திங்கள், 19 மே, 2014

துயரமெனும் சிறுபுள்ளிஅந்தக் கனவு மிக அற்புதமானது.   

நீண்ட பனி இரவு. உள்ளங்கையை மென்மையாக  ஆனால் விடுபடாத அழுத்தத்துடன் பிடித்துக்கொண்டிருந்தான்.அவனின் விரல்களின் மென்மை  கார்த்திகாவின் மனதை நிரப்பும் இசையைப்போல இருந்தது.பிரசவத்தில் குழந்தை வெளியேறிய வலி நீங்கிய தருணத்தின் நிம்மதியைக் கொண்டிருந்தது அவள்மனம் . அப்போது,பூக்கள் நிறைந்த காட்டுப்பாதையை ஞாபகப்படுத்தும்படியான இனிமையான காற்று வீசியது. அடர்ந்த காட்டுக்குள் மரங்களின் மேலிருந்து ஊடுருவிய மஞ்சள் வெயிலைப்போன்ற அவனுடைய சிரிப்பு எல்லாக்கசப்புகளையும் நீக்கியது. முழுமகிழ்ச்சி என்பது இதுவாகத்தான் இருக்கும் என்பதைப்போல மனம் நிறைந்திருந்தது.  ஆனால் அது கனவு மட்டுமே
கனவு முடிந்த காலை
கார்த்திகாவின் காதலன்  நேற்றிரவே வீட்டைவிட்டுப் வெளியேறிவிட்டிருந்தான். அவளால் அந்தக் கனவிற்கான அர்த்தத்தை உணர முடியவில்லை. பேரன்பு வைத்திருந்தவன் நீங்கிச் சென்ற நாளில் அவன் அத்தனை அன்புடன்  இருப்பதாக கனவு வருமா? ஆனால் நிஜம் மிகக் கொடூரமானதாக இருந்தது. மிகப்பெரிய வாளால் தொண்டையைக் கீறியதைப்போல துக்கம் அடைத்துக்கொண்டது. வெக்கை நிரம்பிய காலை வேதனையைக் கூட்டியபடி அவன் அவளைவிட்டுச் சென்றதை ஆழமாக உணர்த்தியது. கனவு என்று பொய்யான மயக்கம் நடுக்கூடத்தில்  சாக்ஸாகக் கிடந்தது. அவன் அவசரமாக பேக் செய்ததில் விடுபட்ட  ஒற்றை சாக்ஸ் பிரிவின் சாட்சியாக துயரத்தை அதிகரித்தபடி கிடந்தது
வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்த அந்த அப்பார்ட்மெண்ட் மூன்று மாடிகளுடன் பத்து குடித்தனங்களை கொண்டிருந்தது.  பெயிண்ட் மங்கிப்போய் கட்டிடமே அவள் மனநிலையை சிதைப்பதாக இருந்தது.   கதவைத் திறந்தால் வாகனங்கள் விரைந்தோடும் தார்ச்சாலை. வீட்டைவிட்டு வெளியேறி காலாற நடக்க முடியாதபடி அதன் இருப்பே நோய்த்தன்மை கொண்டிருந்தது.  வாடகை வீடுதான். அவன் அவளை வெறுக்கத் தொடங்கிய ஆரம்பக் கட்டத்திலேயே வேறு வீட்டிற்கு இடம்பெயர்ந்திருந்தால் அவன் இப்படி நிரந்தரமாக சென்றிருக்கமாட்டானோ என்று முட்டாள்தனமாக யோசித்தாள். பின்பு அவளே அந்த யோசனையை அழித்து அந்த வீட்டில் அவர்கள் நிறைந்த மகிழ்ச்சியுடன் இருந்த நாட்களைப் பற்றி எண்ணத் தொடங்கினாள்.  நடுக்கூடத்தில் கிடந்த சாக்ஸ்  அவள் எண்ணத்தை குலைத்தபடியிருந்தது. அதனை அவளால் அப்புறப்படுத்தவே முடியாது என்ற நிலையில் அதன் அருகில் தலைவைத்து படுத்துக்கொண்டாள். அது ஒரு பாம்பு குறுகிக்கிடப்பதைப்போன்று அவளருகில் கிடந்தது.அவனை இருத்தி வைத்துக்கொள்வதற்கான எல்லா வகைமுறைகளையும் கையாண்டிருந்தாள் எல்லாவற்றையும் மீறி அவனுடைய வெளிநடப்பு நிகழ்தேறிவிட்டது.
அவனை நான் மறக்கவே முடியாதபடி எப்போதும் என் நினைவில் மழை பெய்து கொண்டிருக்கிறது என்றாள் நவீனிடம் கார்த்திகா. அவளில் துயரார்ந்த சாயல் அந்த வார்த்தைகளுக்கு அழகு கூட்டுவதாக இருந்தது. எப்போதும் மழையில் நனைந்துகொண்டிருக்கும் பெண். அதில் எப்போதும் அவள் காதலன் துயரமாய் அவள் தலையில் இறங்கிக்கொண்டிருக்கிறான். நவீன் அவளை நடமாடும் ஓவியமாக கற்பனை செய்தான். உன் மழைக்காக வருத்தப்படபோவதில்லை என்றான் நவீன். அவன் மனநிலை நிபுணன்.  அவளைப்பற்றியான குறிப்பில் லவ் சிக் என்று குறித்துக்கொண்டான்.   அவள் நிலைக்கே சென்று அவளை வெளியேற்றும் உத்திகளைத் தொடங்கி அவனே அத்துயரின் அழகை ரசிக்க ஆரம்பித்துவிட்டான்.
