வெள்ளி, 18 மார்ச், 2011
இசைபடவும் ஒளிபடவும் வாழ்தல்
பின்னிரவு மழைக்கால வாசனையையும் கோடை மழையின் கொண்டாட்டமும் மறையாத ஊரை ஞாபகபடுத்திக்கொண்டே இருக்கிறது வெப்பத்தை வன்மமாக்கி கரைத்தூற்றும் இப்பெருநகர். மூர்க்கமாக அடித்துத் துரத்தும் பால்ய சிநேகிதர்களையும், என்றோ சாணம் தெளித்த தெருவுகள் இன்று சிமெண்ட்டுகளாகி உருவழிந்த தெருக்களில் ஏதேச்சையாக சந்திக்கையில் முகத்தை மறைத்துக்கொண்டோ அல்லது தன் செயலுக்காக வெட்கப்பட்டுக்கொண்டோ லேசான சிரிப்புடன் கடந்து செல்கையில் அவர்கள் அடித்த ரணம் சிவக்க குறுகுறுக்கிறேன் சந்தோசமாக. என் புழுதி படிந்த சாலையில் மாடுகளை கண்டு பயந்து விலகி நடந்து போன காலம் கண்ணிமைகளில் உயிர் பிடித்து வைத்திருக்கிறது பழந்தெருஞ் சாலையின் சாயலை கொஞ்சமாவது கொண்டிருக்கும் தெரு. தட்டான்கள் பறந்துகொண்டிருக்கும் பொன்வண்டும் மின்மினிப் பூச்சியும் தன்னியல்பில் மின்னிக்கொண்டிருக்கும். என் வருகையை ஒரு நாளும் அவை வெறுப்பதும் இல்லை எனக்காக காத்திருப்பதும் இல்லை. அன்பு இழையோட என்னை கிறுக்கு பிடிக்கச் செய்வதும் இல்லை. தனக்கான ஒளியோடும் பாடலோடும் இசைந்து எவற்றின் கட்டளைக்கும் காத்திராது இசைபடவும் ஒளிபடவும் வழ்ந்து கொண்டிருக்கிறது. உயிர் ஜனத்திரள் காட்டில் எப்போது மௌனம் வன்மம் துரோகம் விளைவிக்கும் கண்களை கண்டு கண்டு என்னுள் சேர்ந்திருக்கிறது ஓராயிரம் கரு வலி. தேரோடும் வீதியில் கைகோர்த்து நடப்பதே வாழ்வின் தீராத ருசியைப் போக்கும் நிலையும் காலாவதியாகிவிட்ட நிலையில் தட்டான்களின் ரீங்காரத்தின் மெல்லிய இசையை ஆன்மாவில் கரைத்து ஆற்றங்கரையில் பறக்கும் பட்டாம்பூச்சியின் வர்ணங்களை ஒளியாக்கி கண்களில் நிரப்பி இசைபடவும் ஒளிபடவும் வாழலாம் இனி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
//தட்டான்களின் ரீங்காரத்தின் மெல்லிய இசையை ஆன்மாவில் கரைத்து ஆற்றங்கரையில் பறக்கும் பட்டாம்பூச்சியின் வர்ணங்களை ஒளியாக்கி கண்களில் நிரப்பி இசைபடவும் ஒளிபடவும் வாழலாம் இனி.// அருமையான வரிகள் சந்திரா. எங்கோ பெயர் தெரியாத வனத்தில் சுற்றித் திரிவது போலுள்ளது..
welcome !
கருத்துரையிடுக