வியாழன், 28 மார்ச், 2013

என் கதைகள் குறித்து கோணங்கி எழுதியது.....


தமிழ்ச் சிறுகதைகள் குறித்து பல்வேறு எழுத்தாளர்களின் கதைகளை ஆராய்ந்து, ”கல்குதிரை” பனிக்காலஇதழில் தலையங்கம் கட்டுரையில் கோணங்கி எழுதிய,
’நாளைக்கான இன்றைய தமிழ் புனைகதைகளில் ஆண்டன் செகாவின் நீல நுரையீரல் வரைபடம்’
என்ற நீண்டக் கட்டுரையில் அழகம்மா தொகுப்பிலிருக்கும் என்னுடைய கதைகள் குறித்து அவர் எழுதியதை மட்டும் இங்கே எடுத்து பதிவு செய்திருக்கிறேன்.

”சந்திராவின் இப்போது வந்திருக்கும் அழகம்மா தொகுதியின் தலைப்புக்கதை வேனிற்கால இதழில் வந்தபோது மூன்று முறைக்கு மேல் எழுதி அவர் செழுமைபடுத்தியதில் அது பரிமாண பூரணத்துவம் அடைவதற்கான உரையாடலாய் அமைந்தது. பச்சைக்குமாச்சி மலைகளில் அசையும் அழகம்மாவின் கால்கள் தேவதை அருவியாகப் பாய்ந்து இறங்கிக்கொண்டிருந்தது. துரட்டி மரம் கிணறு வழியாக நடந்து செல்லும் ஆண்களெல்லாம் பெண்களை துணைக்கு அழைத்துக்கொண்டுபோகிறார்கள். சமயத்தில் கிணற்றை விலகியே போகிறார்கள். ஊரை விட்டு விலகி இருக்கும் பலியான அழகம்மாளின் நினைவு தொடரும். ஒவ்வொருவரும் பாங்கிணற்றைக் கடந்தே போயினர். தொட்டால் ஒட்டிக்கொள்ளும் கெவியில் மறதியிலிருந்து பொருட்களின் முனகல்களை கேட்டார்கள். ஒவ்வொரு ஊருக்குமே பெண்களை ஈர்த்து கிணறுகளும் தூர்ந்திருக்கும். இடம்பெயர்ந்தவர்களும் கிணற்றைச் சுற்றி எல்லையற்ற ஒரே ராத்திரிக்குள் போகிறார்கள். 

ஒவ்வொரு ஊரிலுமே வேறு வேறு தூர் விழுந்த கிணறுகள் இருக்கும். இழுவங்கிணறு, ஆனைக்கிணறு, பாண்டியன் கிணறு, கூளப்பநாயகன் பெருங்கிணறு, பேய்கிணறு,தூங்கேணியில் உறங்கும் கூந்தல் விதைகள் நீரற மகளிராய் பாய்ந்து வெளியேறிச் செல்கிறார்கள். பனையடியில் பலியானவள் மடக்கு ஓலைக்கன்னியாகவும் பள்ளத்தில் தள்ளிவிடப்பட்ட பெண்ணே வனந்திரியும் இருளாக அலைகிறாள். சொல்லக்காத்திருக்கும் அழிக்காளியாக மாறி அழகம்மா பிஞ்சால் ராமன்,பரமன் இருவரையும் கூந்தலிலும்,தன்யங்களிலும் உதிரம் பூசுகிறாள்.குரும்பனை மட்டும் ஒன்னும் செய்யாமல் விடுகிறாள். அவளுக்குத் தன்னைக் கொன்ற புருஷன் மேல் தான் எவ்வளவு ஆசை? நூறு ஊர்களின் மடக்கு ஓலைகளில் கீறிய கிணறுகளை குறீயீடாக்கி புதுமைப்பித்தனின் ஞானக்குகையில் வரும் வாலைக் கனிவு குன்றா கன்னியின் மோனமும்,பேய்மையின் சிரிப்பும், உயிர் குடிக்கும் வெறியும், உடனே மாறும் குழந்தையின் சிரிப்பும் அழகம்மா கதையில் சாத்தியப்பட்டிருந்தும் ஊர் எல்லையிலேயே நின்றுவிட்ட தழும்புகள் சிவந்த வாய்மொழிக் கதைக் கூற்றுகளின் அடர்த்திக்குள் அமைந்துவிடுகின்றன மறுசொல்லாய். ஸில்வியாவின் ‘பெண் வேடமிட்ட பெண்’ கதையின் சொல்லாடல்களை கதை இயக்கத்தின் விசிறி மடிப்பாக வெவ்வேறு பேசு பொருள்களை முரண்பட்ட தன்னிலையில் இருந்து பன்மை பிரதியாக்கத்துக்கு இட்டுச்செல்கிறது. ஆயினும் ஒரு சீரான கதையாக்கம் நடந்திருக்கிறது அழகம்மா கதையில். 