கார்த்திகா அவனை நிமிர்ந்து பார்த்து. அந்த மழை மட்டுமே தன்னை உயிர்பித்துக்கொண்டிருப்பதாகவும். அத்துயரம் நீங்கினால் அன்று நான் செத்து போவேன். என்றாள் அமைதியாக. தான் தற்கொலை செய்துகொள்ளாமல் இருப்பதற்கு காரணமே பூமியின் கோளத்தைப்போன்று உருண்டையாக தொண்டையை அடைத்துக்கொண்டிருக்கும் அந்தத் துயரம் மட்டுமே. அதுவும் இல்லையென்றால் அவள் முழு வெறுமையை  உணர்வாள். அதன்பின் வாழ்வதற்கான தேவை நீங்கிவிடும். விடாது துக்கப்பட்டுக்கொண்டிருக்க வேண்டியாவது அவள் தான்வாழ வேண்டும் என்று நினைத்தாள். ஏதோ அவள் துயரப்பட்டுக்கொண்டிருப்பது மட்டுமே அவனை முழுமையாக அவள் காதலிப்பதற்கான ஆதாரம் என்று கற்பனை செய்துகொண்டாள்
தன் காதலன் தன்னைவிட்டு வெளியேறிய இரண்டு மாதங்கள் கழித்து நவீனைச் சந்தித்தாள் கார்த்திகா. சைக்காலஸிஸ்டான நவீன் அவள் வேலைபார்க்கும் தொலைக்காட்சியில்  பெண்களின் கவலைகள் குறித்தான  விசயங்களை மனதத்துவ முறைப்படி அலசி ஆராயும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டான்.  அவனின் குரலில் இருந்த மென்மையும் அக்கறையும்  ஆழ் மன உணர்வைப் புரிந்துகொண்டு அவன் பேசியவிதமும் கார்த்திகாவுக்கு பிடித்திருந்தது. அவன் நிகழ்ச்சி முடிந்து சென்ற நாளின் மாலையில் அவனின் செல்போனுக்கு தயக்கத்தோடு அழைத்தாள். விசயம் எதையும் கூறாமல் தான் அவனைச் சந்திக்க விரும்புவதாகவும் தனக்கு கவுன்சிலிங் தேவைப்படுகிறது என்று  கூறினாள். எப்போது வேண்டுமானாலும் தாராளமாக வரலாம் என்றான். கவுன்சிலிங்க்காக அந்த வாரத்தின் சனிக்கிழமை மாலை நவீனுடைய மனநிலை மையத்திற்குச்  சென்றாள் கார்த்திகா.  

கண்ணன்மேல் மீராவுக்கு இருந்த பக்தியை உங்களுக்குத் தெரியுமா என்று நவீன் கேட்டான். எதற்கு என்று கேட்டுவிட்டு, நான் அவன் மீது கொண்டிருக்கும் பித்தினை உலகத்தின் எந்த முதல் கடவுளுக்கும் முதல் பக்தைக்குமான உயிர் உருக்கும் பக்தியால் உங்களால் கற்பனை செய்ய முடியாது. அவை ஆன்மஒளியால் நிரம்பியிருந்தாலும் என் காதலோடு ஒப்பிடும்போது அவை சிறுபுள்ளிதான் என்றாள் கார்த்திகா.
நவீன் அவளை எப்படி அணுகுவது என்று முதலில் குழம்பித்தான் போய்விட்டான். இவளுடையது பைத்தியக்காரத்தனம் இல்லை.ஆனால்,பைத்திய நிலையை ஒட்டிய ஒன்று.ஒரு பித்துஎன்பதாகக் கூடச் சொல்லலாம்.. அதை விட உலகின் அத்தனை இயற்கையாலும் மிளிர்ந்துகொண்டிருக்கும் அழகுணர்ச்சியுடன்  கூடிய  அதீத பிரேமை  என்று அவளுடைய மனநிலைக்கு நவீன் பெயரிட்டுக்கொண்டான்


அவன் உணர்ச்சியின் வெள்ளப்பெருக்கினை பித்தாகப்பார்ப்பதில்லை. தன்னை எளிமையாக்கி இன்னொரு உயிரை ஒப்பிடமுடியா பேரண்டத்தின் மொத்த அன்பின் கனமாக உணரும் இவளைப்போன்ற ஒரு எளிய உயிரையும்,..வன்மத்தின் அத்தனைக் குற்றங்களையும் தன் இதயத்தின் இருளாய் வைத்திருப்பவனையும் வேறு வேறு ஆக இல்லாமல் இரண்டையுமே உண்மையின் உன்னதங்களாகவே பார்க்கிறான். நவீன் கார்த்திகாவிடம் அவள் காதலனைப்பற்றிச் சொல்லமுடியுமா? என்று கேட்க,அவள் அவனைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள். ஆனால் அவளால் கண்ணீரற்று பேசமுடியாமால் தழுதழுத்தாள். அவள் தன் துயரை யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை என்பதை அவள் அழுகை உணர்த்தியது. நவீன் அவளை சமாதானப்படுத்தி இப்போது ஒன்றும் சொல்லவேண்டாம் வீட்டிற்குப்போய்  அவளின் காதலனுக்கு அவள் என்ன சொல்ல விரும்புகிறாள் என்பதை கடிதமாக  எழுதி  எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் என்றான். அழுததில் ஒரு தற்காலிக அமைதி அடைந்தவளாக அங்கிருந்து கிளம்பினாள். 
   
நவீனைச் சந்தித்து விட்டுச் சென்ற இரண்டு மணி நேரத்திற்குள்ளேயே மின்னஞ்லை அனுப்பியிருந்தாள். இவ்வளவு சீக்கிரம் அவள்  அந்தக் கடிதத்தை அனுப்பி வைப்பாள் என்று அவன் நினைக்கவில்லை. அவன் போனில் மெயில் வந்ததற்கான டிங்கென சவுண்ட்  கேட்க அவன் பார்த்துக்கொண்டிருந்த பிரெஞ்சு படத்தை நிறுத்திவிட்டு லேப்டாப்பை திறந்து மெயிலில் வந்த கடிதத்தை படிக்கத் தொடங்கினான். வழக்கமான பாவனையோடுதான் அந்தக் கடிதம் ஆரம்பித்தது.சாதாரண ஒன்றைப் படிப்பது போலவே படிக்க ஆரம்பித்தான்.

அன்புள்ள கார்க்கிக்கு,
நான் தற்கொலையின் விளிம்பிலிருந்து இதை எழுதுகிறேன்.  என்னோட இந்த நிலைக்கு நான் அதிகமாக அன்பு வைத்த நீ முக்கிய காரணம் என்பதால் நான் உனக்கு எழுதுகிறேன். நீ எனக்கு செய்திருக்கும் துரோகத்தை, ஏமாற்றத்தை, வலியை, தனிமையை என் வேலை மூலமாக கடந்துவிடலாம் என்று நினைத்தால், உன் நினைவற்று ஒரு நாளைக்கூட யோசிக்க முடியவில்லை,. ஆனா. நீயோ என் தொடர்பிலிருந்து விடுபட்டுபோய்க்கொண்டே  இருக்கிறாய், நீ என்னிலிருந்து விடுபட்டு போய்க்கொண்டே  இருக்க, என் மனம் என்னை மரணத்தை நோக்கி தள்ளிக்கொண்டே இருக்கிறது. உறவு சார்ந்து அதி உட்சமான துரோகங்களைச் சந்தித்துவிட்டேன். எல்லாவற்றையும் நீயே கொடுத்தாய்.. இனி என் வாழ்வில் வலிப்பதற்கு ஏதுமில்லை. முழு உடலும் மனமும் வலியால் நிரம்பியிருக்கிறது. இதயம் ரத்தத்தால் இல்லை நீ எனக்குச் செய்த துரோகம், ஏமாற்று, வலி இவற்றால்தான் நிரம்பியிருக்கிறது. அது என்னை மரணத்தை நோக்கி நகர்த்துகிறது. என் வாழ்வு  பகடைக்காயாய் ஏணிமரத்தின்  உயரத்தில் ஏறியும், அடுத்த நொடியில்  பாம்பின் தலையிலிருந்து அடிபாதாளத்திற்கு கீழிறங்கியும்  உன் கையில் இருக்கும் பெரும் சூதாட்டமாய் ஆகிவிட்டது. இந்த சூதாட்டத்தில் உன் மனம் சார்ந்து மட்டுமே நீ எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிறாய். உன்னால் வெட்டப்பட்ட என் தலைகள் குறித்த கவலை இல்லை. உனக்கு வேண்டும்போது உன்னோடு வைத்துக்கொள்கிறாய் வேண்டாத போது கொய்து எறிகிறாய்.
நான் அன்பின், காதலின் பூரணத்துவத்தை அடைந்து உன்னிடம் தஞ்சமடைந்துவிட்டபோது உன்காலடியில் நசுங்கும் ஒரு உதிர்ந்த இலையைப்போல்தான் என்னைப்பார்க்கிறாய். என் அன்பும் இரக்கமும் காதலும் கடைசியில் என்னை ஒன்றும் இல்லாததாக்கிவிட்டது. உன்னிடம் அன்பை இரந்து யாசித்து யாசித்து இப்போது குரலற்று போய்விட்டேன். என் காதல் என்னை பலவீனமாக்கிவிட்டது. என்மீது அன்பு வைத்திருந்த எல்லோரையும் இந்தக் காதலால் இழந்துவிட்டேன்.   உனக்கு என்மீது எப்போதும் காதல் இருந்ததில்லை என் மீது வன்மமும் என்னை வெற்றிகொள்ள வேண்டும் என்ற போதையும்தான் இருந்திருக்கிறது. என்னை அன்பால் பலவீனமாக்கி அதை மிகச் சரியாகவே செய்துவிட்டாய். நன்றாக யோசித்துபார். நான் உனக்கு எதாவது  துரோகம் செய்திருக்கிறேனா என்றுஎன்னை  அதை செய்யாதே, இதைச் செய்யாதே அவனோடு பேசாதே இவனோடு பேசாதேஎன்று வன்முறையாக  நீ என்னிடம் நடந்துகொண்டிருக்கும்போது  அதையெல்லாம் செய்யமுடியாது என்று என் உரிமைக்காக உன்னிடம் சண்டை போட்டிருப்பேன். அதே சமயம் உனக்காக உனக்கு பிடிக்காத பல விசயங்களை செய்யாமலும் இருந்திருக்கிறேன். நினைத்துப் பார்த்தால் உன்னுடனான என் காதல் எத்தனை நீண்ட நெடிய போராட்டம். இந்த ஆறு வருடத்தில் இந்தக் காதலை ஒரு சாகசமாக மட்டுமே நீ  நினைத்திருக்கிறாய். நான் முழுவதுமாக உன்னிடம் சரணடைய வேண்டும் உன்னைக் கெஞ்ச வேண்டும் என்று மட்டுமே நீ நினைத்திருக்கிறாய். அதற்காக அன்பு என்ற பெயரில் நீ எவ்வளவு செய்தாய். எத்தனை வெகுளித்தனமாக அத்தனையும் உண்மை என்று நினைத்து நான்  முழுதும் உன் வலைக்குள் விழுந்திருக்கிறேன். நீ யார் என்று தெளிவாக தெரிந்தவிட்ட பின்பும் என் ஆன்மா உண்மையாக உன்னை மட்டுமே நேசிக்கிறது. என் ஆன்மாவின் இந்த நேர்மையும் உண்மையும்தான் என்னை மரணத்தின் விதிக்குள் தள்ளுகிறது.  என்னை அழித்த இந்தக் காதல்தான் என் ஆன்மாவை நிறைக்கும் அமைதியாகவும் இருக்கிறது என்பது எத்தனை முரண்!,
 நான் செய்த தீவினையால்தான் நீ என் வாழ்க்கையில் வந்திருக்கிறாய். என் விடுதலையும் மரணமும் நீயே. இனி உன் வாழ்வில் நீ அன்பு செய்யும் இடத்தில் நான் இல்லை என்பது புரிகிறது. உன்னைப் பொறுத்தவரை உன்னால் தோற்கடிக்கப்பட்ட உன் எதிரி நான்.  என்னுடைய வீழ்ச்சிதான் உன்னுடைய வெற்றி எனும்போது நீ எப்படி என்னைக் காப்பாற்றுவாய். இப்போது உன் தகுதிக்கு   இணையான ஒரு ஆளாக  நான் இல்லை என்று  நினைக்கிறாய். அதனால் இனி  நான் உனக்கு எதிரியாகக்கூட இருக்க முடியாது.
என் இதயம் நீ செய்த துரோகத்தின் திரவத்தால் நிரப்பப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் என்  தூயகாதல் பந்துபோல மிதக்கிறது. அதன் மேல் நான் என் மூச்சிருக்கும்வரை நேர்மையோடிருப்பேன் அன்பு வைத்திருப்பேன். நீ என்னை எத்தனை துரோகித்த பின்பும், எனக்கு உன்மீது எப்போதும் வெறுப்பும் வன்மமும் துளிகூட ஏற்படாது. என்னால் உன்னை என்னிலிருந்து பிரித்து பார்க்க முடியாது. நானே நீயாகத்தான் இருக்கிறாய். நான் அழுது தீர்க்க முடியாத துயரம் நீ.
என் வாழ்வு குறித்து என் பால்ய பருவம், எனக்கு பிடித்த இசை, என் ஊர், என் மலை, என் ஆறு, என் நண்பர்கள் , என் உறவினர்கள், நீ வருவதற்கு முன்னான என் வாழ்க்கை அத்தனையையும் உன்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.  எதையும் நான் மீதம் வைக்கவில்லை. எங்கு சென்றாலும் யாரிடம் பேசினாலும் உன் நினைவற்ற ஒன்றை என்னால் யோசிக்க முடியாது. உன் நினைவு தரும் வலி மிகப்பயகரமானது. நீ எதற்கும் நியாயமாக இல்லை என்பது எத்தனை துயரமானது. என் நினைவு முழுதையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டபிறகு ஒரு தனி மனுசியாய் நான் வாழமுடியாமல் ஊனமாகிவிட்டேன்.ஆனால் நான் எத்தனை  திறமையான பெண்ணாக இருந்தேன். அன்பு இத்தனை பலவீனமாக்கும் என்பதை அறியாமல் வீழ்ந்துவிட்டேனே. என்னை மீட்டெடுக்கும் சக்தியை நான் மூச்சிரைக்க தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். அதற்குள் கேன்சர்போல் பரவியிருக்கிறது அன்பால் ஏற்பட்ட பலவீனம்.  என் கனவு என் வாழ்க்கை அப்படியே அமுங்கிப்போகப்போகிறது என்பதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. நான் பிரமாண்டமாய் உயர்ந்து நிற்க வேண்டிய மரம்.  என் திறமைகளை நான் அறிவேன். ஆனால் இன்று யாரிடமும் நெருக்கமாக இல்லாமல் தனிமைப்பட்டுபோயிருக்கிறேன்.  என்னை முழுவதுமாக எல்லோரிடமும்மிருந்து பிரித்துவிட்டு நீ எங்கோ ஓடி ஒளிந்து கொண்டாய். வாகனத்திற்கு நடுவே மாட்டிக்கொண்ட குழந்தையைப்போல் முழுக் கலக்கமாய் பரிதவித்து பயந்து கிடக்கிறேன். எத்தனை துன்பத்தையும்  ஒரு தூசிபோல் கடந்திருப்பேன் நான் அன்பில் தோற்றுப்போகாமல் இருந்திருந்தால். உன் சூழ்ச்சியில் அழிந்து கிடக்கும்  என்னை இனி எது காப்பாற்றப் போகிறது என்ற தெரியவில்லை. இவை எல்லாவற்றுக்கு பின்பும் நீ எப்போதும் எனக்காக இருப்பாய் என்று என் மூளையில் ஏதோ ஒன்று எனக்கு அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறது. அது நான் மரணத்தை தேர்ந்தெடுப்பதை தள்ளிப்போட வைக்கிறது. அந்த எண்ணம் முழுதும் தடைபடும்போது நான் மரணத்தை தேர்வு செய்துகொள்வேன்.
இப்படிக்கு,
ஆன்மாவில் உன்னை நிறைத்திருப்பவள்.
