கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 பிப்ரவரி, 2014

ஆலிலைதரித்தவள்



உன் அறைக்கு வெளியே உதிர்ந்த இலைகளைப்போல\
தூத்தித்தள்ளாதே
அப்புறப்படுத்த முடியா ஆலிலைகளாய் உன் உடலில் தரித்திருக்கிறேன்
மெலிந்த என்னுடலில் கிசுகிசுப்பாய் நினைவுகள் ஆர்ப்பரித்தபடிதானிருக்கும்
உப்புக்கரிக்கும் கடல்காற்றில் நிலாஇறங்கி என் ஆன்மாவின் நிசப்சத்தை
வாரியணைத்துக்கொள்ளும்போது அவைகள் அடங்கும்
சோப்புக்குமிழ்களாய் மகிழ்வை ஊதி உன்னை உடைக்கச் சொன்னவளின்
பழுப்புநிறக் கண்களில் தெரிந்த உலகம் உன்னுடையதுதான்
ஒரு இலையுதிர் காலத்தில் கால்கடுக்க
நீ இரைந்து கரைந்து பெற்ற காதலை
ஆர்ப்பரிக்கும் அற்பத்திற்கு தூரவீசிஎறிகிறாய்
நீர்க்குமுழி வெடிக்கும் நேரத்திற்கு குறைவான நேரமே ஆகும் உயிர்பிரிய
அப்போது ரகசியமாய் உன் முத்தத்தின் வாசனை உயிரை நிறைக்கும்

வியாழன், 28 மார்ச், 2013

ஆயிரம் தலை கொய்த புத்தன்

உலகத்தின் கண்கள் மூடிக்கண்ட காலத்தில்
புத்தனின் குவளை குருதியால் நிரம்பியது
ஆயிரம் குழந்தைகளின் தலைகள் 
காலடியில் விழ்ந்த பின்னும் 
பதற்றத்துடனே இருக்கிறான் 
முள்வேலியிட்டு பத்திரப்படுத்துகிறான் 
மிச்சமிருக்கும் வன்மத்தை.
காகங்கள் கொத்திக்கொண்டுபோன
ஜனத்திரளின்உயிர் வெளியெங்கும்
சிறுஅலையாகி எம்பியதும்
கொடுவாள்களை துப்பாக்கிகளை பீரங்கிகளை
பதுக்குகிறான் உயிர்மாய்ந்த பதுங்குக் குழிகளில்.
அண்டைவீட்டுக்காரனெல்லாம்
நாக்குகளை நீட்டி
புத்தனின் மேல் படிந்த ரத்தக்கறைகளை
துடைத்தகற்றத் துடிக்கிறான்
அவை குழந்தைகளின் இளம்ரத்தம்
அண்டமெல்லாம் நிரம்பிய
நீராலே கழுவமுடியாக் கண்ணீர்
உயிர்த்தெழும்பும் கடல் அலை.

வியாழன், 14 பிப்ரவரி, 2013

வழிதவறியது ஆட்டுக்குட்டி அல்ல கடவுள்.



காட்டுச் செடியின் நீலமலரைப்போன்று பிரகாசமான
ஆழ்ந்த அன்பினால் என் பாதங்கள் நடுங்கிய அன்று
உன் நிதானத்தின் முன் எந்த கோரிக்கையுமற்று
வெறுமனே மெழுகுவர்த்திகளை ஏற்றியபோது
பறந்தன மின்மினி பூச்சிகள்
கடவுளால் நிராகரிக்கப்பட்ட
அவற்றின் ஒளி ஆன்மாவின் பாடலாய்
எளிமையின் உருவாக பிரபஞ்சத்தை நிரப்பி
ஆட்டுக்குட்டியினை நடனமாடச் செய்து
பெருவாழ்வு கையளிக்கப்பட்டது
அச்சிறு உயிரின் முன்
உச்சாடனத்தில் தலைகிறுகிறுக்க குப்புறக் கவிழ்ந்தது என் உலகம்
கடவுளும் அப்பாடலை தனக்காக்கும்படி இறைஞ்சினார்
வழிதவறியது ஆட்டுக்குட்டி அல்ல கடவுள்.

ஞாயிறு, 29 ஜூலை, 2012

நட்சத்திரங்களை ப்ரசவிப்பவள்


துயர் நிரம்பிய மாலை
எம்பிக் குதிக்கும் உன் நினைவுகள்
பிரகாசமாய் துளிர்க்கிறது பேரன்பு பெருமழையாய்
ஒளி குறுகி நீளும் இரவு
இரவினைக் கொண்டாடும் நட்சத்திரம் மிகுந்த வானம்
இதயக்கூட்டுக்குள் அற்புதவாதையாய் ஒடுங்கிக்கொண்டாய்
என் சிறுபூனையே
கணத்தில் நிறமாறுகிறது                
இத்தருணத்தின் மகிழ்ச்சியின் ஆழ்ந்த ஒளியை
பத்திரப்படுத்துகிறேன்
விலகிச் செல்லும் நிழலினைப் போன்ற நீ
காரிருள் சூழ்ந்துகொள்ளும் நாளினை பரிசளிப்பாய்
அப்போது மரணித்தவளின் அகன்று விரிந்திருக்கும் விழியில்
உன்னை வழியனுப்பி வைப்பேன்
வெளியேறிச் செல்லும்போது தாவிஓடி
என்னைப் பதற்றப்படுத்தாதே
மென் பாதச்சுவட்டை
என் இதயத்தில் ஆழப்பதிந்தே வெளியேறலாம் அன்பே
அவை ப்ரியத்தின் குட்டி குட்டி நட்சத்திரங்களை
தினம் தினம் ப்ரசவிக்கும்.

வியாழன், 17 மார்ச், 2011

ஓவியத்தில் மறைந்துகிடக்கும் தற்கொலை

நீங்கள் அந்த தற்கொலையை ரசிக்காமல் இருக்க முடியாது.
இதயத்தை பிடுங்கி எறிவதைப் போன்ற அல்லது
உங்கள் அழகியலை தூண்டக்கூடிய சாவகாசமான ,
உங்களை எந்த குற்ற உண்ர்விலும் ஆழ்த்தாத
அழகான தற்கொலை அது
ஆம்
இளம் சிவப்பும் ஆரஞ்சு கலந்த மஞ்சளும் சூழ்ந்த அழகான அந்திச் சாயலில்
வண்ணங்களை உள்ளிழுத்து பயிர்பருத்த கோதுமை வயலில்
எல்லையற்ற நீண்ட சமவெளியில் நடுவில் ஓடும்
மனிதர்களற்ற நீண்ட ரயில்பாதை.
வான்கோ தன் ஓவியத்தில் வரைந்திருக்கலாம்
அல்லது அதன் தோல்வியை கண்டிருந்திருக்கலாம்
ஏகாந்தத்தில் மிதந்த பெண் ஒருத்தி
திறந்த ரயில் கதவின் கம்பிகளை பிடித்தவாறு
இயற்கையின் அத்தனை அழகியலும் கண்டு திருப்பியுற்றபின்
காற்றின் மிதக்கும் அவள் ஆன்மா நிறைவடைந்த கணத்தில்
அத்தனை அழகியலை பூரணமடையச் செய்ய
அவளிடம் இருப்பது ஒரே வழிதான்
வெள்ளை வண்ண உடையில்
இதுவரை யாருமே அடைய முடியாத அழகான கோணத்தில்
ஒரு பறவையைப்போல் பறந்து
கோதுமை வயலில் உடல்பரப்பி வீழ்ந்து கிடப்பது
அது உங்களால் ரசிக்காமல் இருக்க முடியாத வரைபடம்
என்பதில் வியப்பில்லை
ஆனால் எவராலும் வரையப்பட முடியாதது
அப்படியே முனைந்தாலும்
அந்த இளம் வெள்ளை உடைக்காரியின் பறவையின் உடல்
தூரிகையில் மிதந்துகொண்டிருக்குமே தவிர
உங்கள் ஓவியங்களில் அரூபமாக மட்டுமே
ஒளிந்துகிடக்கும்
என் கவலையெல்லாம்
அந்த அழகான தற்கொலையை உங்களால்
ஞாபகத்தில் வைத்துகொள்ள முடியாதது என்பதுதான்.