தொகுதியின் கடைசிக் கதையான ‘வெகுநாட்களுக்குப் பின்னான மழை’ கதையில் கரட்டுப்பட்டிக்கு திரும்பிக்கொண்டிருந்த ஒரு கொலைக்கு உடந்தையானவனின் கசங்கிய மனச்சாயைகளின் இருட்பரப்பு. நண்பனின் ஊரில் அவனோடு கொலைக்கு நிழலாகச் செல்கிறான் காணாமல்போன பொம்முசாமியின் மகன். நண்பன் தன் சித்தியின் கழுத்தில் கத்தியை பதித்த கணத்தில் கைப்பிடியோடு விரல்களும் புகுந்திருந்தது அவள் குரல்வளையைப் பிடித்து. இவன், சாவில் நடுங்கும் அவள் கால்களை அமுக்கி பிடித்துக் கொள்ள அப்பெண்ணின் உயிர் அடங்கிய இறுதித் துடிப்புகளை இவன் கையோடு கொண்டு வந்திருந்தான் தப்பி வந்த கரட்டுப்பட்டிக்கு. தண்ணீப்பானையில் நீர் கோரிக் கழுவக், கழுவ கரங்களில் இருந்த சாவு கரையவில்லை. நினைவிலும், மறதியிலும், குழப்பத்திலும், இரவிலும், பொருட்களிலும் உதிர வாடை வீசியது. இறந்த பெண்ணின் விழிகள் அவன் கால்களை தொடர்ந்து விரட்டுகின்றன. இக்கதை இறந்த பெண்ணின் திறந்த விழிகளுக்குள் சாவுடன் மெல்ல இறங்குகிறது. மலை முகட்டில் இரு விழிகளும் உருண்டு சிதைந்து எதிரொலிப்பதைக் கேட்டான். மலைக் கரட்டின் மேடு பள்ளங்களில் அவன் ஒரே வகையான நடையை நடந்தான். செத்த நடையில் நடப்பதைப் போன்ற நடைதான் அது. தவளைகள் இல்லாத கிணறு ஊருக்கு வந்து சேருகிறான். பத்து வருடத்திற்குப் பின் உருமாறியிருந்த அவனைத் தாத்தாவிற்கு ஜாடை தெரியவில்லை. பின் இக்கதையில் தாத்தாவின் குரலாக தன்னூர் நிலங்களின் கதையும் மலையிடுக்கில் கஞ்சாச் செடி வளர்த்து எல்லோரும் பிழைத்த ஊர்க்கதையும் சொல்லாகவே தொடர்கிறது.
நீர்வறண்ட கரட்டுப்பட்டி அடிவாரத்தில் பாரஸ்ட்டுக்கு சொந்தமான பினாத்தி மரத்தோப்பு இருந்தது. தீக்குச்சி செய்யப் பயன்படும் அந்த மரங்கள் மட்டுமே அந்த நிலப்பகுதியின் ஒரே தாவரையல் ஆதாரம். அதன் பொருட்டு சில துளி மழைத் தூத்தல் அதில் முந்திரித் தோப்பு ஆனது. அதுவும் அழிந்துவிடும் நிலையில் இப்போது. இயற்கை உலர்ந்த பாறைகளின் மேல் ஆடுகள் மட்டுமே ஜீவனோபாயம். மனித நடமாட்டம் இல்லாத ஊரில் இவன் அந்தக் கொலையின் சாயைகள் அவனை வெறுமையின் ஆழத்தில் புதைத்தது. இவனிடம்தான் கிழவன் முதன் முதலில் செல்போனைப் பார்த்தான். நண்பன் இவனுக்கு போனில் பேசினான். அவனைத் தேடி வருவதாகச் சொல்லி ஊருக்கு வழி கேட்டான். மறுநாள் விடிந்த போது நான்கைந்து போலீஸும் இரு இளைஞனும் பாறையிலிருந்து வருவதைப் பார்த்தான் சுற்றி மேயும் ஆடுகளுக்கிடையே. 