நீண்ட பெருமூச்சு ஒன்றை உதிர்த்த படி,எழுந்து ப்ளூலேபல் ஸ்காட்ச் சைக் கவிழ்த்து,கொஞ்சம் ஐஸ் கட்டிகளை இட்டுக் கொண்டான் நவீன்.நிதானமாக,ஒரு சிப்பை உதட்டுக்குள் அனுப்பியபடி,அக் கடிதத்தை மறுபடியும் கண்களில் ஓட விட்டான்.ஒரு மணி நேரத்தில்,அவளால் இதை எழுதி அனுப்பியிருக்க முடிகிறது என்றால்,அவளது மன அழுத்தத்தின் உச்சத்தை உணரமுடிகிறது என்று நினைத்த படி,இவளை இக்காதலின் அழுத்தத்தில் இருந்து வெளிக் கொணரமுடியுமா என்கிற மெல்லிய அச்ச உணர்வு தனக்குள் பரவுவதை உணர்ந்து,அதைத் தடுக்க முயற்சி செய்தான். எரிக் போம் எழுதிய தி ஆர்ட் ஆப் லவிங் என்கிற புத்தகத்தை எடுத்து புரட்டலானான்.எரிக் போம் காதலை ஒரு அதீத உணர்வாக,மர்மமாக,மாயத்தன்மை கொண்டதாக நிறுவுவதை நிராகரித்தவர்.காதலை எளிதாக ஆராயமுடியும்,உடைக்க முடியும்,விளக்க முடியும்,இன்னும் சொல்லப் போனால் அதைக் கற்றுக் கொடுக்க முடியும் என்று சொல்லியவர்.இவளுடைய பிரச்னை தனக்குப் புரிவதாகவும்,அதிலிருந்து அவளை மெல்ல தொடர் உரையாடல் மூலம் வெளிக் கொணர்ந்து விடமுடியும் என்பதாகவும் எழுந்த எண்ணங்களில் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு,நாளை தன்னை சந்திக்கமுடியுமா என்கிற குறுந்தகவலை அவளுக்கு அனுப்பி விட்டு அவளுடைய கேஸ் சீட்டில் உரையாடலுக்கான சில குறிப்புகளை எழுத ஆரம்பித்தான்.நாளை பதினோரு மணிக்கு வருகிறேன் என்கிற கார்த்திகாவின் பதில் அவனுடைய மொபைலில் ஒளிர்ந்தது.அவளுடைய வேகத்தைக் கண்டு புன்னகைத்த படி சில சமயங்களில் புயலைத் தடுப்பது அல்லது தணிப்பது கூட ஒரு சைக்காலஜிஸ்ட் ஆக,தன்னுடைய பணிகளில் ஒன்றாக இடம் பெற்று விடுகிறது என்று முணுமுணுத்துக் கொண்டான்.
மறுநாள்,பத்து மணிக்கு,அவன் வீட்டை ஒட்டி அமைந்திருக்கும்,அவனது ஆலோசனை மையத்திற்குள் நுழையும்போது,அவனுடைய மற்ற சில சந்திப்புக்கான நபர்களுடன்,அவளும் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தான்.அவளைக் கடக்கும் போது,மெல்லிய புன்னகையை அளித்துவிட்டு,உங்கள் சந்திப்பு நேரம் பதினோரு மணிதானே என்று கேட்டான்.ஆமாம்,இருந்தாலும் முன்கூட்டியே வந்துட்டேன் என்றாள் கார்த்திகா,ஒரு வித சங்கடத்துடன்..வயலட் பூக்கள் இட்ட வெண் பருத்திப் புடவை ஒன்றை அவள் அணிந்திருந்தாள்.அவள் முகம் படபடப்பாகவும் ,அவளுடைய கேசங்கள் அக்கறையற்றும் கிடந்தன. அவளது நெற்றி வெறுமனே இருந்தது. அவளது காதுகள் வெறிச்சோடிக் கிடந்தன. அவளது மடியில்,அவன் வளர்த்து வந்த சயாமீஸ் பூனைக் குட்டியான ஜில்லு உட்கார்ந்திருந்ததைப் பார்த்து வியந்தபடி ..ஜில்லு சரியாயிட்டா போல,என்று முகப்பு மேஜையில் அமர்ந்திருந்த உதவியாளரிடம் வினவியபடி தன் அறைக்குள் சென்றான் நவீன்.
அவனுடைய முதல் இரண்டு கவுன்சிலிங்களை முடித்து அவளை அழைக்கும்போது நேரம் பதினொன்னரை ஆகியிருந்தது.தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்து அவளை அமரச் சொன்னான்.சில நிமிட மௌனத்திற்கு பின் உங்கள் கடிதம் படித்தேன் கார்த்திகா என்று ஆரம்பித்தான்.இரையை எதிர்நோக்கியிருக்கும் பசித்த விழிகளுடனான ஒரு பெண் புலியைப் போல் அவள் ஆர்வத்துடன் அவன் முகம் நோக்கினாள்.மிக நீண்ட அக்கடிதத்தில் இருந்து உங்கள் மனநிலையை என்னால் ஊகிக்க முடிகிறது.நீங்கள் அதிகத் துயரத்தில் இருக்கிறீர்கள். நான்,உங்களின் அந்தசோகக் கதைக்குள் முழுமையாக செல்ல நினைக்க வில்லை.ஏனெனில்,உங்களின் சோகக் கதையின் ஆரம்பம்,மிக அழகான மழை ஒன்றினை,மிக அருமையான பருவகாலம் ஒன்றினை,மிக மென்மையான பாடல் ஒன்றினைக் கொண்டதாகவும் இருக்கிறது..காதல் எப்போதும் அப்படித் தான் ஆரம்பிக்கும்,. உங்களை துயரத்தில் இருந்து,வெளிவர அதுவே தடுக்கவும் செய்கிறது.காதலின் இனிய தருணங்கள் சாம்பலாக்கும் எரிகனலைத் தம்முள் பொதிந்து வைத்திருக்கும் தன்மை கொண்டவை. நான்,உங்கள் சோகத்தின்,உங்கள் துயரத்தின் தற்போதைய  நிலையிலிருந்து உங்களிடம் உரையாட விரும்புகிறேன் என்றான்.சரிதான் என்பதாக முகம் காட்டி,தலை அசைத்தாள் கார்த்திகா.
