செவ்வாய், 26 ஜனவரி, 2010

நினைவில் நீ, நான் மற்றும் சாலை.


மழையில் உன் சாலை ஒரு பறவையைப்போல மிதந்து கொண்டிருக்கும் நேரத்தில் என் தூக்கத்தில் நீ சிரித்துக்கொண்டிருந்தாய். நிழல்படிந்த உன் சாலை மிக அழகானது நீயோ நானோ அல்லது ஒரு குழந்தையோ நடந்து செல்லும்போது. பூக்கள் உதிர்ந்து கிடக்கும் சாலையை அவமதிக்காதே பூக்களுக்கு நிகரான உன் சிரிப்பை உதிர்த்து சாலையை மேலும் அழகாக்கிச் செல். சாலையின் முடிவில் மழையில் நனைந்தபடி மறைந்து செல்லும் உருவத்தை நானாய் நீ கற்பனை செய்வதை நிறுத்தாதே என் நினைவில் உன் சாலை உயிர்பெறட்டும். நீ நடந்து செல்லும் சாலை பூக்கள் மலர்ந்த காடு...இன்னும் இன்னும் என் அன்பின் வார்த்தைகளில் உன் சாலை உயிருள்ள ஓவியம்.

வெள்ளி, 22 ஜனவரி, 2010

காதலை பிரியாதீர்கள்




மழையடிக்கும் பொழுதுகள்
காதலைச் சொல்லும் தூதகணங்கள்
அன்பர்களே
உங்கள் காதல் முறிவினை அப்பொழுதில் நிகழ்த்தாதீர்.
காதல் பொழிவில் தேகம் அழகுறும் வசந்தகாலத்தில்
எனவே சிறப்பானவர்களே
விடைசொல்லி நீண்ட மௌனத்தோடு பிரிவதற்கு
ஏதுவானது இல்லை அக்காலம்.
தனிமையின் துயர் நெக்குருக வாட்டும் பனிக்காலத்தில்
நண்பர்களே அதுவும் சிறப்பானதல்ல.
வெம்மை தகிக்கும் கோடை
உங்கள் அன்பானவர்களின்
தற்கொலையைத் தூண்டும்
நீங்காதீர் அவர்களை குறிப்பாக கோடையில்.
இலை உதிரும் நாட்களின் உலர்ந்த காற்றுகள்
திரெகத்தை வலிமை இழக்கச் செய்யும்
நோய்தாக்கும்.
பருவமற்ற சாதாரண தினங்கள்
பிரிந்த காதலை நினைத்து நினைத்து
பித்துக்கொள்ளச் செய்யும்.
எந்தப் பருவமும் உகந்தல்ல
காதலை விட்டுச் செல்வதற்கு
எனவே
எக்காலத்திலும் காதலியுங்கள் காதலைப் பிரியாமல்

வியாழன், 7 ஜனவரி, 2010

எனது இரண்டு நூல்கள் வெளியீடு





சிறுகதைகள் மற்றும் கவிதை நூல்களை உயிர் எழுத்து பதிப்பகம்
வெளியிட்டுள்ளது. கவிதைகள் தொகுப்பை கவிஞர் நா. முத்துக்குமார் வெளியிட
கவிஞர் சமயவேல் மற்றும் நடிகர் ஜெய் பெற்றுக்கொண்டனர். சிறுகதை தொகுப்பை
எழுத்தாளர் ஷோபா சக்தி வெளியிட இயக்குனர் சசிக்குமார் பெற்றுக்கொண்டார்.

சிறுகதைகள் தொகுப்பு- 'காட்டின் பெருங்கனவு'

'மனித உறவுகளை விரும்பி நாடும் ஜீவன்கள் எதிர்கொள்ளும் அவஸ்தைகளைப்
பேசுகின்றன சந்திராவின் கதைகள்.நேரான சொல்லல் முறையைக் கொண்டுள்ள இக்கதைகள் பால் சார்பற்றுக் கிளைத்தெழுகின்றன. பெண் மனம் தனித்து அவதானிக்கக்கூடிய நுட்பமான விஷயங்களைப் பதியும் சந்திராவின் கதையுலகில் இயற்கை பிரிக்க முடியாத கூறாக விளங்குகிறது. ஒரு மலைக்கிராமம் தொடங்கி சூது நிரம்பிய பெருநகரம்வரை புவியியல் அடையாளங்களாகக் கொண்ட சந்திராவின் கதையுலகப் பரப்பு வசீகரமானது'-எழுத்தாளர் நஞ்சுண்டன்.