வடமெக்ஸிகோவின் வறண்ட விளையாத எரியும் சமவெளியின் மேல் காமேடரஸ் மலைகள் டோரிக்கோ சகோதரர்களைப் போன்ற குற்றவாளிகளைத் தன் பாறைப் புடவுகளிலிருந்து பெற்றெடுத்தது. காலத்தில் எட்டி வளர்ந்த வறண்ட மலைகளின் தியானத்திலிருந்தே இந்தக் குற்றவாளியும் கரட்டிலிருந்து ஓடிப்போய் ஆந்திராவில் முறுக்கு விற்பவனாக முதலாளியிடம் அடிவாங்கி சூட்டுக்கோல் புண்களால் சீழ் வைத்துக் குதறிய ராத்திரிகளோடு அங்கிருந்தும் திருட்டு ரயிலேறி பெருநகருக்கு ஓடிப்போகிறான். இருண்ட தார்விரிப்பின் ஓரங்களில் அடையாளந் தெரியாத நபராகி திறந்த ரணமாய் எதிர்ப்பட்ட நண்பன் குமாரோடு டிஸ்வாஷராக ஹோட்டல் பெஞ்சுகளுக்கடியில் அழுக்குத் துணியில் கந்தலாய் அடிப்பட்ட வாழ்விலிருந்து கிழித்துக் கொண்டு வெளியேறி தன் நண்பனின் கொலைக்கு உடந்தையாக அவனுக்கு துரோகமளித்த மூளியலங்காரியான கொடுமைக்காரச் சித்தியைக் கொல்வதற்கு இவனும் அவனும் கொலையைப்பற்றி ராத்திரியெல்லாம் உரையாடிய சமையலறையின் இருட்டில் ஸ்டீல் கத்தி பளபளத்தது. உடைந்த சமையலறைக் கண்ணாடியிடம் இருவரும் விடைபெற்று வெளியேறிப்போகிறார்கள். 

இத்தொகுப்பில் 361 டிகிரியில் வந்த ‘அறைக்குள் புகுந்த தனிமை’ கதையில் பைக்கில் வந்தவனுக்கும் இவளுக்குமான உரையாடலும், தோழிக்கும் இவளுக்குமான உரையாடலும், விடுதி, பீச், காந்தி சிலை, பீட்சா கார்னர் உரையாடல்கள் binary சொல்லல் முறையில் கருத்துருவாகவே நிகழ்ந்துள்ளது. அவள் வீடு சென்ற பின்னும் முன்முடிவான சம்பவங்களும் உரையாடல்களும் அக்கதையின் பிளக்கும் நிகழ்காலத் தனிமைகளை தன்னிலை உரையாடலின் மூலம் தர்க்கத்தை உடைத்து கதையை விடுவிக்க முடியவில்லை”.

-நன்றி
கல்குதிரை (பனிக்காலஇதழ்)
 

கருத்துகள் இல்லை: