திங்கள், 19 மே, 2014

துயரமெனும் சிறுபுள்ளி



அந்தக் கனவு மிக அற்புதமானது.   

நீண்ட பனி இரவு. உள்ளங்கையை மென்மையாக  ஆனால் விடுபடாத அழுத்தத்துடன் பிடித்துக்கொண்டிருந்தான்.அவனின் விரல்களின் மென்மை  கார்த்திகாவின் மனதை நிரப்பும் இசையைப்போல இருந்தது.பிரசவத்தில் குழந்தை வெளியேறிய வலி நீங்கிய தருணத்தின் நிம்மதியைக் கொண்டிருந்தது அவள்மனம் . அப்போது,பூக்கள் நிறைந்த காட்டுப்பாதையை ஞாபகப்படுத்தும்படியான இனிமையான காற்று வீசியது. அடர்ந்த காட்டுக்குள் மரங்களின் மேலிருந்து ஊடுருவிய மஞ்சள் வெயிலைப்போன்ற அவனுடைய சிரிப்பு எல்லாக்கசப்புகளையும் நீக்கியது. முழுமகிழ்ச்சி என்பது இதுவாகத்தான் இருக்கும் என்பதைப்போல மனம் நிறைந்திருந்தது.  ஆனால் அது கனவு மட்டுமே. 
கனவு முடிந்த காலை
கார்த்திகாவின் காதலன்  நேற்றிரவே வீட்டைவிட்டுப் வெளியேறிவிட்டிருந்தான். அவளால் அந்தக் கனவிற்கான அர்த்தத்தை உணர முடியவில்லை. பேரன்பு வைத்திருந்தவன் நீங்கிச் சென்ற நாளில் அவன் அத்தனை அன்புடன்  இருப்பதாக கனவு வருமா? ஆனால் நிஜம் மிகக் கொடூரமானதாக இருந்தது. மிகப்பெரிய வாளால் தொண்டையைக் கீறியதைப்போல துக்கம் அடைத்துக்கொண்டது. வெக்கை நிரம்பிய காலை வேதனையைக் கூட்டியபடி அவன் அவளைவிட்டுச் சென்றதை ஆழமாக உணர்த்தியது. கனவு என்று பொய்யான மயக்கம் நடுக்கூடத்தில்  சாக்ஸாகக் கிடந்தது. அவன் அவசரமாக பேக் செய்ததில் விடுபட்ட  ஒற்றை சாக்ஸ் பிரிவின் சாட்சியாக துயரத்தை அதிகரித்தபடி கிடந்தது. 
வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்த அந்த அப்பார்ட்மெண்ட் மூன்று மாடிகளுடன் பத்து குடித்தனங்களை கொண்டிருந்தது.  பெயிண்ட் மங்கிப்போய் கட்டிடமே அவள் மனநிலையை சிதைப்பதாக இருந்தது.   கதவைத் திறந்தால் வாகனங்கள் விரைந்தோடும் தார்ச்சாலை. வீட்டைவிட்டு வெளியேறி காலாற நடக்க முடியாதபடி அதன் இருப்பே நோய்த்தன்மை கொண்டிருந்தது.  வாடகை வீடுதான். அவன் அவளை வெறுக்கத் தொடங்கிய ஆரம்பக் கட்டத்திலேயே வேறு வீட்டிற்கு இடம்பெயர்ந்திருந்தால் அவன் இப்படி நிரந்தரமாக சென்றிருக்கமாட்டானோ என்று முட்டாள்தனமாக யோசித்தாள். பின்பு அவளே அந்த யோசனையை அழித்து அந்த வீட்டில் அவர்கள் நிறைந்த மகிழ்ச்சியுடன் இருந்த நாட்களைப் பற்றி எண்ணத் தொடங்கினாள்.  நடுக்கூடத்தில் கிடந்த சாக்ஸ்  அவள் எண்ணத்தை குலைத்தபடியிருந்தது. அதனை அவளால் அப்புறப்படுத்தவே முடியாது என்ற நிலையில் அதன் அருகில் தலைவைத்து படுத்துக்கொண்டாள். அது ஒரு பாம்பு குறுகிக்கிடப்பதைப்போன்று அவளருகில் கிடந்தது.அவனை இருத்தி வைத்துக்கொள்வதற்கான எல்லா வகைமுறைகளையும் கையாண்டிருந்தாள் எல்லாவற்றையும் மீறி அவனுடைய வெளிநடப்பு நிகழ்தேறிவிட்டது.
அவனை நான் மறக்கவே முடியாதபடி எப்போதும் என் நினைவில் மழை பெய்து கொண்டிருக்கிறது என்றாள் நவீனிடம் கார்த்திகா. அவளில் துயரார்ந்த சாயல் அந்த வார்த்தைகளுக்கு அழகு கூட்டுவதாக இருந்தது. எப்போதும் மழையில் நனைந்துகொண்டிருக்கும் பெண். அதில் எப்போதும் அவள் காதலன் துயரமாய் அவள் தலையில் இறங்கிக்கொண்டிருக்கிறான். நவீன் அவளை நடமாடும் ஓவியமாக கற்பனை செய்தான். உன் மழைக்காக வருத்தப்படபோவதில்லை என்றான் நவீன். அவன் மனநிலை நிபுணன்.  அவளைப்பற்றியான குறிப்பில் லவ் சிக் என்று குறித்துக்கொண்டான்.   அவள் நிலைக்கே சென்று அவளை வெளியேற்றும் உத்திகளைத் தொடங்கி அவனே அத்துயரின் அழகை ரசிக்க ஆரம்பித்துவிட்டான்.
கார்த்திகா அவனை நிமிர்ந்து பார்த்து. அந்த மழை மட்டுமே தன்னை உயிர்பித்துக்கொண்டிருப்பதாகவும். அத்துயரம் நீங்கினால் அன்று நான் செத்து போவேன். என்றாள் அமைதியாக. தான் தற்கொலை செய்துகொள்ளாமல் இருப்பதற்கு காரணமே பூமியின் கோளத்தைப்போன்று உருண்டையாக தொண்டையை அடைத்துக்கொண்டிருக்கும் அந்தத் துயரம் மட்டுமே. அதுவும் இல்லையென்றால் அவள் முழு வெறுமையை  உணர்வாள். அதன்பின் வாழ்வதற்கான தேவை நீங்கிவிடும். விடாது துக்கப்பட்டுக்கொண்டிருக்க வேண்டியாவது அவள் தான்வாழ வேண்டும் என்று நினைத்தாள். ஏதோ அவள் துயரப்பட்டுக்கொண்டிருப்பது மட்டுமே அவனை முழுமையாக அவள் காதலிப்பதற்கான ஆதாரம் என்று கற்பனை செய்துகொண்டாள். 
தன் காதலன் தன்னைவிட்டு வெளியேறிய இரண்டு மாதங்கள் கழித்து நவீனைச் சந்தித்தாள் கார்த்திகா. சைக்காலஸிஸ்டான நவீன் அவள் வேலைபார்க்கும் தொலைக்காட்சியில்  பெண்களின் கவலைகள் குறித்தான  விசயங்களை மனதத்துவ முறைப்படி அலசி ஆராயும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டான்.  அவனின் குரலில் இருந்த மென்மையும் அக்கறையும்  ஆழ் மன உணர்வைப் புரிந்துகொண்டு அவன் பேசியவிதமும் கார்த்திகாவுக்கு பிடித்திருந்தது. அவன் நிகழ்ச்சி முடிந்து சென்ற நாளின் மாலையில் அவனின் செல்போனுக்கு தயக்கத்தோடு அழைத்தாள். விசயம் எதையும் கூறாமல் தான் அவனைச் சந்திக்க விரும்புவதாகவும் தனக்கு கவுன்சிலிங் தேவைப்படுகிறது என்று  கூறினாள். எப்போது வேண்டுமானாலும் தாராளமாக வரலாம் என்றான். கவுன்சிலிங்க்காக அந்த வாரத்தின் சனிக்கிழமை மாலை நவீனுடைய மனநிலை மையத்திற்குச்  சென்றாள் கார்த்திகா.  

கண்ணன்மேல் மீராவுக்கு இருந்த பக்தியை உங்களுக்குத் தெரியுமா என்று நவீன் கேட்டான். எதற்கு என்று கேட்டுவிட்டு, நான் அவன் மீது கொண்டிருக்கும் பித்தினை உலகத்தின் எந்த முதல் கடவுளுக்கும் முதல் பக்தைக்குமான உயிர் உருக்கும் பக்தியால் உங்களால் கற்பனை செய்ய முடியாது. அவை ஆன்மஒளியால் நிரம்பியிருந்தாலும் என் காதலோடு ஒப்பிடும்போது அவை சிறுபுள்ளிதான் என்றாள் கார்த்திகா.
நவீன் அவளை எப்படி அணுகுவது என்று முதலில் குழம்பித்தான் போய்விட்டான். இவளுடையது பைத்தியக்காரத்தனம் இல்லை.ஆனால்,பைத்திய நிலையை ஒட்டிய ஒன்று.ஒரு பித்துஎன்பதாகக் கூடச் சொல்லலாம்.. அதை விட உலகின் அத்தனை இயற்கையாலும் மிளிர்ந்துகொண்டிருக்கும் அழகுணர்ச்சியுடன்  கூடிய  அதீத பிரேமை  என்று அவளுடைய மனநிலைக்கு நவீன் பெயரிட்டுக்கொண்டான். 


அவன் உணர்ச்சியின் வெள்ளப்பெருக்கினை பித்தாகப்பார்ப்பதில்லை. தன்னை எளிமையாக்கி இன்னொரு உயிரை ஒப்பிடமுடியா பேரண்டத்தின் மொத்த அன்பின் கனமாக உணரும் இவளைப்போன்ற ஒரு எளிய உயிரையும்,..வன்மத்தின் அத்தனைக் குற்றங்களையும் தன் இதயத்தின் இருளாய் வைத்திருப்பவனையும் வேறு வேறு ஆக இல்லாமல் இரண்டையுமே உண்மையின் உன்னதங்களாகவே பார்க்கிறான். நவீன் கார்த்திகாவிடம் அவள் காதலனைப்பற்றிச் சொல்லமுடியுமா? என்று கேட்க,அவள் அவனைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள். ஆனால் அவளால் கண்ணீரற்று பேசமுடியாமால் தழுதழுத்தாள். அவள் தன் துயரை யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை என்பதை அவள் அழுகை உணர்த்தியது. நவீன் அவளை சமாதானப்படுத்தி இப்போது ஒன்றும் சொல்லவேண்டாம் வீட்டிற்குப்போய்  அவளின் காதலனுக்கு அவள் என்ன சொல்ல விரும்புகிறாள் என்பதை கடிதமாக  எழுதி  எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் என்றான். அழுததில் ஒரு தற்காலிக அமைதி அடைந்தவளாக அங்கிருந்து கிளம்பினாள். 
   
நவீனைச் சந்தித்து விட்டுச் சென்ற இரண்டு மணி நேரத்திற்குள்ளேயே மின்னஞ்லை அனுப்பியிருந்தாள். இவ்வளவு சீக்கிரம் அவள்  அந்தக் கடிதத்தை அனுப்பி வைப்பாள் என்று அவன் நினைக்கவில்லை. அவன் போனில் மெயில் வந்ததற்கான டிங்கென சவுண்ட்  கேட்க அவன் பார்த்துக்கொண்டிருந்த பிரெஞ்சு படத்தை நிறுத்திவிட்டு லேப்டாப்பை திறந்து மெயிலில் வந்த கடிதத்தை படிக்கத் தொடங்கினான். வழக்கமான பாவனையோடுதான் அந்தக் கடிதம் ஆரம்பித்தது.சாதாரண ஒன்றைப் படிப்பது போலவே படிக்க ஆரம்பித்தான்.

அன்புள்ள கார்க்கிக்கு,
நான் தற்கொலையின் விளிம்பிலிருந்து இதை எழுதுகிறேன்.  என்னோட இந்த நிலைக்கு நான் அதிகமாக அன்பு வைத்த நீ முக்கிய காரணம் என்பதால் நான் உனக்கு எழுதுகிறேன். நீ எனக்கு செய்திருக்கும் துரோகத்தை, ஏமாற்றத்தை, வலியை, தனிமையை என் வேலை மூலமாக கடந்துவிடலாம் என்று நினைத்தால், உன் நினைவற்று ஒரு நாளைக்கூட யோசிக்க முடியவில்லை,. ஆனா. நீயோ என் தொடர்பிலிருந்து விடுபட்டுபோய்க்கொண்டே  இருக்கிறாய், நீ என்னிலிருந்து விடுபட்டு போய்க்கொண்டே  இருக்க, என் மனம் என்னை மரணத்தை நோக்கி தள்ளிக்கொண்டே இருக்கிறது. உறவு சார்ந்து அதி உட்சமான துரோகங்களைச் சந்தித்துவிட்டேன். எல்லாவற்றையும் நீயே கொடுத்தாய்.. இனி என் வாழ்வில் வலிப்பதற்கு ஏதுமில்லை. முழு உடலும் மனமும் வலியால் நிரம்பியிருக்கிறது. இதயம் ரத்தத்தால் இல்லை நீ எனக்குச் செய்த துரோகம், ஏமாற்று, வலி இவற்றால்தான் நிரம்பியிருக்கிறது. அது என்னை மரணத்தை நோக்கி நகர்த்துகிறது. என் வாழ்வு  பகடைக்காயாய் ஏணிமரத்தின்  உயரத்தில் ஏறியும், அடுத்த நொடியில்  பாம்பின் தலையிலிருந்து அடிபாதாளத்திற்கு கீழிறங்கியும்  உன் கையில் இருக்கும் பெரும் சூதாட்டமாய் ஆகிவிட்டது. இந்த சூதாட்டத்தில் உன் மனம் சார்ந்து மட்டுமே நீ எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிறாய். உன்னால் வெட்டப்பட்ட என் தலைகள் குறித்த கவலை இல்லை. உனக்கு வேண்டும்போது உன்னோடு வைத்துக்கொள்கிறாய் வேண்டாத போது கொய்து எறிகிறாய்.
நான் அன்பின், காதலின் பூரணத்துவத்தை அடைந்து உன்னிடம் தஞ்சமடைந்துவிட்டபோது உன்காலடியில் நசுங்கும் ஒரு உதிர்ந்த இலையைப்போல்தான் என்னைப்பார்க்கிறாய். என் அன்பும் இரக்கமும் காதலும் கடைசியில் என்னை ஒன்றும் இல்லாததாக்கிவிட்டது. உன்னிடம் அன்பை இரந்து யாசித்து யாசித்து இப்போது குரலற்று போய்விட்டேன். என் காதல் என்னை பலவீனமாக்கிவிட்டது. என்மீது அன்பு வைத்திருந்த எல்லோரையும் இந்தக் காதலால் இழந்துவிட்டேன்.   உனக்கு என்மீது எப்போதும் காதல் இருந்ததில்லை என் மீது வன்மமும் என்னை வெற்றிகொள்ள வேண்டும் என்ற போதையும்தான் இருந்திருக்கிறது. என்னை அன்பால் பலவீனமாக்கி அதை மிகச் சரியாகவே செய்துவிட்டாய். நன்றாக யோசித்துபார். நான் உனக்கு எதாவது  துரோகம் செய்திருக்கிறேனா என்று… என்னை  ”அதை செய்யாதே, இதைச் செய்யாதே அவனோடு பேசாதே இவனோடு பேசாதே” என்று வன்முறையாக  நீ என்னிடம் நடந்துகொண்டிருக்கும்போது  அதையெல்லாம் செய்யமுடியாது என்று என் உரிமைக்காக உன்னிடம் சண்டை போட்டிருப்பேன். அதே சமயம் உனக்காக உனக்கு பிடிக்காத பல விசயங்களை செய்யாமலும் இருந்திருக்கிறேன். நினைத்துப் பார்த்தால் உன்னுடனான என் காதல் எத்தனை நீண்ட நெடிய போராட்டம். இந்த ஆறு வருடத்தில் இந்தக் காதலை ஒரு சாகசமாக மட்டுமே நீ  நினைத்திருக்கிறாய். நான் முழுவதுமாக உன்னிடம் சரணடைய வேண்டும் உன்னைக் கெஞ்ச வேண்டும் என்று மட்டுமே நீ நினைத்திருக்கிறாய். அதற்காக அன்பு என்ற பெயரில் நீ எவ்வளவு செய்தாய். எத்தனை வெகுளித்தனமாக அத்தனையும் உண்மை என்று நினைத்து நான்  முழுதும் உன் வலைக்குள் விழுந்திருக்கிறேன். நீ யார் என்று தெளிவாக தெரிந்தவிட்ட பின்பும் என் ஆன்மா உண்மையாக உன்னை மட்டுமே நேசிக்கிறது. என் ஆன்மாவின் இந்த நேர்மையும் உண்மையும்தான் என்னை மரணத்தின் விதிக்குள் தள்ளுகிறது.  என்னை அழித்த இந்தக் காதல்தான் என் ஆன்மாவை நிறைக்கும் அமைதியாகவும் இருக்கிறது என்பது எத்தனை முரண்!,
 நான் செய்த தீவினையால்தான் நீ என் வாழ்க்கையில் வந்திருக்கிறாய். என் விடுதலையும் மரணமும் நீயே. இனி உன் வாழ்வில் நீ அன்பு செய்யும் இடத்தில் நான் இல்லை என்பது புரிகிறது. உன்னைப் பொறுத்தவரை உன்னால் தோற்கடிக்கப்பட்ட உன் எதிரி நான்.  என்னுடைய வீழ்ச்சிதான் உன்னுடைய வெற்றி எனும்போது நீ எப்படி என்னைக் காப்பாற்றுவாய். இப்போது உன் தகுதிக்கு   இணையான ஒரு ஆளாக  நான் இல்லை என்று  நினைக்கிறாய். அதனால் இனி  நான் உனக்கு எதிரியாகக்கூட இருக்க முடியாது.
என் இதயம் நீ செய்த துரோகத்தின் திரவத்தால் நிரப்பப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் என்  தூயகாதல் பந்துபோல மிதக்கிறது. அதன் மேல் நான் என் மூச்சிருக்கும்வரை நேர்மையோடிருப்பேன் அன்பு வைத்திருப்பேன். நீ என்னை எத்தனை துரோகித்த பின்பும், எனக்கு உன்மீது எப்போதும் வெறுப்பும் வன்மமும் துளிகூட ஏற்படாது. என்னால் உன்னை என்னிலிருந்து பிரித்து பார்க்க முடியாது. நானே நீயாகத்தான் இருக்கிறாய். நான் அழுது தீர்க்க முடியாத துயரம் நீ.
என் வாழ்வு குறித்து என் பால்ய பருவம், எனக்கு பிடித்த இசை, என் ஊர், என் மலை, என் ஆறு, என் நண்பர்கள் , என் உறவினர்கள், நீ வருவதற்கு முன்னான என் வாழ்க்கை அத்தனையையும் உன்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.  எதையும் நான் மீதம் வைக்கவில்லை. எங்கு சென்றாலும் யாரிடம் பேசினாலும் உன் நினைவற்ற ஒன்றை என்னால் யோசிக்க முடியாது. உன் நினைவு தரும் வலி மிகப்பயகரமானது. நீ எதற்கும் நியாயமாக இல்லை என்பது எத்தனை துயரமானது. என் நினைவு முழுதையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டபிறகு ஒரு தனி மனுசியாய் நான் வாழமுடியாமல் ஊனமாகிவிட்டேன்.ஆனால் நான் எத்தனை  திறமையான பெண்ணாக இருந்தேன். அன்பு இத்தனை பலவீனமாக்கும் என்பதை அறியாமல் வீழ்ந்துவிட்டேனே. என்னை மீட்டெடுக்கும் சக்தியை நான் மூச்சிரைக்க தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். அதற்குள் கேன்சர்போல் பரவியிருக்கிறது அன்பால் ஏற்பட்ட பலவீனம்.  என் கனவு என் வாழ்க்கை அப்படியே அமுங்கிப்போகப்போகிறது என்பதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. நான் பிரமாண்டமாய் உயர்ந்து நிற்க வேண்டிய மரம்.  என் திறமைகளை நான் அறிவேன். ஆனால் இன்று யாரிடமும் நெருக்கமாக இல்லாமல் தனிமைப்பட்டுபோயிருக்கிறேன்.  என்னை முழுவதுமாக எல்லோரிடமும்மிருந்து பிரித்துவிட்டு நீ எங்கோ ஓடி ஒளிந்து கொண்டாய். வாகனத்திற்கு நடுவே மாட்டிக்கொண்ட குழந்தையைப்போல் முழுக் கலக்கமாய் பரிதவித்து பயந்து கிடக்கிறேன். எத்தனை துன்பத்தையும்  ஒரு தூசிபோல் கடந்திருப்பேன் நான் அன்பில் தோற்றுப்போகாமல் இருந்திருந்தால். உன் சூழ்ச்சியில் அழிந்து கிடக்கும்  என்னை இனி எது காப்பாற்றப் போகிறது என்ற தெரியவில்லை. இவை எல்லாவற்றுக்கு பின்பும் நீ எப்போதும் எனக்காக இருப்பாய் என்று என் மூளையில் ஏதோ ஒன்று எனக்கு அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறது. அது நான் மரணத்தை தேர்ந்தெடுப்பதை தள்ளிப்போட வைக்கிறது. அந்த எண்ணம் முழுதும் தடைபடும்போது நான் மரணத்தை தேர்வு செய்துகொள்வேன்.
இப்படிக்கு,
ஆன்மாவில் உன்னை நிறைத்திருப்பவள்.
நீண்ட பெருமூச்சு ஒன்றை உதிர்த்த படி,எழுந்து ப்ளூலேபல் ஸ்காட்ச் சைக் கவிழ்த்து,கொஞ்சம் ஐஸ் கட்டிகளை இட்டுக் கொண்டான் நவீன்.நிதானமாக,ஒரு சிப்பை உதட்டுக்குள் அனுப்பியபடி,அக் கடிதத்தை மறுபடியும் கண்களில் ஓட விட்டான்.ஒரு மணி நேரத்தில்,அவளால் இதை எழுதி அனுப்பியிருக்க முடிகிறது என்றால்,அவளது மன அழுத்தத்தின் உச்சத்தை உணரமுடிகிறது என்று நினைத்த படி,இவளை இக்காதலின் அழுத்தத்தில் இருந்து வெளிக் கொணரமுடியுமா என்கிற மெல்லிய அச்ச உணர்வு தனக்குள் பரவுவதை உணர்ந்து,அதைத் தடுக்க முயற்சி செய்தான். எரிக் போம் எழுதிய தி ஆர்ட் ஆப் லவிங் என்கிற புத்தகத்தை எடுத்து புரட்டலானான்.எரிக் போம் காதலை ஒரு அதீத உணர்வாக,மர்மமாக,மாயத்தன்மை கொண்டதாக நிறுவுவதை நிராகரித்தவர்.காதலை எளிதாக ஆராயமுடியும்,உடைக்க முடியும்,விளக்க முடியும்,இன்னும் சொல்லப் போனால் அதைக் கற்றுக் கொடுக்க முடியும் என்று சொல்லியவர்.இவளுடைய பிரச்னை தனக்குப் புரிவதாகவும்,அதிலிருந்து அவளை மெல்ல தொடர் உரையாடல் மூலம் வெளிக் கொணர்ந்து விடமுடியும் என்பதாகவும் எழுந்த எண்ணங்களில் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு,நாளை தன்னை சந்திக்கமுடியுமா என்கிற குறுந்தகவலை அவளுக்கு அனுப்பி விட்டு அவளுடைய கேஸ் சீட்டில் உரையாடலுக்கான சில குறிப்புகளை எழுத ஆரம்பித்தான்.நாளை பதினோரு மணிக்கு வருகிறேன் என்கிற கார்த்திகாவின் பதில் அவனுடைய மொபைலில் ஒளிர்ந்தது.அவளுடைய வேகத்தைக் கண்டு புன்னகைத்த படி சில சமயங்களில் புயலைத் தடுப்பது அல்லது தணிப்பது கூட ஒரு சைக்காலஜிஸ்ட் ஆக,தன்னுடைய பணிகளில் ஒன்றாக இடம் பெற்று விடுகிறது என்று முணுமுணுத்துக் கொண்டான்.
மறுநாள்,பத்து மணிக்கு,அவன் வீட்டை ஒட்டி அமைந்திருக்கும்,அவனது ஆலோசனை மையத்திற்குள் நுழையும்போது,அவனுடைய மற்ற சில சந்திப்புக்கான நபர்களுடன்,அவளும் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தான்.அவளைக் கடக்கும் போது,மெல்லிய புன்னகையை அளித்துவிட்டு,உங்கள் சந்திப்பு நேரம் பதினோரு மணிதானே என்று கேட்டான்.ஆமாம்,இருந்தாலும் முன்கூட்டியே வந்துட்டேன் என்றாள் கார்த்திகா,ஒரு வித சங்கடத்துடன்..வயலட் பூக்கள் இட்ட வெண் பருத்திப் புடவை ஒன்றை அவள் அணிந்திருந்தாள்.அவள் முகம் படபடப்பாகவும் ,அவளுடைய கேசங்கள் அக்கறையற்றும் கிடந்தன. அவளது நெற்றி வெறுமனே இருந்தது. அவளது காதுகள் வெறிச்சோடிக் கிடந்தன. அவளது மடியில்,அவன் வளர்த்து வந்த சயாமீஸ் பூனைக் குட்டியான ஜில்லு உட்கார்ந்திருந்ததைப் பார்த்து வியந்தபடி ..ஜில்லு சரியாயிட்டா போல,என்று முகப்பு மேஜையில் அமர்ந்திருந்த உதவியாளரிடம் வினவியபடி தன் அறைக்குள் சென்றான் நவீன்.
அவனுடைய முதல் இரண்டு கவுன்சிலிங்களை முடித்து அவளை அழைக்கும்போது நேரம் பதினொன்னரை ஆகியிருந்தது.தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்து அவளை அமரச் சொன்னான்.சில நிமிட மௌனத்திற்கு பின் உங்கள் கடிதம் படித்தேன் கார்த்திகா என்று ஆரம்பித்தான்.இரையை எதிர்நோக்கியிருக்கும் பசித்த விழிகளுடனான ஒரு பெண் புலியைப் போல் அவள் ஆர்வத்துடன் அவன் முகம் நோக்கினாள்.மிக நீண்ட அக்கடிதத்தில் இருந்து உங்கள் மனநிலையை என்னால் ஊகிக்க முடிகிறது.நீங்கள் அதிகத் துயரத்தில் இருக்கிறீர்கள். நான்,உங்களின் அந்தசோகக் கதைக்குள் முழுமையாக செல்ல நினைக்க வில்லை.ஏனெனில்,உங்களின் சோகக் கதையின் ஆரம்பம்,மிக அழகான மழை ஒன்றினை,மிக அருமையான பருவகாலம் ஒன்றினை,மிக மென்மையான பாடல் ஒன்றினைக் கொண்டதாகவும் இருக்கிறது..காதல் எப்போதும் அப்படித் தான் ஆரம்பிக்கும்,. உங்களை துயரத்தில் இருந்து,வெளிவர அதுவே தடுக்கவும் செய்கிறது.காதலின் இனிய தருணங்கள் சாம்பலாக்கும் எரிகனலைத் தம்முள் பொதிந்து வைத்திருக்கும் தன்மை கொண்டவை. நான்,உங்கள் சோகத்தின்,உங்கள் துயரத்தின் தற்போதைய  நிலையிலிருந்து உங்களிடம் உரையாட விரும்புகிறேன் என்றான்.சரிதான் என்பதாக முகம் காட்டி,தலை அசைத்தாள் கார்த்திகா.
உங்கள் கடிதத்தின் இரண்டு இடங்கள் எனக்கு மிகவும் அதீதமாகத் தோன்றின என்றான் நவீன்.என்ன என்பதாக அவள் பார்த்தாள்.முதலில் நீங்கள் மரணத்தை உங்கள் காதலின் துயரத்தின் ஒரே சாத்தியமான விடுதலையாக சொல்லியிருப்பது.இன்னொன்று,கடிதத்தை நிறைவு செய்யும்போது,ஆன்மாவில் உன்னை நிறைதவள் என்று குறிப்பிட்டிருப்பது. ஆன்மாவுக்கு மரணம் இல்லை என்கிற தத்துவத்தை அறிவீர்களா கார்த்திகா என்றான் நவீன் சிரித்தபடியே. அவள் அமைதியாக இருந்தாள். சும்மா,ஒரு பேச்சுக்காக அதைச் சொன்னேன்,நாம் பேச விருப்பது தத்துவம் அல்ல என்று சொல்லிவிட்டு,எத்தனை தடவை இதுவரைக்கும் மரணத்திற்கு முயன்று இருக்கிறீர்கள் கார்த்திகா என்று கேட்டான்.முந்தைய நாள் நாலு தூக்க மாத்திரைகள் போட்டு முயன்றது வரைக்கும் சேர்த்து,இதுவரை பத்து பதினோரு முறை என்றாள் கார்த்திகா.நாலு மாத்திரைகள் உங்களை மரணத்திற்குள் தள்ளும் என்று நம்பினீர்களா என்று கேட்டான் நவீன். இல்லை,அதற்கு மேல் போட்டுவிடுவேனோ என்று ஒரு உணர்வு வந்ததும், அவனைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். வழக்கம் போல் அவன் கிடைக்க வில்லை என்றதும் அம்மாவை அழைத்துச் சொன்னேன், அவர்கள் வந்து பேச ஆரம்பிக்கும்போதே ஆழ்ந்து தூங்கி விட்டேன் என்றாள் கார்த்திகா. ஆனால்,மறுநாள் எழுந்தவுடன் அதே மரணத்தை நோக்கிய மனமும், தலை வலியும் இருந்தன. இப்போதெல்லாம் எனது உடல் முறுக்கிக் கொள்கிற அவஸ்தையும் நிகழ்கிறது. வீட்டில் இருக்கும்போது சிலசமயம் என்னால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு என் உடலும் மனமும் தறிகெட்டுப்போகிறது. ஒரு ஓலத்துடன் முன்னூற்று அறுபது டிகிரிக்கு உடலை முறுக்கிச் சரிகிறேன் என்றாள் கார்த்திகா. அதைச் சொல்லும்போது மிகவும் வெட்கப்பட்டவளாக இருந்தாள் கார்த்திகா. அதை புரிந்தகொண்ட நவீன் அவளை ஆசுவாசப்படுத்தும் விதமாக, அழைப்பு மணியை அமுக்கி, அவர்கள் இருவருக்கும்,பழச் சாறு கொண்டு வரச் சொல்லிவிட்டு, எழுந்து அறைக்குள் நடக்கலானான். தான் அறியாமலே அவள் நிலையின்மேல் அதிக கவனம் எடுத்துக்கொண்டோமா என்றுகூட அவன் எண்ணத் தொடங்கினான், அவளின் கடிதம் அத்தகைய கவனத்தையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது என்று அவன் புரிந்துகொண்டான். கார்த்திகாவைப்போல் துயர்தரும் ரொமாண்டிஸம்  நிறைந்த மனிதர்கள் அவனுடைய தொழிலின் சுவாரஸ்யத்தை கூட்டுவதையும் அவன் மறுப்பதாக இல்லை.   
 
நடந்துகொண்டிருந்த அவன் அங்கே இடப்பட்டிருந்த சோஃபாவில் அமர்ந்தபடி, இங்கே வந்து அமருங்கள் கார்த்திகா என்று அழைத்தான். நாற்காலியை விட இது சற்று சவுகர்யமாயிருக்கும் என்றான். அவள் எழுந்து வந்து அமர்ந்தாள். உங்கள் முகமும்,கேசமும்,உடல் பாவனைகளும் தன் மேல் சிறிதும் அக்கறையற்ற ஒரு ஜீவனைப் போல் இருக்கிறது என்றான் நவீன். அவள் அதை ஆமோதிக்கிற மாதிரி,அமைதியாக இருந்தாள். அவளுக்கு முதலில் அக்கறை தேவை என்பதால் அவ்வப்போது இப்படி அவள் நிலை குறித்த கவலைகளைத் தெரிவித்தான். 
பத்து,பதினோரு முறை நீங்கள் தற்கொலைக்கு முயன்றும் இப்போது உயிருடன் தான் இருக்கிறீர்கள் என்கிற நல்ல விஷயத்துக்காகவே நீங்கள் அக்கறையற்று இருப்பதை மன்னிக்கலாம் தான் என்றான் நவீன் புன்னகைத்த படி. அவள் எதையும் வெளிக் காட்டாமல்,நான் இத் துயரத்தில் இருந்து வெளியே வந்து விட முடியும் என்று உண்மையில் நீங்கள் நம்புகிறீர்களா என்று நவீனை நோக்கி கேள்வி எழுப்பினாள். அது,உண்மையில் நீங்கள் அதை விரும்புகிறீர்களா என்பதைப் பொறுத்தும் இருக்கிறது என்றான் அவனுக்கான பழச் சாறை அருந்தியபடி. நீங்கள் முதலில் கொஞ்சம் ஜூஸ் குடிங்கள்,உங்களிடம் மிக முக்கியமான இன்னொரு பதிலை அதற்கப்புறம் நான் எதிர்பார்க்கிறேன் என்றான் கார்த்திகாவிடம்.. அவள் அவனுக்காக அதை அருந்துவது போலான பாவனையில் டம்ளரை எடுத்துக் கொண்டாள்.
எனக்கு இந்த துயரம் பிடிக்கவே இல்லை. உண்மையாக மிக சந்தோசமான பெண்  நான் என்று சொல்லிவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்து நிறுத்தினாள். நவீன் அவளைப் பார்த்து நிறுத்த வேண்டாம் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ எல்லாவற்றையும் சொல்லிவிடுங்கள் என்றான். அவள் ஜூசை மொத்தமாக ஒரே மூச்சில் குடித்து முடித்தாள். அவளுடைய அந்த பரபரப்பை பார்த்தபோது அவள் தன்னுடைய எல்லாத் துயரங்களிலிருந்தும் மீளத் துடிக்கிறாள் என்பதை அவனுக்கு உணர்த்தியது. முதல் சந்திப்பின்போது துயரமே அவளைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது என்று சொன்னவள் இப்போது துயரம் பிடிக்கவே இல்லை என்கிறாள். முன்பு அவள் சொன்னபோது,அவள் சொல்வதை ஆமோதிப்பதுபோல் அவளுடைய துயரத்தைப்பற்றி அவன் ஒன்றும் கூறாமல் இருந்தான். அதற்கு காரணம் இருந்தது. அப்போது அவளிடம் அந்தத் துயரம் மட்டுமே முழுதாய் மண்டிக் கிடந்தது. அந்தத் துயரத்தை ரொமான்டிசைஸ் செய்து அதிலிருந்து அவளை வெளிவரச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு வரும் வரைக்கும் அதுவே அவளைக் காக்கும் என்று சொல்லியிருந்தான். ஏனென்றால்,அதீத துயரம் மரணத்தையும் தாண்டிய ஒரு தண்டனை வழியை யோசிக்கச் செய்யும் யாரையும் என்பதை அவன் பிறர் உடனான அனுபவத்தின் மூலம் அறிந்திருந்தான். புராணத்தில் கண்ணகி தன் துயரின் உச்சத்தில் மதுரையை எரித்த மாதிரியான ஒரு மனநிலை அது. இப்போது,அவள் அதிலிருந்து வெளிவரத் துடிக்கிறாள் என்பது அவனுக்கு,கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.இனி,ஒருவேளை,அவனுடைய உரையாடல் பலன் தரக் கூடும் என்றும் நம்பிக்கை வந்தது.
உங்களை ஒவ்வொரு முறையும் மரணத்திற்கு போக விடாமல் எதோ ஒன்று தடுத்திருக்கிறது என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா கார்த்திகா என்று கேட்டான். அந்த எதோ ஒன்று வெளியில் இருந்து வந்ததல்ல...அது உங்களுக்கு உள்ளே இருக்கிற ஒன்றுதான் என்றான் நவீன். நீங்கள் சொல்ல வருவதன் அர்த்தம் சரியாகப் பிடிபடவில்லை என்றாள் கார்த்திகா ஒரு குழப்பமான முக பாவனையுடன். உங்கள் ஆன்மா உங்கள் காதலனைக்  கொண்டு நிறைத்திருப்பதாக நீங்கள் நம்புகிறீர்கள்.ஆனால்,உண்மையில் உங்களின் அதே ஆன்மா இன்னொன்றையும் அதன் மிக ஆழமான இடத்தில ஒளித்து வைத்திருக்கிறது. அது உங்களுக்கான ஒன்று.உங்களின் சுயம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். அந்த உங்களுக்கான சுயம் உங்களை மரணத்திடம் இருந்து தடுத்துக் கொண்டே இருக்கிறது. இன்னமும்,அது உங்களைத் தடுத்துக் கொண்டே தான் இருக்கும். அது என்ன என்பதை நீங்கள் அக்கறையோடு யோசித்தால் வெளிக் கொண்டு வந்து விடமுடியும்  என்றான் நவீன்.  அவள் ஆச்சர்யமாகப் பார்த்தாள். அவளின் முகத்தில் ஒரு ஒளிக் கீற்று தோன்றி மறைந்தது. அவன் மேலும் சொன்னான், உங்கள் கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்த படி, நீங்கள் ஒரு பிரமாண்டமாய் உயர்ந்து நிற்க வேண்டிய மரம், அதற்கான திறமைகள் உங்களிடம் இருக்கின்றன,ஆனால்,அதை நோக்கிய உங்கள் பார்வையை ஒரு போதும் செலுத்த முடியாத அளவுக்கு,நீங்கள் நேசித்தவருக்கு எல்லாவற்றையும் அள்ளிக் கொடுத்திருக்கிறீர்கள் அல்லது அவ்வாறு நினைக்கிறீர்கள். உங்கள் காதல் எத்தனை வருடம் கார்த்திகா என்றான் நவீன். ஆறு வருடம் என்றாள்.காலத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் கூட,இந்த ஆறுவருடம் அவருக்கானது மட்டுமே என்ற பட்சத்தில் அவர் இப்போது இல்லாத போது,அது வலிக்க ஆரம்பிக்கிறது. அதுவும் இல்லாமல் கடந்து வந்த அத்தனை காலங்களையும் இசை போன்ற எல்லா உணர்வுகளையும் முழுமையாக அவரோடு பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். எல்லாவற்றையும்விட உங்கள் காதலன் ஒன்றை பொறுமையாகச் செய்திருக்கிறார் என்று மட்டும் புரிகிறது. நீங்கள் அவரிடம் பகிர்ந்து கொண்டவற்றை மிகவும் ஆர்வத்தோடும் அன்போடும் கேட்டிருப்பார். மற்றவர்கள் இதில் என்ன இருக்கிறது என்று சாதாரணமாக நினைப்பதை உங்கள் காதலன் ஆச்சர்யத்தோடு கேட்டிருப்பார். கிட்டத்தட்ட உங்களிடம் அந்த விசயம் என்னவாக இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டிருந்திருப்பார், அதனால் நீங்களும் உங்களின் எல்லா விசயங்களோடும் அவரை   இணைத்துக்கொண்டுவிட்டீர்கள். உங்கள் வாழ்வு குறித்த கற்பனைகளையும் கனவுகளையும் அவரால் மட்டுமே சரியாக புரிந்துகொள்ள முடியும் என்று முழுமையாக நினைத்ததால் அவர் உங்களைவிட்டு பிரிந்ததும்  உங்களின் எல்லா விசயங்களும் உங்களைவிட்டு பிரிந்துசென்றுவிட்டதாக நினைக்கிறீர்கள்.
      
இன்னமும் எளிய வார்த்தைகளில் சொன்னால்,உங்களின் இசை,உங்களின் ருசி,உங்களின் பயணம்,உங்களின் சமூகம் குறித்த அக்கறை,உங்கள் வலி,சந்தோசம் எல்லாமே இந்த ஆறு வருடங்களில் அவருடன் தான் இணைந்திருந்திருக்கிறது. இப்போது,அவர் இல்லாமல் போகும் ஒரு கணத்தில் மேற்சொன்ன எல்லாமும் இல்லாமல் போய்,வெறுமையில் நிற்பதாக ஆழமாக நம்புகிறீர்கள்.ஆனால்,உண்மையில்,மேல் சொன்ன எல்லாவற்றிலும் உங்களின் ஆன்மா ஒளித்து வைத்திருக்கிற சுயம் நிரம்பி இருக்கிறது. சுயம் என்பதே மிகப்பெரிய சுதந்திரம்தான். அந்த சுதந்திரம் உங்கள் மனதிற்கடியில் கிடக்கிறது. துயரம் என்கிற கழிவிரக்கம் உங்களை அடிமைப்படுத்துகிறது மேலெழும்பி நிற்கிறது. அதை ஏற்றுக்கொள்ளாத உங்களுடைய சுதந்திர மனம்தான் அதிலிருந்து விடுபடுவதற்காக மரணத்தை நாடுகிறது. ஆனால் உண்மையில் அந்த சுயம் தான் உங்களை நான் சொன்ன மாதிரி மரணத்திலிருந்து தடுத்துக் கொண்டே இருக்கிறது.அவர் இல்லாமல் போவது குறித்த துயரம் என்று நீங்கள் உணர்வது நிஜமாக உங்களின் சுயம் இல்லாமல் போனது குறித்தான வலி தான்.  உங்களின் சுயம் என்பது அவரை நிறைத்திருப்பதாக நீங்கள் உணரும் ஆன்மாவின் ஆழத்தில் ஒரு சிறு பொறியாய் ஒளிர்கிறது.அதைக் கொஞ்சம் கொஞ்சமாய் மேலெழுப்பி உங்கள் ஆன்மாவை நிறையுங்கள்.அந்த ஆன்மா என்பதே உங்களின் ஆசையும் சுயமும் தான். அது மேலேழும்பும்போது,நீங்கள் வெளி வந்து விடுவீர்கள் கார்த்திகா என்றான். . உங்களுடைய எல்லாமும் உங்களோடுதான் இருக்கிறது. அவர் எதையும் எடுத்துச் செல்லவில்லை. அதை நீங்கள் நம்புங்கள் கார்த்திகா என்றான்.  
  
உங்களிடைய காதலன் திரும்பி வருவதற்கான வாய்ப்பிருக்கிறதா கார்த்திகா என்றான் நவீன். அவர் திரும்பியே வரப்போவதில்லை. அப்படியே வந்தாலும் முன்பிருந்த முழு அன்போடு அவர் இருக்கமாட்டார். நான் தற்கொலைக்கு முயன்றது, அவரில்லாமல் நான் பெரும் வேதனை அடைவேன் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அப்படியும் அவர் அதுகுறித்து எந்தக் கவலையுமற்று இருந்துவிட்டு அவருக்கு தோன்றும் நேரத்தில் என்னிடம் வந்து நின்றால் அது எப்படி உண்மையான அன்பாக இருக்க முடியும். அவர் என் வாழ்விலிருந்து நிரந்தரமாகப் போய்விட்டார். எனக்கு இந்த துயரம் வேண்டாம். அது உண்மையில் என்னுடையது இல்லை என்று முடிவு செய்தவளைப்போல பேசிவிட்டு, மெல்ல தன் கேசத்தைச் சரி செய்து கொண்டு,நாளை வரட்டுமா என்று கேட்டாள்.தாராளமாக என்றான் நவீன். 
அடுத்த நாள் அவள் வரவில்லை. நவீன் பரபரப்பாக அன்றைய கவுன்சிலிங்களை முடித்துவிட்டு இரவில் தன் குட்டி பூனை ஜில்லுவிற்கு உணவை வைத்துவிட்டு, டீவியில் வெளிநாட்டு சேனலில் ஓடிக்கொண்டிருந்த படத்தை பர்த்துக்கொண்டிருந்தான். கார்த்திகாவை அவன் முழுமையாக மறந்துபோயிருந்தான். வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. படம் பார்ப்பதை நிறுத்திவிட்டு கொஞ்சம் நேரம் மழை பெய்வதை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு மீண்டும் சோபாவில் வந்து அமர்ந்தான். சாப்பிட்டக் களைப்பிலிருந்த பூனைக்குட்டி அவன் மடியிலேறி படுத்துக்கொண்டது. அப்போது அவன் போனில் குறுஞ்செய்தி வந்ததற்கான சத்தம் ஒலித்தது. கார்த்திகா செய்தி அனுப்பியிருந்தாள். அவர் போனபிறகு நான் முதல் முறையாக மழையை துயரமற்றுப் பார்க்கிறேன். அழகாக இருக்கிறது என்றிருந்தது அவளுடைய செய்தி. 

நன்றி: தி இந்து,சித்திரை வருட மலர்-2014  

புதன், 5 மார்ச், 2014

”என் சிறுகதையில் பெண்கள்”

”என் சிறுகதையில் பெண்கள்”
என்று  தலைப்பை எங்கிருந்து ஆரம்பிப்பது.  வான் முழுதும் நீலமாக இருக்கும்போது அதில் கொஞ்சம் நீலத்தை மட்டும் எப்படி பிரிதெடுப்பது. வானிலிருக்கும் அத்தனை நீலத்தையும் எழுதிவிடத்தான் மனம் துடிக்கிறது. உலகின் அத்தனை பெண்களிடமும் தீராத பலகோடிக் கதைகள் நிறைந்துகிடக்கிறது. நொடிக்கொருதரம் மாறிக்கொண்டிருக்கும் வாழ்வில், பெண்களைப் பற்றிய கதைகள் குறைவாகத்தான் வெளிப்பட்டிருக்கிறது.. வழக்கமாக ஆண் எழுத்தாளர்களே பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். பெண்கள் நிறைய வாசிக்கத் தொடங்கிய பிறகு பெண்கள் எழுதத் தொடங்கினார்கள். அப்போது ஆண்லுலகம் விதித்திருக்கும் சமூக பண்பாட்டு அடிப்படையிலும், ஆண் எழுத்தாளர்கள் உருவாக்கி வைத்திருந்த அதே பெண் வடிவங்களையும், உணர்வுகளையுமே வெளிப்படுத்தினார்கள்.

தலித் இலக்கியம் எழுச்சி பெற்ற காலத்தில்தான் பெண்களும் தங்களுடைய உண்மையான உணர்வுகளை பாசாங்கின்றி எழுதத் தொடங்கினார்கள். இருந்தாலும் பெண் கவிதைகளில் இருந்த ஆதிக்க எதிர்ப்பு மூர்க்கம் சிறுகதைகளில் குறைவாகவே வெளிப்பட்டன. ஆனால் சிறுகதை எழுத்தாளர் அம்பையின் வரவிற்குபின் சிறுகதையிலும் ஆண் ஆதிக்க வன்முறை எதிர்ப்பு தொடங்கியது. கல்வி, சமூக, பண்பாட்டு அரசியல் என்று பல்வேறு சமூகக் காரணங்கள் தடைபோட்டுக்கொண்டிருந்தாலும் எண்ணற்ற பெண் படைப்பாளிகள் புத்தெழுச்சியாக தமிழ் நவீன இலக்கிய உலகத்திற்குள் நுழைந்து, தகிப்பும், தவிப்பும், புதிர்களின் ரகசியமும், பகிர்ந்துகொள்ள முடியாத வேதனைகளையும், வாழ்வின் கொண்டாட்ட மனநிலையையும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அம்பை, தொடங்கி பாமா. உமாமகேஷ்வரி,சு.தமிழ்ச்செல்வி. தமயந்தி போன்றோர் சிறுகதைகளில் யதார்த்த வாழ்க்கையையும், ஆதிக்க வன்முறைகளை எதிர்க்கும் கலகக்குரல்களையும் பதிவுசெய்திருக்கிறார்கள். நவீன இலக்கியத்தில் பெண் கவிஞர்களில் இடத்தினைப் பார்க்கும்போது, சிறுகதை இலக்கியத்தில் மிகச் சொற்பமான பெண் எழுத்தாளர்களே இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் நிறைய பெண் எழுத்தாளர்கள் சிறுகதை இலக்கியத்திற்குள் இயங்கினால்தான் பெண்களின் பரந்துபட்ட வாழ்வும், உண்மையான மனநிலையும், விருப்பவும் அதிக அளவில் பதிவுசெய்யப்படும். அப்போதான், அதன் சார்ந்து சமூகத்தில் மாற்றம் நிகழும்.  

கவிஞர் குட்டிரேவதி, வெண்ணிலா போன்ற பெண் கவிஞர்கள் தற்போது சிறுகதை தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்கள். அதைப்போல மற்ற பெண்கவிஞர்களும் சிறுகதைகளை எழுத முன்வரவேண்டும். கல்வி, வேலை, அரசியல், போன்றே இலக்கியச் செயல்பாடுகளிலும் பெண்களின் பங்கு அதிகமாக இருந்தால்தான், பெண்களின் முன்னேற்றத்திற்கும் ஆண்பெண் பேதகளின்றி சமநிலைச் சமுதாயம் உருவாவதற்கும் அது வழிவகுக்கும். அந்த வகையில் நான் தொடர்ந்து சிறுகதை உலகிற்குள் இயங்கவதை பெருமையாக நினைக்கிறேன்.

என் வாழ்வில் நான் பார்த்த பெண்களின் கதையுலம், ”வெளி” அளவிற்கு விசாலமானது. அவர்களின் கதையுலகின் ஒரு சிறுதுளி தேனை சுவைத்துவிடும் ஆவலிலேயே அப்பெண்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவர்களிடம் கொட்டிக்கிடக்கும் கதைகளைத் தோண்டத் தோண்ட, நாம் நம் பழமையின் பிரமாண்ட கனவுலகத்தின் கோட்டைக்குள் ஒவ்வொரு அறையாக சந்தோசக்கூ ச்சலிட்டு அலையலாம்.. களிநடனம் புரியலாம். தேவதைகளை பரிசிக்கலாம். வீழ்ச்சியடையடையாத உலகத்தில் பேரரசிகளாக, பேரரசர்களாக உலா வரலாம். நான் இதுவரை என் கதைகளில் ஒரு துளித் தேனைக்கூட அருந்தவில்லை. அந்த தேனுக்கான வேட்டையிலேயே இருக்கிறேன்.

இப்பூமியின் முதல் உயிரைக் கொடுத்தவள் பெண்ணே. அது என் நம்பிக்கை. எனக்கும் உயிர்கொடுத்தவளும் அவளே. அவர்களின் மீதான என் முதல் ஞாபகம் இப்படித் தொடங்கினால்தான் சரியாக இருக்கும். ஏனேன்றால் என் வாழ்க்கையில் இருக்கும் பெண்களே அல்லது வாழ்க்கையில் நான் சந்தித்த பெண்களே என் கதைகளிலும் வருபவர்கள்.  இப்போது இருக்கின்ற எங்கள் ஊருக்கும்(கூடலூர்)  மூன்று வயதில் என் நினைவிலிருக்கும் எங்கள்  ஊருக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்பது, ஒரு கடல் உள்வாங்கி பின்சென்றதைப் போன்று மிகப்பெரிய வித்தியாசத்தைக் கொண்டிருக்கிறது.. இன்றைய ஊர் நிறையவே மாறிவிட்டது. கல்வியில். பொருளாதார வளர்ச்சியில், நாகரீகத்தில் அது மிகப்பெரிய உயரத்தை அடைந்து விட்டது. ஆனால் பன்னீர்மரக் கதைகளை இழந்துவிட்டது ஊர். தெருவுக்குத் தெரு வீட்டுக்கு வீடு அற்புதங்கள் ஒளிந்துகிடந்த வீடு இன்று திறந்துகிடக்கிறது. அங்கே ரகசிய அறைகளை தேடும் குழந்தைகள் இல்லை. கதவுக்கு பின்னால் மறைந்துகொண்டு பயமுறுத்தும் சக குழந்தைகள் இல்லை. ஆனால் அதில்  எனக்கு ஒரே ஒரு நிம்மதி மட்டும் இருக்கிறது. தொலைந்துபோன அந்த குட்டி குட்டி வனப்பான கனவுகளை, நினைவுகளை, வாழ்வினை நான் கதைகளாக எழுதியிருக்கிறேன் என்பதுதான் அது.

என் வாழ்வில்  என் முதல் ஞாபகத்தில் வரும் பெண்  அம்மா என்று நீங்கள் நினைக்கலாம். ”என் சிறுகதைகளில் பெண்கள்” என்றுதான் தலைப்பு. ஆனால் எனக்கோ என் சிறுகதைகளில் இதுவரை இடம்பெறாத கொள்ளுப்பாட்டிதான் என் முதல் பெண். முதல் கதை நாயகி. பால்யத்தில் நினைவில் முதல் ஞாபகமாக பெரும்பாலும் அம்மாதான் இருப்பார் ஆனால் எனக்கோ என் கொள்ளுப்பாட்டிதான் ஞாபகத்தில் வருகிறாள். ஏனேன்றால் என் அம்மா எப்போதும் என்னுடனே இருப்பதால் அவர்களை ஞா பகமூட்டத் தேவையிருந்திருக்கவில்லை..

 என் அம்மாவின் அம்மா, என் அம்மா சிறுவயதாக இருக்கும்போதே இறந்துவிட்டதால், தன் மகள் விட்டுப்போன என் அம்மா உட்பட, மூன்று பெண் குழந்தைகள்  மற்றும் மூன்று ஆண் குழந்தைகளை வளர்த்தெடுத்தவள் அந்த ஆதித்தாய் என் கொள்ளுப்பாட்டி.  ஆனால் என் முதல் பெண்ணை நான் இதுவரை கதைகளில் எழுதவில்லை. ஏனேன்றால் அவள் என்னிடம் காட்டிய அன்பு என்பதை நான் ஒரு நாளும் கதையாகவே பார்க்க முடியாது. எனக்கு வாழ்வளித்தவளை வாழ்வாகப் பார்க்காமல் எப்படி கதையாகப் பார்ப்பது .
எங்கமாவுக்கு நான் மூன்றாவது குழந்தை. ஏற்கனவே அம்மாவிற்று  ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் இருந்ததால்..மூன்றாவது பிறந்த என்னை சிசுக்கொலை செய்யச் சொல்லி ஊர்காரர்களும், உறவினர்களும் வற்புறுத்தியிருக்கிறார்கள். அம்மா சொந்தக்காரர்களிடம் முடியாது என்று  சண்டை போட்டுக்கொண்டிருக்க, என் அப்பா கோபமாக என்னைத் தூக்கிக்கொண்டுபோய் என் கொள்ளுப்பாட்டியிடம் கொடுத்து, என் மகளை இந்தப் பேய்களிடமிருந்து   காப்பாற்ற என்று  அழுதபடி கொடுத்திருக்கிறார்  என் பேரன்புமிக்க அப்பா.

அன்று என் கொள்ளுப்பாட்டியின் கைகளுக்குப் போனேன். அந்தக் கைகளின் அன்பின் வாஞ்சைகளை இன்னும் என் உயிரில் உணர்ந்துகொண்டிருக்கிறேன். அதை எப்படி கதைகளாக எழுதுவது. கம்யூனிஸ்ட்டான என் அப்பா எனக்கு வேலண்டினா என்று பெயர் வைக்க, பாட்டியால் அந்த பெயரை உச்சரிக்க முடியாததால் சந்திரா என்று பெயரிட்டிருக்கிறாள் அந்த ஆதித்தாய். பின் அவள் என்னை சந்திர சூரியரே என்றுதான் அழைப்பாள். நான்கு வயதாக இருக்கும்போது அவள் கரங்களிலிருந்து என்னை விடுவித்துவிட்டு என்னென்றைக்கும் திரும்பி வராதாவளாகிவிட்டாள். அதன்பின் சந்திர சூரியரே என்று யாரும்  என்னை அழைக்கவில்லை. நானும் யாரும் அப்படி அந்தப் பெயரிட்டு அழைப்பதை விரும்பவில்லை. என் கதையில் நான் எழுதாத அந்த முதல் பெண் இறந்த நாளில் என் சித்தியின் மகளான 6 மாதக் குழந்தையை  என் மடியில் வைத்து பன்னீர்மரத்துக்கு அடியில் உட்கார்ந்திருந்தேன். மிகப்பெரிய அழுகைச் சத்தமும் பல்வேறு சடங்குகளோடும் அவள் காணாமல் போய்விட்டாள்.  

ஏதோதோ கதைகளை என் நேரமும் என் காதுகளுக்குள் முணுமுணுத்துக்கொண்டிருந்த என் கொள்ளுப்பாட்டிதான் எனக்குள் கதையுலகத்தை வளர்த்துவிட்டவள். அவள் தன்னுடைய இறுதி காலத்தில் இருந்ததால் என்னவோ, வானம்தான் அவள் கடைசியாக சென்றடையும் வெளி என்பதில் தீராத நம்பிக்கைகொண்டிருந்தாள்.. அதனால்தான் அவள் எப்போதும் வானத்தைக் காட்டி பேசிக்கொண்டிருப்பாள். பலநாள் பாட்டியே நிலாவில் உட்கார்ந்து வடைசுட்டுக்கொண்டிருப்பதாகத் தோன்றும். அவள் இறந்துபோய் வானத்திற்குச் சென்றதாகவும், அங்கே இருந்த கடவுள்கள் அவளைப் பாவம் பார்த்து மீண்டும் உயிர் கொடுத்து பூமிக்கு அனுப்பிவிட்டதாகவும், அங்கே அவள் கண்ட காட்சியை வெளியே சொன்னால் அவள் தலை வெடித்துவிடும் என்றும் கதை சொல்வாள்.  

என்னுடைய நான்கு வயதில் கேட்ட இந்தக் கதை இப்போதுவரை என் ஞாபகத்தில் இருக்க என் பெரியம்மாதான் காரணம்.   பாட்டியின் அருகிலிருந்து என்னைப்போலவே அந்தக் கதையைக் கேட்டுக்கொண்டிருந்த என் பெரியம்மா, பாட்டியைத் தொடர்ந்து அதே பாட்டியின் கதையை என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். நான் வளர்ந்து எழுத்தாளரானபின்னும் என் பெரியம்மா என் பாட்டிக்கு நடந்தது உண்மைதான் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். இப்படிப்தான் பெண்களின் கதைகள் அல்லது பெண்கள் சொல்லும் கதைகள் காலங்காலமாக தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இப்போது எல்லோரும் டீவிக்கு முன்னால் உக்கார்ந்திருப்பதால் கதை சொல்லிகளும் கதை கேட்பவர்களும் இல்லாமல் போய்விட்டார்கள். அது பால்யகாலத்தின் இறுதியிலேயே தொடங்கிவிட்டது.

கதைசொல்ல பெரும் விருப்பம் உள்ள ஒரு இளம் பெண் தொலைக்காட்சியின் வருகைக்குப்பின், கதைகேட்கும் தன் குட்டி இளவரசிகளை இளவரசர்களையும் இழந்து, கடைசியில் ஆழமான தனிமைக்குள் போய் பித்தாகி எங்கோ தொலைந்துபோனாள் என்று எழுதியிருக்கிறேன். அந்தக் கதையில் வரும் அகிலா நிஜமான அழகான கதை சொல்லி..நிஜவாழ்வில் அங்கயர்கண்ணியாக இருந்தவளை கதையில் அகிலாவாக்கிவிட்டேன். நிஜவாழ்வில் கணவனின் வன்முறையால் தற்கொலை செய்துகொண்ட அவளை கதையில் பித்தாகி எங்கோ சென்றுவிட்டாள் என்று எழுதினேன். ஆனால் அவள் பன்னீர்மரத்துக்கு கீழே அமர்ந்து, பூக்களை உதிர்ப்பதுபோல் கதை சொன்னது உண்மை..

 கோடைகாலத்தில் அழகான கலர்க்கொடை பிடித்து வேலைக்குச் செல்லும் அந்தக் அக்கா அப்படியே பாரதிராஜா படமான கடலோரக் கவிதைகள் ரேகா போலவே இருப்பாள். நீண்டகாலமாக திருமணமாகாத அந்த அழகான பெண் தொலைக்காட்சி வரவுக்கு பின்,தனிமையில் உழன்று, தன் அண்ணியின் வற்புறுத்தலால் அவளுக்கு பொருத்தமற்ற மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டாள். கணவனின் வன்முறையை தாங்கமுடியாத அவள் தற்கொலை செய்து மாண்டுபோனாள். அதுவும் நிறைமாத கர்ப்பமாக அவள் தூக்கில் தொங்கினாள் என்பதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. அதை அப்படியே கதையாக எழுதும் மனதைரியம் எனக்கில்லை. நிஜத்தினை கொஞ்சம் புனைவு கலந்து பன்னீர்மரத் தெரு என்ற அந்தக் கதையை எழுதினேன். நிஜத்திலிருந்து புனைவாக மாறும் இந்த சிறுமாற்றம்தான் சிறுகதைக்கு தேவையானம் ஆகும்.

இது தவிர்த்து முழுக்க முழுக்க யாதார்த்த கதைகளையும் எழுதிப் பார்க்கலாம். நான் எழுத்தாளராக பரவலாக அறியப்பட காரணமாக இருந்த. என்னுடைய ”புளியம்பூ” அந்த வகை யதார்த்தக் கதைதான். அது பெண்பார்வையில் (என் பார்வையில்) எழுதப்பட்ட அப்பாவின் கதை. அது பெண்ணின் கதையாக இல்லாவிட்டாலும், மகள் அப்பாவின் அன்பைப் பற்றி, அவரது கனவு, அப்பா அவள் மேல் வைத்திருக்கும் அன்பு என்று எனக்கு மிகவும் பிடித்த எனது வாழ்வில் நடந்த சொந்தக் கதை.   

என் சிறுகதைகளில் மிக முக்கிமான அழியாத பெண் சித்திரம் அழகம்மா. அது என் அப்பாவின் அத்தையாம். 1950 களில் நடந்த அவளது கதையை எங்கள் வம்சத்தில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் சொல்கிறார்கள். அது மிகவும் துயரார்ந்த பெண்ணின் கதை. அந்தக் கதையை கேட்டு முடிக்கும்போது அழகம்மா அநீதிக்கு எதிராக வெகுண்டெழுந்த பிரமாண்ட பேரசியாகத் தோன்றும்.. அந்தக் கதையை படிக்கும்போது பழைமை வாய்ந்த தொன்மக் கதையாகவோ சிறு தெய்வம் அல்லது பேயுறு கதையாகத்தான் உங்கள் மனதில் படியும். அழகம்மா என்ற உண்மைப்பெண்ணை உங்களால் கற்பனை செய்ய முடியாது.

ஆனால் அழகம்மா என்றழைக்கப்பட்ட என் அப்பாவின் அத்தை குடும்ப பிரச்னையால் விவாகரத்து ஆனபின், தன் கணவனாலும் அவனுடைய நண்பர்களாலும் வஞ்சமாக அழைத்துச் செல்லப்பட்டு அடர்ந்த சோளகாட்டுக்குள் இருக்கும் கிணற்றுக்குள் அவளை தூக்கி எறிந்து தலையில் கல்லைப்போட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்ள்.. சிதைந்த சிதிலமாக கண்டெடுக்கப்பட்ட அப்பெண் பேயுறுகொண்டு அவர்கள் எல்லோரையும் பழிவாங்கியதாக கதை. அதன்பின் அவளைக் கொலை செய்த குடும்பத்தில் எந்த ஆண் பிள்ளைகள் வெகுகாலம் தங்குவதில்லை. விரைவில் மரணத்தை அடைந்துவிடுவார்கள் என்று இன்றும் என் குடும்பத்தினரால் சொல்லப்பட்டுவருகிறது. அந்த குடும்பத்தோடு தண்ணீர் புழக்கம் கூட இல்லாமல் காலங்காலமாக தள்ளிவாழ்கிறார்கள்.

இக்கதை எங்கப்பாவின் மூலமாக எனக்குச் சொல்லப்பட்டு என் மூலமாக என் மகளுக்கும் இந்த உலகத்திற்கும் சொல்லப்பட்டிருக்கிறது. பகுத்தறிவாளியான எனக்கு கடவுள்,பேய் நம்பிக்கையில்லை. ஆனால் அநீதியை பழிவாங்கிய  அழகம்மாளை எனக்குப் பிடித்திருக்கிறது.

இக்கதை குறித்து விமர்சனம் செய்த கவிஞர் ஏகாதேசி இப்படிச் சொல்கிறார் 

”அழகம்மா கதையை நான் படித்துக்கொண்டு செல்கையில் நெஞ்சதிர்கிற ஒரு இடம் வந்து நான் மீண்டும் வாசிக்கத் தொடர்கிற மனதறுந்தவனாய் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அதன் அட்டை மீது என் பார்வையை தவழ்விட, நூல் வாங்கிய ஒரு வார காலமாக ஒன்றும் செய்யாத அந்த அட்டை ஓவியம் துக்கம் சுமந்த அந்தப் பெண்ணின் முகம்.அதுவும் அழகம்மாவின் முகம் . அட்டையைவிட்டு மெலெழும்புவதை துடிப்பதைக்கண்டு குலை நடுங்கிப்போனேன். அதிலிருந்து மீண்டு அந்தக் கதையைத் தொடர சில மணிநேரம் ஆனது. அடுத்த இரண்டு நாள்களாக என் மேஜையின் முன் அட்டை காட்டிக் கிடக்கும் அந்த அழகம்மா வெளியேறத் துடித்தாள். எனக்குப் பயமாகப் போனதால் அதை எடுத்து மறைத்து வைத்துவிட்டேன். யோசித்துப் பார்க்கிறேன் என் பயத்திற்கான காரணத்தை ஒருவேளை அழகம்மாவின் கொடூர கணவன்  என்கிற குறும்பன் நான்தானோ  என்று, உண்மைதான் என்பது போலவே என உன்மனம் படக்படக்கென அடித்துக்கொண்டது”.அழம்மாளைப் பற்றி கவிஞர் ஏகாதேசியின் விமர்சனம் இது.

எங்கப்பாவிற்கு அழகம்மா என்ற அத்தை இருந்தைப்போல எனக்கு மொக்கத்தாய் என்ற அத்தை இருந்தாள். அவள் என் அப்பாவின் தங்கை. நான்கு குழந்தைகளுக்கு தாயான அவள் தன் கணவனின் தொடர் வன்முறையால் தற்கொலை செய்துகொண்டார்.
அழகம்மாவைப்போல அன்பும் அழகும் கொண்ட அத்தைக்கு நான் செல்லக்குழந்தை. அவள் வாழ்ந்த வருசநாடு என்னும் மிகவும் வறண்ட ஊருக்கு விடுமுறைக்கு அழைத்துச் செல்வாள். என் பாதம் நோகும் என்று ஐந்து கிலோமீட்டர் தூரமுள்ள மலைமுகட்டின் பாதைகளில் என்னை தூக்கிச் செல்வாள். முகத்தில் சிறு சுணக்கம் காட்டாத வீரமான அமைதியான பேரழகி..விடுமுறை முடிந்து வீடு திரும்பும்வரை தினமும் கோழிக் குழம்பும், எனக்கு பிடிக்கமெயென்று கேப்பக்கழியும் செய்துகொடுப்பாள்.. அத்தை என்றாலே எனக்கு கோழிக்குழம்பு வாசம்தான் வீசும்.

எனக்கு அன்பையும் உழைப்பையும் சொல்லிக்கொடுத்த என் அத்தை தன் கணவனிடம் அதிர்ந்து பேசமாட்டாள். என் அப்பா என் அத்தை மகளின் சடங்கிற்கு சிறப்பாக செய்முறை செய்யவில்லை என் அத்தையின் கணவன் அத்தையை அடித்து நொறுக்க, அண்ணன் கஷ்டப்படும்போது இந்த வேதனையைச் சொல்ல வேண்டாமென்று நினைத்த என் அத்தை அரளிவிதையை அரைத்துக்குடித்துச் செத்துவிட்டாள். அழகம்மாவும் அத்தையும் ஒன்றே என்று எனக்குத் தோன்றியது. இனி என் குடும்பத்தில் எந்த அழகம்மாவும் தோன்றக் கூடாது என்று அழகம்மாக்களின் கதையை என் குடும்பத்தின் அத்தனை குழந்தைகளுக்கும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இந்த உலகத்திற்கும்தான். அதனால்தான்  அழகம்மாவை ”அறைக்குள் புகுந்த தனிமை”  பெண்ணின் சித்திரமாக உருமாற்றத் தோன்றுகிறது எனக்கு.

என் சிறுகதையான ”அறைக்குள் புகுந்த தனிமை” எழுத்தாளர் ஜெயமோகன் இப்படிச் சொல்கிறார்.

”சந்திரா எழுதிய ‘அறைக்குள் புகுந்த தனிமை’ .சென்ற மாதம் கோயில்பட்டி சென்றிருந்தபோது நான் இந்தக்கதை பற்றி தேவதச்சனிடம் பேச ஆரம்பித்ததுமே அவர் உத்வேகத்துடன் ’எக்ஸாட்லி இதே கதையைத்தான் நான் யோசிச்சிட்டிருந்தேன்’ என ஆரம்பித்தார். 
’உப்பைப்போல் வெறுமை கொண்டிருந்த உடலாக’த் தன்னை உணரும் ஒரு பெண்ணின் ஒரு நாள் இந்தக்கதை. தோழியைச் சந்திக்கச் செல்கிறாள். தோழியுடனான அவளுடைய உறவின் நுட்பமான சிலதருணங்கள் வழியாகச் செல்லும் கதை அவள் ஒரு ஆணைச் சந்திக்கும்போது புதியதாக ஆரம்பிக்கிறது. அவளை அவன் கவர முயல்கிறான். அவள் அதை அனுமதிக்கிறாள்.மெல்லிய சல்லாப பாவனைகள். ஓர் இடத்தில் ‘நான் படிக்கலை, பிராஸ்டிடியூட்டா இருக்கேன்’ என்கிறாள் பொய்யாக. 
உடனே அவன் பாவனைகள் அனைத்தும் தலைகீழாகின்றன. அவன் அலட்சியமும் திமிரும் கொண்டவனாக ஆகிறான். அவள் அவனைத் தன் வீட்டுக்குக் கொண்டு வருகிறாள். ஏமாற்றி அவனை ஓர் அறைக்குள் மூடிவிடுகிறாள். இரவெல்லாம் அவனை அங்கே வைத்திருக்கிறாள். அவன் சட்டென்று இன்னொரு தோற்றம் கொள்கிறான். அஞ்சி நடுங்கி அழுது புலம்புகிறான். காலையில் அவள் திறந்து விடும்போது குழிந்த கண்களும் நடுங்கும் உடலுமாகக் குறுகிப்போய் வெளியேறுகிறான்.

பலதளங்களில் பலவாசிப்புகளுக்குச் சாத்தியமளிக்கும் இக்கதையை நான் சொல்லவோ விளக்கவோ போவதில்லை. நான் இதை வாசித்த இரு முக்கியமான வழிகளை மட்டும் கோடிகாட்ட விரும்புகிறேன். ஒன்று தோழியுடன் அவளுக்கிருக்கும் உறவுக்கும் ஆணுடன் இருக்கும் உறவுக்குமான வேறுபாடு. தோழியுடனான உறவு இயல்பானதாக ஆனால் சற்றே சலிப்பானதாக இருக்கிறது. அங்கே அவளுக்கு மர்மங்கள் இல்லை. ஆகவே அவள் சீண்டப்படுவதில்லை. அவள் இயல்பாக இருக்கிறாள்.

ஆனால் ஆணுடனான உறவு அவளைக் கொந்தளிக்கச் செய்கிறது. அதில் அவளுக்கு பலவகையான மர்மங்கள் உள்ளன. ஆகவே விதவிதமான சுயபாவனைகள் வழியாக அவள் அவனை அணுகுகிறாள். கொஞ்சிக்குலாவும் காதலியாக, விபச்சாரியாக, அவனைத் தண்டிக்கும் குரூரம் கொண்டவளாக. ஒருபாவனையில் இருந்து இன்னொன்றுக்கு இயல்பாகச் செல்கிறாள். எல்லா பாவனைகளுமே அவளுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது. 
அந்த பாவனைகளுக்கு ஏற்ப அவள்முன் அவன் மாறிக்கொண்டே இருக்கிறான் என்பதே இந்தக்கதையின் இரண்டாவது நுழைவு வழி.