உங்கள் கடிதத்தின் இரண்டு இடங்கள் எனக்கு மிகவும் அதீதமாகத் தோன்றின என்றான் நவீன்.என்ன என்பதாக அவள் பார்த்தாள்.முதலில் நீங்கள் மரணத்தை உங்கள் காதலின் துயரத்தின் ஒரே சாத்தியமான விடுதலையாக சொல்லியிருப்பது.இன்னொன்று,கடிதத்தை நிறைவு செய்யும்போது,ஆன்மாவில் உன்னை நிறைதவள் என்று குறிப்பிட்டிருப்பது. ஆன்மாவுக்கு மரணம் இல்லை என்கிற தத்துவத்தை அறிவீர்களா கார்த்திகா என்றான் நவீன் சிரித்தபடியே. அவள் அமைதியாக இருந்தாள். சும்மா,ஒரு பேச்சுக்காக அதைச் சொன்னேன்,நாம் பேச விருப்பது தத்துவம் அல்ல என்று சொல்லிவிட்டு,எத்தனை தடவை இதுவரைக்கும் மரணத்திற்கு முயன்று இருக்கிறீர்கள் கார்த்திகா என்று கேட்டான்.முந்தைய நாள் நாலு தூக்க மாத்திரைகள் போட்டு முயன்றது வரைக்கும் சேர்த்து,இதுவரை பத்து பதினோரு முறை என்றாள் கார்த்திகா.நாலு மாத்திரைகள் உங்களை மரணத்திற்குள் தள்ளும் என்று நம்பினீர்களா என்று கேட்டான் நவீன். இல்லை,அதற்கு மேல் போட்டுவிடுவேனோ என்று ஒரு உணர்வு வந்ததும், அவனைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். வழக்கம் போல் அவன் கிடைக்க வில்லை என்றதும் அம்மாவை அழைத்துச் சொன்னேன், அவர்கள் வந்து பேச ஆரம்பிக்கும்போதே ஆழ்ந்து தூங்கி விட்டேன் என்றாள் கார்த்திகா. ஆனால்,மறுநாள் எழுந்தவுடன் அதே மரணத்தை நோக்கிய மனமும், தலை வலியும் இருந்தன. இப்போதெல்லாம் எனது உடல் முறுக்கிக் கொள்கிற அவஸ்தையும் நிகழ்கிறது. வீட்டில் இருக்கும்போது சிலசமயம் என்னால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு என் உடலும் மனமும் தறிகெட்டுப்போகிறது. ஒரு ஓலத்துடன் முன்னூற்று அறுபது டிகிரிக்கு உடலை முறுக்கிச் சரிகிறேன் என்றாள் கார்த்திகா. அதைச் சொல்லும்போது மிகவும் வெட்கப்பட்டவளாக இருந்தாள் கார்த்திகா. அதை புரிந்தகொண்ட நவீன் அவளை ஆசுவாசப்படுத்தும் விதமாக, அழைப்பு மணியை அமுக்கி, அவர்கள் இருவருக்கும்,பழச் சாறு கொண்டு வரச் சொல்லிவிட்டு, எழுந்து அறைக்குள் நடக்கலானான். தான் அறியாமலே அவள் நிலையின்மேல் அதிக கவனம் எடுத்துக்கொண்டோமா என்றுகூட அவன் எண்ணத் தொடங்கினான், அவளின் கடிதம் அத்தகைய கவனத்தையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது என்று அவன் புரிந்துகொண்டான். கார்த்திகாவைப்போல் துயர்தரும் ரொமாண்டிஸம்  நிறைந்த மனிதர்கள் அவனுடைய தொழிலின் சுவாரஸ்யத்தை கூட்டுவதையும் அவன் மறுப்பதாக இல்லை.   
 
நடந்துகொண்டிருந்த அவன் அங்கே இடப்பட்டிருந்த சோஃபாவில் அமர்ந்தபடி, இங்கே வந்து அமருங்கள் கார்த்திகா என்று அழைத்தான். நாற்காலியை விட இது சற்று சவுகர்யமாயிருக்கும் என்றான். அவள் எழுந்து வந்து அமர்ந்தாள். உங்கள் முகமும்,கேசமும்,உடல் பாவனைகளும் தன் மேல் சிறிதும் அக்கறையற்ற ஒரு ஜீவனைப் போல் இருக்கிறது என்றான் நவீன். அவள் அதை ஆமோதிக்கிற மாதிரி,அமைதியாக இருந்தாள். அவளுக்கு முதலில் அக்கறை தேவை என்பதால் அவ்வப்போது இப்படி அவள் நிலை குறித்த கவலைகளைத் தெரிவித்தான்
பத்து,பதினோரு முறை நீங்கள் தற்கொலைக்கு முயன்றும் இப்போது உயிருடன் தான் இருக்கிறீர்கள் என்கிற நல்ல விஷயத்துக்காகவே நீங்கள் அக்கறையற்று இருப்பதை மன்னிக்கலாம் தான் என்றான் நவீன் புன்னகைத்த படி. அவள் எதையும் வெளிக் காட்டாமல்,நான் இத் துயரத்தில் இருந்து வெளியே வந்து விட முடியும் என்று உண்மையில் நீங்கள் நம்புகிறீர்களா என்று நவீனை நோக்கி கேள்வி எழுப்பினாள். அது,உண்மையில் நீங்கள் அதை விரும்புகிறீர்களா என்பதைப் பொறுத்தும் இருக்கிறது என்றான் அவனுக்கான பழச் சாறை அருந்தியபடி. நீங்கள் முதலில் கொஞ்சம் ஜூஸ் குடிங்கள்,உங்களிடம் மிக முக்கியமான இன்னொரு பதிலை அதற்கப்புறம் நான் எதிர்பார்க்கிறேன் என்றான் கார்த்திகாவிடம்.. அவள் அவனுக்காக அதை அருந்துவது போலான பாவனையில் டம்ளரை எடுத்துக் கொண்டாள்.
