவள் ஹாலில் அமர்ந்து காபி குடித்துக்கொண்டிருந்தாள். கதவு தட்டப்படுவதை அவள் பொருட்படுத்தவில்லை. டீவியின் சத்தத்தை அதிகரித்தாள். அவன் கதவுக்கு கீழே உட்கார்ந்தான். அந்த அறையை நோட்டமிட்டான். வெறும் புத்தகங்களாக நிரம்பிக் கிடந்தது. அதில் ஒன்றைக்கூட அவன் அறிந்திருக்கவில்லை. அந்த புத்தகங்களைப் பார்க்கும்போது அவனின் பயம் இன்னும் அதிகரித்தது. கிறுக்கப்பட்ட பல காகிதங்கள் மெத்தையின் மேல் கிடந்தன.அவள் பைத்தியமாக இருப்பாள் என்று உடனே முடிவுக்கு வந்தான். அவளைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து கிளம்புவது பற்றி யோசிக்க ஆரம்பித்தான். கதவைத்தட்டி ’சாரிங்க நான் உங்கள தப்பா நெனைச்சுட்டேன் என்னைத் திறந்துவிடுங்க நான் போயிடுறேன்’ என்றான். அவள் பதில் எதுவும் சொல்லாமல் இருந்ததால் மறுபடியும் கதவைத்தட்டி ’நானாங்கே உங்களை கேட்டேன் நீங்களாத்தானங்க பிராஸ்டியுசன் பண்றேனு சொன்னீங்க’.பெண்களை ஒரே மாதிரியாக பார்க்கும் அவன் பார்வையை நொந்துகொண்டான். நேரம் ஆக ஆக கதறத் தொடங்கினான். அவள் எதற்கும் வளைந்து கொடுப்பதாக இல்லை. டாம் அண்ட் செரி பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் கதவைத்தட்டி தட்டி சோர்ந்துபோய் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் கோபம் வந்தவனாக கதவை உடைக்கும்விதமாக பலமாகத் தட்டினாள். அவள் டீவியின் சத்தத்தைக் குறைத்துவிட்டு அவனிடம் பேசினாள். நீ அமைதியா இல்லனா ’திருட வந்த உள்ள பூட்டிவச்சிருக்கேனு சொல்லி போலீஸைக் கூப்பிடுவேன்’ என்றதும் அவன் அழவே ஆரம்பித்துவிட்டான். மறுபடியும் அவள் டீவியின் சத்தத்தை அதிகமாக வைத்துவிட்டு ஹாலிலேயே படுத்து உறங்கிவிட்டாள். அவன் அவளை கதவை திறக்க வைப்பதற்காக ஏதோதோ பேசியும் கெஞ்சியும் கதவைத் தட்டியும் கடைசியில் சோர்ந்து போனான். பயத்தில் நடுங்கிக் குமைந்துகொண்டிருந்தவனுக்கு பித்துபிடித்ததைப் போலிருந்தது. நன்றாக தூங்கிக்கொண்டிருந்த அவள் விடிந்ததும் பல்லை விளக்கி காப்பிபோட்டு சாப்பிட்டுவிட்டு அவன் அறைக்கு அருகே வந்தாள். அவன் காய்ச்சலில் முனகிக் கொண்டிருந்தவனைப்போல பேசிக்கொண்டிருந்தான். பேச்சுக்கு நடுவே கதவைத் தட்டியபடியே இருந்தான். அவள் மனம் லேசாக இருந்தது. வெளிக்கதவை திறந்துவிட்டு அவன் அறைக்கதவை திறந்தாள். கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தவனைப்போல சுருங்கிப்போய் கண்கள் பள்ளமாகி காட்சியளித்தான். நேற்று அவனிடம் இருந்த போலித்தனம் அதிகாரம் ஏமாற்று எல்லாம் மறைந்து பயம் மட்டுமே இருந்தது. அவள் ஹாலில் இருந்த ஷோஃபாவுக்கு கீழே அமர்ந்தாள். அவன் பயத்தோடு வெளியே வந்தான் அவள் முகத்தைகூட பார்க்காமல் அங்கே டிபாயில் இருந்த தன்னுடைய பை , ஃபோனை நடுக்கத்தோடு எடுத்தான்.அவனுடைய நரம்புகள் வலுவிழந்து கை,கால் உதறத்தொடங்கியது. அங்கே ஒருத்தன் இருக்கிறான் என்பதை அவள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அன்றைய நாளிதழை சுவாரஸ்யத்தோடு படித்துக்கொண்டிருந்தாள். அவன் அறையில் அடைக்கப்பட்ட நாயக்குட்டிபோல் ஒரு நொடிகூட தாமதிக்காமல் வெளியே ஓடத்தொங்கினான்.
