ஞாயிறு, 13 மார்ச், 2011
தற்கொலைக்கு முன்னான அழகிய நிகழ்வு
வெயில் சாலையின் ஒரத்தில் படர்திருக்கும் நந்தியா வெட்டை செடியிலிருந்து கல்யாண்ஜியின் ஞாபகத்தோடு ஒரு பூவை மட்டும் பறித்து கவிதை முகமற்ற தோரணையில் பேருந்து நிலையத்தில் வெயில் முகத்தோடு காத்திருக்கையில் உங்களில் கையிலிருக்கும் பூவிற்காக ஒருவன் சிரிக்கும் போது அவனிடம் ரகசிய அன்பினை கொள்வீர்கள். பேரூந்து ஏறும் அவசரத்தில் நந்தியா வெட்டை எங்கேயோ விழுந்துவிட்டதுகூட தெரியாமல் அந்த சிரித்தவனின் ஞாபகத்தோடவே பேரூந்தில் ஏறிக்கொள்வீர்கள். அங்கு உங்களுக்கு ஜன்னலோர இருக்கை கிடைத்தால் நந்தியாவட்டையின் அதிர்ஷ்டம்தான். தழும்பி கிடக்கும் மஞ்சள் வெயிலில் உங்கள் படர்ந்து மினுமினுக்கும் கூந்தலை முன்றடி தள்ளியிருந்து ரசிக்கும் ஒருவனை ரகசியமா காதல் கொள்வீர்கள். இறங்கும் தருணத்தில் இளையராஜா பாடலைப் பாடிச் செல்பவனை பிந்தொடர்ந்து செல்ல விரும்புவீர்கள்.யாருமே உங்களை கவனிக்காத பேரூந்து பொழுதில் பெரும் துயரம் கொள்வீர்கள். பேரூந்திலிருந்து இறங்கி உங்கள் தெருவில் நடந்துவரும் தருவாயில் காற்றில் பொன்னிறத்தில் மிதக்கும் உங்கள் கூந்தல் குறித்து நீங்களே பெருமை கொள்வீர்கள். அதை ரசிக்க ஒருவரும் இல்லாமல் போகும்போது சரியாக உங்கள் வீட்டின் கதவை திறக்கும் குழந்தையை உதட்டில் நீங்கள் இதுவரை எவருக்குமே அளித்திடாத ஆழ்ந்த முத்தத்தை கொடுப்பீர்கள். பின் உங்கள் அறையில் நுழைந்து அன்றைய சந்தோச ஞாபகங்களில் ஒவ்வொரு தூக்க மாத்திரையையும் எடுத்து விழுங்குவீர்கள். பின் போர்வையால் இறுக்க மூடி படுத்துக்கொள்வீர்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
:-)
நன்று! பத்தி பிரிக்காமல் விட்டது நீங்களாக செய்ததா? அல்லது தொழில்நுட்ப காரணமா?
சாய், தொழில் நுட்ப காரணம் ஏதுமில்லை நண்பா.அப்படியேதான் எழுதினேன்.
ஆதிரன் ஏன் இப்படி எதையாவது சொல்லாம்ல.
அழகான தற்கொலை தான் இது..
கருத்துரையிடுக