புதன், 9 மார்ச், 2011

வெற்று வெளி



இளம் மஞ்சள் மாலையில்
பறவையைப்போல் திக்கற்று பறக்கலாம்
மாலை கருகும் நேரத்தில்
அடையாளமற்ற கூட்டில்
முழுஇருளின் கறுமையில் கரையலாம்
...இருண்மையின் தனிமை அன்றைய
பித்துநிலையை சமன்செய்யும்
விடியும்
மீண்டும் பித்துக்கொள்ளலாம்
மீண்டும் சமனடையலாம்
பித்து சமன்
வாழ்வின் இருபோக்கு
இதுதவிர்த்து சுவாரஸ்யமற்றே இருக்கிறது
வெற்று வெளி.

(ஸ்ரீநேசனின் ’ஒரு மலையின் மாலை’ பாதிப்பிலிருந்து உருவான கவிதை.)

வியாழன், 8 ஜூலை, 2010

அதிகாரத்தின் மூத்திரநாத்தம்


நகரம் திறந்தவெளிச் சிறை
ஒரு அகதியைப் போல் என் அறையில் சுருண்டு கிடக்கிறேன்
மஞ்சள் சூரியனும் வெள்ளை மழையும் எனக்கு ஒன்றே
இருட்டிய வானமும் ஒளிர்ந்த வெளிச்சமும் ஒன்றே
அறையின் வெப்பமும் குளிர்ந்த காற்றும் ஒன்றே
அன்பின் மகிழ்வும் துன்பத்தின் வாதையும் ஒன்றே
அமிழ்ந்த இசையாய் என் அறைக்குள் ஒடுங்கவே விரும்புகிறேன்
தமிழ் இலக்கியம் சினிமா பத்திரிக்கை
இசை தொலைக்காட்சி பஸ் நிறுத்தம்
மருத்துவமனை காவல்நிலையம்
தியேட்டர் பள்ளிக்கூடம் கேளிக்கை விடுதிகள் ரயில்நிலையம்
பன்னீர் மரத்தின் நிழலைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை
நகரமெங்கும் அதிகாரத்தின் மூத்திரநாத்தம்
மூச்சு திணறடிக்கும் ஓங்கிய குரல்கள்
துதியற்ற என் இருப்பை அவர்கள் விரும்பவில்லை
காற்றில் நீலம் பாரித்த விஷத்தை அனுப்பினார்கள்
அவர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அநீதி
காற்றைப்போல் ஊர்ந்து கதவிடுக்கின் வழியாக
என் பூட்டிய அறைக்குள் நுழைகிறது
துக்கங்களை மட்டுமே நேசித்து பழக்கப்படுத்தப்பட்ட
என் கறுத்து சிறுத்த இதயம் காரி உமிழ்ந்த எச்சில்
காற்றின் நீலத்தை அழித்தது
என் பரிகசிப்பில் மரித்துக்கிடக்கும்
உங்கள் ஆணவத்தின் சங்கிலியை
முழந்தாளிட்டு பொறுக்கிச் செல்லுங்கள்..

சனி, 10 ஏப்ரல், 2010

மௌனத்தின் சொல்



உன்னைச் சிறப்பாக அழைப்பதற்கு
சொற்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
அன்பைவிட பெரியசொல்
இதுவரை பூமியில் உச்சரிக்கப்படாத
ஆதிச்சொல்
உன்மத்தம் பிடித்தலையச் செய்யும் அழகியசொல்
தேடிக்கலைகிறேன்
எங்கும் இல்லை அந்த பொன் பொறித்த சொல்
கடைசியில் கண்டடைந்தேன்
மௌனத்தில் விரியும் என் புன்னகையே
உனக்கான தேவச்சொல் என்பதை

2
முடிவில்லா புன்னகை

அவன் உதடுகளில்
மௌனம் அழகானது
முத்தங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவை
புன்னகை முடிவில்லாக் கவிதை
உதிரும் சொற்கள் பேரண்டம் ஆளுபவை
ஆகா! அவனது உதடுகள்
பனித்துளி மிதக்கும் காடு
மழைகுடித்த காட்டுப்பூக்கள்
ஆம் அவன் உதடுகள் எழில்வாய்ந்தவை
நானே அவைகளின் பேரரசி