பெண்ணை அவள்போக்கிலேயே சென்று கொஞ்சி புகழ்ந்து வசியப்படுத்த நினைக்கும் காதலனாக இருக்கிறான். அவள் விபச்சாரி என்றதுமே அவன் வாடிக்கையாளனாக ஆகிவிடுகிறான்.வாடிக்கையாளனுக்கான எல்லா முகங்களும் வந்து விடுகிறது. அவள் உடலை விலைகொடுத்து வாங்கிய அவன் அதை உடல்மட்டுமாகவே அடைய நினைக்கிறான். ஆகவே அவள் மனதை வதைத்து ஆளுமையை அவமதிக்க முனைகிறான் 
அவள் சட்டென்று தண்டிப்பவளாக ஆகிறாள். அந்தப் புரிந்துகொள்ளமுடியாமை காரணமாக அவனை தாண்டிச்செல்கிறாள். அந்நிலையில் அவனுக்கு அவளை எதிர்கொள்ள எந்த முன்னர் தயாரிக்கப்பட்ட பாவனையும் கைவசமில்லை. சட்டென்று சரணடைகிறான். மன்றாடுகிறான். தோற்றுப் பின்வாங்குகிறான். அவள் வெற்றியின் வெறுமையில் அமர்ந்திருக்கிறாள்

ஆண்-பெண் உறவின் பாவனைகளின் நடனம் இந்தக்கதை. நாம் வாழ்க்கையில் காணும் எல்லாவகையான ஆண்-பெண் உறவுகளுடன் இதைப் பொருத்தி விரித்துக்கொள்ளமுடியும். ஒவ்வொரு தளத்திலும் நம் வாழ்க்கையை நாம் புரிந்துகொள்ள திறப்புகளை அளித்துக்கொண்டே செல்கிறது . இந்த உண்மையான வாழ்க்கை அம்சம்தான் கலையை அர்த்தமுள்ளதாக்குகிறது. சந்திராவின் இந்தக்கதையைக் கலையாக்குவதே ஆணின் மாறிமாறிச் செல்லும் நுண்பாவனைகள் பற்றிய அற்புதமான அவதானிப்புதான். 
இதை ஒருவர் மொழியை அளைந்து அடைய முடியாது. செயற்கையாக உருவாக்க முடியாது. மொழியும்வடிவமும் நிலமும்நீரும் போல. விதை விழுந்தால்மட்டுமே முளை எழமுடியும். விதை வாழ்க்கைபற்றிய ஆழ்ந்த அவதானிப்பில் இருந்து வருகிறது. அந்த அவதானிப்பு ஆராய்ச்சியாலோ ,வாசிப்பாலோ, சிந்தனையாலோ, விவாதத்தாலோ அடையப்படுவதல்ல. ஆராய்ச்சியும், வாசிப்பும், சிந்தனையும் கொண்டவர்கள் மேலோட்டமான கோட்பாடுகளையே பேசமுடியும். கலைக்கான கச்சாப்பொருள் எழுத்தாளனின் நுட்பமான ஆழ்மனம் தன்னைச்சுற்றி நிகழும் வாழ்க்கையில் இருந்து தன்னை அறியாமலேயே தொட்டு எடுக்கக்கூடிய ஒன்று”  அறைக்குள் புகுந்த தனிமை கதையைப்பற்றி அவருடைய தளத்தில் எழுதியிருக்கிறார். 

இந்தக் கதையை பொறுத்தவரை எழுத்தாளர்களிலிருந்து, வாசகர்கள் வரை ஒரே ஒரு கேள்வியைதான் என்னிடம் கேட்டார்கள்.. இது உண்மைக்கதையா? யாரை அப்படி உள்ளே வைத்து பூட்டினீர்கள்? என்று… இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக. என் புத்தக  விமர்சனக் கூட்டத்தில் ஒரு எழுத்தாளார் எழுந்து, ”ஒரு ஆணை எப்படி வீட்டுக்குள் பூட்டி வைக்கலாம். அவர்களை நாயாக மாற்றுகிறீர்கள் பாம்பாக மாற்றுகிறீர்கள் என்று கொதித்தார். நானும் தடாலடியாக பதில் சொன்னேன். இருந்தாலும். என்னால் அதை புரிந்துணரவே முடியவில்லை.

பெண்கள் இத்தனை முன்னேற்றம் அடைந்த பின்னும்…. ஆண்கள் தங்கள் மீது செலுத்தும் வன்முறையை எதிர்த்து, பெண்கள் எதிர் வன்முறை செய்யும்போது அதை ஆண் எழுத்தாளர்களே மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.ஆனால் ஆனால் சில வாசகர்கள் புரிந்துணர்ந்து நம்மிடம் அன்பினை பகிர்ந்துகொள்கிறார்கள். பெரும்பானவர்களால் பெண்களின் வன்முறை முகத்தைச் சகித்துக்கொள்ள முடியவில்லை.  அதுவும் கதைகளிலே. அப்போ நிஜவாழ்வில் காலங்காலமாக வன்முறையை அனுபவிக்கும் பெண்களின் நிலையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அறைக்குள் புகுந்த தனிமையும் கற்பனைக் கதையே ஆனாலும் அவை காண்ட்ரம்ரியாக நடக்கும் கதையாக இருப்பதால், அந்த அறைக்குள் இருக்கும் ஆளாக ஆண்கள் தங்களை கற்பனை செய்துகொள்கிறார்கள்..ஏன் அப்படி நீங்கள் உங்களை கற்பனை செய்துகொள்ளவேண்டும்? ஏனேன்றால் நீங்கள் உங்கள் முன் அமர்ந்திருக்கும் பெண்ணை உங்கள் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யும் பெண்ணாக மட்டுமே கற்பனை செய்கிறீர்கள்.பெண்னை சகமனுஷியாக அணுகினால் அவள் உங்களை அறைக்குள் பூட்டி வைக்க மாட்டாள். திறந்த வெளியின் அத்தனை அற்புதங்களையும், வாழ்வின் சுக துக்கங்களையும் ஒரு தோழியிடம் பகிர்ந்துகொள்வதைப்போல உங்களிடம் பகிர்ந்துகொள்வாள்.

பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகளை இந்த பகுத்தறிவு காலத்தில் வெறும் பேயுறு கதைகளாக மட்டுமே சொல்லி உங்களை பயமுறுத்த முடியாது. அது உண்மை என்று நம்பும் வெள்ளந்தியான குழந்தையும் இல்லை நீங்கள்…உங்களை கொல்வதில் கூட பிரச்னை இல்லை. உங்களை அடைத்து வைப்பதில் அவமானம் அடைகிறீர்கள்..ஏனேன்றால் உங்களின் கொடூர முகத்தில் குற்றவுணர்ச்சியை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நீங்கள் குற்றவுணர்ச்சியை எட்டியபின் குற்றங்களின் பின்னால் போகமாட்டீர்கள். அப்பா அண்ணன் மாமா என்று ஆண்களின் மிகச் செல்லக்குழந்தையாய் இருப்பவள் நான். எனக்கு பேரன்பைச் சொல்லிக்கொடுத்தவர் என் அப்பா எனக்கு ஆண்களோடு பேதம் இல்லை…நாம் இவ்வுலகில் ஆண் பெண்ணுக்கான இயல்பான நியதிகளுடம் அவரவருக்கான விடுதலையோடு வாழ்வோம்.

பின்குறிப்பு: என் மூன்று தொகுப்பில் வரும் பெண்களைப் பற்றி முழுவதுமாக விரிவாக எழுத வேண்டுமென்றால் நிச்சயமாக நூறு பக்கங்களுக்கு மேல் ஆகும். நேரப் பளு காரணமாக நான் அதை இப்போது முழுமையாகச் செய்ய முடியாது. நானே அப்பெண்களைப் பற்றி விரிவாக எழுதி ஒரு புத்தகம் பதிப்பிப்பதற்கான ஆர்வத்தை இந்நிகழ்வு கொடுத்திருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு வாய்ப்பளித்த மனோன்மணியம் பல்கலைக்கழகத்திற்கும், என்னை பேச அழைத்த பேராசிரியர் அ.ராமசாமி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் அன்பும்.

வியாழன், 6 பிப்ரவரி, 2014

ஆலிலைதரித்தவள்



உன் அறைக்கு வெளியே உதிர்ந்த இலைகளைப்போல\
தூத்தித்தள்ளாதே
அப்புறப்படுத்த முடியா ஆலிலைகளாய் உன் உடலில் தரித்திருக்கிறேன்
மெலிந்த என்னுடலில் கிசுகிசுப்பாய் நினைவுகள் ஆர்ப்பரித்தபடிதானிருக்கும்
உப்புக்கரிக்கும் கடல்காற்றில் நிலாஇறங்கி என் ஆன்மாவின் நிசப்சத்தை
வாரியணைத்துக்கொள்ளும்போது அவைகள் அடங்கும்
சோப்புக்குமிழ்களாய் மகிழ்வை ஊதி உன்னை உடைக்கச் சொன்னவளின்
பழுப்புநிறக் கண்களில் தெரிந்த உலகம் உன்னுடையதுதான்
ஒரு இலையுதிர் காலத்தில் கால்கடுக்க
நீ இரைந்து கரைந்து பெற்ற காதலை
ஆர்ப்பரிக்கும் அற்பத்திற்கு தூரவீசிஎறிகிறாய்
நீர்க்குமுழி வெடிக்கும் நேரத்திற்கு குறைவான நேரமே ஆகும் உயிர்பிரிய
அப்போது ரகசியமாய் உன் முத்தத்தின் வாசனை உயிரை நிறைக்கும்

வியாழன், 28 மார்ச், 2013

ஆயிரம் தலை கொய்த புத்தன்

உலகத்தின் கண்கள் மூடிக்கண்ட காலத்தில்
புத்தனின் குவளை குருதியால் நிரம்பியது
ஆயிரம் குழந்தைகளின் தலைகள் 
காலடியில் விழ்ந்த பின்னும் 
பதற்றத்துடனே இருக்கிறான் 
முள்வேலியிட்டு பத்திரப்படுத்துகிறான் 
மிச்சமிருக்கும் வன்மத்தை.
காகங்கள் கொத்திக்கொண்டுபோன
ஜனத்திரளின்உயிர் வெளியெங்கும்
சிறுஅலையாகி எம்பியதும்
கொடுவாள்களை துப்பாக்கிகளை பீரங்கிகளை
பதுக்குகிறான் உயிர்மாய்ந்த பதுங்குக் குழிகளில்.
அண்டைவீட்டுக்காரனெல்லாம்
நாக்குகளை நீட்டி
புத்தனின் மேல் படிந்த ரத்தக்கறைகளை
துடைத்தகற்றத் துடிக்கிறான்
அவை குழந்தைகளின் இளம்ரத்தம்
அண்டமெல்லாம் நிரம்பிய
நீராலே கழுவமுடியாக் கண்ணீர்
உயிர்த்தெழும்பும் கடல் அலை.

என் கதைகள் குறித்து கோணங்கி எழுதியது.....


தமிழ்ச் சிறுகதைகள் குறித்து பல்வேறு எழுத்தாளர்களின் கதைகளை ஆராய்ந்து, ”கல்குதிரை” பனிக்காலஇதழில் தலையங்கம் கட்டுரையில் கோணங்கி எழுதிய,
’நாளைக்கான இன்றைய தமிழ் புனைகதைகளில் ஆண்டன் செகாவின் நீல நுரையீரல் வரைபடம்’
என்ற நீண்டக் கட்டுரையில் அழகம்மா தொகுப்பிலிருக்கும் என்னுடைய கதைகள் குறித்து அவர் எழுதியதை மட்டும் இங்கே எடுத்து பதிவு செய்திருக்கிறேன்.

”சந்திராவின் இப்போது வந்திருக்கும் அழகம்மா தொகுதியின் தலைப்புக்கதை வேனிற்கால இதழில் வந்தபோது மூன்று முறைக்கு மேல் எழுதி அவர் செழுமைபடுத்தியதில் அது பரிமாண பூரணத்துவம் அடைவதற்கான உரையாடலாய் அமைந்தது. பச்சைக்குமாச்சி மலைகளில் அசையும் அழகம்மாவின் கால்கள் தேவதை அருவியாகப் பாய்ந்து இறங்கிக்கொண்டிருந்தது. துரட்டி மரம் கிணறு வழியாக நடந்து செல்லும் ஆண்களெல்லாம் பெண்களை துணைக்கு அழைத்துக்கொண்டுபோகிறார்கள். சமயத்தில் கிணற்றை விலகியே போகிறார்கள். ஊரை விட்டு விலகி இருக்கும் பலியான அழகம்மாளின் நினைவு தொடரும். ஒவ்வொருவரும் பாங்கிணற்றைக் கடந்தே போயினர். தொட்டால் ஒட்டிக்கொள்ளும் கெவியில் மறதியிலிருந்து பொருட்களின் முனகல்களை கேட்டார்கள். ஒவ்வொரு ஊருக்குமே பெண்களை ஈர்த்து கிணறுகளும் தூர்ந்திருக்கும். இடம்பெயர்ந்தவர்களும் கிணற்றைச் சுற்றி எல்லையற்ற ஒரே ராத்திரிக்குள் போகிறார்கள். 

ஒவ்வொரு ஊரிலுமே வேறு வேறு தூர் விழுந்த கிணறுகள் இருக்கும். இழுவங்கிணறு, ஆனைக்கிணறு, பாண்டியன் கிணறு, கூளப்பநாயகன் பெருங்கிணறு, பேய்கிணறு,தூங்கேணியில் உறங்கும் கூந்தல் விதைகள் நீரற மகளிராய் பாய்ந்து வெளியேறிச் செல்கிறார்கள். பனையடியில் பலியானவள் மடக்கு ஓலைக்கன்னியாகவும் பள்ளத்தில் தள்ளிவிடப்பட்ட பெண்ணே வனந்திரியும் இருளாக அலைகிறாள். சொல்லக்காத்திருக்கும் அழிக்காளியாக மாறி அழகம்மா பிஞ்சால் ராமன்,பரமன் இருவரையும் கூந்தலிலும்,தன்யங்களிலும் உதிரம் பூசுகிறாள்.குரும்பனை மட்டும் ஒன்னும் செய்யாமல் விடுகிறாள். அவளுக்குத் தன்னைக் கொன்ற புருஷன் மேல் தான் எவ்வளவு ஆசை? நூறு ஊர்களின் மடக்கு ஓலைகளில் கீறிய கிணறுகளை குறீயீடாக்கி புதுமைப்பித்தனின் ஞானக்குகையில் வரும் வாலைக் கனிவு குன்றா கன்னியின் மோனமும்,பேய்மையின் சிரிப்பும், உயிர் குடிக்கும் வெறியும், உடனே மாறும் குழந்தையின் சிரிப்பும் அழகம்மா கதையில் சாத்தியப்பட்டிருந்தும் ஊர் எல்லையிலேயே நின்றுவிட்ட தழும்புகள் சிவந்த வாய்மொழிக் கதைக் கூற்றுகளின் அடர்த்திக்குள் அமைந்துவிடுகின்றன மறுசொல்லாய். ஸில்வியாவின் ‘பெண் வேடமிட்ட பெண்’ கதையின் சொல்லாடல்களை கதை இயக்கத்தின் விசிறி மடிப்பாக வெவ்வேறு பேசு பொருள்களை முரண்பட்ட தன்னிலையில் இருந்து பன்மை பிரதியாக்கத்துக்கு இட்டுச்செல்கிறது. ஆயினும் ஒரு சீரான கதையாக்கம் நடந்திருக்கிறது அழகம்மா கதையில். 

தொகுதியின் கடைசிக் கதையான ‘வெகுநாட்களுக்குப் பின்னான மழை’ கதையில் கரட்டுப்பட்டிக்கு திரும்பிக்கொண்டிருந்த ஒரு கொலைக்கு உடந்தையானவனின் கசங்கிய மனச்சாயைகளின் இருட்பரப்பு. நண்பனின் ஊரில் அவனோடு கொலைக்கு நிழலாகச் செல்கிறான் காணாமல்போன பொம்முசாமியின் மகன். நண்பன் தன் சித்தியின் கழுத்தில் கத்தியை பதித்த கணத்தில் கைப்பிடியோடு விரல்களும் புகுந்திருந்தது அவள் குரல்வளையைப் பிடித்து. இவன், சாவில் நடுங்கும் அவள் கால்களை அமுக்கி பிடித்துக் கொள்ள அப்பெண்ணின் உயிர் அடங்கிய இறுதித் துடிப்புகளை இவன் கையோடு கொண்டு வந்திருந்தான் தப்பி வந்த கரட்டுப்பட்டிக்கு. தண்ணீப்பானையில் நீர் கோரிக் கழுவக், கழுவ கரங்களில் இருந்த சாவு கரையவில்லை. நினைவிலும், மறதியிலும், குழப்பத்திலும், இரவிலும், பொருட்களிலும் உதிர வாடை வீசியது. இறந்த பெண்ணின் விழிகள் அவன் கால்களை தொடர்ந்து விரட்டுகின்றன. இக்கதை இறந்த பெண்ணின் திறந்த விழிகளுக்குள் சாவுடன் மெல்ல இறங்குகிறது. மலை முகட்டில் இரு விழிகளும் உருண்டு சிதைந்து எதிரொலிப்பதைக் கேட்டான். மலைக் கரட்டின் மேடு பள்ளங்களில் அவன் ஒரே வகையான நடையை நடந்தான். செத்த நடையில் நடப்பதைப் போன்ற நடைதான் அது. தவளைகள் இல்லாத கிணறு ஊருக்கு வந்து சேருகிறான். பத்து வருடத்திற்குப் பின் உருமாறியிருந்த அவனைத் தாத்தாவிற்கு ஜாடை தெரியவில்லை. பின் இக்கதையில் தாத்தாவின் குரலாக தன்னூர் நிலங்களின் கதையும் மலையிடுக்கில் கஞ்சாச் செடி வளர்த்து எல்லோரும் பிழைத்த ஊர்க்கதையும் சொல்லாகவே தொடர்கிறது.
நீர்வறண்ட கரட்டுப்பட்டி அடிவாரத்தில் பாரஸ்ட்டுக்கு சொந்தமான பினாத்தி மரத்தோப்பு இருந்தது. தீக்குச்சி செய்யப் பயன்படும் அந்த மரங்கள் மட்டுமே அந்த நிலப்பகுதியின் ஒரே தாவரையல் ஆதாரம். அதன் பொருட்டு சில துளி மழைத் தூத்தல் அதில் முந்திரித் தோப்பு ஆனது. அதுவும் அழிந்துவிடும் நிலையில் இப்போது. இயற்கை உலர்ந்த பாறைகளின் மேல் ஆடுகள் மட்டுமே ஜீவனோபாயம். மனித நடமாட்டம் இல்லாத ஊரில் இவன் அந்தக் கொலையின் சாயைகள் அவனை வெறுமையின் ஆழத்தில் புதைத்தது. இவனிடம்தான் கிழவன் முதன் முதலில் செல்போனைப் பார்த்தான். நண்பன் இவனுக்கு போனில் பேசினான். அவனைத் தேடி வருவதாகச் சொல்லி ஊருக்கு வழி கேட்டான். மறுநாள் விடிந்த போது நான்கைந்து போலீஸும் இரு இளைஞனும் பாறையிலிருந்து வருவதைப் பார்த்தான் சுற்றி மேயும் ஆடுகளுக்கிடையே. 

வடமெக்ஸிகோவின் வறண்ட விளையாத எரியும் சமவெளியின் மேல் காமேடரஸ் மலைகள் டோரிக்கோ சகோதரர்களைப் போன்ற குற்றவாளிகளைத் தன் பாறைப் புடவுகளிலிருந்து பெற்றெடுத்தது. காலத்தில் எட்டி வளர்ந்த வறண்ட மலைகளின் தியானத்திலிருந்தே இந்தக் குற்றவாளியும் கரட்டிலிருந்து ஓடிப்போய் ஆந்திராவில் முறுக்கு விற்பவனாக முதலாளியிடம் அடிவாங்கி சூட்டுக்கோல் புண்களால் சீழ் வைத்துக் குதறிய ராத்திரிகளோடு அங்கிருந்தும் திருட்டு ரயிலேறி பெருநகருக்கு ஓடிப்போகிறான். இருண்ட தார்விரிப்பின் ஓரங்களில் அடையாளந் தெரியாத நபராகி திறந்த ரணமாய் எதிர்ப்பட்ட நண்பன் குமாரோடு டிஸ்வாஷராக ஹோட்டல் பெஞ்சுகளுக்கடியில் அழுக்குத் துணியில் கந்தலாய் அடிப்பட்ட வாழ்விலிருந்து கிழித்துக் கொண்டு வெளியேறி தன் நண்பனின் கொலைக்கு உடந்தையாக அவனுக்கு துரோகமளித்த மூளியலங்காரியான கொடுமைக்காரச் சித்தியைக் கொல்வதற்கு இவனும் அவனும் கொலையைப்பற்றி ராத்திரியெல்லாம் உரையாடிய சமையலறையின் இருட்டில் ஸ்டீல் கத்தி பளபளத்தது. உடைந்த சமையலறைக் கண்ணாடியிடம் இருவரும் விடைபெற்று வெளியேறிப்போகிறார்கள். 

இத்தொகுப்பில் 361 டிகிரியில் வந்த ‘அறைக்குள் புகுந்த தனிமை’ கதையில் பைக்கில் வந்தவனுக்கும் இவளுக்குமான உரையாடலும், தோழிக்கும் இவளுக்குமான உரையாடலும், விடுதி, பீச், காந்தி சிலை, பீட்சா கார்னர் உரையாடல்கள் binary சொல்லல் முறையில் கருத்துருவாகவே நிகழ்ந்துள்ளது. அவள் வீடு சென்ற பின்னும் முன்முடிவான சம்பவங்களும் உரையாடல்களும் அக்கதையின் பிளக்கும் நிகழ்காலத் தனிமைகளை தன்னிலை உரையாடலின் மூலம் தர்க்கத்தை உடைத்து கதையை விடுவிக்க முடியவில்லை”.

-நன்றி
கல்குதிரை (பனிக்காலஇதழ்)
 

வியாழன், 14 பிப்ரவரி, 2013

வழிதவறியது ஆட்டுக்குட்டி அல்ல கடவுள்.



காட்டுச் செடியின் நீலமலரைப்போன்று பிரகாசமான
ஆழ்ந்த அன்பினால் என் பாதங்கள் நடுங்கிய அன்று
உன் நிதானத்தின் முன் எந்த கோரிக்கையுமற்று
வெறுமனே மெழுகுவர்த்திகளை ஏற்றியபோது
பறந்தன மின்மினி பூச்சிகள்
கடவுளால் நிராகரிக்கப்பட்ட
அவற்றின் ஒளி ஆன்மாவின் பாடலாய்
எளிமையின் உருவாக பிரபஞ்சத்தை நிரப்பி
ஆட்டுக்குட்டியினை நடனமாடச் செய்து
பெருவாழ்வு கையளிக்கப்பட்டது
அச்சிறு உயிரின் முன்
உச்சாடனத்தில் தலைகிறுகிறுக்க குப்புறக் கவிழ்ந்தது என் உலகம்
கடவுளும் அப்பாடலை தனக்காக்கும்படி இறைஞ்சினார்
வழிதவறியது ஆட்டுக்குட்டி அல்ல கடவுள்.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

எனது சிறுகதைகள் குறித்து கவிஞர் ஏகாதசி



வயிற்றுப் பாட்டிற்காய் எங்கள் ஊர்க்காரர்களோடு சேர்ந்து என்
அம்மா கதிரறுக்க ஊர் ஊராய்ப் போய்த் திரிந்த என் பால்ய நாட்களின்
இரவுத் தூக்கமெல்லாம் என் அமத்தாவின் கயிற்றுக் கட்டில் கீழ்தான்.
என்னோடு சேர்ந்து என் கடைசி சின்னம்மா பரமேஸ்வரியும் என்
அமத்தாவின் மேல் படர்ந்து கிடக்கும் கறுப்புத் தேமல்போல்
வேம்பின் நிழல். அந்த கவிழ்ந்த ‘ப’ வடிவ கூரை வீட்டில் திண்ணை
யிலும் வீட்டிற்குள்ளுமாக என் மற்ற இரண்டு சின்னம்மாக்களும்
நான்கு மாமன்களும் படுத்திருப்பார்கள். சியான் நர்சரி காவலுக்கு
போய்விட்டிருப்பார். அம்மாவை பிரிந்திருக்கும் நான் ஏங்கிப்
போய்விடக் கூடாதென்பதற்காக என்னை கையோடே வைத்திருப்
பாள் அமத்தா. இவள் பெருங்கொண்டை கதைக்காரி.
அந்தக் காலக்கட்டத்து கிராமங்களில் நாய்களுக்கு பெரும்பாலும்
‘மணி’ என்றே பெயர் வைத்திருப்பார்கள். அப்படி ஒரு மணி எங்கள்
வீட்டிலும் இருந்தது. எங்கெங்கோ சுற்றிவிட்டு வந்தாலும் சாமத்தில்
அது என் கால்மாட்டில்தான் படுத்திருக்கும். மணிக்கு கதை பிடிக்காது
போலும். அமத்தா கதை ஆரம்பிக்கும் பொழுதும் முடிக்கும்
பொழுதும் என்னருகில் இருந்ததில்லை. “கதை கேக்காத நாய்
செருப்பக் கொண்டி அடி” என்பாள். கதை சொல்லிக் கொண்டிருக்
கும் பொழுது கட்டிலின் கீழிருந்து நான் ‘உம்’ கொடுத்துக்
கொண்டிருப்பேன். ‘உம்’ நின்றுவிட்டால் ‘சாமி?’ என்பாள்.
“கேட்டுக்குத்தான் இருக்கேன். ஒம்பாட்டுல சொல்லிகிட்டே இரு”
என்பேன். மீண்டும் சொல்லத் துவங்குவாள். நான் தூங்கிப் போய்
விட்ட பிறகும்கூட அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கதை
சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்பதும் நான் தூங்கிய பின்னும்கூட
அரை மணி நேரத்திற்கும் மேலாக ‘உம்’ கொடுத்துக் கொண்டிருந்த
அதிசய சிறுவனாகவும் இருந்திருக்கிறேன் என்பதும் வேடிக்கையான
விசயம்தான். அதனால்தான் விட்ட இடத்திலிருந்து துவங்கித்
துவங்கி ஒவ்வொரு கதையையும் பல வருசங்களாகக் கேட்டுக்
கரைந்திருக்கிறேன்.

கதை சொல்ல ஆரம்பித்த சில நொடிகளில் சின்னம்மா தூங்கி
விடும். இறுதியில் எல்லா கதைகளையும் கேட்டவனாக நான்
இருந்தேன். என் சுயபுராணத்தில் தூங்கிப் போன என் சின்னம்மா
விழித்திருந்து கதை கேட்டிருந்தால் சந்திராவைப் போன்று எழுத்தாள
ராக இருக்கும்.தலித் இலக்கியம் பேசுகிற கதை,கவிதை எழுதுகிற பெண்ணாக சந்திராவின் முகத்தை சில இதழ்களில் பார்த்திருக்கிறேன். சில வாரங்களக்கு முன்பு அவர்களின் ‘அழகம்மா’ நூல் பற்றிப் பேச என்னை அழைத்திருந்த தென் சென்னை த.மு.எ.க.ச
எம்.எம்.டி.எ. கிளை நடத்திய கூட்டத்தில் முதன்முதலாய் நேரில்
பார்த்தேன். சந்திரா என் சின்னம்மா பரமேஸ்வரியின் பிரதிபோல்
காணப்பட்டார். ஆனால், இவருக்குள் இவரது அம்மாவும்
பெரியம்மாளும் கதைகளோடு கூடுவிட்டு கூடு பாய்ந்திருக்கிறார்கள்.
சந்திராவும் அவரது தோழிகளும் கதை கேட்கும் சிறுமிகளாகவும் கதை
சொல்லும் கிழவிகளாகவும் இருந்திருக்கிறார்கள்.

எழுத்தாளர்களாக இருந்து கொண்டு சினிமாவில் குதிக்க
நினைக்கும் மனிதர்களுக்கு நடுவில், சினிமாவில் இருந்துகொண்டு
எழுத்தாளராக மலர்ந்திருக்கும் சந்திராவை எனக்குப் பிடித்திருக்
கிறது. கிளைகள் நகரத்தில் படர்ந்திருப்பினும் வேர்கள் கூடலூர்
மண்ணில்.

11, 12 வயதுகளில் பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்தப்பட்
டிருந்த சிறுமிகள் ஒரு நாள் “கல்யாணத்துக்கு வந்துருண்ணே” ன்னு
சொல்லிவிட்டுப் போவார்கள். பின்னொரு நாள் “மூத்தவனுக்கு காது
குத்து வச்சிருக்கேன் மறக்காம வந்துருண்ணே” என்பார்கள்.
படிப்படியாக சிதைந்து கொண்டிருக்கும் அவர்களது வாழ்வும்
உருவமும் என்னைச் சாகடிக்கும்.
“எங்கள் ஊரில் நிறைய பெண் பிள்ளைகளின் படிப்பு தரை
வகுப்புகளோடு முடிந்துவிடும்” எனச் சொல்லும் சந்திராவின்
‘திறக்கப்படாத பள்ளிக்கூடத்தின் கதவுகள்’ கதையில் பெண்களின்
ஜீவன் கண்ணெதிரே மாண்டு போவதைப் பார்க்க முடிகிறது.
காலங்காலமாய் கல்வி மறுக்கப்பட்டு வருவதால் கேள்விகளைப்
பெற முடியாத பெண்கள் ஆண் சமூகம் என்கிற பாம்புக் கூட்டத்திற்
குள் வாழ்ந்து மடிகிற அவலம் இந்தக் கதையின் குறுக்கு வெட்டாய்க்
கிடக்கிறது.

