வியாழன், 5 மே, 2011

கார்ல் மார்க்ஸும் என் குடும்பப் புகைப்படமும்.எனக்கு புகைப்படம் எடுத்துக்கொள்வது எப்போதும் விருப்பமானதாக இருந்தது இப்போதும் இருக்கிறது. விவரம் தெரிந்த நாளிலிருந்தே ’போட்டோ புடிக்கனும்’ என்று அப்பாவை நச்சரித்துக்கொண்டிருப்பேன். அம்மா, ,அப்பாவின் இளவயது புகைப்படங்கள் ஒன்றிரண்டு தவிர அக்கா, அண்ணன், என்னுடைய எந்தப் புகைப்படங்களும் வீட்டில் இல்லை. நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது அப்பா ஒரு சிறு வீட்டைக் கட்டினார். புது வீட்டுக்கு குடிபோவதற்கு முன் அப்பா ஒரு நாள் ’எல்லாரும் போட்டோ புடிங்க கிளம்புங்க’ என்று சொல்லி, ஊரில் அப்போது பிரபலமாக இருந்த துரை ஸ்டூடியோவுக்கு எங்களையும் அம்மாவையும் அழைத்துக்கொண்டு போனார் . எங்களுடைய முதலும் கடைசியுமான குடும்ப படத்தை அங்கே எடுத்துக்கொண்டோம். அதற்குபின் தனிப்பட்ட முறையில் நிறையப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோமே தவிர நாங்கள் ஐந்து பேரும் சேர்ந்திருக்கும் புகைப்படம் எடுக்க வாய்க்கவில்லை. அப்போதெல்லாம் புகைப்படத்திற்குச் ஃபிரேம் போடுவதற்கு முன் பாஸ்போர்ட் சைஸில் .புகைப்பட நகலைக் கொடுப்பார்கள். அதை பார்த்து சரியாக இருக்கிறது என்று சொன்னால் பின்பு அதை கண்ணாடி போட்டு ஃபிரேம் பண்ணிக்கொடுப்பார்கள். அந்த அளவிற்கு புகைப்படம் என்பது அரிதான ஒன்றாக இருந்தது. நாங்கள் ஐந்து பேரும் சேர்ந்திருந்த குடும்பப் படம் மற்றும் அம்மா அப்பா தனியாக எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் இதோடு சேர்த்து இன்னும் மிகப்பெரிய அளவில் இருந்த ஃபிரேம் செய்யப்பட்ட ஐந்து புகைப்படங்களையும் கொண்டு வந்தார் அப்பா. அதிலிருந்த யாரையும் எனக்குத் தெரியவில்லை. எல்லாம் தனித் தனி ஆண்களின் புகைப்படம். அம்மா அப்பாவை திட்டிக்கொண்டிருந்தது. ’இப்படி பணத்தை தண்டமா செலவு பண்ணுவாங்களா?இவங்கெல்லாம் வீட்ல மாட்டி வச்சா சோறு தானா கிடைக்குமா’ என்று ஏகமாறி சத்தம் போட்டுக்கொண்டிருந்தது. ’உனக்கெல்லாம் என்ன கூறு இருக்கு. இவகெல்லாம் எம்புட்டு பெரிய தலைவர்கள்னு உனக்கு தெரியுமா?. எம்புட்டு மக்களை காப்பாத்தியிருக்காங்க தெரியுமா? என்று பதிலுக்கு அப்பா சொல்ல ’சம்பாதிக்கிறதெல்லாம் இப்படியே செலவு பண்ணினா நடுத்தெருவிலதான் நிக்கனும்’ என்று சொல்லிவிட்டு ’இனி சொல்லி ஆகப்போறது ஒன்னும் இல்லனு’ அம்மா அமைதியாகப் போய்விட்டது. அப்பாவிடம் அவர்கள் யார் என்ற கேள்வியை நான் ஆர்வத்தோடு கேட்க பசி, புரட்சி,சோசலிசம்,பணக்காரன்,ஏழை,விவசாயி என்று வார்த்தைகள் வருமாறு அப்பா ஏதோ சொல்லிவிட்டு எல்லா புகைப்படங்களையும் சுவரில் மாட்டினார். மிகப்பெரிய தாடியோடு இருந்தவரின் புகைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் பெயரைக் கேட்டேன் காரல் மார்க்ஸ் என்றார் அப்பா. எங்க வீட்டில் இருந்ததிலேயே மிகப்பெரிய புகைப்படம் அதுதான். பின்பு இரவு நேரங்களில் அந்தப் புகைப்படங்களைக் காட்டி அப்பாவிடம் எதையாவது கேட்டுக் கொண்டே இருப்பேன். அப்படி கேட்ட நாள்களில் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், ஸ்ட்ராஸ்கி, ஜீவானந்தம் இவர்கள்தான் புகைப்படத்தில் இருப்பவர்கள் என்பதை தெரிந்து கொண்டேன். அந்தப் பெயர்கள் எனக்கு பழக்கப்பட்ட பெயர்களாக இருந்தன. ஆம் என் அண்ணனுக்கு லெனின் என்று பெயர் வைத்திருந்தார் அப்பா. அதேபோல் உறவினர்கள் பலருக்கும் மார்க்ஸ்,ஸ்டாலின்,ட்ராஸ்கி,ஜீவானந்தம் என்ற பெயர்கள்தான் சூடப்பட்டிருந்தன. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக ரஷ்ய புரட்சி, கம்யூனிசம் பற்றி அப்பா சொல்வது லேசாக புரிந்தது. அப்பா கம்யூனிசத்தை கரைத்து குடித்தவர் கிடையாது. அடிப்படை அளவிலேயே தெரிந்து வைத்திருந்தார். கட்சி வகுப்பில், அலுவலகத்தில் பேசியவற்றை தெரிந்துகொண்டு அதையே எனக்கும் சொன்னார். அவர் பேச்சின் மூலம் ஏற்றத்தாழ்வு, அதிகாரம் இந்த இரண்டுக்கும் எதிரான மனநிலையை என்னால் சிறுவயதில் உணர்ந்து கொள்ள முடிந்தது. மற்ற என் தோழிகளைவிட சமூகத்தை புரிந்து கொள்ள எனக்கு அடிப்படையாக இருந்ததும் அதுவே. அது ஒட்டுமொத்தமான புரிதல் அல்ல. ஆனால் மற்ற பெண் பிள்ளைகளிலிருந்து மாறுபட்டு யோசித்துக்கொண்டிருந்தேன். எங்கேயோ கிராமத்தில் அடையாளமற்று இருந்திருக்க வேண்டிய என்னை மாற்றியதும் அதுதான்.அப்பா கிராமத்து வீட்டைவிட்டு சென்னைக்கு என்னுடன் வந்ததும், வீட்டை ஒழுங்க செய்கிறேன் என்று அண்ணன் வீட்டில் இருந்த மார்க்ஸ்,லெனின் படங்களோடு எங்கள் குடும்ப படத்தையும் சேர்த்து அப்புறப்படுத்திவிட்டது. எங்கள் வீட்டுச் சுவர்களில் உறவினர்களைப் போல் தொங்கிக்கொண்டிருந்த அவர்களைப் பற்றிய வரலாற்றை,புரட்சியை என் அண்ணன் குழந்தைகள் மற்றும் என்னுடைய குழந்தைகள் யாரும் தெரிந்து கொள்ளவில்லை. அப்பாவைப்போல் அவர்களின் புகைப்படங்களை மாட்டி வைக்கும் ஆர்வமும் இல்லை எனக்கு. புகைப்படம் இருந்திருந்தால் அவர்கள் யார் என்று குழந்தைகள் தானே கேட்டு தெரிந்து கொண்டிருப்பார்கள். இப்போது வம்படியாக அவர்களை அழைத்து கம்யூனிசம் புரட்சி என்று பேச ஆரம்பித்தால் அழுதுகொண்டு ஓடிவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. மறைந்துபோன புகைப்படக் கதைகளைப் பற்றிச் சொல்வதா? வேண்டாமா? அல்லது அவர்களுக்கு விருப்பம் இருந்தால் தானாக தெரிந்து கொள்ளட்டுமா? என்று யோசித்தே எதையும் சொல்லாமல் இருக்கிறேன். நான் தெரிந்து கொண்ட அடிப்படை விசயங்களைக்கூட காலம் பலமடங்கு முன்னேறியும் அவர்கள் தெரிந்த கொள்ளாமல் இருப்பது வருத்தம்தான். ஐந்தாம் வகுப்புகூட படிக்காத என் அப்பா எனக்கு கற்றுக்கொடுத்தைக்கூட நான் என் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்காமல் இருப்பது குற்ற உணர்வாகத்தான் இருக்கிறது. இப்போது அப்பாவும் இல்லை அவர்களுக்குச் சொல்ல.

4 கருத்துகள்:

தியாகு சொன்னது…

உங்கள் அப்பாவின் உணர்வுகளையும் அதை பதிவு செய்யும் உங்களையும் பாராட்டுகிறேன்

தியாகு சொன்னது…

//மற்ற என் தோழிகளைவிட சமூகத்தை புரிந்து கொள்ள எனக்கு அடிப்படையாக இருந்ததும் அதுவே. அது ஒட்டுமொத்தமான புரிதல் அல்ல. ஆனால் மற்ற பெண் பிள்ளைகளிலிருந்து மாறுபட்டு யோசித்துக்கொண்டிருந்தேன். எங்கேயோ கிராமத்தில் அடையாளமற்று இருந்திருக்க வேண்டிய என்னை மாற்றியதும் அதுதான்.// mm good

chandra சொன்னது…

நன்றி தியாகு.

PaulGregory.... சொன்னது…

உங்களுக்கு அப்பா சொல்லித்தர அவசியம் இருந்தது அவர்களுக்கு அப்படி தேவை இல்லை அவர்களை எனக்கு தெரிந்தவரை ஃப்ரிடாவும் லெனினும் அவர்களுக்குள் ஏற்கனவே இருக்கிறார்கள் . . . .