3
தொடர்பற்ற நதி

பரந்துகிடக்கும் வெளி
அடைக்கும் மௌனம்
சிதைந்த ஒலி
வெளிறிய வெளிச்சம்
நட்பறுந்த பொழுதுகள்
காதலின் மரணம்
குழந்தையின் வீறிடல்
அம்மாவின் கண்ணீர்
இவை தொடர்பற்று தொடர்புகொண்டிருக்கிறது
ஓடிக்கொண்டிருக்கும் நதியைப்போல

(ஏபரல் 2010 அம்ருதா இலக்கிய இதழில் வெளிவந்த எனது கவிதைகள்.)

வெள்ளி, 22 ஜனவரி, 2010

காதலை பிரியாதீர்கள்




மழையடிக்கும் பொழுதுகள்
காதலைச் சொல்லும் தூதகணங்கள்
அன்பர்களே
உங்கள் காதல் முறிவினை அப்பொழுதில் நிகழ்த்தாதீர்.
காதல் பொழிவில் தேகம் அழகுறும் வசந்தகாலத்தில்
எனவே சிறப்பானவர்களே
விடைசொல்லி நீண்ட மௌனத்தோடு பிரிவதற்கு
ஏதுவானது இல்லை அக்காலம்.
தனிமையின் துயர் நெக்குருக வாட்டும் பனிக்காலத்தில்
நண்பர்களே அதுவும் சிறப்பானதல்ல.
வெம்மை தகிக்கும் கோடை
உங்கள் அன்பானவர்களின்
தற்கொலையைத் தூண்டும்
நீங்காதீர் அவர்களை குறிப்பாக கோடையில்.
இலை உதிரும் நாட்களின் உலர்ந்த காற்றுகள்
திரெகத்தை வலிமை இழக்கச் செய்யும்
நோய்தாக்கும்.
பருவமற்ற சாதாரண தினங்கள்
பிரிந்த காதலை நினைத்து நினைத்து
பித்துக்கொள்ளச் செய்யும்.
எந்தப் பருவமும் உகந்தல்ல
காதலை விட்டுச் செல்வதற்கு
எனவே
எக்காலத்திலும் காதலியுங்கள் காதலைப் பிரியாமல்

வியாழன், 24 டிசம்பர், 2009

துயர்கொண்ட பாடல்


இன்னும் மீட்டப்படாமல்
புல்லாங்குழலில் பதுங்கிய இசையாய்
என்னுள் நிரம்பியிருக்கும் அன்பே
கடைசியாக
கடல் கொண்ட தனிமையை பரிசளித்தாய்
கன்னங்களில் வழிந்தோடும் நீரைத் துடைக்கும் பொருட்டு
நீ என்னை ஆட்சிசெய்தாய்
வாசனைகளால் நிரம்பி வழிந்த சொற்கள்
மயக்கமூட்டுகின்றன
இரவும் பகலும் தீய்ந்து பொசுங்குகின்றன
காலம் வெளி மறந்து மங்குகின்றன நினைவுகள்
தடித்த முத்தங்களால்
புண்ணாகிப்போன உதடுகள்
கேலி செய்கின்றன
மறைக்கப்பட்ட காதல் கடிதங்கள்
வாழ்வின் தீராத் துயரங்கள்
அன்பின் நிழலுருவம்
கண்ணிமைகளில் தொக்கி நிற்கிறது
தூரங்களை கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றன
நடக்க மறுக்கும் கால்கள்
அமைதியை விரும்புகிறது இதயம்
எல்லாவற்றிர்க்கும் மேலே
நானே எழுதிய
துயர்கொண்ட நீண்ட பாடல் வரிகள் அயர்ச்சியூட்டுகின்றன.