நன்றி: 361 காலாண்டிதழ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
17 கருத்துகள்:
ஜெயமோகனின் இணையத்தில் உங்கள் சிறுகதை குறிப்பிடப்பட்டதை வாசித்த பின்னர் உங்கள் “புளொக்கில் ” சென்று கதையை வாசித்தேன். நன்றாக இருந்தது. நகர வாழ்க்கையில் இவ்வாறான அனுபவத்தைப் பெண் சந்திக்க நேரிடுகின்றது. ஆனால் ஒரு பெண் துணிந்து இவ்வாறு தன்னைப் பிறழ்ந்து நோக்கியவனைத் தன்னிலையை நொந்து சிந்திக்குமாறு நடப்பது இக்கதையில் முக்கியமானதொன்று. இக்கதை ஆணாதிக்கத்தையே குறி வைக்கின்றது. இன்னும் இயல்பாக இது போன்ற சந்தர்ப்பங்களிலான பெண்களின் மனோநிலையை கூட விவரித்திருக்கலாமோ என்ற கேள்வியும் என்னுள் எழுந்தது.
ந.முரளிதரன்
கதை ரொம்ப நல்லாருக்கு சந்திரா.
ஜெயமோகன் சார் கொடுத்த லிங்கில் வந்து வாசித்தேன் . கதை அற்புதம். வாழ்த்துக்கள்
@ந.முரளிதரன், கருத்துக்கு நன்றி.
@யுவபாரதி@chellappa பாராட்டுகளுக்கு நன்றி நண்பர்களே.
அருமையான கதை. எந்தவித திடுக்கிடல்கள் இன்றி இயல்பாய்ச் சென்றது கதை.. வாழ்த்துக்கள். ஜெயமோகனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இப்படி ஒரு நல்ல கதை இருப்பதை சுட்டிக்காடியதற்கு.. எப்படித்தான் எல்லாவற்றையும் படிக்கிறரோ??
A good and different story that lingers around and creates an uneasy feeling...
@@கானகம்,நன்றி நண்பரே.இந்தக் கதையை உங்களுக்கு அறியச் செய்த ஜெயமோகன் அவர்களுக்கும் என் நன்றி.
இப்பொழுதுதான் படித்தேன்..மிக சிறப்பு.அருமையான வாசிப்பனுபவம்.வாழ்த்துக்கள்...
துல்லியமான நடை ஆழமான பார்வை மெல்ல உச்சம் தொடும் நுட்பம் கதைக்குள் நம்மை இணைத்து விடுகிறது.
ஆணின் பார்வை கூறுகளாலேயே அவனை தோலுறிக்கும் யுத்தி கதையின் மைய பலம்.நன்றி சந்திரா.
'எல்லா நினைவுகளையும் ஆயுதமின்றிக் கொலை செய்ய தனிமையால் மட்டும்தான் எப்போதும் இயல்கிறது'.
இந்த வரியை மிகவும் ரசித்தேன்.கதையோடு தனிமையும் பயணித்திருப்பது அழகான ஒன்று.
I have come to this page through Jeyamohan's link. I've read good short story after a long time
Kala
ஆதவனின் எழுத்துகளை படிப்பது போன்று இருந்தது. இப்படி சொன்னதற்காக “மேல்ஷாவனிஷம்” என கூறமாட்டீர்கள் என நம்புகின்றேன்.
இந்த கதை பதமான ஒரு சுவை சோறாய் உங்கள் எல்லா கதைகளையும் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
@ராஜா சந்திரசேகர்,தங்கள் கருத்துக்கு நன்றி.
@நந்தா,தங்கள் வாசிப்புக்கு நன்றி.
@ஓ.நூருல் அமீன் “மேல்ஷாவனிஷம்” என்று சொல்லமாட்டேன்.ஆதவனின் எழுத்துக்கள் எனக்கும் பிடிக்கும்.
வம்சி போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!
கதை எதை நோக்கி பயணிக்கும் என்பதை அனுமானிக்க முடியாத்தும் ,இயல்பாக நம் நம்பிக்கையின் பிறழ்வான முடிவும் __அருமையான அனுபவம்
அருமையான கதை, அந்த முடிவு சற்றும் எதிர்பார்க்கவில்லை. கதையில் வாசகர்களை தனிமையினூடே நடத்திச் சென்றிருக்கிறீர்கள்.
கருத்துரையிடுக