எனக்கு இந்த துயரம் பிடிக்கவே இல்லை. உண்மையாக மிக சந்தோசமான பெண்  நான் என்று சொல்லிவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்து நிறுத்தினாள். நவீன் அவளைப் பார்த்து நிறுத்த வேண்டாம் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ எல்லாவற்றையும் சொல்லிவிடுங்கள் என்றான். அவள் ஜூசை மொத்தமாக ஒரே மூச்சில் குடித்து முடித்தாள். அவளுடைய அந்த பரபரப்பை பார்த்தபோது அவள் தன்னுடைய எல்லாத் துயரங்களிலிருந்தும் மீளத் துடிக்கிறாள் என்பதை அவனுக்கு உணர்த்தியது. முதல் சந்திப்பின்போது துயரமே அவளைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது என்று சொன்னவள் இப்போது துயரம் பிடிக்கவே இல்லை என்கிறாள். முன்பு அவள் சொன்னபோது,அவள் சொல்வதை ஆமோதிப்பதுபோல் அவளுடைய துயரத்தைப்பற்றி அவன் ஒன்றும் கூறாமல் இருந்தான். அதற்கு காரணம் இருந்தது. அப்போது அவளிடம் அந்தத் துயரம் மட்டுமே முழுதாய் மண்டிக் கிடந்தது. அந்தத் துயரத்தை ரொமான்டிசைஸ் செய்து அதிலிருந்து அவளை வெளிவரச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு வரும் வரைக்கும் அதுவே அவளைக் காக்கும் என்று சொல்லியிருந்தான். ஏனென்றால்,அதீத துயரம் மரணத்தையும் தாண்டிய ஒரு தண்டனை வழியை யோசிக்கச் செய்யும் யாரையும் என்பதை அவன் பிறர் உடனான அனுபவத்தின் மூலம் அறிந்திருந்தான். புராணத்தில் கண்ணகி தன் துயரின் உச்சத்தில் மதுரையை எரித்த மாதிரியான ஒரு மனநிலை அது. இப்போது,அவள் அதிலிருந்து வெளிவரத் துடிக்கிறாள் என்பது அவனுக்கு,கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.இனி,ஒருவேளை,அவனுடைய உரையாடல் பலன் தரக் கூடும் என்றும் நம்பிக்கை வந்தது.
உங்களை ஒவ்வொரு முறையும் மரணத்திற்கு போக விடாமல் எதோ ஒன்று தடுத்திருக்கிறது என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா கார்த்திகா என்று கேட்டான். அந்த எதோ ஒன்று வெளியில் இருந்து வந்ததல்ல...அது உங்களுக்கு உள்ளே இருக்கிற ஒன்றுதான் என்றான் நவீன். நீங்கள் சொல்ல வருவதன் அர்த்தம் சரியாகப் பிடிபடவில்லை என்றாள் கார்த்திகா ஒரு குழப்பமான முக பாவனையுடன். உங்கள் ஆன்மா உங்கள் காதலனைக்  கொண்டு நிறைத்திருப்பதாக நீங்கள் நம்புகிறீர்கள்.ஆனால்,உண்மையில் உங்களின் அதே ஆன்மா இன்னொன்றையும் அதன் மிக ஆழமான இடத்தில ஒளித்து வைத்திருக்கிறது. அது உங்களுக்கான ஒன்று.உங்களின் சுயம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். அந்த உங்களுக்கான சுயம் உங்களை மரணத்திடம் இருந்து தடுத்துக் கொண்டே இருக்கிறது. இன்னமும்,அது உங்களைத் தடுத்துக் கொண்டே தான் இருக்கும். அது என்ன என்பதை நீங்கள் அக்கறையோடு யோசித்தால் வெளிக் கொண்டு வந்து விடமுடியும்  என்றான் நவீன்.  அவள் ஆச்சர்யமாகப் பார்த்தாள். அவளின் முகத்தில் ஒரு ஒளிக் கீற்று தோன்றி மறைந்தது. அவன் மேலும் சொன்னான், உங்கள் கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்த படி, நீங்கள் ஒரு பிரமாண்டமாய் உயர்ந்து நிற்க வேண்டிய மரம், அதற்கான திறமைகள் உங்களிடம் இருக்கின்றன,ஆனால்,அதை நோக்கிய உங்கள் பார்வையை ஒரு போதும் செலுத்த முடியாத அளவுக்கு,நீங்கள் நேசித்தவருக்கு எல்லாவற்றையும் அள்ளிக் கொடுத்திருக்கிறீர்கள் அல்லது அவ்வாறு நினைக்கிறீர்கள். உங்கள் காதல் எத்தனை வருடம் கார்த்திகா என்றான் நவீன். ஆறு வருடம் என்றாள்.காலத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் கூட,இந்த ஆறுவருடம் அவருக்கானது மட்டுமே என்ற பட்சத்தில் அவர் இப்போது இல்லாத போது,அது வலிக்க ஆரம்பிக்கிறது. அதுவும் இல்லாமல் கடந்து வந்த அத்தனை காலங்களையும் இசை போன்ற எல்லா உணர்வுகளையும் முழுமையாக அவரோடு பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். எல்லாவற்றையும்விட உங்கள் காதலன் ஒன்றை பொறுமையாகச் செய்திருக்கிறார் என்று மட்டும் புரிகிறது. நீங்கள் அவரிடம் பகிர்ந்து கொண்டவற்றை மிகவும் ஆர்வத்தோடும் அன்போடும் கேட்டிருப்பார். மற்றவர்கள் இதில் என்ன இருக்கிறது என்று சாதாரணமாக நினைப்பதை உங்கள் காதலன் ஆச்சர்யத்தோடு கேட்டிருப்பார். கிட்டத்தட்ட உங்களிடம் அந்த விசயம் என்னவாக இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டிருந்திருப்பார், அதனால் நீங்களும் உங்களின் எல்லா விசயங்களோடும் அவரை   இணைத்துக்கொண்டுவிட்டீர்கள். உங்கள் வாழ்வு குறித்த கற்பனைகளையும் கனவுகளையும் அவரால் மட்டுமே சரியாக புரிந்துகொள்ள முடியும் என்று முழுமையாக நினைத்ததால் அவர் உங்களைவிட்டு பிரிந்ததும்  உங்களின் எல்லா விசயங்களும் உங்களைவிட்டு பிரிந்துசென்றுவிட்டதாக நினைக்கிறீர்கள்.