“சீக்கிரம் சாப்பிடும்மா இவன் உன் பங்கை பிடுங்கிடுவான்”
என்று அண்ணன் என் பங்கு இருக்கும் கையைப் பிடித்துக்
கொள்வான். “சின்னப் பையன் அவனுக்கு ஆசையா இருக்கும்ல,
இனிமே நான் சாப்பிட்டு என்ன ஆகப்போகுது” என்று தன் பங்கில்
பாதியை அம்மா கொடுத்துவிடும். எனக்கு விபரம் தெரியத் தெரிய
என் பங்கைக் கடைசியாய்ச் சாப்பிட்டேன் என்று குழந்தைகள்
நிறைந்த வீட்டைப் பற்றியும் அவர்களின் அன்பு பரிமாற்றம் பற்றியும்
பேசி மனதை நெகிழ்வுறச் செய்கிறது “பூனைகள் இல்லாத வீடு”.
பெற்ற பிள்ளைகளையும் வளர்க்கும் பிராணிகளையும் சமமாய்ப்
பாவித்து பாசம் காட்டுகிறது குடும்பம். வீட்டைச் சுற்றிக் கிடக்கிற
இலைகளின் வாசனையும் மலர்களின் வாசனையும் வீட்டோர்களின்
குணமெனக் காட்டுகிறது. ஏழ்மையிலும் பிரியத்தால் உயர்ந்து நிற்கிற
சுத்தமான குடும்பம், காலச்சூழல் காரணமாக ஒரு நிலைக்
கண்ணாடியைப் போல் தன் பாதரசத்தைத் தோய்த்து நிற்கிறது. அந்த வீட்டில் வாழ்ந்த அத்தனை பேரும் வீட்டை விட்டுப் பிரிந்துவிட்டார்கள். மனிதர்கள் ஒவ்வொருவராக வீட்டை விட்டுச் செல்ல செல்ல பிரிவுத் துயராலும் பசி பட்டினியாலும் பூனைகளும்
செத்துப் போகின்றன. கூட்டமாக இருந்த வீட்டை தனிமையும் துயர
வெப்பமும் ரெண்டாய்ப் பிளந்து போட்ட சோகத்தைப் பதிவு
செய்துள்ளது இந்தக் கதை.

ஊரே பயந்து கிடக்கிறது ஒரு பேய்க்கு. அந்தப் பேய் ஊர்
நினைப்பது போன்றில்லாமல் ஒரு சிறுமியிடம் அன்பாகப் பேசி
முத்தம் கொடுக்க, அந்த சிறுமிக்கு பயம் போய் பேய் மேல் பரிதாபம்
ஏற்படுகிறது. அது ‘கிழவி நாச்சி’ கதை. பிஞ்சுகளின் வேர்களில்
நம்பிக்கை நீரை ஊற்றிச் செல்கிறது. பயம் என்கிற சொல்லை
உடைக்கிற ஒரு ஆயுதமாக இந்தக் கதையைப் பார்க்கிறேன்.

ஜாதி, மதம் மீறி காதலித்து திருப்பூருக்கு ஓடிவந்து தாலி கட்டிக்
கொள்கிறார்கள் நிகிலா-செல்வம் ஜோடி. வேலை நிமித்தமாகச்
சென்னை சென்று வருவதாக கூறிச் செல்கிற செல்வம் பல
மாதங்களாக வீடு திரும்பாமலும் தகவலின்றியும் போக, வயிற்றுப்
பிள்ளையோடு செல்வத்தைத் தேடி சென்னையில் அல்லாடுகிறாள் நிகிலா.
மாமிச வெறி பிடித்த மனித மிருகங்களின் கண்களிலிருந்து தப்பித்துத்
தப்பித்து பிரசவ வலியோடு துடிக்கும் நிகழ்வின் துக்கம் என்
நெஞ்சில் பாராங்கல்லைத் தூக்கிப் போடுகிறது. இது ‘நிகிலா’
என்கிற கதை. இந்தக் கதையைப் படித்த பின்பு நகரத்து
சாலைகளிலும் தெருக்களிலும் துணிப்பைகளோடு பிச்சையெடுத்துக்
கொண்டு அலையும் ஒவ்வொரு பெண்களுக்குப் பின்னும் ரணம்
மிகுந்த கதை ஒன்று இருப்பதாகவும் அவர்கள் அதை ஆற்ற
முடியாமல் தவிப்பதாகவும் படுகிறதெனக்கு.

மருதாணிக்கும் ஐயப்பனுக்கும் சண்டை வந்து அவளை சைக்கி
ளின் பின் சீட்டிலும் குழந்தையை முன்னால் இருக்கும் கேரியர்
கூடையிலும் வைத்துக்கொண்டு ஆற்றுப் பாலத்தின் வழியாகச்
செல்லும் போதெல்லாம், குழந்தை, மரம், செடி, கொடிகளை
வேடிக்கை பார்த்தபடி ஆனந்தத்தில் கூத்தாடிக்கொண்டு போகும்
என்று ‘மருதாணி’ கதையில் வரும் காட்சி என் மனத்திரையில் எதை
எதையோ எழுதிச் செல்கிறது. அதன் உள்ளீடு வெளிகளை எரித்தபடி
என்னை உக்கிப் போகச் செய்கிறது.

திரைப்படத் துறையில் அனுபவம் பெற்று இவர் எழுதியிருக்கும்
சில கதைகளில் ‘கட் செய்த பின்னும் காமிரா ஓடிக் கொண்டிருந்தது’
என்னும் கதை ‘ரிச் கேர்ள்ஸ்’ என்றாலே உதாசீனப்படுத்தி ஏலனம்
பேசும் தவறான கண்ணோட்டத்தை மிக வன்மையாகக் கண்டிக்
கிறது. வயிற்றுப் பசிக்காக ஆடைகளை அவிழ்க்கும் என் பெண்களின்
அரை நிர்வாணத்தை நினைக்கும்பொழுது என் கண்கள் கண்ணீரை
உதிர்க்க தெம்பின்றி உடைந்து விழுகின்றன.

இறுதியாக ‘அழகம்மா’ என்கிற கதையைச் சொல்லியாக
வேண்டும். பெருங்குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாகப் பிறந்த
அழகம்மா செல்லமாய் வளர்க்கப்படுகிற பேரழகி. 
தேவதை. அவள் அக்காமார்களுக்கும் அண்ணன்மார்களுக்கும்
பிரியமாகச் சமைத்துப் போடுவதைத் தவிர வேறு வேலைக்கோ ஏன்
சொந்த தோட்டத்திற்கோகூட செல்ல அனுமதிக்கப்படவில்லை.
குழந்தையைப் போன்றே அவளை கொஞ்சி மகிழ்ந்தார்கள். திடீரென
எல்லோரும் முழித்துக் கொண்டிருக்க ஒரு நாள் பெரிய பெண்ணாக
மலர்ந்தாள் அழகம்மா. அடுத்த சில வருசங்களில் அழகம்மாவிற்கும்
அதே தெருவைச் சேர்ந்த குறும்பனுக்கும் திருமணம் நடந்தேறு
கிறது. அழகம்மா வலது கால் வைத்து நுழைந்த நிமிடத்திலிருந்தே
மாமியாரின் விசம் கலந்த வார்த்தை மெல்லிய மனதைக் காயப்படுத்
துகிறது. எதற்கெடுத்தாலும் “வெடுக் வெடுக்” என்று பேசுவதும்,
சாணி சகதியை பொழுதெல்லாம் அள்ளவிட்டு நொறுக்குவதுமாய்த்
தொடர, இதில் குறும்பனும் சேர்ந்துகொண்டு அவளை அடித்து
உதைத்து... என அந்தக் கதையை நான் படித்துக்கொண்டு
செல்கையில் நெஞ்சதிர்கிற ஓர் இடம்வந்து நான் மீண்டும் வாசிக்கத்
தொடர்கிற மனதறுந்தவனாய் புத்தகத்தை மூடி வைத்து அதன்
அட்டை மீது என் பார்வையை தவழ விட, நூல் வாங்கிய ஒருவார
காலமாக ஒன்றும் செய்யாத அந்த அட்டை ஓவியம் துக்கம் சுமந்த
அந்த பெண்ணின் முகம். அதுவும் அழகம்மாவின் முகம்.
அட்டையை விட்டு மேலெழும்பத் துடிப்பதைக் கண்டு குலை
நடுங்கிப் போனேன். அதிலிருந்து மீண்டு அந்தக் கதையைத் தொடர
சில மணி நேரம் ஆனது. அடுத்த இரண்டு நாட்களாக என் மேஜையின்
முன் அட்டை காட்டிக் கிடக்கும் அந்த நூலிலிருந்து அழகம்மா
வெளியேறவே துடித்தாள். எனக்குப் பயமாகவும் போனதால் அதை
எடுத்து மறைத்து வைத்துவிட்டேன்.யோசித்துப் பார்க்கிறேன் என் பயத்திற்கான காரணத்தை. ஒருவேளை அழகம்மாவின் கொடூர கணவன் என்கிற குறும்பன் நான்
தானோ என்று, உண்மைதான் என்பது போலவே என் உள்மனம்
படக்படக்கென அடித்துக் கொண்டது.

இப்படியாக சந்திராவின் எந்தக் கதையைப் பற்றியும் எழுதாமல்
என்னால் இடம் பெயர முடியவில்லை. இருப்பினும் இட ஒதுக்கீடு
அளவு காரணமாக சிலவற்றை மட்டும் குறிப்பிட்டு உள்ளேன்.
சந்திராவின் கதைகள் ஆச்சரியப்படுத்துவதைத் தாண்டி கதைகளின்
வரிகளே கூட சாகசத்தையும் சூதாட்டத்தையும் சாமர்த்தியமாய்
நிகழ்த்தி விடுகின்றன. சந்திராவின் எல்லா கதைகளின் முடிவும்
மனதை கனக்கச் செய்கின்றனவாய் இருக்கின்றன. இது படைப்பாளி
யின் வெற்றிதான் எனினும் கதைகளின் வெவ்வேறு முகங்களையும்
சந்திராவின் எழுத்து கொண்டுவர வேண்டும் என்பது என் தனிப்பட்ட
கருத்து. “தோழர்கள் கடத்தல்காரர்களான கதை” என்னும் கதை
அவரின் சொந்த அனுபவங்களிலிருந்து சரியென்று தோன்றினாலும்
ஒரு பெரிய இயக்கத்தின்பால் போராட்டக் குழுவின்பால் எறிகிற சிறு
கல்லாக இருக்கிறது. பரவாயில்லை, அதை விமர்சனமாகக்கூட
எடுத்துக் கொள்ளலாம்.

இவர் வாழ்க்கையை ஓரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்
கொண்டு எழுதியதாய்ப் படவில்லை. கதவைப் பற்றி திண்ணையில்
உட்கார்ந்தும் தந்தையின் மடியில் உட்கார்ந்தபடி மீசையைப் பற்றியும்
அம்மாவின் அடிவயிற்றுக் கதகதப்பில் முகம் புதைத்து அவளின்
பசியையும் தோழிகளின் தீட்டுத் துணியை கையில் ஏந்தியபடி
அவர்களின் அவஸ்தையையும் பால்ய நண்பர்களை வாசம் மாறாமல்
நெஞ்சில் சுமந்துகொண்டும் வனம் தந்த கறுப்பு வெய்யிலை
முதுகில் சுமந்துகொண்டும் நகரத்தின் கூர்மையான கத்திகளை
உடலில் செலுத்திக் கொண்டும் வாழ்வை இடைவெளியின்றி எழுதி
யிருக்கிறார். மருத்துவச்சி பிரசவம் பார்க்கிற கலை நுட்பத்தோடு.
‘பூனைகள் இல்லாத வீடு’ முதல் தொகுப்பில், ‘புளியம் பூ’,
‘திறக்கப்படாத பள்ளிக்கூடத்தின் கதவுகள்’, ‘பூனைகள் இல்லாத
வீடு’, ‘கிழவி நாச்சி’, ‘நிகிலா’, ‘ராஜா ராணி ஜோக்கர்’ போன்ற
கதைகளும், சந்திராவின் இரண்டாவது தொகுப்பான ‘காட்டின்
பெருங்கனவு’ நூலில் ‘காட்டின் பெருங்கனவு’, ‘மருதாணி’,
‘ரத்தத்தில் மிதக்கும் படுக்கையறை’ உள்ளிட்ட கதைகளும்,
கடைசியாய் வந்த ‘அழகம்மா’ தொகுப்பில் ‘அழகேசனின் பாடல்’,
‘கட் சொன்ன பின்பும் காமிரா ஓடிக்கொண்டிருந்தது’, ‘அழகம்மா’,
‘வெகு நாட்களுக்குப் பின்னான மழை’ போன்ற கதைகளும் தமிழ்
சிறுகதை உலகில் மிகமிக முக்கியமான சிறுகதைகளாகப் பார்க்கி
றேன். முதல் தொகுதியை உயிர்மையும் அதன்பின் வந்த இரண்டு
தொகுதிகளை உயிர் எழுத்தும் வெளியிட்டிருக்கிறார்கள். நீங்கிச்
செல்லும் பேரன்பு என்னும் கவிதை நூலும் சந்திராவுடையது.
என் அக்காக்களையும் தங்கைகளையும் மரங்களைப் போன்று
வெட்டிக் கூறு போட்டு ரத்த ருசி பார்த்துக் கொண்டிருக்கும்
ஆணாதிக்க வெறியர்களின் பட்டியல் சந்திராவின் கதைகளில்
குறிக்கப்பட்டிருக்கிறது. சாதி மனித மனங்களை எப்படி ஒரு தாளைப்
போல் கிழித்துப் போட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் பதிவு
செய்யப்பட்டிருக்கிறது.

கதைகள் முழுக்க வெக்கை மிகுந்த வாழ்வின் நசநசப்பையும்
குரூரத்தையும் மிக மிக அருகிருந்தும் அனுபவித்தும் எழுதியிருக்
கிறார் சந்திரா. முல்லை பெரியாறு நதியிலிருந்து இரு கை நிறைய
தண்ணீரை அள்ளிக்கொண்டு ஒரு சொட்டுக் கூட சிந்தாமல் ஐநூறு
கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்து சென்னையில் சேர்த்தது போல்
இருக்கிறது இவரின் கதைகள்.

சிறுகதைத் தொகுதிகள்
- பூனைகள் இல்லாத வீடு, உயிர்மை, டிச. 2007
- காற்றின் பெருங்கனவு, உயிர் எழுத்து, டிச. 2009
- அழகம்மா

நன்றி:மாற்றுவெளி ஆய்விதழ்

- 2012 ஜுன், ”மாற்றுவெளி” சிறுகதைச் சிறப்பிதழில் எனது சிறுகதைகள் குறித்து கவிஞர் ஏகாதசி எழுதிய ஆய்வுக்கட்டுரை.