திங்கள், 29 ஜூன், 2009

சாவைத் தின்னும் பௌத்தம்




உப்புக் காற்றில்தான்
உலர வேண்டியிருக்கிறது
எங்களின் கண்ணீர்த்துளி
எங்கள் மீதான மனிதநேயம்
நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது
நடுக்கடலில்
யுத்தம் முடிந்த பின்னும்
பொங்கிப் பெருகும் ரத்தத்தில்
மிதக்கிறது உடல்கள்
ராணுவ இரப்பையில்
உலக கருணைகள்
பெருங்கதைகளை
கேட்க வேண்டிய குழந்தைகளின்
அடிவயிற்றில் பசியின் கூக்குரல்
வன்புணர்ச்சியின் கொடூர வாசனை
ஆண்மை நசுக்கும் உங்கள் ஆயுதங்கள்
வாழ இயலா மனச்சிதைவு
இந்தக் கொட்டடியில்
இன்னும் என்ன செய்யக் காத்திருக்கிறீர்கள்
சாவைத் தின்னும் பௌத்தமே
அன்பாய்
எங்களை கொன்றுவிடுங்கள்

1 கருத்து:

புரட்சி சொன்னது…

பற்று அற்று இரு..

இதுதான் வாழ்வியலின் அடையாளமாக பவுத்தம் துவங்கி அத்துனை மதங்களும் நமக்கு விட்டுச் சென்ற செய்தி. ஆனால், இந்த தொல்லுலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று நீங்கள் பார்க்கவில்லையா? பவுத்தத்தை அரசு மதமாகக் கொண்ட எந்த நாடும், ராணுவமில்லாமல் இல்லை.

மதத்தின் தோற்றுவாய், சமூக ஒழுங்கு மட்டுமே. ஆனால், பெயரளவில் மனிதர்கள் மதம் சார்ந்து உலவுகிறார்களே தவிர, மதம் சொல்லியிருக்கிற கருத்துகளை யாரும் தொடர்வதில்லை.

எனவே, நாளைக்கே அங்கே பவுத்தம் இல்லாமல் எந்த மதமாவது ஆட்சி மதமாக அறிவிக்கப்பட்டாலும், தமிழர்கள் மீதான கோடூர இனவெறித்தாக்குதல் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.

ஈழப் பிரச்னையை, அதன் தோற்றுவாய்க்கான காரணியை, தமிழர்களின் உரிமையை இதுவரை எந்த அரசியல்வாதியும், எந்த அரசும் உண்மையோடு, சுய சிந்தனையோடு அணுகவில்லை. ஈழப் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த உலக நாடுகளுக்கு சுயலாபம் மட்டுமே குறி.

ஒரு சுதந்திர தாயகத்தை நிறுவ வேண்டும் என்பது, ஈழத் தமிழர்கள் விரும்பி எடுத்த முடிவல்ல. அது அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று. இன்று, அந்த போராட்டம் அடக்குமுறையால் ஒடுக்கப்பட்டிருக்கலாம். என்றாவது ஒருநாள் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும். வரலாற்றை உற்று நோக்கும் அனைவருக்கும் மேற்சொன்ன தத்துவார்த்தம் புரியும்.

இப்போது நாம் கேட்பது தமிழ் ஈழமல்ல. அங்கே கொட்டடியில் அடிக்கப்பட்டு, சொல்லவே இயலாத துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் சக மனிதனுக்கான மனிதாபிமானத்தை.

ஒத்த சிந்தனை தளத்தில் இயங்கும் படைப்பாளிகளின் கையில் இருக்கும் நம்பிக்கைக்கு செயல் வடிவம் கொடுப்பது பற்றி சிந்தியுங்கள்.