கவிதைகள்-நீங்கிச் செல்லும் பேரன்பு

'தனித்த பறவையொன்றின் கீதமாய் காற்றில் கலந்து சன்னமாய் மனதிற்குள் ஒலிக்கச் செய்கின்றன சந்திராவின் கவிதைகள். மீளாத் துயரொன்றின் மீதேறிய கண்ணீரின் வார்த்தைகள் அவை. துரோகமும் மரணமும் அன்பு முறிதலுமாய் வாழ்க்கை துன்பங்களை பரிசளிக்கையில் அதற்கு பதிலாய் மொழியின் வாயிலாக வெறுமையின் வரைபடங்களை கவிதைகளாக வெளிப்படுத்துகிறார் சந்திரா'-கவிஞர் உமாஷக்தி.

http://www.andhimazhai.com/news/viewmore.php?id=10945

வியாழன், 24 டிசம்பர், 2009

துயர்கொண்ட பாடல்


இன்னும் மீட்டப்படாமல்
புல்லாங்குழலில் பதுங்கிய இசையாய்
என்னுள் நிரம்பியிருக்கும் அன்பே
கடைசியாக
கடல் கொண்ட தனிமையை பரிசளித்தாய்
கன்னங்களில் வழிந்தோடும் நீரைத் துடைக்கும் பொருட்டு
நீ என்னை ஆட்சிசெய்தாய்
வாசனைகளால் நிரம்பி வழிந்த சொற்கள்
மயக்கமூட்டுகின்றன
இரவும் பகலும் தீய்ந்து பொசுங்குகின்றன
காலம் வெளி மறந்து மங்குகின்றன நினைவுகள்
தடித்த முத்தங்களால்
புண்ணாகிப்போன உதடுகள்
கேலி செய்கின்றன
மறைக்கப்பட்ட காதல் கடிதங்கள்
வாழ்வின் தீராத் துயரங்கள்
அன்பின் நிழலுருவம்
கண்ணிமைகளில் தொக்கி நிற்கிறது
தூரங்களை கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றன
நடக்க மறுக்கும் கால்கள்
அமைதியை விரும்புகிறது இதயம்
எல்லாவற்றிர்க்கும் மேலே
நானே எழுதிய
துயர்கொண்ட நீண்ட பாடல் வரிகள் அயர்ச்சியூட்டுகின்றன.

புதன், 23 டிசம்பர், 2009

அறையில் மரித்த பட்டாம்பூச்சி


நிலையின்றி விடாமல் பறந்துகொண்டிருந்த
வழிதவறிய பட்டாம்பூச்சி
என் அறைக்குள் வீழ்ந்து மரித்தது
சந்தனம், கறுப்பு, வெள்ளை,பழுப்பு வண்ணங்களில்
பளபளத்த அதன் இறக்கைகள்
சோர்ந்து துவண்டிருந்தன
பட்டாம்பூச்சி வாழ உவந்ததாக இல்லை
பெருநகரத்தின் நிலம்
எங்கிருந்து வந்தது அம்மாவின் அதிசயமான கேள்வி
பட்டாம்பூச்சி அழுத்தமாக உச்சரித்து
வீட்டுக்கு வந்தால் நல்லது என்பார்கள் என்றது
ஆனால் இறந்த பட்டாம்பூச்சி
அம்மாவின் கவலை
இறந்த பட்டாம்பூச்சியை என்ன செய்ய அம்மா
புதைத்துவிடு மகனே என்றேன்
இடம் தேடி அலைந்தான் மகன்
கான்கிரிட் கட்டிடங்களின் சிமெண்ட் தளங்கள்
அவனைச் சோர்வடையச் செய்தன
கடைசியாக என் புத்தகம் ஒன்றில் பத்திரப்படுத்தினான்
புத்தகத்தின் வரிகள் திருத்தி எழுதப்பட்டன
பட்டாம்பூச்சி பற்றி
மகன் எழுதிய சிறந்த கவிதை.

வெள்ளி, 18 டிசம்பர், 2009

பிரபஞ்சத்தை நிறைக்கும் உடல்


என் கருந்தசைகளை
தின்ன ஆசைப்பட்டபோது
உன் காதலைச் சொன்னாய்
மாமிச பட்சியின்
ஒளிர்ந்த கண்கள்
கிளர்ச்சியூட்டியது
இதயத்தில் அல்லாது
மூளையில் உன்னை அமர்த்திக்கொண்டேன்
குற்றவுணர்வில்லையே என்றபடி
லிங்கத்தை கூர்மையாக்கி
என் துயரினில் செருகினாய்
அதிர்ந்தது உடல்
கீற்றைப்போல் கூட
அன்பு ஒளிந்திருக்கவில்லை அதில்
துக்கத்தை முழுமையாக்கினாய்
என் உடலை காகங்களுக்கு
தின்னக் கொடுத்தேன்
மாமிச வாடை
பிரபஞ்சத்தை நிறைக்கிறது.


2

மென் சொற்களில் துவங்கியது
வன் சொற்களில் முடிகிறது .
விலங்குகளின் உருமல்களோடு
தவித்தலைந்து வன்மம் கொண்டிருக்கிறது
பாவிகளின் ஆன்மா .
வெளிகளில் மிதக்கும் என் புன்னகையில்
ஒளிந்திருக்கிறது
அவர்களுக்கான நேசம் .

திங்கள், 14 டிசம்பர், 2009

பெருமழைக் காலம்


நகரம் பெருமழையாய் காட்சியளித்தது
அவனுக்காக
மரமல்லிப்பூக்கள் உதிரும் சாலையில்
வெகுநேரம் காத்திருந்தாள்
அவள் கண்களில் துளிர்த்த கண்ணீர்
நகரை மூழ்கடித்தது
எப்படியும் பெருக்கெடுக்கும் வெள்ளத்தில்
தன்னை அடைவான் என்றிருந்தாள்
தன் சுவடுகளை அருவமற்று அழித்து
அவன் பாலையில் குடியேறியதாகச் சொன்னான்
மழைக்கோட்டணிந்த வழிப்போக்கன் ஒருவன்.