புதன், 23 டிசம்பர், 2009

அறையில் மரித்த பட்டாம்பூச்சி


நிலையின்றி விடாமல் பறந்துகொண்டிருந்த
வழிதவறிய பட்டாம்பூச்சி
என் அறைக்குள் வீழ்ந்து மரித்தது
சந்தனம், கறுப்பு, வெள்ளை,பழுப்பு வண்ணங்களில்
பளபளத்த அதன் இறக்கைகள்
சோர்ந்து துவண்டிருந்தன
பட்டாம்பூச்சி வாழ உவந்ததாக இல்லை
பெருநகரத்தின் நிலம்
எங்கிருந்து வந்தது அம்மாவின் அதிசயமான கேள்வி
பட்டாம்பூச்சி அழுத்தமாக உச்சரித்து
வீட்டுக்கு வந்தால் நல்லது என்பார்கள் என்றது
ஆனால் இறந்த பட்டாம்பூச்சி
அம்மாவின் கவலை
இறந்த பட்டாம்பூச்சியை என்ன செய்ய அம்மா
புதைத்துவிடு மகனே என்றேன்
இடம் தேடி அலைந்தான் மகன்
கான்கிரிட் கட்டிடங்களின் சிமெண்ட் தளங்கள்
அவனைச் சோர்வடையச் செய்தன
கடைசியாக என் புத்தகம் ஒன்றில் பத்திரப்படுத்தினான்
புத்தகத்தின் வரிகள் திருத்தி எழுதப்பட்டன
பட்டாம்பூச்சி பற்றி
மகன் எழுதிய சிறந்த கவிதை.

வெள்ளி, 18 டிசம்பர், 2009

பிரபஞ்சத்தை நிறைக்கும் உடல்


என் கருந்தசைகளை
தின்ன ஆசைப்பட்டபோது
உன் காதலைச் சொன்னாய்
மாமிச பட்சியின்
ஒளிர்ந்த கண்கள்
கிளர்ச்சியூட்டியது
இதயத்தில் அல்லாது
மூளையில் உன்னை அமர்த்திக்கொண்டேன்
குற்றவுணர்வில்லையே என்றபடி
லிங்கத்தை கூர்மையாக்கி
என் துயரினில் செருகினாய்
அதிர்ந்தது உடல்
கீற்றைப்போல் கூட
அன்பு ஒளிந்திருக்கவில்லை அதில்
துக்கத்தை முழுமையாக்கினாய்
என் உடலை காகங்களுக்கு
தின்னக் கொடுத்தேன்
மாமிச வாடை
பிரபஞ்சத்தை நிறைக்கிறது.


2

மென் சொற்களில் துவங்கியது
வன் சொற்களில் முடிகிறது .
விலங்குகளின் உருமல்களோடு
தவித்தலைந்து வன்மம் கொண்டிருக்கிறது
பாவிகளின் ஆன்மா .
வெளிகளில் மிதக்கும் என் புன்னகையில்
ஒளிந்திருக்கிறது
அவர்களுக்கான நேசம் .

திங்கள், 14 டிசம்பர், 2009

பெருமழைக் காலம்


நகரம் பெருமழையாய் காட்சியளித்தது
அவனுக்காக
மரமல்லிப்பூக்கள் உதிரும் சாலையில்
வெகுநேரம் காத்திருந்தாள்
அவள் கண்களில் துளிர்த்த கண்ணீர்
நகரை மூழ்கடித்தது
எப்படியும் பெருக்கெடுக்கும் வெள்ளத்தில்
தன்னை அடைவான் என்றிருந்தாள்
தன் சுவடுகளை அருவமற்று அழித்து
அவன் பாலையில் குடியேறியதாகச் சொன்னான்
மழைக்கோட்டணிந்த வழிப்போக்கன் ஒருவன்.

வெள்ளி, 11 டிசம்பர், 2009

ப்ரியமானவர்களின் தேவதை...


பெருநீலக் கரையில்
தனித்து அலைந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு சொல்லும்
மண்கோர்த்த சிப்பிகளில் சேகரிப்படுகிறது
அதை திறக்கும் சிறுமி உலகின் தனிமையின் தேவதை ஆகிறாள்
சொற்களைப் பிரித்து பிரபஞ்சம் முழுக்க விசிறி எறிகிறாள்
அது உங்கள் ப்ரியமானவர்களையும் சென்றடையலாம்

வியாழன், 10 டிசம்பர், 2009

வெளியேறும் பட்டாம்பூச்சிகள்


நீலமலர்கள் ஆற்றங்கரையில் விரவிக்கிடந்த
ஒளிநிரம்பிய மழைநாளில்
மலர்வாசனையில்
மயங்கிக் கிடந்தன
கனவில் கண்ட பட்டாம்பூச்சிகள்
இறக்கை மூடாத அவைகளை
எனது வலது கையில்
வண்ணங்களாய் மலரச் செய்தேன்
ஆற்றின் ஒளிநிரம்பிய நீரைப்பிடித்து
என் கைகளில் ஊற்றி
ஒளிநீரைக் குடி என்றாய்
என் உடலில் பெருகியது ஒளிவெள்ளம்
கையிலிருந்த பட்டாம்பூச்சிகள்
திசையற்றுப் பறந்துபோயின
அன்றிரவு ஒளிநிரம்பியநீர்
சூடாக வெளியேறியது
கொல்லையில் அமர்ந்திருந்த
பலவண்ணப் பட்டாம்பூச்சிகள்
என்னை பார்த்துச் சிரித்தன
வெறுமை.

புதன், 9 டிசம்பர், 2009

மறப்பதற்க்கு...


சரி எல்லாவற்றையும் வெறுங்கள் பரவாயில்லை
துக்கமாய் இருங்கள்
நீங்களே உங்களை வன்கத்தியால்
இருதயத் தசையில் சொருகிக்கொள்ளுங்கள்
கவலை தரும் அவர்களை மறக்க முடியுமென்றால்

சொற்களின் நிரம்பாதவன்


சிரமமின்றி வெகு இயல்பாய் சேர்த்துச் செய்வான் வார்த்தைகளை
முதன் முதலாய் கடல் பார்த்த குதூகலத்துடன்
நெம்பி வழியும் அது
உப்புக்கரிக்கும்நீர் காயம் படிந்த தசைகளில் தெறிக்கும்
ஆனந்தம் அதில்
விரும்பிச் சேரும் மீன்கள்
சிக்கலின்றி பின்னலிடப்பட்ட வலையில்
உன்னைவிட
ஒருமாற்று குறைந்த அன்பே என்னுடையது என்று
சொற்கள் உண்மையை விளம்பும்
ஆகா! என்ன ஒப்புதல் வாக்குமூலம்
குற்றங்களே ஆனாலும்
மனம் ஆராதிக்கும்
இவனே சரியென்று...
இடப்பட்ட சொற்கள் எல்லாம்
ஒருநாள் மௌனங்களால் வெளியேற்றப்படும்
அலைகழியும் மனதுடன்
நிறைய சொற்களுடன்
அவனைப் பிராத்தித்தால்
சொற்களில் நிரம்பாதவன் நான் என்பான்
கவனம்.

செவ்வாய், 8 டிசம்பர், 2009

திரும்பி வராதவனின்.....


உன்னை நான் அடையாளம் காணாத
அந்த முதல் தருணத்தில்
கடும் தேனீர் சாப்பிட்டபடி
ஆக்ரோசமாக பேசிக்கொண்டிருந்த
என்னை யாரென்று கவனித்து கேட்டேன்
என்றாய் பின்னாளில்.
அங்கேயே பெரும்நகரம் நடுங்க
அன்பின் கருத்தை உன் வார்த்தையால் கொடுங்கத்தியாக்கி
கூட்டத்தில் செருகினாய்
என் வன்மம் தூண்டி
அன்று நான் புறக்கணிக்கும் எதிரியானாய்
மற்றொரு சந்திப்பில்
உன்னைக் கடந்து சென்ற போதும்
பாவங்களின் பாவி என்றே கருக்கொண்டேன்
பிரிதொருநாளில்
என் நண்பர்களுடன் நீ நிற்கையில்
எதிர்பாராமல் உன்னிடம் பேச வாய்த்தபோது
நீ சிறந்த கவிஞன் என்றேன்
சொல்லிவிட்டு என் வாகனத்தை திருப்பினால்
மரணம் மிக அருகில் நின்றது
உயிர் எழுப்பும் ஒசையைப்போல
பார்த்து போங்க உன் தாய்மையின் குரல்
அன்பின் பெருத்த விழிகளால் நான் திரும்பிப் பார்த்தேன்
இனி எல்லாம் நிகழும் என்பதை
உன் நண்பனும் என் தோழியும் அறிந்தே வைத்திருந்தார்கள்
நாம் இப்போது இல்லாமல் இருப்பதையும்.

திங்கள், 7 டிசம்பர், 2009

அப்பாவோடு மடிந்த கடவுள்


ஏசு முள்கீரிடம் சூட்டி
சோகமாகக் காட்சியளித்த
நகரத்தின் பெருங்கட்டடத்திற்கு
அப்பாவை முதலில் அழைத்துச் சென்றேன்

அன்றிரவு தூக்கத்தில்
தாதியை அழைத்து
பிதாமகனின் முள்கிரிடத்தை அகற்றி
மருந்திடச் சொன்னார்

அவர் கடவுளப்பா
தானே உயிர்த்தெழுவார்
என்றேன்

தலையசைத்து சமாதானம் அடைந்தார்
மறுநாள்
கடவுள் தன்னருகே
படுத்துறங்கியதாகச் சொன்னார்
எலும்பை உருக்கும்
வலி மட்டும் நீள்வதாகச் சொன்னவர்
கடவுளும் கொடூர வலியின்
உச்சத்தை அடைந்திருப்பார் என்றார்

அப்பா தூங்குங்கள்
இசையை முடுக்கினேன்
தலையை வருடினேன்
தூங்கிப்போனார்

உறக்கச் சடவில்
பாவம் கடவுள்
அவர் இறக்கும் தறுவாயில்
இசையை கேட்டிருப்பாரா
யாராவது அவர்மீது
முத்தங்களை பதித்தனராவென முனங்கினார்

அப்பா
அவர் கடவுளப்பா
தானே உயிர்த்தெழுவார்
என்றேன்

அவருக்கும் வலித்திருக்கும் இல்லையா
என்ற அப்பா
தன் சிரசின் வழியே வெளியேறி
மூடிய கதவை திறவாமல்
இவ்வுலகை மறுதலித்துச் செல்லும்போது
கடவுள் அவர் தோளில் அமர்ந்திருந்தார்.

(உயிர் எழுத்து இதழில் டிசம்பர் 2009 ல் வெளியான எனது கவிதை)

சனி, 5 டிசம்பர், 2009

கனவுகளை வரையாதே அம்மா


பருத்தி பூ போட்ட சட்டையணிந்து
மண்குதிரை ஏறி பறக்கிறாய் மகளே
என் கனவில் என்றேன்
நான் பால்யம் அற்றவள் அம்மா
நிறங்களில் வழியும் உன் கனவுகள் பொய்யானவை
ஏன் அம்மா என் கனவுகளை
நீ கண்டுகொண்டிருக்கிறாய்
கருப்பு வெள்ளைகளால் ஆன அவைகள்
எனக்குச் சொந்தமானவை
கனவுகளில் என் ரெக்கைகளை
வரையாதே அம்மா
இயல்பிலேயே அவை என்னோடிருக்கின்றன
என் விளையாட்டினைப் பூட்டி
உன் அறைக்குள் சுருட்டிக்கொண்டிருக்கிறாய்
உன் தோழமைகள்
எனக்கு பிரிவினைச் சொல்லிக்கொடுக்கிறது
வந்துபோகும் அவைகளை
நான் வெறுக்கிறேன் அம்மா
உன் குழந்தமையும் பால்யமும்
என்னை பொறுமையிழக்கச் செய்கிறது
பொறுத்துக்கொண்டிருக்கிறேன்
உன் விழிகளில் ததும்பும் நீரை சகிக்காமல்
என் பால்யம் நிரம்புவதற்கு முன்பே
ருதுவாகும் நாளை குறித்துக்கொண்டிருக்கிறாய்
உன் குருட்டுத்தனத்தால்
போ அம்மா
கருப்பு வெள்ளையிலான
என் கனவுகளை நானே கண்டுகொள்கிறேன்.