      
இன்னமும் எளிய வார்த்தைகளில் சொன்னால்,உங்களின் இசை,உங்களின் ருசி,உங்களின் பயணம்,உங்களின் சமூகம் குறித்த அக்கறை,உங்கள் வலி,சந்தோசம் எல்லாமே இந்த ஆறு வருடங்களில் அவருடன் தான் இணைந்திருந்திருக்கிறது. இப்போது,அவர் இல்லாமல் போகும் ஒரு கணத்தில் மேற்சொன்ன எல்லாமும் இல்லாமல் போய்,வெறுமையில் நிற்பதாக ஆழமாக நம்புகிறீர்கள்.ஆனால்,உண்மையில்,மேல் சொன்ன எல்லாவற்றிலும் உங்களின் ஆன்மா ஒளித்து வைத்திருக்கிற சுயம் நிரம்பி இருக்கிறது. சுயம் என்பதே மிகப்பெரிய சுதந்திரம்தான். அந்த சுதந்திரம் உங்கள் மனதிற்கடியில் கிடக்கிறது. துயரம் என்கிற கழிவிரக்கம் உங்களை அடிமைப்படுத்துகிறது மேலெழும்பி நிற்கிறது. அதை ஏற்றுக்கொள்ளாத உங்களுடைய சுதந்திர மனம்தான் அதிலிருந்து விடுபடுவதற்காக மரணத்தை நாடுகிறது. ஆனால் உண்மையில் அந்த சுயம் தான் உங்களை நான் சொன்ன மாதிரி மரணத்திலிருந்து தடுத்துக் கொண்டே இருக்கிறது.அவர் இல்லாமல் போவது குறித்த துயரம் என்று நீங்கள் உணர்வது நிஜமாக உங்களின் சுயம் இல்லாமல் போனது குறித்தான வலி தான்.  உங்களின் சுயம் என்பது அவரை நிறைத்திருப்பதாக நீங்கள் உணரும் ஆன்மாவின் ஆழத்தில் ஒரு சிறு பொறியாய் ஒளிர்கிறது.அதைக் கொஞ்சம் கொஞ்சமாய் மேலெழுப்பி உங்கள் ஆன்மாவை நிறையுங்கள்.அந்த ஆன்மா என்பதே உங்களின் ஆசையும் சுயமும் தான். அது மேலேழும்பும்போது,நீங்கள் வெளி வந்து விடுவீர்கள் கார்த்திகா என்றான். . உங்களுடைய எல்லாமும் உங்களோடுதான் இருக்கிறது. அவர் எதையும் எடுத்துச் செல்லவில்லை. அதை நீங்கள் நம்புங்கள் கார்த்திகா என்றான்.  
  
உங்களிடைய காதலன் திரும்பி வருவதற்கான வாய்ப்பிருக்கிறதா கார்த்திகா என்றான் நவீன். அவர் திரும்பியே வரப்போவதில்லை. அப்படியே வந்தாலும் முன்பிருந்த முழு அன்போடு அவர் இருக்கமாட்டார். நான் தற்கொலைக்கு முயன்றது, அவரில்லாமல் நான் பெரும் வேதனை அடைவேன் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அப்படியும் அவர் அதுகுறித்து எந்தக் கவலையுமற்று இருந்துவிட்டு அவருக்கு தோன்றும் நேரத்தில் என்னிடம் வந்து நின்றால் அது எப்படி உண்மையான அன்பாக இருக்க முடியும். அவர் என் வாழ்விலிருந்து நிரந்தரமாகப் போய்விட்டார். எனக்கு இந்த துயரம் வேண்டாம். அது உண்மையில் என்னுடையது இல்லை என்று முடிவு செய்தவளைப்போல பேசிவிட்டு, மெல்ல தன் கேசத்தைச் சரி செய்து கொண்டு,நாளை வரட்டுமா என்று கேட்டாள்.தாராளமாக என்றான் நவீன்
அடுத்த நாள் அவள் வரவில்லை. நவீன் பரபரப்பாக அன்றைய கவுன்சிலிங்களை முடித்துவிட்டு இரவில் தன் குட்டி பூனை ஜில்லுவிற்கு உணவை வைத்துவிட்டு, டீவியில் வெளிநாட்டு சேனலில் ஓடிக்கொண்டிருந்த படத்தை பர்த்துக்கொண்டிருந்தான். கார்த்திகாவை அவன் முழுமையாக மறந்துபோயிருந்தான். வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. படம் பார்ப்பதை நிறுத்திவிட்டு கொஞ்சம் நேரம் மழை பெய்வதை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு மீண்டும் சோபாவில் வந்து அமர்ந்தான். சாப்பிட்டக் களைப்பிலிருந்த பூனைக்குட்டி அவன் மடியிலேறி படுத்துக்கொண்டது. அப்போது அவன் போனில் குறுஞ்செய்தி வந்ததற்கான சத்தம் ஒலித்தது. கார்த்திகா செய்தி அனுப்பியிருந்தாள். அவர் போனபிறகு நான் முதல் முறையாக மழையை துயரமற்றுப் பார்க்கிறேன். அழகாக இருக்கிறது என்றிருந்தது அவளுடைய செய்தி

நன்றி: தி இந்து,சித்திரை வருட மலர்-2014  

கருத்துகள் இல்லை: